ஒரு தன்னிலை விளக்கம்

இதுவரை இரண்டு வங்க நாவல்களையே வாசித்திருக்கிறேன். ஆரோக்ய நிகேதனம் மற்றும் சிப்பியின் வயிற்றில் முத்து. இரண்டுமே வெவ்வேறு வாழ்வினையும் அதன் வீழ்ச்சிகளையும் செவ்வனே பேசும் படைப்புகள். அதனுள்ளே தங்களுக்கான அரசியலும் அழகியலும் ஒருங்கே இருந்தன. சமீபத்தில் தேவிபாரதியை சந்திக்க சென்ற போது அவர் சொன்ன வார்த்தை ஒன்றே வங்க நாவல்களை அணுகும் போது என்னுள் எழுகிறது. வங்க நாவல்கள் புரட்சியைப் போல தமிழகத்தில் பறந்தது ஒரு காலத்தில். மலிவு விலையிலும் சில இடங்களில் இலவசமாகவும் விநியோகிக்கப்பட்டன மொழிபெயர்ப்பு நாவல்கள் என.

வங்க நாவல்கள் மீமாயப் புனைவுகளிலும் புராணீகங்கள் சார்ந்த மறு உருவாக்கத்திலும் ஆர்வம் காட்டாமல் நவீன யுகங்களினூடான மோஸ்தர்களை ஆராய்கின்றன. நவீனத்தில் இருக்கும் இருமைகளுக்கு உருவம் கொடுக்க முனைகின்றன. அதில் பொதிந்திருக்கும் யதார்த்தம் வாசிப்பவர்களை திணற வைக்கிறது. உதாரணத்திற்கு ஆரோக்ய நிகேதனத்தில் வரும் ஜீவன் மஷாயின் வாழ்க்கை. அதனூடே மோதும் இருவேறு மருத்துவங்கள். மேலும் இந்த நாவல்கள் இன்றளவும் நிலைக்கும் அளவு தன்னுள்ளே விஷயங்களை கொண்டிருக்கின்றன. அதனாலேயே க்ளாஸிக்குகள் ஆகின்றன. அப்படியான ஒரு க்ளாஸிக்கே சுநீல் கங்கோபாத்தியாய் எழுதிய “தன் வெளிப்பாடு”. தமிழில் மொழிபெயர்த்தவர் சு.கிருஷ்ணமூர்த்தி.1966 இல் இந்நாவல் வெளியாகியிருக்கிறது. இது அவருடைய முதலில் வெளியான நாவல். ஆனால் 1959 இலேயே தன்னுடய முதல் நாவலை எழுத ஆரம்பித்துவிட்டார். இப்போது வாசிக்கும் போது கூட கதையில் இருக்கக் கூடிய தீவிர தர்க்கங்களையும் அதனூடான freshness ஐயும் எளிதில் உணர முடிகிறது.

Orthodox என்னும் பதம் ஒரு கட்டுமான பிம்பம். அது மதம் சார்ந்தும் அவரவர்கள் புரிதல் சார்ந்தும் மனதினுள்ளே எழக்கூடியவை. இந்த பிம்பம் யதார்த்தமான சமூகத்துடன் ஒன்றும் போது அவன் ஏதேனும் ஒன்றை வெறுக்க ஆரம்பிக்கிறான். ஒன்று அவனுள்ளே இருக்கும் கொள்கைகள் தளர ஆரம்பிக்கின்றன. அல்லது சமூகம் பொய்யானது என்னும் முடிவிற்கு வருகிறான். இந்த இரண்டில் ஏதோ ஒன்றை அவன் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்னும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.

இந்த மோதலை அணுக நேரும் தருணத்தில் இன்னுமொரு கேள்வியும் அவனுள்ளே உருவாகிறது. நான் யார் என்னும் கேள்வியே அது. கொள்கைகளுடன் சமூகம் ஒன்றுவதில்லை. அப்படியெனில் கொள்கைகளுடன் இருக்கும் நான் தான் என் சுயமா அல்லது சமூகத்துடன் இணங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நான் தான் என் சுயமா என ? இந்த தர்க்கம் எங்கே எழுகின்றது எனில் குடும்பங்கள் சார்ந்து வளர்க்கும்முறை சார்ந்து உருவாக்கப்படும் கோட்பாடுகளாலேயே ஆரம்பம் கொள்கிறது.

உபநிஷத்தில் ஒரு வார்த்தை வருகிறது. ஒரு பொருளின் மேல் ஆசைபட்டால் அதை முழுமைக்கும் அனுபவிக்க வேண்டும். பின் அதன் மேல் உள்ள பற்றே போய்விடும் என. எவ்வளவு தீர்க்கமான வார்த்தைகள். இந்த வார்த்தைகளைத் தான் கஸான்ஸாகிஸின் ஸோர்பாவும் சொல்கிறான். இதை இங்கே சொல்வதன் காரணம் மனதினுள்ளே உருவாகும் கொள்கைகள் அல்லது பிம்பங்கள் எல்லாம் தன்னால் மட்டுமே உருவாவது அல்ல. சுற்றியிருக்கும் சூழல் சார்ந்து ஏற்படும் அதிருப்தியில் நாம் வரும் ஒரு நிலையின் வார்த்தை வடிவமே இந்த கொள்கைகள். அப்படியெனில் அந்த அதிருப்தி என்பது யாது ?

அறப்பிழைகளை கண்டு அஞ்சும் தருணத்தில் தன்னுடைய வேர்கள் இந்த அறப்பிழையை ஏற்றுக் கொள்கின்றனவா என்னும் கேள்வி நம்முள் எழுகிறது. உதாரணத்திற்கு சிகரெட் எடுத்துக் கொள்வோம். சிகரெட் பிடிப்பது கேடு என்பது எல்லோருக்கும் தெரியும். அதே நேரம் சிகரெட் பிடிப்பவர்களை கெட்டவர்கள் என சொல்லும் குணம் தான் இங்கே பேசப்பட வேண்டியது. இது தனிமனிதனாக முன்வைக்கும் கூற்று அன்று. அவன் வளர்க்கப்பட்ட விதம் இதை கூறுகிறது. சிகரெட் பிடிக்கும் நண்பர்களுடன் சகஜமாக பழகும் தருணத்தில் ஏதோ பிணைப்பை வளர்த்தவர்களிடமிருந்து தகர்த்துக் கொள்கிறான். அப்போது சிகரெட் சார்ந்து பொதுப்படையான கருத்து அவனுக்குள் எழ ஆரம்பிக்கிறது.

இது ஒரு உதாரணம் தான். இப்படித்தான் வாழ்க்கை சார்ந்த புரிதல் வேர்களை முழுமையாக்க நம்பாமல் வெறும் முன்மாதிரியாக கொண்டு சுயமாக உருவம் கொள்கிறது. அதற்கு பல தளர்ச்சிகள் தேவைப்படுகின்றன. அப்படியான ஒன்றையே இந்நாவல் விரிவாக பேசுகிறது. அனுபவம் சார்ந்தும் கொள்கைகள் சார்ந்தும் இருக்கும் முரண்பட்ட விஷயங்களையும் கொள்கைகளில் இருக்கும் நிலையாமையையும் சில பிம்பங்களிலிருந்து வெளிவரமுடியாமல் வாழத் தகுதியில்லாத சுயத்தையும் வெளிச்சம் போட்டு நாவல் காட்டுகிறது.

சுநீல் நாவலின் நாயகன். வீட்டினை புறந்தள்ளிவிட்டு தன்னிஷ்டத்திற்கு வாழ வேண்டும் என வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனுடைய நண்பர்கள் அவிநாஷ் சுவிமல் சேகர் போன்றவர்கள். இதில் சேகரைக் காணவில்லை என்பதிலிருந்து தான் நாவல் ஆரம்பிக்கிறது. சேகர் காணாமல் போவது இயல்புதானே என்ற தொனியில் தான் நாவல் நகர்கிறது. அதற்கு பின்னிருக்கும் அர்த்தம் காணாமல் போய் பார் உன் அருமை உனக்கே தெரியும். உன்னை மறந்து பார் சுயத்தை அறிவாய் என்பதாக இருக்கிறது. இதை நாவலின் பல ரூபங்களில் வாசகர்களால் காண முடியும்.

குடி, போதை மருந்துகள், மாது என்பதாகவே நாவல் நகர்கிறது. இந்த எல்லா இடங்களையும் ஆசிரியர் நியாயப்படுத்துகிறார். எப்படியெனில் மனிதன் சுயத்தை யாரிடமும் அடக்கிக் கொள்ளாமல் வெளிப்படையாக இருக்கக்கூடிய ஒரே இடம் போதை வேசி மற்றும் குடிக்கும் இடங்களில் தான். அங்கே மரியாதை என்னும் இடம் காணாமலாகிறது. எல்லோரும் ஒன்றாகிறார்கள் என.

சுநீல் தன்னுள்ளே மரபுகளை சுமந்து கொண்டிருக்கிறான். அந்த மரபுகளை அவனால் முழுமைக்கும் அனுபவிக்கவும் முடியவில்லை. சமூகத்திற்கு ஏற்ப தளர்த்திக் கொள்ளவும் முடியவில்லை. அவனுக்கென யாரும் இல்லை என்னும் உணர்வே அவனை தொற்றி இருக்கிறது. பலரின் மீது கோபம் கொள்கிறான். ஆனால் வெளிக்காட்ட முடிவதில்லை. எல்லா தவறுகளையும்(அவன் நினைப்பதாவன) செய்ய நினைக்கிறான். அதையும் முழுமைக்கும் செய்ய முடியவில்லை. யதார்த்தமும் மரபும் அவனுள்ளே மோதிக் கொண்டே இருக்கின்றன. இரு காதல்கள் வருகின்றன. அதிலும் தோல்வியே அடைகிறான்.

மரபுகளை கட்டிக் கொண்டு வீடடங்கிய பிள்ளையாக இருக்கும் சுநீல் வாழ்க்கையில் அன்றாடம் அவன் சந்திக்கும் வீழ்ச்சிகளையும் அவனுடைய பலகீனங்களையும் விரிவாக அதே நேரம் வேகமாகவும் பேசுகிறது இந்நாவல். தன்னை முழுமைக்கும் வெளிப்படுத்துகிறான். அப்படி வெளிப்படுத்தும் போது அது வீழ்ச்சியின் உருவமாக மட்டுமே மிஞ்சி நிற்கிறது. இந்நாவலை பற்றி அதிகம் சொல்லாததன் காரணம் அடுக்கடுக்கான சம்பவங்களாலும் அடர்த்தியான வசனங்களாலும் நிரம்பி இருக்கிறது நாவல்.

ஏதேனும் ஒரு குழுமத்தில் எப்போதும் மனிதன் சிக்கிக் கொண்டிருக்கிறான். அந்த குழுமத்தினின்று வெளிவரவும் துடித்துக் கொண்டிருக்கிறான். பிறகு கூட்டத்தினுள் சேர்வானேன்? இந்த கேள்விக்கான விடையின் இடையேயும் இருவேறு முரண்பட்ட வாழ்க்கையினுள்ளும் ஊசலாடிக் கொண்டே தன்னை அறிய நினைக்கிறான். அப்படியான ஒருவனின் தன்னிலை அறிக்கையே தன் வெளிப்பாடு நாவல்.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

சுழல் சூழல் சரியே...

Post a comment

கருத்திடுக