ஏறவைக்கும் வீழ்ச்சிகள்

வரலாற்றை புனைவுடன் இணைக்கும் இடங்கள் சுவாரஸ்யமானவையும் ஆபத்தானவையும் ஆகும். அதற்கு இன்னுமொரு காரணம் யதார்த்தமும் கற்பனையும் கலக்கின்றன என்பதாகும். அப்படியானதொரு நாவலை வாசிக்க நேரும் பட்சத்தில் ஒன்று வரலாற்றை வாசகன் அறிய நேர்கிறான். ஏற்கனவே அறிந்துவைத்திருக்கும் வரலாற்றுடன் ஆசிரியர் முன்வைக்கும் வரலாற்றினையும் சேர்த்துக் கொள்கிறான். வரலாறே தெரியாதவன் வாசிக்க நேரும் பட்சத்தில் அதையே வரலாறென கொள்கிறான். புனைவினூடே முழு வரலாற்றையும் ஆசிரியன் எடுக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. பொதுவாகவே இப்படியானதொரு புனைவில் வரலாற்றின் பன்முகத் தன்மைகளுக்கும் ஏற்ற பாத்திரங்களை படைத்துவிடுவர். அதனை முன்வைத்து வெற்றியையும் வீழ்ச்சியையும் முன்வைப்பர். அதுவே வரலாற்றை நிர்மாணிக்கும். இந்த முகத்தில் அணுகும் போது ஏதோ ஒரு வரலாற்று ரீதியான கொள்கை வெற்றியடைகிறது. மற்றொன்று தோல்வியடைகிறது. அங்கே வாசகனுக்கு நாவலில் இருக்கக் கூடிய உண்மைத்தன்மையை தேடி செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

மேலும் பல நாவலில் வரலாற்றினை மையநீரோட்டமோடு இணைக்க மறுக்கின்றனர். பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய புலிநகக் கொன்றை நாவலை எடுத்துக் கொண்டால் அதில் வரலாறு குடும்பம் என்பதன் பிண்ணனியில் மட்டுமே நிற்கிறது. திருநெல்வேலியின் வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்த காலத்தில் அங்கிருந்த குடும்பங்களில் ஒன்றைத்தான் அவர் முன்வைப்பது. அக்னி நதி நாவலில் ஓரிடத்தின் காலமாற்றத்தை தொடர்ந்து பல்வேறு காலகட்டத்தொற்கொப்ப காட்ட முனைகிறார் ஆசிரியர். அங்கேயும் வரலாறு முண்ணனியில் இல்லை. சிப்பியின் வயிற்றில் முத்து நாவல் வரலாற்றை கதைசொல்லல் தன்மையிலும் நினைவோடையிலுமே தக்க வைத்துக் கொள்கிறது. புயலிலே ஒரு தோணி வரலாற்றை நாவலுக்குள் நிகழும் தன்மையாக மாற்றியிருக்கும். ஆனால் அந்த வரலாற்றிற்கும் மறுபக்கம் என்பது உண்டு என்பதை நம்மால் வாசிப்பினூடே உணரவும் முடியும். தமிழிலக்கியத்தில் இப்படியான பல எடுத்துக்காட்டுகளை கூறிக் கொண்டே செல்லலாம். 

வரலாறு எல்லாமே ஏதோ ஒரு கொள்கைகளை ஸ்தாபித்துக் கொண்டே வந்திருக்கிறது. இந்தியாவின் வரலாற்றை எடுத்து பார்த்தால் எண்ணற்ற அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் இங்கு ஒருங்கே நிகழ்திருக்கின்றன. உலக வரலாற்றின் கொள்கைகளின் சாயைகள் இந்தியாவில் எந்த அளவிற்கு தன்னுடய தன்மையை காட்டியிருக்கிறது என்பதையும் நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் எல்லா கொள்கைகளின் பக்கத்திலிருந்து பேசும் பட்சத்தில் எல்லாமே சரியென்னும் எண்ணமும் நம்முள்ளே உருவாக ஆரம்பிக்கிறது. 

மக்களுக்கு நலம் பயக்க வேணும் என்னும் எண்ணத்திலேயே மார்க்ஸீயம் கம்யூனிஸம் சோஷலிஸம் போன்ற அரசியல் கோட்பாடுகள் உருக்கொண்டன. ஆனால் அவற்றினுள்ளே ஏற்பட்ட வீழ்ச்சிகள் பிரதான கடமைகளை செய்யாமல் கடந்து சென்றன. ஏதோ ஓரிடத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லா இடங்களிலும் பிரதிபலித்தன. அதன் விளைவாகவே வெற்றியும் வீழ்ச்சியும் உருவாகின. இந்த எல்லா விஷயங்களையும் ஒருங்கே ஒரு நாவல் பேசியதை வெகு ஆச்சர்யமாகவே நம்மால் காண முடியும். அப்படியான ஒரு நாவலே மலையாளத்தில் வெளிவந்த தகழி சிவசங்கரப்பிள்ளையின் “ஏணிப்படிகள்”. தமிழில் சி.ஏ.பாலன் மொழிபெயர்த்துள்ளார். கேசவப்பிள்ளை என்னும் ஒற்றை மனிதனின் சுயவரலாற்றை கூறும் நாவல் என ஒரே வரியில் கூறமுடியுமாயினும் இந்நாவல் அவ்வளவு எளிதாக கடந்து செல்லக்கூடிய எந்த கூற்றினையும் கொண்டிருக்கவில்லை. மாறாக காலநேரத்திற்கொப்ப நிகழ்ந்த அரசியல் மாற்றங்களையும் அதனூடான கொள்கை கோஷங்களையும் அதற்கே உரிய தர்க்கங்களுடன் ஒரு நிலவியலை நம் கண்முன்னே கொண்டுவருகிறது. 

இங்கே சொல்லப்பட்ட இச்சுறுக்கமும் மேலே சொல்லப்பட்டது போலவே வரலாற்றை பின்புலமாக மட்டுமே வைத்திருக்கிறதோ என்னும் எண்ணம் எழலாம். வாழ்க்கையின் சுழற்சியில் எதன்மீதோ பிடிப்பொன்றை வைத்துக் கொண்டு அதையே தமது கொள்கையாக்கி கண்மூடித்தனமாக பிரயாணிக்கிறோம். அதன் இழுவைகளுக்கெல்லாம் நம்மை இழுத்துக் கொண்டு நகர்கிறோம். அதன்படியே இந்நாவலிலும் கேசவப்பிள்ளை அரசியலிலும் அதிகாரத்திலும் தம்முடைய பிடிப்பை நிறுவிக் கொள்கிறார். அதன் ஆட்டத்தில் எண்ணற்ற கொள்கைகளோடு முரண்பட்டும் கைகோர்த்தும் நகர ஆரம்பிக்கிறார். அதனூடே கேசவப்பிள்ளை தன்னையே சிருஷ்டித்துக் கொள்கிறார். கடந்த காலத்தில் செய்த செயல்களுக்கான வினைகளும் அவரை பின்தொடர்கின்றன. சிலவற்றை மறைத்தும் சிலவற்றை பகிரங்கமாக வெளிக்காட்டியும் அவர் செய்யும் நீளமான பயணம் மாபெரும் வீழ்ச்சியை சித்தரிக்கிறது. மாபெரும் வீழ்ச்சியிடையே கடந்த காலம் மட்டுமே ஸ்திரமாக நிற்கிறது. 

கேசவப்பிள்ளை குமாஸ்தாவாக இருப்பது முதல் கதை ஆரம்பமாகிறது. தனக்கு பக்கத்து இருக்கையில் இருக்கும் தங்கம்மாவின் மீது ஏற்படும் மோகம் அவரை அவள்பாலான ஈர்ப்பினை அதிகப்படுத்துகிறது. அதே நேரத்தில் ஊரில் அவருக்கான திருமண ஏற்பாடுகள் நிகழ்ந்துவிடுகிறது. கார்த்தியாயினியுடன் திருமணமும் ஆகிறது. அதை விடுத்து தங்கம்மாவுடன் இருந்து அவள் மூலம் கிடைக்கும் சிபாரிசுகளால் வேலையில் பதிவி உயர்வுபெற்று முன்னேறுகிறார். தங்கம்மாவிற்கு கார்த்தியாயினின் கதையே தெரியாது. அதே போல் கார்த்தியாயினுக்கும். இதற்கு மேல் அவரின் பயணத்தினூடே மட்டும் தான் கதையை அறிந்து கொள்ள வேண்டும். ஏறிவந்த ஏணிப்படிகளை புறந்தள்ளிவிட்டு அவர் செல்லும் பாதைகள் முழுக்க கடந்த காலம் தீராகசப்பாய் துரத்திக் கொண்டிருக்கிறது. 

திருவாங்கூர் சமஸ்தான அரசியலில் கேசவபிள்ளை காட்டும் திடீர் ஈடுபாடு அவருடைய முன்னேற்றத்திற்கு பெரும்பங்கு ஆற்றுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு கதை ஆரம்பம் கொள்வதால் சமஸ்தான ராஜ்ஜியத்திலேயே திருவாங்கூர் நகர்கிறது. அந்நிலையில் இந்தியாவில் காங்கிரஸின் ஆட்சி நிலவுவதற்கு நிறைய சாத்தியங்கள் ஏற்படுகின்றன. அப்போது திவானின் ஆட்சி தகர்ந்துவிடும் என்னும் பயத்தில் பெரும் கலவரங்கள் நிகழ்கின்றன. காங்கிரஸ்காரர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். காங்கிரஸிற்கும் திவானுக்குமான பனிப்போராக மாறுகிறது. அதற்கு மையமாக இருப்பவர் கேச்வப்பிள்ளையாக இருக்கிறார். திருவாங்கூர் தனித்தேசமாக வேண்டும் என்னும் முனைப்பில் நிறைய போராட்டங்கள் நிகழ்கின்றன. 

இதற்கு பிறகான அரசியலில் திருவாங்கூர் தன் கம்பீரத்தை இழந்து காங்கிரஸுடன் இணைய ஆரம்பிக்கிறது. அதற்கு மூலக்காரணமாக இருப்பது மக்களிடம் கிடைக்காத ஆதரவு தான். அப்போது கேசவப்பிள்ளையும் காங்கிரஸ்காரர் ஆகிறார். அப்போது அவருக்கு எதிரியாவது கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்டுகள் உழைக்கும் வர்க்கத்தை மையப்படுத்தியே எல்லா கோட்பாடுகளையும் வைக்கின்றனர். அதே நேரம் காங்கிரஸ்காரர்களை எதிர்ப்பதில் குறியாய் இருக்கின்றனர். இந்த முரண்பாடுகளை பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் ஆசிரியர் முன்வைக்கிறார். எப்படியெனில் காங்கிரஸ்காரரின் தம்பி கம்யூனிஸ்டு. கங்கிரஸ்காரரின் மாப்பிள்ளை கம்யூனிஸ்டு என உணர்வு ரீதியான துவந்துவங்களை நாவலில் அங்கங்கு வைத்தே நகர்கிறார். 

இந்த எல்லா கொள்கைகள் சார்ந்தும் எல்லா கதாபாத்திரங்களும் பேசுகின்றன. அவை எல்லாமே அவரவர்களின் குணத்திலிருந்தும் சுயத்திலிருந்தும் வெளியாபவை. கார்த்தியாயினுக்கு அரசியல் விஷயங்கள் எதுவுமே தெரியாது. முழுக்க முழுக்க கிராமத்துக்காரி. ஊழலில் என்ன தவறு இருக்கிறது என தர்க்கம் செய்பவள். என்ன ஆட்சி வந்தாலும் பரவாயில்லை ஆனால் உயிர்ச்சேதமே ஏற்படக்கூடாது என்பதில் முனைப்புடன் இருக்கிறாள். பழமைவாதத்தை எங்குமே மீறாமல் இருக்கும் பாத்திரமாக கார்த்தியாயினி இருக்கிறாள். அவளுக்கு எதிர்ப்பதம் தங்கம்மாள். எல்லா இடங்களிலும் மீறலை கைக்கொள்கிறாள். சம்பிரதாயங்களை, ஒரு இடத்திற்கான ஒழுங்குகளை அவள் மீறல் மூலமாக மட்டுமே கடந்து சுகத்தை காண்கிறாள். தன்னுடைய மீறலுக்காக அரசியல் வளையக்கூடுமெனில் அதை வளைப்பதில் தவறென்ன உள்ளது என நினைப்பவள். அரசியல் நிலைப்பாடுகள் அவளிடம் தோல்வியையே தழுவுகின்றன. 

சங்கரப்பிள்ளை காங்கிரஸின் தியாகி. காங்கிரஸின் கொள்கைகளுக்காக ஏகப்பட்ட முறை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார். அப்படி சென்றவருக்கு கிடைக்க வேணடிய உரிய தொகை காங்கிரஸின் ஆட்சியில் கிடைப்பதில்லை. அப்போது அவருக்கு நிறைய பேர் கொடுக்கும் அறிவுரைகள் கம்யூனிஸ்டுகள் இப்படி செய்யமாட்டார்கள் என்பதாகவே இருக்கிறது. ஆனாலும் தன்னுடைய கொள்கைகளில் தளர்ச்சியில்லாமல் மீண்டும் போராடவே செல்கிறார். இதே போன்று இன்னுமொரு பாத்திரம் கோபாலன் நாயர். தனக்கான நிலத்தை எப்படியும் மீட்க வேண்டும் என்று எப்படியெல்லாமோ போராடுகிறார். கேசவபிள்ளையின் வளர்ச்சியால் தனக்கு நன்மையே ஏற்படும் என மேலதிகமாக நம்புகிறார். ஆனால் அவருக்கு கிடைப்பது எல்லாமே புறமுதுகுகள் மட்டும் தான். அரசியலால் துப்பி எறியப்பட்ட சக்கையாக கோபாலன் நாயர் இருக்கிறார். 

ஒவ்வொரு கதாபாத்திரமாக சொல்வதன் காரணம் எல்லோருக்கும் அரசியலில் குறிப்பிட்ட கொள்கைகள் சார்ந்து அசையாத நிலைப்பாடுகள் இருக்கின்றன. அப்படி எந்த நிலைப்பாடுமே இல்லாத ஒரே கதாபாத்திரம் கேசவப்பிள்ளை. சந்தர்ப்பத்தினாலும் தன்னுடைய இருத்தலையும் இரகசியங்களையும் நிலைநாட்டவும் அவர் மேற்கொள்ளும் விஷயங்கள் தான் அரசியல் கொள்கைகளாக மாற்றம் கொள்கின்றன. அவருடைய வீழ்ச்சியை அறிந்த ஒரே பிறவி மனைவி கார்த்தியாயினியாக இருக்கிறாள். அவரை மட்டுமே அறிந்த பிறவியாக தங்கம்மா இருக்கிறாள். 

இடையே தங்கம்மா சாமியாராக மாறும் பகுதிகளென நிறைய வருகின்றன. அவ்விடங்களிலெல்லாம் தங்கம்மா கேசவப்பிள்ளையின் பார்வையில் எப்படி இருக்கிறாள் என்பதாகவே நாவல் நகர்வு கொள்கிறது. இந்நாவல் உண்மையாகவே மிக நீளமான பயணம் என்பதை எந்நிலை வாசகராலும் உணர்ந்து கொள்ளமுடியும். வரலாற்ரையும் தனிமனித வாழ்க்கையினையும் பிண்ணிப் பிணைத்து இரண்டிலும் இருக்கும் வீழ்ச்சிகளை ஒருங்கே சமைத்திருக்கிறது இந்நாவல். நாவலின் கடைசியில் இருக்கும் மௌனம் இன்னமும் காதினுள் அடர்த்தியினை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஏணிப்படிகளில் ஏறிச் செல்லும் கேசவப்பிள்ளைக்கு ஒரு படியிலுமே தெரியவில்லை மேலே இருப்பது மகத்தான வீழ்ச்சியென்று!

பி.கு : இந்த நாவலை அன்பளிப்பாக அளித்த யுவகிருஷ்ணாவிற்கு இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக