நடைபிணமான நினைவுகள்கவிதைகளை முழுமனதாக வெறுப்பவன் நான். சிறுகதை என்னுள் நுழைந்து உலுக்கி எடுக்க எடுத்துக் கொள்ளும் நேரம் சற்றே அதிகம் தான். அச்சிறுகதை ஏதேனும் இடத்தில் என்னை உள்முகப்பயணம் செய்ய வைக்க வேண்டும். அல்லது முழுக்கதையும் முடிந்தவுடன் அது சார்ந்த நினைவுகளில் என்னை இழக்க வேண்டும். வாசிக்கும் போது இயல்பாக நிகழும் இன்பமான விபத்துகள் இவை. கவிதைக்கு அது எதுவுமே தேவையில்லை. ஒற்றைவரியில் பலகீனமானவனாக மாற்றிவிடும். எழுதும்போதும் சரி வாசிக்கும் போதும் சரி. கவிதை எழுதுவதில் அணாவே தாண்டாதவன் நான். ஆனாலும் அவ்வப்போது சில முயற்சிகளை செய்துள்ளேன். எல்லாமே மனம் உருகி கிடக்கும் தருணங்களில் வாய்விட்டு அழவியலாத நேரங்களில் எனக்காக நான் எழுதுபவை. பலரிடம் சொல்ல நினைத்தும் சொல்லாமல் முழுங்கும் வார்த்தைகள். அதனாலேயே கவிதைகளை நான் மீள்பார்வையிட்டு சரி செய்வதும் இல்லை, இணையபத்திரிக்கைகளுக்கும் அனுப்புவதில்லை. என்னிலிருந்து உதிரும் வார்த்தைகள். கவிஞர்கள் அபத்தமாக தெரிய நிறைய சாத்தியக்கூறுகளும் உள்ளன.

வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. ஆனாலும் அகப்பயணத்தில் ஸ்திரமற்று இருக்கிறேன். சிலர் இது தான் இனிமேயான வாழ்க்கை என்கின்றனர். தனித்துவிடப்பட்ட ஆளாக உணர்கிறேன். ஏனோ இன்று வெளிப்பட்டது. பகிர்கிறேன் வார்த்தைகளாய். . .

நடைபிணமான நினைவுகள்

நண்பனின் தோளொட்டி கதைகள் பேசி
தோழியின் காதோரம் இரகசியம் கூறி
புன்சிரிப்பில் பிரபஞ்சத்தை உள்ளடக்கி
வெடிச்சிரிப்பில் வெளியோரை பயமுறுத்தி
காற்றினிலே கலாய்ப்புகளை களையவிட்டு
ஆண் பாஷையென அவளிடமும்
பெண் அகராதியென அவனிடமும்
இரட்டை அர்த்தங்களுக்கு பொன்முலாம் பூசி
அடுத்தவனின் சாப்பாட்டை அபகரித்து - அவனுடைய
அபகீர்த்திக்கு எதிராய் துணைநின்று
தூங்குபவனை எழுப்பி சுகம்கண்டு
அழும்போது அடுத்தவனின் விரல்தேடி
கெட்டவார்த்தைகளில் சமாதானச் சுவர் எழுப்பி
சுவற்றிற்கு பின்னே மாயமாகிப் போனாயே!
கடந்துபோன தருணங்களின் கணங்களை சுமையாய்க்கொண்டு
காலத்தின் வேகத்தை ஏசிக்கொண்டிருக்கிறேன் தனியனாய்!
பணமென்னும் மன்மதன்மேல்  மையலுற்று
விலையற்ற விலைமாதராய் லஜ்ஜையின்றி
தலைநகரின் தெருக்களில் அம்மணமாய் அலைந்துகொண்டிருக்கிறேன்.
பண அகராதியின் எண்ணற்ற பக்கங்களில்
மிதந்தலைந்து தேடுகிறேன் - நண்பா
உன் பெயரைக் காணவில்லை!
பித்துற்று பித்தனாகி பைத்தியத்தின் வியாதி தொற்ற
தொலைந்துபோன பொழுதுகளின் சாலையில்
தொலைந்து போக உயிருடன் நடக்கிறேன் - தேவையற்று
துரத்துகின்றன உன் நடைபிணமான நினைவுகள். . .

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக