கிறிஸ்தோபர் நோலன்


கிறிஸ்தோபர் நோலனின் திரைப்படங்களுடனான எனது பரிச்சயம் டார்க் நைட் ரைஸஸ் மூலமாக ஆரம்பித்தது. அதன் பின் அவருடைய ஒவ்வொரு படங்களையும் தேடித் தேடி பார்க்க ஆரம்பித்தேன். நிர்ணயமாக இன்னவித புதுமையை தன் படங்களில் வைத்திருக்கிறார் என்பதை சொல்லவியலாத இயக்குனர் அவர். குழப்பத்தை அதிகமாக விரும்பிய காலத்தில் வெறித்தனமாக ரசித்தேன் என்று சொன்னாலும் தகும். அத்தகைய தருணத்தில் தான் அவர் மீதான ஈர்ப்பு அதீதமாக இருந்தது. இப்போதும் அவர் மீதான பித்தம் தணியவில்லை என்றாலும் ஏன் நோலன் முழுமைக்குமான கலையை கொடுக்கவில்லை என்னும் கேள்வி என்னுள் எழும்பிக்கொண்டே இருக்கிறது.

மனிதனின் மனதோரம் குழுமிக் கொண்டிருக்கும் விழுமியங்கள் சார்ந்த கேள்விகளை அவனை எதிர்த்தே கேட்க வைப்பது கலை. யதார்த்த அனுபவங்களிலிருந்து உருவாவது கலை அல்லது இலக்கியம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. மாறாக கலை அல்லது இலக்கியத்தின் வழியே ஒரு அனுபவத்தை கொடுக்கவேண்டும். பல்வேறு இடர்களையும் சந்தோஷங்களையும் சந்தித்த மனிதர்களிடையே பேசும் போது நம்மிடையே எழும்பப்படும் கேள்விகளையும் அல்லது ஏற்கனவே இருந்த கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்களும் அவ்வார்த்தைகளின் அசைகளினூடே எழ வேண்டும். இதுவே கலைவெளிப்பாட்டின் பிரதான விஷயமாக கருதுகிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு கோணங்கியுடன் சித்தன்னவாசல் சென்றிருந்தேன். அந்த இடத்தில் ஓவியங்களை பார்ப்பவர்களுக்கு விளக்குவதற்கென்றே ஒருவர் இருக்கிறார்(பெயர் மறந்துவிட்டேன். தமிழ் தி இந்துவிலும் அவரை ஒருமுறை குறிப்பிட்டு சின்ன கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள்). அங்கிருக்கும் ஓவியத்தின் அளவு நம் வீட்டு விதானத்தின் சிறிய அளவாகவே இருக்கும். ஆனால் அவரோ அதனூடே இருக்கும் நுட்பங்களை சொல்லிக் கொண்டே செல்கிறார். அந்த குகையோவியங்களினூடே ஏற்படும் அதிர்வலைகளை கணிக்கிறார். எப்படி என்னும் கேள்விக்கு சிரிப்பே பதிலாய் கிடைக்கிறது. அது ஓர் அனுபவம். அவர் சொல்ல அல்லது விளக்க நான் கொள்வது அறிதல் மட்டுமே. எனக்கும் அவருக்குமான இடைவெளி அளவிடவியலாதது.

இதை சொல்லக் காரணம் நோலனின் திரைப்படம் அறிதல் என்னும் நிலையில் நின்றுவிடுகிறது. அதற்கு பக்கபலமாக இருப்பது அவருடைய புதிர்தன்மை நிறைந்த திரைக்கதை. காட்சிவடிவில் பார்க்கும் பொழுது நம்மால் புதிர்களின் விடை தேடி மட்டுமே செல்ல முடிகிறது. அதிலும் நோலனின் அக்மார்க் நான்-லினியர் திரைக்கதை நுட்பத்தில் கதையை கண்டறிவதே பார்வையாளனுக்கான பெரும் சவால். இரண்டு மூன்று முறை காணும் பட்சத்திலும் கூட புதிர்கள் அடுக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றன. அப்படியெனில் கலைக்கான இடம் எதுவுமே இல்லையா என்னும் கேள்வி எழலாம். நிறைய இருக்கின்றன. சிறந்த உதாரணம் அவர் உருவாக்கும் நாயகர்கள். எல்லோருமே அக உணர்வுகளின்(சிக்கல்களின்) அப்பட்டமான அடையாளங்கள். அவர்களின் வசனமும் உணர்வுகளும் பார்ப்பவர்களின் வாழ்க்கையையே பரிசீலிக்கின்றன. ஆனால் எல்லோரிடமும் எடுபட மறுக்கிறது. சாதாரணமாக இன்செப்ஷன் படம் பற்றி கேட்டாலும் அல்லது இண்டர்ஸ்டெல்லார் பற்றி கேட்டாலும் கனவுகள் அல்லது விண்வெளி என்று பொதுவாக கூறுகிறார்கள். ஆனால் அதனூடே இருக்கும் நாயகர்களின் அகச்சிக்கல்கள் யாருள்ளும் பதிவதில்லை. வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமெனில் திரைக்கதை பல நுட்பமான தருணங்களை கடந்து செல்ல வழிகோலுகிறது.

பல நுட்பங்களை வைத்து அதனால் மேலும் பல நுட்பங்களை மறைக்கும் திரைக்கதைகள் சார்ந்தும் நோலனின் படங்கள் சார்ந்தும் நிறைய எழுத்துக்கள் தமிழில் கிடைக்கின்றன. குறிப்பாக கருந்தேளின் இணையதளத்தில். அவற்றை விட முக்கியமாக நோலனின் திரைப்படங்கள் சார்ந்த மின்னூலை வாசிக்க நேர்ந்தது. பிரதிலிபியில் வெளிவந்திருக்கும் மெக்னேஷ் திருமுருகனின் "கிறிஸ்தோபார் நோலன்" என்னும் நூலே அது.

திரைப்பட விமர்சனத்திற்கு தேவையான கதை ரீதியான நுட்பங்கள், கையாளப்பட்டிருக்கும் கதையினூடே இருக்கும் சிக்கல்கள், திரைக்கதை நுட்பம், படமாக்கப்பட்டிருக்கும் போது நிகழ்ந்த சம்பவங்கள், எடுக்கப்பட்ட முறைகள், படம் மற்றும் குழுவினர் சந்தித்த இன்னல்கள் என தன்னால் ஆன எல்லா விஷயங்களையும் செவ்வனே திரட்டி ரசிகனாக இந்நூலை இயற்றியிருக்கிறார். கிறிஸ்தோபர் நோலனின் திரைப்படங்களை புரிந்து கொள்ள அல்லது புரிந்தவர்கள் அதன் அழகியலை அறிய இந்நூல் நிச்சயம் உதவும்.


பின் குறிப்பு :  பிரதிலிபி குழுவின் பணியை உளமாற பாராட்டுவேன். அமேசான் கிண்டில் என்னும் மென்பொருளை கொண்டுவந்த பொழுது தமிழுக்கு இது போன்று ஏதும் இல்லையா என்னும் ஏக்கம் என்னுள் எழுந்தது. இப்போது அதற்கான முயற்சிகள் அதிவேகமாக நடந்து வருகின்றன. அதில் ஒன்றாகவே பிரதிலிபியை பார்க்கிறேன். செயலியாக விரைவில் வரும் எனவும் எதிர்நோக்குகிறேன். அந்த குழுவினருக்கு சின்னதான வேண்டுகோள். சில பதிவுகளில் வார்த்தைகளுக்கு இடையே இடைவெளியின்றி இருக்கின்றன. வாசிப்பதற்கு கடினமாக உள்ளது. அதை மாற்றினால் எல்லா பதிவுகளும் அமைப்பளவிலும் அழகாக இருக்கும்.

Share this:

CONVERSATION