நினைவின் வேர்களாக நாடோடிகள்

நண்பர் சாம் நாதன் 20 ஆம் தேதியன்று பனுவல் புத்தக நிலையத்திற்கு அழைத்தார். அன்று மதியம் நாடோடி என்னும் ஆவணத் திரைப்படத்தின் திரையிடல் நிகழவிருந்தது. முக்கியமான படம்டா தம்பி என்றே அழைத்தார். அலைகழிப்பில் இருக்கும் மனமானாலும் சாமின் வார்த்தையை மதித்து என்னை இழுத்து சென்றது


சிவ சித்திரை செல்வனின் ஆவணப்படம் தான்நாடோடி : சிதைவுறும் ஒரு இனத்தின் மரபு”. நாடோடி என்பதன் ஆங்கிலச் சொல் Gypsy. இதை இங்கு குறிப்பிடுவதன் காரணம் ஏதோ மாய மந்திரம் செய்பவர்கள் இந்த ஜிப்ஸி என வெகுகாலம் வரை நினைத்திருந்தேன். இன்றே இதன் பொருளும் அவர்களின் வாழ்க்கையினூடே இருக்கக் கூடிய உன்னத மற்றும் பரிதாபாரமான விஷயங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது.

படத்தின் ஆரம்பம் டிஸ்கவரி சேனலில் வருவது போல இயற்கையை கூறிக் கொண்டு ஆரம்பித்தது. அதனோடு இருந்த ஒரு ஜீவன்களில் ஒன்று தான் மனித இனம். ஆனால் நவீனத்தின் வளர்ச்சியால் காடுகளை கட்டிடங்களாக்கி நவநாகரீக கலாச்சாரத்தினுள் திளைத்து தன்னை மேலதிக உயிராக காட்டிக் கொண்டிருக்கிறான். ஆனால் இயற்கையுடன் ஒன்றுபட்டு இயற்கையின் விதிகளோடு பயணிக்கும் மனிதர்களாக பழங்குடியின மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் இயற்கையை சமனிலைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த கருத்தை நாளி என்னும் ஆவணப்படத்தைக் காணும் போதும் உணர முடிந்தது. இயற்கையை அழிக்கிறார்கள் எனில் அதனுள்ளே அர்த்தம் பொதிந்தே இருக்கிறது. இது இந்தியாவிற்கானது மட்டுமல்ல. ஜியாங் ரோங் எழுதிய ஓநாய் குலச்சின்னம் நாவலிலும் இதே விஷயத்தை தான் தர்க்கப் பூர்வமாக கூறியுள்ளார். பழங்குடியினரிடம் தான் இயற்கையின் தொன்றுதொட்ட சாயல் அப்படியே நீட்சி கொண்டிருக்கிறது.

இப்படியான விஷயத்தை காட்சிமூலம் காண்பித்து படத்திற்குள் நம்மை இழுத்து செல்கிறார். இப்படம் கையாளும் மக்கள் நரிக்குறவர்கள் என்னும் இனத்தை சார்ந்தவர்கள். இவர்களுடைய தொன்மம் மராட்டியர்களிடம் இருக்கிறது. மராட்டியர்கள் நிகழ்த்திய போரொன்றிலிருந்து பிரிந்து காடுகள் வழியே சென்று அவர்களின் விரிவு உலகின் பல்வேறு மூலைகளுக்கும் சென்றிருக்கிறது என்கிறார். மேலும் நரிக் குறவர்கள் என்னும் பெயரின் காரணத்திற்கு அவர்கள் நரியினை கொன்று அதன் உடம்பிலிருக்கும் விஷயங்களை கலைப்பொருளாக்கி விற்பவர்கள் என்பதாலேயே என்பதையும் கூறுகிறார். அது மட்டுமின்றி அவர்களிடையே இருக்கும் பிரிவுகளையும் அவை எப்படி ஊருக்கு ஊர் மாறுபடுகிறது, அந்த பிரிவிற்கான அம்சங்கள் என்னென்ன, ஏன் இந்த பிரிவுகள் என எல்லாவற்றையும் தெளிவாக படிப்பினை போல கூறுகிறார்.

பழங்குடியின மக்கள் சார்ந்த காட்சிப்படம் என்றாலே அது அவர்களின் வேதனையை மையப்படுத்தியே பெரும்பாலாக இருக்கிறது. இப்படம் அப்படியானது தான். மாறாக நரிக்குறவர்கள் பற்றிய முழுமையை கொடுக்கிறது. அவர்களுடைய பிரச்சினைகள் எண்ணற்றவைகளாக இருப்பினும் அவர்களிடையே இருக்ககூடிய பழக்க வழக்கங்கள், கொண்டாட்டங்கள், கதையாடல்கள் என எல்லாவற்றையும் காட்சிப்படுத்தியுள்ளார். சின்ன உதாரணம் வேண்டுமெனில் முயலினை வேட்டையாடுகின்றனர். அதை முழுமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார். வேட்டைக்கான காத்திருப்பு, கண்டறிதல், வேட்டைக்கான குறி, அதன்பின் முயலை செய்யும் சமையல் என நுண்மையாக இப்படம் நரிக்குறவர்களையும் அவர்தம் செயல்களையும் காண்பிக்கிறது.

இவர்களின் பிரச்சினைகளையும் அதே அளவு நுண்மையுடன் படத்தில் இயக்குனர் கையாண்டிருக்கிறார். நரிக்குறவர்களை அரசாங்கம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்னும் வகுப்பில் வைத்திருக்கிறது. இவர்களோ பழங்குடியின மக்கள் என்னும் உரிமைக்காக ஏங்குகின்றனர். அதே நேரம் சிலர் முழுமைக்குமாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்திலாவது வையுங்கள் என கூறுகின்றனர். அஃதாவது அரசாங்கம் கொடுக்கும் சின்னதான உரிமையையும் முழுமையாக கொடுப்பதில்லை. இதற்காக இவர்கள் கொடுக்கும் குரல் மனதை வருடிச் செல்கிறது.

இவர்களுக்கு ஏன் சமூகத்தில் முக்கியம் கொடுக்க வேண்டும்  ? என்னும் மத்தியத்தர நகரவாழ் மக்களின் அடிப்படை கேள்விக்கு இப்படம் தெளிவான பதிலை தருகிறது. உலகமயமாக்கலுக்கு பின் பேசப்படும் பல்வேறு விஷயங்களான பெண்ணியம், நவீன மருத்துவம், அண்டும் நோய்களின் அதிக அளவிலான எண்ணிக்கை போன்ற எல்லாவற்றிற்கும் நமது மரபு ரீதியான பதில்களும் புரிதலும் இருக்கின்றன. இந்த இனத்தை அழிப்பதன் பொருட்டு நாம் முழுமையுமாக மேற்கத்தியத்தின் அடிமைகளாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்னும் எச்சரிக்கையே நமக்கான பதிலாக கிட்டுகிறது.

அப்படியெனில் இவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்களா ? இதற்கான பதில் ஆம் என்பதையும் இப்படம் காட்சி வடிவத்தில் கொடுக்கிறது. அவர்களுக்கென இருக்கும் மொழி, பழக்க வழக்கம் எல்லாமே சமூகத்தின் அமைப்புக்கேற்று மாறுபட்டும் வழக்கொழிந்தும் சென்று கொண்டிருக்கிறது. அது அவர்களிடையே அன்றாடத்தின் விளைவாக இருப்பினும் சமூக பொறுப்புணர்ச்சி மிக்க மனிதர்களுக்கே அவர்களின் தொன்மம் சார்ந்த தேவை சமூகத்திற்கு எந்த அளவு முக்கியம் என்பது புரிபடுகிறது. அதன் விளைவே சிவ சித்திரைச் செல்வனின் நாடோடி என்னும் ஆவணப்படம்.

படம் முடிந்த பின் இயக்குனர் வசந்தபாலனின் பேச்சு வசீகரமானதாகவும் நியாயமானதாகவும் இருந்தது. முழுநீளத் திரைப்படம் முழுக்க வணிக நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறது. எப்படியும் பணம் ஈட்டும். ஈட்டுவதும் முதலும் கணக்கிட்டால் லாபம் அல்லது நட்டத்தை பார்த்துவிடலாம். ஆனால் இது போன்ற ஆவணப்படங்கள் முழுக்க முழுக்க ஆசையினாலும் தன்னால் அக்குறிப்பிட்ட மக்களுக்கு ஏதேனும் செய்ய இயலாதா என்னும் ஏக்கத்தினாலும் வெளிவருகிறது. அதற்காக என் பாராட்டுகள் என்றார். மேலும் இது போன்ற படங்களை உலகத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். படத்தை பார்க்கும் எல்லோருக்குமே அந்த எண்ணம் மேலதிகமாக வரும். அந்த அளவு இயக்குனரின் உழைப்பையும் அதை காட்சிப்படுத்த அவர் சேர்த்துள்ள தொழில்நுட்ப ரீதியான அழகியலையும் கண்டு வியந்தே காட்சியிலிருந்து விடைபெறுவோம்.

மகத்தான சமூகப் பொறுப்புணர்ச்சியின் மிகச்சிறிய வெளிப்பாடு தான் இந்த நாடோடி. சிறியதாக இருப்பினும் அதன் வசீகரம் இன்னமும் என்னை சுழன்றடிக்கிறது. . .

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக