வணிகப் பொருளாகும் காடுகள்

பழங்குடியின மக்கள் சார்ந்த அடிப்படை அறிவிற்கு கூட காரணம் இரா.முருகவேள் தான் என்று சொல்வேன். அவருடனான உரையாடல்களும், நாளி ஆவணத் திரைப்படமும் ஆவணங்களை தேடிச் செல்லும் முறைகள் சார்ந்து அவருடன் கொண்ட உரையாடல்களும் இன்றும் எனக்கு படிப்பினையாக இருக்கிறது. இந்த பட்டியலில் அவருடைய இன்னுமொரு நூல் சேர்ந்து கொள்ளவிருக்கிறது. அது அவருடைய கட்டுரைகள் அடங்கிய சிறிய தொகுப்பான “கார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும் – என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில்” என்பதாகும்.

இச்சிறுநூலின் ஆரம்பத்தில் ச.பாலமுருகனின் நீண்ட அணிந்துரை இடம்பெறுகிறது. அக்கட்டுரையே நூலின் தலைப்பிற்கேற்ப எல்லா விஷயங்களையும் சொல்வது போல் அமைந்திருந்தது. வாசிக்கும் போது வியப்பு மேலிட்டாலும் இவரே எல்லாம் சொல்லிவிட்டாரே உள்ளேயும் இதே விஷயங்கள் அசை போடப்படுமோ என பயந்தேன். ஆனால் பயத்திற்கு எதிர்மறையாய் பழங்குடியின பிரச்சினைகள் சார்ந்த ஆய்வாக இந்நூல் முழுமைப் பெறுகிறது. நூல் அளவில் சிறியதாக இருப்பினும் உள்ளிருக்கும் விஷயங்களை கடந்து செல்வதற்கு வெகு நேரம் நிச்சயம் பிடிக்கும். ச.பாலமுருகனின் கட்டுரையும் தனித்தே தெரிகிறது.

நாளி ஆவணப்படத்திலேயே மலைவாழ் மக்களின் விவசாய முறை வேறானது. அவற்றினோடு தவறாக இடையீடு செய்யும் போது காட்டினை அவர்கள் அழிப்பதாக பொருள் கொள்ளப்படும் எனக் கூறியிருப்பார். உதாரணமாக குறிப்பிட்ட மலைப்பகுதியில் சில காலம் வாழ்ந்து பயிர்கள் விளைவித்து பின் அங்கிருந்து செல்லும் போது அவ்விடத்தை எரித்துவிட்டு செல்வர். மீண்டும் அவ்விடத்திற்கு வர நெடுங்காலம் ஆகும் என பதிவு செய்திருப்பார் அவரும் லக்ஷ்மணனும். இதே விஷயத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் எப்படி தங்களின் லாப நோக்கத்திற்காக மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை அதன் வேர்வரை எளிமை கலந்து தெளிவாக இந்நூலில் கூறியிருக்கிறார்.

பழங்குடியின மக்களின் பகுதிகளிலும் மலைவாழ் மக்களிடையேயும் அரசு வந்தேறிகளாகத் தான் புகுந்திருக்கிறது. அவர்கள் தத்தமது வாழ்வாதாரங்களுடன் போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அரசு உள்நுழையாமல் இருந்தது. ஆனால் ரிஸர்வ் காடுகள் என முழக்கத்தை அரசு அறிவித்த போது அதனூடே பொதுநலம் இருப்பதாக ஊருக்கு சொல்லப்பட்டது. அது காடுகள் அழிந்து வருகின்றன. அதனால் அதை பாதுகாக்க அரசே தலைமை ஏற்கும் என்னும் கோஷங்கள். இதனால் காடுகள் அரசின் பிடிகளில் நுழைய ஆரம்பித்தன. மேலும் அரசின் பிடிக்குள் வரப்படும் காடுகளில் வாழும் மக்கள் வெளியேற்றபடுகிறார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கோ அரசு எந்த வழியும் செய்யவில்லை. அன்றுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையும் தொழிலும் இல்லாமலாக்கப்பட்டது. (இதை வாசிக்கும் போது நிலம் கையகப்படுத்தும் மசோதாவே நினைவில் எழுந்தது. அங்கே பழங்குடியின மக்கள் என தனித்து இருந்தவர்களை அரசு குறிவைத்தது. இன்றோ அதிகம் தெரியும் மக்கள் கூட்டத்திடம் குறியை மாற்றியிருக்கிறது.)

இதன் பிறகு 1990களில் வன உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. இது பழங்குடியின மக்களுக்கு சாதகமாக அமைந்தது. தெளிவாக சொல்ல வேண்டுமெனில் லாபக் கனவுகளில் மூழ்கி இருந்தவர்களுக்கு பாதகமாக அமைந்தது. இச்சட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு அன்றுவரை வாழ்ந்த வாழ்வாதரத்தையொத்த நிலையை அரசு செய்துகொடுத்த பின்னரே அவர்களின் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று. இங்கு தான் என்.ஜி.ஓ(தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்) நுழைகின்றன. அவர்களுடன் பன்னாட்டு நிறுவனங்களும் புலிகளின் கதைகளும் உள்நுழைகின்றன.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதை பாடபுத்தகத்திலிருந்தே படித்து வருகிறோம். அதை காப்பாற்ற அல்லது முற்றிலும் அழிந்திடாமல் இருக்க ப்ராஜெக்ட் டைகர் அரசால் உருவாக்கப்பட்டது. இதை ஒட்டி என்.ஜி.ஓக்கள் பல வாதங்களை முன்வைத்தனர். அவர்கள் சொல்வதாவது காடுகளில் பழங்குடியின மக்களும் புலிகளும் இருக்கின்றனர். இவற்றில் புலிகளால் மக்களுக்கு ஆபத்து நேரிடும். ஆதலால் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என. இதை நிரூபிக்க பல கட்டுக் கதைகளை அவர்கள் பேச்சினூடே ஏற்றியிருக்கின்றனர். அவை எல்லாமே சுவாரஸ்யமானவை.

ஜியாங் ரோஙின் ஓநாய்க் குலச் சின்னம் நாவலின் அடிநாதத்தை அப்படியே திருப்பி வணிக நோக்கங்களுக்கான விஷயமாக அவர்கள் மாற்றியிருக்கிறார்கள். அஃதாவது பழங்குடியின மக்கள் நெல்லிக்காய்களை அதிகமாக பறிக்கிறார்கள். இதனால் அவற்றை உண்ணும் மிருகங்கள் குறைந்துவிடுகின்றன. அப்படிக் குறைவதால் புலிகளுக்கான் இரை காணாமலாகிறது என. முன் சொன்ன நாவலிலோ புல்-மான்-ஒநாய். ஆனால் அங்கிருக்கும் அரசியல் வேறு. மேலும் இந்த கட்டுக்கதைகளை தக்க ஆதாரங்களுடனும் ஆய்வுகளுடனும் முருகவேள் மறுதலிக்கிறார்.

மனிதர்களின் நடமாட்டத்தால் புலிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது எனக் கூக்குரலிடும் மக்களுக்கு சுற்றுலா துறையின் கட்டுமானங்களாலும் பயணிகளாலும் இனப்பெருக்கம் பாதிக்கப்படாதா என முன்வைக்கும் கேள்விக்கு பதில் அமைதியாக மட்டுமே இருக்கிறது. என்.ஜி.ஓக்கள் புலிகள் காப்பகத்தின் கொடிகளை தூக்கி பிடிப்பதற்கு முக்கிய காரணம் பழங்குடியின மக்களை வெளியேற்றுவதே. அதே நேரம் அவர்களுக்கான மானியங்களும் சென்று சேரக்கூடாது. அவர்களை வெளியேற்றுவதால் இவர்களுக்கு என்ன லாபம் ?

இந்த கேள்விக்கான பதில் மிக விரிவாக நூலில் இருக்கிறது. அதை வாசிக்கும் போது என்னடா சம்மந்தமில்லாத பகுதிகள் வருகிறதே என எண்ணம் ஏற்படும். அங்கு தான் கியாட்டோ ஒப்பந்தம் நூலில் வருகிறது. அந்த ஒப்பந்தத்தின் விரிவாக்கம் யாதெனில் உலகில் உள்ள தொழிற்சாலைகள் அதிகமான அளவு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுவதால் சுற்று சூழல் மாசுபடுகிறது. இதனால் எல்லா தொழிற்சாலைகளுக்கும் குறிப்பிட்ட அளவிலான பெர்மிட்டுகள் தரப்படும். அந்த அளவு மட்டுமே வெளியேற்றலாம் என. இந்நிலையில் மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பெர்மிட்டுகளில் இருக்கப்படும் அளவினை விட குறைவாகவே வெளியிடுகிறது. இதனால் மீதமுள்ள பெர்மிட்டினை வளரும் நாடுகளுக்கு விற்கலாம். இதனாலேயே வளரும் நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் குறைவான வாயுவை வெளியேற்றும் தொழிற்சாலைகளை நிறுவுகின்றன. (இங்கே இரண்டு கேள்விகள். 1. தற்போது MAKE IN INDIA வழியே உள்நுழையும் தொழிற்சாலைகள் மூலமாக மூலதனம் செய்யும் நாடுகள் தங்களுக்கான பெர்மிட்டுகளை அதிகமாக வாங்கிக் கொள்ளுமா ? 2. தொடர்ந்து தொழிற்சாலைகளை நிறுவுவதன் மூலம் (என்னதான் பெர்மிட்டுகளை அளித்தாலும்) வெளியேற்றப்படும் வாயு அதிகமாகத்தானே இருக்கும் ? ஒரு கட்டத்தில் கியாட்டோ ஒப்பந்தம் வருவதற்கு முன் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலைக்கு தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் வாயுக்கள் வெளியேற்றப்படலாம் அல்லவா ? தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள். அறிந்து கொள்ள கேட்கிறேன்.)

இந்நிலையில் கார்பன் டை ஆக்ஸைடை மரங்கள் உறிஞ்சு கொள்கின்றன. அந்த மரங்களில் இருக்கும் கார்பனின் அளவினை பொறுத்து அவற்றின் விலையும் அதிகமாகிறது. இந்த வணிகத்திற்கு உள்நாட்டிலிருந்து என்.ஜி.ஓக்கள் உதவி செய்கிறார்கள். மேலும் அவர்களின் உதவிகளைக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் வணிகம் செய்கின்றன. மேலும் காடுகளை தனியார்மையமாக்கும் முனைப்பினில் இந்த கூட்டுகளும் இருக்கின்றன. இங்கே இவர் எழுப்பும் கேள்வி இதனால் அங்கிருக்கும்/ அங்கிருந்து வெளியேற்றப்படும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் ? சின்ன நூலினூடே எண்ணற்ற கேள்விகள் நிறைந்து உள்ளன. அவற்றில் சில கேள்விகள் மட்டுமே பதிலுடன் இருக்கின்றன என்பது வருத்தமான விஷயம்.

காடுகளும் புலிகளும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமாக இருந்த காலம் மாறி அரசினாலும் நிறுவனங்களின் வணிக நோக்காலும் அதுவே அவர்களின் நரகமாய் மாறியிருக்கிறது என்பதை இந்நூல் எடுத்துணர்த்துகிறது. நூலின் கடைசியில் சத்தியமங்கலத்தில் நிறுவப்படும் புலிகள் காப்பகம் எப்படி அரசு விதிமுறைகளை மீறுகிறது என்பது குறித்த தீர்மானம் அத்துமீறலை தெளிவாக கூறுகிறது. நூலை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை என ஆரம்பத்தில் சொன்னது பலவிதத்தில் உண்மையாக இருக்கிறது.

இரா.முருகவேளின் எழுத்தில் இவ்விஷயம் சார்ந்து அறிவுள்ளவர்களுக்கும் சரி அடிப்படை விஷயமே அறியாதவர்களுக்கும் சரி பிரச்சினையின் வேர்வரை பயணிக்க எளிதாய் உதவுகிறது. நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கை வளங்களுக்கு அதிகார வர்க்கத்தால் என்ன ஆகிறது என்பதை அறிய துணைபுரிகிறது. தொழில் நுட்ப ரீதியில் அறுவடையாகும் காய்கறிகளை நோக்கி பயணிக்கும் நவீனத்தின் பின்னே பொதிந்திருக்கும் வணிகத்தையும் அதனூடான லாபத்தை அடைய போராடும் நிறுவனங்களையும் ஆதாரங்களுடன் கண்முன் கொணர்கிறது இந்நூல்.

இரா.முருகவேள் எழுதிய மிளிர் கல் நாவல் சார்ந்து எழுதிய பதிவிற்கு “ஆய்வு இரக்கமற்றது” என்று தலைப்பிட்டிருந்தேன். அதன் எதிர்த்திசையிலான – இரக்கமற்றவர்களை ஆய்வு செய்கிறது இச்சிறு கட்டுரைத் தொகுப்பு.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக