இருண்மையை தேடும் அர்த்தங்கள்ஃப்ரான்ஸ் நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவரின் மகனாக பிறந்தவர் குஸ்தாவே ஃப்லாபர்ட். தன் பதின் வயதுகளிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார். படிப்பு சார்ந்தும் வேலை சார்ந்தும் அவர் மேற்கொண்ட பயணங்களே அவருக்கான அனுபவங்களாக அமைந்தன. பின் ஐந்து ஆண்டுகள் பொறுமையுடன் தன் முதல் நாவலை எழுத ஆரம்பித்தார். ஃப்ரான்ஸ் நாட்டில் இருக்கும் கலாச்சாரத்தை மீறி தன் கருத்துகளை நாவலின் மூலம் பதிவு செய்தார். அதனாலேயே அந்நாவல் அங்கு பெரிதும் பேசப்பட்டது. அந்த நாவல் வெளியான ஆண்டு 1856. அது தான் அவர் எழுதிய MADAME BOVARY. உலக க்ளாஸிக் எழுத்துகளில் முக்கியமானதாக இப்படைப்பு பலராலும் முன்வைக்கப்படுகிறது.


மீறல் வகையான எழுத்துகள் அந்தந்த பிராந்தியங்களுக்கு ஏற்ப உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு பிராந்தியங்களும் தங்களுக்கென சில கோட்பாடுகளையும் மதநல்லிக்கணங்களையும் வாழ்க்கை சார்ந்த பார்வைகளையும் நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள். சில நாடுகளில் அவற்றை ஒட்டியே அரசியலமைப்பு சட்டமும் அமைக்கப்பெறுகிறது. இதை அந்த நிலவியல் அறம் என மதிக்கிறது. ஆனால் கூர்ந்து நோக்கும் தருணத்தில் அவற்றினுள்ளே அபத்தங்கள் நிறைய இருக்கக்கூடும். அந்த களைகளை தகர்த்தெறியவே படைப்புகளின் தேவை அத்தியாவசியமாகிறது.

ஆண்-பெண் பேதங்களை கோட்பாடுகளின் முன்வைத்து பார்க்கும் போது பெண் என்பவள் வீக்கர் செக்ஸ் என்பதில் எந்த மாற்றமும் இல்லாததாகவே தெரிகிறது. பெண்களுக்கென தனியான உலகம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. அவர்களிடம் இருக்கும் அழகியல் விஷயங்கள் ஒரு ஆணிடம் எப்போதுமே இருப்பதில்லை. ஆண் பொருள்முதல்வாதமாகவே உலகினை காண்கிறான். பொருள்களின் அளவில் கணக்குகளின் மதிப்பீட்டில் உலகத்தில் வாழ்க்கையை நடத்திவிட முடியும் என்றெண்ணுகிறான். அதே பெண் உணர்வுகளால் கட்டமைக்கப்பட்டது இந்த உலகம் என்பதை மனதோரம் ஸ்திரமாக நம்பிக்கொண்டிருக்கிறாள். வெளியிலோ உலகம் ஆணாதிக்கவர்க்கமாக இருக்கிறது. ஆணாதிக்கவர்க்கமெனில் பொருட்களை மையப்படுத்திய வாழ்க்கையாக.

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது என்னவோ எக்காலத்திற்கும் எந்த பிராந்தியத்திற்கும் பொருந்தி செல்லக்கூடிய வாக்கியமாகும். அதே நேரம் இந்நாவல் எழுப்பும் பிரதான கேள்வி பொருளீட்டம் மட்டுமே உலகில் இருப்பதற்கான நம்பிக்கையை அளிக்குமா ? பொருளே போதுமா ? அசேதனங்கள் சார்ந்து எத்தனையோ தத்துவார்த்தங்கள் எழுப்பப்பட்டாலும் அவற்றிற்கான மதிப்பீடு நிலையற்றது என்னும் நிலையிலேயே மனிதனால் அளிக்கப்படுகிறது. மனிதன் தன் வாழ்க்கையை தத்துவங்களாலும் கோட்பாடுகளாலும் கொள்கைகளாலும் நிகழ்த்த வேண்டுமென்றால் கூட உடன் ஒரு மனிதனே தேவைப்படுகிறான். அப்படி ஒரு மனிதன் தேவையாக அமையும் பொழுது அவனிடம் செலுத்த அன்பு தேவைப்படுகிறது. இந்த அன்பே நாவலின் தர்க்கப்பொருளாக மாறுகிறது.

பொவாரியின் வம்சத்தில் வருபவன் சார்லஸ். அவன் ஒரு மருத்துவன். மணம் ஆன பின் மனைவி இறந்துவிடுகிறாள். அந்த வேதனையின் மணம் மாறும் முன்பே எம்மா மீது காதல் ஏற்படுகிறது. அவளை மணந்து கொள்கிறான். இங்கிருந்து நாவலில் கதை முழுக்க எம்மாவின் பக்கம் சார்ந்துவிடுகிறது. அப்படி மாறும் இடத்திலேயே மிகப்பேரிய தர்க்கத்தை ஆரம்பிக்கிறார். எம்மா சார்லஸ் பவாரியை மணந்து கொள்வதால் மேடம் பவாரியாகிறாள். அப்போது அவளுள் இருத்தல் சார்ந்த பெரிய சந்தேகம் எழுகிறது. என்னை மேடம் பவாரி என அழைத்தால் எனக்கென இருக்கும் தனித்துவம் என்ன ? எம்மா என்பவளின் குணாம்சங்கள் என்னவாகின்றன ? அன்பு என செலுத்த வரும் போது அது எம்மாவிற்கா அல்லது மேடம் பவாரிக்கா ? இருத்தல் பெயரளவில் ஆரம்பிக்கிறது. அதை ஸ்திரமாக்க அவள் எம்மாவிற்கும் மேடம் பவாரிக்குமான போரை பெயரளவில் நாவலின் ஆரம்பத்திலிருந்து நகர்த்தி வருகிறாள்.

திருமணம் ஆகும் போது சார்லஸின் மீதான அவளின் காதல் உண்மையாகவே தோன்றுகிறது. ஆனால் மணவாழ்க்கை எதிர்பார்ப்பிற்கும் இருண்மைக்குமான போராட்டமாக தர்க்கமாக மாறிவிடுகிறது. அக்கலாத்திய நடுத்தர வர்க்கத்து ஃப்ரான்ஸை கண்முன் நிறுத்துகிறார் ஃப்ளாபர்ட். அந்த நடுத்தர வர்க்கம் முழுக்க மேலே குறிப்பிட்டது போல பொருட்களை மையமாக வைத்தே வாழ்க்கையை கணக்கிடுகிறது. இந்நேரத்தில் அன்பிற்காக ஏங்குபவளாக மாறுகிறாள் எம்மா.

டெஸ்டஸ், ரோவன் என அங்கங்கு சில இடங்களில் அவளுடைய பயணங்களும் அனுபவங்களும் நகர்கின்றன. எல்லாமே இணைந்து எம்மாவிற்கு கொடுப்பது என்னவோ தைரியம் தான். அந்த தைரியம் எல்லா கலாச்சார மீறல்களையும் அங்கீகரிக்கிறது. அந்த அங்கீகாரத்திற்கு பயந்து கணவனையும் பிறக்கும் குழந்தை பெர்த்தையும் விட்டு அவள் மேற்கொள்ளும் பயணங்கள் யாவுமே சாகசங்களாக அமைகின்றன. ஆனாலும் அங்கு அவள் தேடும் விஷயங்களை அவளால் காணமுடிந்ததா என்பது தான் நாவலில் தொக்கி நிற்கும் கேள்விக்குறியாக நிற்கிறது. அதுவே நாவலின் கலைத்தன்மையையும் கூட்டுகிறது.

கலாச்சாரம் சமூகத்தால் நிறுவப்படும் ஸ்தூலம். அதை வளைக்க முடியாது. அதனாலேயே மீறல் என்னும் வகைமையை பிரதானப்படுத்துகிறோம். மேலும் மீறல்களைத் தாண்டியும் இந்த கலாச்சாரம் தன்னை வியாதியாக்கி எல்லோரினுள்ளும் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறது. மீறலை நிகழ்த்துபவர் அதற்கான கூட்டத்தினிடையில் அதை நிகழ்த்த வேண்டும். மீறலை புறந்தள்ளுபவர்களின் மத்தியில் மீறலை நிகழ்த்தும் போது அங்கே மீறல் கலாச்சாரத்திடம் தோற்று காணாமலாகிறது. எம்மாவின் மீறலும் காலத்தால் காணாமலடிக்கப்படுகிறது. எல்லா தேடல்களும், அதற்கான அர்த்தங்களும் தங்களை இருண்மைக்குள் அடையாளம் காண முயற்சிக்கின்றன.

இந்நாவலை மேலோட்டமாக பார்க்கும் பட்சத்தில் கலாச்சார மீறல்களை எப்படி அதே கலாச்சாரம் காயடித்து ஓரம்கட்டுகிறது என்பதை கூறும் கதையாக தெரியும். மாறாக பெண்ணுடைய இச்சைகளை கலாச்சாரம் எப்படி விழுமியம் ஆக்குகின்றது என்பதையும் அதை மீறல் எப்படி புனிதப்படுத்துகின்றது என்பதையும் இந்நாவல் அழகியலுடன் கூறுகிறது. எம்மா தேடும் ரோடொல்ஃபையும் லியோனையும் இன்றைய யுகத்தில் எல்லோரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணற்ற சாத்தியக்கூறுகளை இருத்தல் கண்முன்னே விரித்து வைத்திருப்பினும் அவற்றை அடக்கி வைக்கும் பிம்பமாக கலாச்சாரம் மாறியிருக்கிறது. அந்த பிம்பத்தை அழகியலுடன் உடைக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவலே மேடம் பொவாரி. பல ஆண்கள் காதலை பொழிந்தாலும் நாவல் முழுக்க பலகீனமானவர்களாக இருப்பது என்னவோ ஆண்கள் தான். சுருங்கச் சொன்னால் மேடம் பவாரியின் பிரதிகளில் ஆண்களே weaker sex!

வ.உ.சி நூலக வெளியீடாக தமிழிலும் இந்நூல் கிடைக்கிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக