அதிகாரத்தை விசாரிக்கும் காட்சிப்படிமங்கள்


வெற்றிமாறன் இயக்கிய விசாரணை திரைப்படத்தின் டிரைலரை பார்த்தபோது முதலில் படத்தைத் தான் பார்க்க வேண்டும் எனும் முடிவினை எடுத்திருந்தேன். அதே நேரம் நூலை வாசிக்காமலும் இருக்க இயலாது என லாக்கப் நாவலையும் படம் பார்த்த கையோடு வாசித்து முடித்தேன். படத்தினை பார்த்தபோது வெற்றிமாறனை கொண்டாடியதற்கு பெரியதொரு காரணமாய் அமைந்தது பின்னர் வாசித்த லாக்கப் நாவல். திரைப்படத்தை பார்க்காதவர்கள் தயைகூர்ந்து இக்கட்டுரையை வாசிக்க வேண்டாம். பின் சில ஸ்பாய்லர்கள் கட்டவிழ்ந்துபோக நிறைய வாய்ப்புகள் உள்ளன.

நாவலிலிருந்து திரைப்படமாக்கும் தருணத்தில் பல விஷயங்களை மனதளவில் கடக்க வேண்டிய சூழ்நிலைக்கு இயக்குனர் தள்ளப்படுகிறார். அஃதாவது எழுத்து அவருள் உருவாக்கிய பேரலைகளை முன்பின் தெரியாத பலகோடி பேருக்கு கடத்த வேண்டும். அப்படி செய்யும் பொருட்டு அவர் மேற்கொள்ள வேண்டிய மெனக்கெடல், நாவலில் சிறிது சிறிதாய் இருக்கும் தருணங்களை காட்சிப்படுத்துதல் என உழைப்பினை வெகுவாக கோருகிறது திரைப்படவுலகம். அது முழுமைக்குமாக நிறைவேறியிருக்கிறது இப்படத்தில்.

விசாரணை திரைப்படத்தை முதலில் கூறிவிடுகிறேன். அதிகாரத்தின் பன்முகத்தையும் அது தனக்குள் வைத்திருக்கும் தர்க்கங்களையும் அப்பாவி மனிதர்களை மையமாக்கி நியாயப்படுத்துகிறது இப்படம். அப்பாவியான நால்வரை சம்மந்தமில்லாத கேஸ் ஒன்றிற்காக சம்மதிக்க வைக்க அழைத்து சென்று வன்முறையை நிகழ்த்துகின்றனர் போலீஸார். இந்த நால்வரின் பாதை எங்கெங்கு எல்லாம் பயணிக்கிறது என்பதாக கதை நகர்கிறதுஇடையில் சமுத்திரகனி மற்றும் கிஷோரின் கிளைக்கதை. இந்தக்கதை அந்த நால்வருடன் இணைவதிலிருந்து அதிகாரத்தின் இன்னுமொரு முகத்தை பார்வையாளர்கள் காண ஆரம்பிக்கின்றனர்.

கதைக்கு செல்வதற்கு முன் இயக்குனரின் கற்பனாவாதம் சார்ந்து சொல்ல விழைகிறேன். நாவலை அப்படியே படமாக்க வேண்டுமென்றாலும் மேற்கூறியதுபோல இயக்குனரின் பங்கு வெகுவாக தேவைப்படுகிறது. படத்தின் முதல் பாதிக்கு மட்டுமே லாக்கப் நாவல் உதவி செய்கிறது. அதைத் தாண்டி வெற்றிமாறனுக்கே உரிய பாணி படம் நெடுக தெரிகிறது. இது நிச்சயம் ஒரு படத்திற்கு தேவை. இது இல்லையெனில் எரியும் பனிக்காடு நாவல் பரதேசி படமான விதம்(குரூரம்) தான் இங்கும் நிகழ்ந்திருக்கக்கூடும்.

வெற்றிமாறனின் பாணி எனில் என்ன ? மனிதனின் புறவாழ்க்கையும் அதனூடான ஈடுபாடுகளும் எப்படி அவனுக்குள் மன உளைச்சலை, உக்கிரத்தை ஏற்படுத்துகிறது என்பதே அவருடைய முதல் பாணி. பொல்லாதவன் திரைப்படத்தில் பைக், ஆடுகளம் படத்தில் சேவல். மேலும் அந்த ஈடுபாட்டினாலும் அதனூடாக உருவாகும் வலியினாலும் கதாபாத்திரங்கள் எப்படியான உளவியல் சிக்கல்களில் சிக்கி வன்முறையின் பக்கமும் எதிர்மறையான உணர்வுகள் சார்ந்தும் நகர்கிறார்கள் என்பதையும் தான் அவருடைய படங்கள் பேசுகின்றன. இதனூடே ஊடாடும் மற்றொரு விஷயம் சூழ்ச்சி. யார் யாரை சூழ்ச்சி செய்வார்கள் என்பது பார்வையாளர்களால் சிறிதும் அறிந்து கொள்ள முடியாதது. சுருங்கச் சொன்னால் மனித மனத்தின் இருண்மைக்கு திரைவடிவில் ஓர் உருவம் கொடுக்கிறார். அதற்கு ஏதேனும் காரணங்கள் புறப்பொருட்களில் அமைகின்றன.

விசாரணையிலும் இதுவே நிகழ்கிறது. முதல் பாதி முழுக்க நிகழும் வன்முறை நாயகர்கள் நாலவரின் மனதிலும் வாழ்வு சார்ந்த ஆசையை ஏற்படுத்திவிடுகிறது. அத்தருணத்தில் சமுத்திரகனி அவர்களை காப்பாற்றி கூட்டி செல்லும் போது வாழ்வதற்கான மாபெரும் நம்பிக்கைக் கீற்றாக அவரை கருதுகிறார்கள். அப்படியான தருணத்தில் நிகழும் சூழ்ச்சியினுள் மீண்டும் மாட்டிக் கொள்கிறார்கள். அவருடைய முதல் இரண்டு படங்களுக்கும் இதற்குமான பெரிய வித்தியாசம் யாரிடமிருந்து கதை நகர்கிறது என்பதில் தான். முதல் இரண்டில் நாயகன் பக்கம் எனில் இங்கு அதிகாரம் எங்கிருக்கிறதோ அதன் பக்கமிருந்து மட்டுமே கதையை சொல்கிறார். எந்த ஒரு இடத்திலும் இதிலிருந்து திசை மாறாமல் இருப்பது படத்தின் கதையை அதன் ஆழத்திற்கு கொண்டுசெல்கிறது.


கொஞ்சம் நாவலின் பக்கம் வரலாம் எனில் நாவல் கொஞ்சமும் பிடிக்கவில்லை. சோளகர் தொட்டி, எரியும் பனிக்காடு, தோல் போன்ற நாவல்கள் வன்முறை மற்றும் அரசியலை பேசுபவைகள் தான். அவற்றில் இருக்கும் ஓலத்தை வாசகனால் முதல் வாசிப்பிலேயே மிக எளிதாக அறிந்து கொள்ளமுடியும். லாக்கப் நாவல் அந்த இடத்தில் தோற்று நிற்கிறது. அது நாயகனின் தன்னிலை விளக்கமாக மட்டுமே அமைந்துவிடுகிறது. மேலும் நாவல் முழுக்க போதாமைகள் நிறைய இருக்கின்றன. உதாரணத்திற்கு நாயகன் ஐடியாலஜிஸ்டாக இருக்கிறான். அவன் தான் இருக்கும் சிறையை உலகளாவிய சிறைகளுடன் ஒப்பிட்டுக் கொள்கிறான். தன் வாழ்க்கையை, இருத்தலை பல கோட்பாடுகளுடன் மோதிப் பார்க்கிறான். தர்க்கம் செய்கிறான். மேலும் நாவல் முழுக்க ஆசிரியரே நாவலுக்குள் நுழைந்து கதையின் தர்க்க விளக்கத்தை கொடுக்க ஆரம்பிக்கிறார்.

நாவலில் அவர்களை அழைத்து செல்வது எலெக்ட்ரானிக் கடையில் பொருட்களை திருடியதற்காக. இங்கிருந்து படத்தையும் நாவலையும் இணைத்தால் விசாரணை படம் லாக்கப் நாவலை எப்படி கோலோச்சுகிறது என்பதை எளிமையாக அறிந்து கொள்ள முடியும். நாவலை வாசிக்கும் பட்சத்தில் அவர்களை கொடுமை செய்வதற்கான காரணம் என சொல்வதை இருவகையாக பார்க்க முடிகிறது. ஒன்று இதற்கெல்லாம் அடிப்பார்களா எனும் கேள்வி அல்லது அதிகாரம் நினைத்தால் எக்காரணத்திற்கும் தனிமனிதனை வதைக்கக்கூடும் எனும் முடிவு. இதை காட்சிப்படுத்தினால் இந்த உணர்வு அல்லது கேள்வி எழுமா எனில் அது சந்தேகத்தின் பார்பட்டதே. இதை வெற்றிமாறன் மிக லாவகமாக அதிகாரத்தின் பக்கத்தினின்று பின்புலத்தை உருவாக்குகிறார் - போலீஸாரின் வீடு ஒருகோடி ரூபாய் திருட்டு என.

அதே நேரம் நாவல் முழுக்க வருவது தன்னை அடித்த போலீஸ்காரனை எப்படியாவது அடித்துவிட வேண்டும் எனும் கற்பனைக்கும் உணரும் வலிக்குமான போராட்டம். திரைப்படம் முழுக்கவோ வாழ்வதற்கும் சாவதற்குமான போராட்டமாக கச்சிதமான உருவினை எடுக்கிறது. அங்கும் சில சந்தேகங்கள் முளைக்கின்றன. தன்னை சித்ரவதை செய்தவனிடமிருந்து தப்பிக்கிறான் நாயகன். ஆனாலும் இன்னுமொரு போலீஸ் அமைப்பினுள் செல்லும் நிலை ஏற்படுகிறது. அதை அவனால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது ? வாங்கிய அடிக்கு விட்டால் போதும் என ஓட வேண்டாமா ? ஒரு போலீஸ் அடித்தாலே எல்லா போலீஸும் கெட்டவனுங்க என்பது தான் நாயகனைப் போன்ற சாமான்ய மனிதனின் இயல்பான கற்பனை ? நாவலினைப் போல இங்கும் நாயகனை ஐடியாலஜிஸ்டாக மாற்றியிருந்தால் இந்த கேள்விகள் எழுந்திருக்க வாய்ப்பில்லை. படத்திலோ அடித்தட்டு அப்பாவி!

இதற்கான நுணுக்கங்களை திரைப்படம் பல இடங்களில் வித்தியாசமான திரைக்கதையினூடே வைத்திருக்கிறது. விரிவாக சொல்ல வேண்டுமெனில் படத்தில் இடைவேளை என்பது ஒரு கண்ணாடியெனில் பிம்பமும் பிரதிபிம்பமுமே முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியாக இருக்கிறது. முதல் பாதியில் குண்டூரில் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கு நிகழ்வது எல்லாம் வக்கிரமான வன்முறை மட்டுமே. அதைத் தாண்டிய எதுவுமே அங்கு இல்லை. இரண்டாம் பாதியிலும் அதுவே தான் நிகழ்கிறது. ஆனால் உணர்ச்சி ரீதியாக நகர்த்தப்படுகிறது.

முதல் பாதியில் வரும் மொட்டை போலீஸிற்கும் சமுத்திரகனிக்கும் சிறிதும் வித்தியாசம் இல்லை. முதலாமவன் வெறும் வன்முறை, அதை அவர்கள் மீது காட்ட வேண்டிய கட்டாயம் என நீதிமன்றத்தில் காரணம் காட்டுகிறார். இரண்டாம் பாதியை உணர்ச்சியால் கட்டமைப்பதால் அந்த காரணங்களை உணர்வுகளுடன் மோதி நீளமான வசனங்களால் உருவாக்குகிறார். அந்த நால்வருக்கும் தேவையானது என்னவோ நம்பிக்கைக்கான ஒரு கீற்று. அது எங்கு கிடைக்கிறதோ அங்கு சிறிதான நன்றி வெளிப்பாட்டை நிகழ்த்துகின்றனர். அது சூழ்ச்சியில் தான் முடியும் என்பது படம் முழுக்க அவர்களுக்கு தெரிவதில்லை.

உன்னைப் போல் ஒருவன் படம் வந்த பொழுது அதன் மூலப்படத்திற்கும் இதற்குமான இடைவெளி பெரிதாக இருந்தது. அதற்கு காரணம் வெட்னஸ்டே படத்தின் நஸ்ருதீன் ஷாவை அன்றாடம் நம்மால் காண முடியும். அதற்கு காரணமாக அமைவது அவர் க்ளைமாக்ஸில் மிகச்சாதாரணமாக சொல்லும் கதை. தமிழிலோ கமலஹாசன் கற்பழித்தல், இந்திய அரசியல் என சாமான்யனை தொடாத காமன்மேனை உருவாக்குவார். அந்த பிரச்சினையை சிறிதும் செய்யாமல் திரைப்படத்தை கச்சிதமாக உருவாக்கியிருக்கிறார் வெற்றிமாறன்.

இருத்தலுக்காக மனிதன் எதையும் செய்யக்கூடியவன். அவனவனின் நிலைக்கொப்ப எதையெல்லாம் செய்ய முயல்கிறான், அதற்கு எதை காரணமாக வைக்கிறான் என்பதில்தான் அவரவர்களின் அந்தஸ்து அடங்கியிருக்கிறது. மொட்டை போலீஸ், சமுத்திரகனி, தினேஷ், கிஷோர் என ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த விஷயத்தை தான் அவரவர்களுக்கான இடங்களில் சுமந்துகொண்டு செல்கிறார்கள். இதைக் காட்சிப்படுத்திய விதம் காணும் ஒவ்வொருவரின் துடிப்பையும் பிடித்து வைக்கிறது. படத்தில் உழைத்த எல்லோரின் நடிப்பையும் ரசித்தேன். கிஷோரின் தர்க்கமான வசனங்கள், தினேஷின் காந்தீயவாத முடிவுகள் என எல்லா வசனங்களையும் முக்கியமானதாக இடம்பெறவைத்திருக்கிறார். எல்லாவிதத்திலும் ஒரு முழுமையை பார்வையாளனுக்கு கொடுக்கிறது விசாரணை.

படத்தில் இருக்கும் தொழில்நுட்பங்கள் நாவலின் சில தருணங்களை காட்சியாக்க பெரிதாக உதவியிருக்கிறது. சின்ன உதாரணம் தலைகீழாக தொங்கவிட்டு கால் பாதத்தில் அடிக்கிறார்கள். அந்த காட்சியில் போலீஸின் காலடியை நடந்து செல்வதை ஸூம் செய்து காட்டியிருப்பார். அதன் நடையொலி கணீரென கேட்கும். அதனுடன் நாடியினை துடிக்கவைக்கும் இருண்மையான இசை வேறு. இது நாவலின் சில பக்கங்களாக இருக்கிறது. அஃதாவது எப்போது போலீஸ் வருவார்கள் என அவர்களின் காலடி ஓசையை வைத்தே அறிகிறார்கள் சிறைவாசிகள். அதைப் பொறுத்து தங்களது உடம்பை அடிக்கு தயார்படுத்திக் கொள்ளமுடியும். இப்படி நிறைய நுட்பங்கள் விசாரணையில் இருக்கிறது.

இப்படத்தை எல்லோரும் புகழ காரணம் நாம் நிரந்தரமான ஏதோ ஒன்றை மனதினுள் வைத்துக் கொண்டு அதனுடன் புதியதை மோதிப்பார்த்து சிறந்ததா இல்லையா எனும் முடிவிற்கு வருகிறோம். விசாரணை நிரந்தரமான ஒன்றாக மாறுமே ஒழிய சிறந்த ஒன்றாக மாற வாய்ப்பில்லை. கலைப்படங்கள் சார்ந்த நவீன காலத்தின் நீண்ட பயணத்தின் முதல்படி விசாரணை. வெற்றிமாறனுக்கு மனம் கனிந்த வாழ்த்துகள். . . 

Share this:

,

CONVERSATION

2 கருத்திடுக. . .:

ராம்ஜி_யாஹூ said...

வாங்கிய அடிக்கு விட்டால் போதும் என ஓட வேண்டாமா ? ஒரு போலீஸ் அடித்தாலே எல்லா போலீஸும் கெட்டவனுங்க என்பது தான் நாயகனைப் போன்ற சாமான்ய மனிதனின் இயல்பான கற்பனை ? நாவலினைப் போல இங்கும் நாயகனை ஐடியாலஜிஸ்டாக மாற்றியிருந்தால் இந்த கேள்விகள் எழுந்திருக்க வாய்ப்பில்லை. படத்திலோ அடித்தட்டு அப்பாவி

அடித்தட்டு மக்கள் உயிரை, உடல் வலியை விட செய்த உதவியை , நன்றி செய்ய வேண்டும் என்பதை மிக முக்கியமாகக் கருதுவர். ஐடியாலஜிச்டிர்கும் இதே எண்ணம் தானே உருவாகும், அந்த அடிப்படியில் தானே
அவருக்கு பரிகாரமாக நிலையத்தை சுத்தம் செய்ய

NAGARJOON said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Corporate English classes in Chennai
Communicative English training center
English training for corporates
Spoken English training
Workplace Business English training institute
Workplace English training for corporates
Workplace soft skills training institutes
Corporate language classes
Business English training for Workplace

Post a comment

கருத்திடுக