புத்தம் சரணம் கச்சாமி

அடிப்படைவாதங்கள் சார்ந்த கேள்வி எல்லோரினுள்ளும் எழுந்து கொண்டே தான் இருக்கின்றன. அதற்கான விடைகள் அவரவர்களின் அனுபவங்களாலும் இலக்கிய வாசிப்புகளாலும் நிறைவேறுகிறது. இதிலும் குறிப்பாக எல்லோரினுள்ளும் எழும் கேள்வி ஏன் உலகில் இத்தனை மதங்கள் இருக்கின்றன ? இத்தனை மதங்களும் தேவைதானா ? எல்லோருக்கும் பொதுவான மதத்தை உருவாக்க இயலாதா ? இக்கேள்விக்கான பதில் எல்லா மதங்களும் மையமாக வைக்கும் விஷயத்திலேயே இருக்கிறது. எல்லா மதமும் அன்பையே போதிக்கிறது. போதிக்கும் விதம் மதத்திற்கு மதம் மாறுகிறதே ஒழிய மையம் ஒன்றுதான்.

மதங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் ஒவ்வொரு மதமும் தம்முள் கொண்டிருக்கும் கோட்பாட்டளவில் மட்டுமில்லை. மாறாக வரலாற்று ரீதியாகவும் மாறுபடுகிறது. ஏற்கனவே இருக்கும் மதங்களை எதிர்த்து எப்படி புதியதான மதம் தன்னை நிர்மாணித்திருக்கும் ? பெருவாரியான மக்கள் எப்படி அம்மதத்தை ஏற்றிருப்பார்கள் ? ஏற்கனவே இருந்த மதங்களுக்கும் புதியதான மதத்திற்கும் இடையில் சண்டைகளோ கருத்து முரண்பாடுகளால் எழுந்த வெறுப்போ இருக்காதா ? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை ஆய்வாளரே கூற இயலும். அப்படியான ஆய்வு நூலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அது தர்மானந்த கோஸாம்பி எழுதிய “பகவான் புத்தர்”.


கோஸாம்பியின் பெயரை ஆய்வாளர் என அறிந்த பொழுதே ஒரு நூலையேனும் வாசித்தாக வேண்டும் என ஆசை கொண்டேன். அது டி.டி கோஸாம்பியா தர்மானந்த கோஸாம்பியா என அப்போது தெரியாது. இந்நூலை பார்த்த உடனேயே வாங்க தோன்றியது. ஆய்வு நூலை வாசிக்க, குறிப்பாக இந்த நூலை வாசிக்க நிச்சயம் மேலதிகமாக பொறுமை தேவைப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது பௌத்தமதம் சார்ந்து இருக்கும் பல்வேறு நூல்களின் பெயர்களும் அவற்றிற்கு இடையிலான ஒப்புமைகள் ஆரம்பத்திலிருந்து இடம்பெறுவதும். அவற்றை இதுநாள்  வரையில் கேள்விப்பட்டிராததால் முன்னுரையை கடப்பதற்கு நிறைய நேரமெடுக்கிறது.

அதற்கு பின் ஆரம்ப கால வரலாற்றையும் ஒப்புமைகளோடு கொடுத்திருக்கிறார். அதனை வாசிக்கும் போது இது புத்தர் சார்ந்த நூலாக தெரியவில்லையே என்னும் எண்ணமே எழும். அதற்கான காரணம் பாபிலோனிய வரலாற்றிலிருந்து மருவியது போலவே இங்குள்ள வரலாறுகள் இருக்கின்றன என்னும் ஒப்புமையை தெளிவாக, கதைகளாக கொடுக்கிறார். அதோடு இணைத்து ஆரியர் வருகை மற்றும் இங்குள்ள சின்ன சின்ன பிரிவினைகள் என விரிவாக நகர்கிறது. இதனைத் தொடர்ந்து பௌத்தம் சார்ந்து முழு உருவை கொடுக்க நூல் ஆரம்பிக்கிறது.

எப்படியெனில் மதம் எழும் எனும் பட்சத்தில் எந்த மாதிரியான சமூகத்தில் அது எழுச்சியை கொள்கிறது ? அதன் தேவைகள் என்ன ? தனி ஒரு மனிதனுக்கு வெறுமனே தோன்றிய எண்ணங்கள் மதமாக மாறியதா ? எப்படி அவனால் உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவான கருத்துருவை முன்வைக்க முடிந்தது என்னும் பல கேள்விகளை வரலாற்று ரீதியாகவும் தத்துவ ரீதியாகவும் பேசுகிறது இந்நூல். இதை அவர் இந்தியாவில் இருந்த பல்வேறு அரசியல் நிலைகளையும் முன்வைத்து ஆராய்கிறார்.

இங்கு எதற்கு அரசியல் நிலை என்னும் கேள்வி நம்முள் எழக்கூடும். ஒரு நாட்டை அறிய முற்படும் போதே அதனுள் இது மதசார்பற்ற நாடா மத சார்புடைய நாடா என்னும் கேள்வி எழுகிறது. மதமும் அரசியலும் ஏதோ ஒரு வகையில் பின்னிப் பிணைந்திருக்கிறது. அரசாட்சி காலத்தில் இந்த மதம் அரசியலுடன் கலப்பது சாதாரணமாக நிகழும் விஷயமாக இருந்தது. அதே நேரம் இந்த அரசாட்சி என்பதோ அரசியலின் உருவங்கள். அது இந்தியாவில் மாற்றமடைந்தே வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு குழுக்களுக்கு ஒரு அரசன் என ஆண்டு வந்ததும், அதைத் தொடர்ந்து மகாராஜன் என்னும் ஆட்சி முறையும் அதற்கு பிறகு ஏகாதிபத்திய ஆட்சியும் என மருவிக் கொண்டே வந்திருக்கிறது. இந்நிலையில் ஒரு மதம் எந்த ஆட்சிமுறையை தன் மதத்திற்கென கொள்கிறது. எது உகந்தது என எடுத்தாள்கிறது ? மதத்திற்குள் ஆட்சிமுறை நிலைப்பெற வேண்டிய அவசியம் என்ன என்பதையும் இந்நூல் உரைக்கிறது.

இதைத் தொடர்ந்து தத்துவ ரீதியாக பௌத்தத்தின் அவசியம் என்ன என்பதை நூல் அலச ஆரம்பிக்கிறது. இதை விளக்க முற்படும் போது தான் மேலோட்டமாக நாம் அறிந்துவைத்திருக்கும் விஷயங்கள் உருவாவதற்கு பிண்ணனியாக இருந்த சமூக அரசியல் விஷயங்கள் நூலில் வியப்பினை அளிக்கிறது. ராஜவம்சத்தில் பிறந்த கௌதமனுக்கு யதேச்சையாக காணப்பெறும் வயோதிகனும், நோயாளியும், பிணமும், துறவியும் ஞானத்தை அளிக்கிறது. அதனால் துறவறம் மேற்கொண்டு அன்பையே லோகாயத விஷயமாக பரப்புகிறார். எந்த ஒரு உயிரையும் கொல்லக்கூடாது மேலும் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் கணக்கினுள் கொண்டுவராமல் நிகழ்காலத்தை அதன் முழுமைக்கும் வாழ்தலே முக்கியம். பிறப்பு இல்லறம் மூப்பு என்னும் சுழற்சி முறையிலிருந்து இந்த ஆன்மாவை விடுவிக்க வேண்டும். ஆன்மாவே சொந்தமானதல்ல என்னும் நிர்வாண நிலைக்கு செல்ல வேண்டும் என்று கோட்பாட்டளவில் பௌத்தமதம் தன்னை நிர்மாணிக்கிறது.

இதை வைத்து ஊர் ஊராக பிரசங்கங்கள் செய்கிறார் ததாகதர். அவரின் பேச்சுகளை எப்படி உடனே எடுத்துக் கொண்டு பின்வந்திருப்பர் ? இதற்கு அவர்களுக்கென இருக்கும் பல்வேறு நூல்களிலிருந்து கதைகளையும் கணக்குகளையும் ஆசிரியர் கொடுக்கிறார். கொடுத்துவிட்டு வரலாற்று ரீதியாக அதே விஷயத்தை ஆராய ஆரம்பிக்கிறார். அப்போது அவற்றுள் எத்தனை விஷயங்கள் கட்டுக்கதை, உண்மையை மையப்படுத்திய கதை, நிஜம் என பகுப்பாய்கிறார்.

இந்தியாவில் இருந்த சாதீய வகுப்புகளையும் அவற்றை எல்லாம் சமம் என நிறுவவும் அவர் முன்வைக்கும் தர்க்கங்கள் சுவாரஸ்யமாகவும் ஏற்புடையதாகவும் ஆதாரங்களோடவும் இருக்கின்றன. இதன் மூலமாகவும் பௌத்தமதம் நிறுவ முயலும் விஷயங்களை ஆய்வாளர் முன்வைத்திருக்கிறார். அதே போல பௌத்த மதம் உருவான காலத்தில் உருவான ஜைன மதத்தையும் பௌத்தத்தையும் தத்துவ ரீதியாகவும் நடைமுறை விஷயங்கள் ரீதியாகவும் ஒப்புமை படுத்துகிறார்.

பல நூல்களை முன்னிறுத்தியும் வரலாற்றின் உதவியோடும் பௌத்த மத கோட்பாடுகளோடும் பௌத்தம் என்னும் மாபெரும் நன்னெறியை முன்வைக்கும் அமைப்பை மிக விளக்கமாக கோஸாம்பி இந்நூலில் விளக்கியிருக்கிறார். வாசிக்க நேர்பவர்களுக்கு தங்களுக்குளே இருக்கும் மேலோட்டமான பௌத்தம் சார்ந்த புரிதல் முழுமையாக விரிவுகொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. பௌத்தர்கள் உலகளவில் பிற மதத்தினர் மீது செலுத்தும் வன்முறைகளை பார்க்கும் போது அடிப்படைவாதம் சார்ந்த புரிதலில் இருக்கும் பிரச்சினை தான் காரணமோ என்றே தோன்றுகிறது. ததாகதர் மதத்தை சங்கமாக மாற்றினார். ஆனால் அது ஒருபோதும் நிறுவனமாக மாறவில்லை. அதாவது தலைவன் என்னும் அடிப்படையில் உருவாகக்கூடிய நிறுவனம். தான் பரிநிர்வாணம் எய்திய பிறகு யாரும் இங்கு சங்கத்திற்கு தலைவர் என வரக்கூடாது எனக் கூறியிருக்கிறார். அதற்கு காரணமாக அவர் தனிமனிதனின் கட்டுப்பாடுகளையும் உளநோக்கங்களையும் அவனுக்கென அவனே விதித்துக் கொண்டிருக்கும் அறத்தையுமே தலைவனாக முன்னிறுத்துகிறார். இதை அறியும் போதே இப்போது நிகழும் வன்முறைகள் பௌத்தத்தையும் நிறுவனமாக்கிவிடுமோ என்னும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஆய்வுநூல் எப்போதும் தன்னுள்ளே முற்றுபெறுவதில்லை. மாறாக வாசகனை பல நூல்கள் தேடி பயணிக்க வைக்கும் தன்மையே ஆய்வு நூலுக்கு இருக்கும் வீரியம். அது இந்நூலில் நிறையவே இருக்கிறது. பௌத்தத்தை முழுமைக்கும் அறிய இது ஒரு அகராதியாக பயன்படுமே ஒழிய இதுவே முழுமையல்ல.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக