ஈடிபஸிற்கான நவீன தீர்வு

ஏற்கனவே ஈடிபஸ் காம்ப்ளெக்ஸைப் பற்றி இத்தளத்தில் எழுதியிருந்தாலும் இப்போது மீண்டும் ஒரு முறை நினைவுகூர்கிறேன். ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்பது மனநோய். கிரேக்க வீரன் ஈடிபஸ். பிறக்கும் போதே தந்தையைக் கொன்று தாயை மணப்பான் என்னும் சாபத்துடன் பிறக்கிறான். பயத்தில் அவனை மலையிலிருந்து தள்ளிவிடுகின்றனர். பழங்குடியின மக்களிடம் வளரும் அவன் இந்த ரகசியத்தை அறிந்து நாடு நோக்கி செல்கிறான். வழியில் வழிப்போக்கனிடம் யார் வழிவிடுவது என்று சண்டை மூள்கிறது. சண்டை பெரிதாக வழிப்போக்கனை கொன்றுவிடுகிறான். வழிப்போக்கனாக வந்தவன் நாயகன் சென்றுகொண்டிருக்கும் நாட்டின் அரசன். அரசனற்ற நாட்டிற்கு பதவியேற்க சில மாயப்புதிர்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். அதை விடுவித்து விதவையான ராணியை மணக்கிறான். அவர்களுக்கு குழந்தைகளும் பிறக்கின்றன. இறந்த அரசன் யாரென அறிய முற்படும் போது வெகு நாட்களுக்கு முன் தான் கொன்ற வழிப்போக்கனே அரசன் என்றறிகிறான். இதை ராணியும் அறியும் போது தான் ஈடிபஸிற்கு தான் தந்தையை கொன்று தாயை மணந்து கொண்டதையும் அறிந்து கொள்கிறான். அவள் சாபம் பலித்ததையறிந்து தற்கொலை செய்து கொள்கிறாள். ஈடிபஸ் தன் கண்களை குருடாக்கிக் கொள்கிறான். இதைத் தான் சிக்மண்ட் ஃப்ராய்டு காம்ப்ளக்ஸாக மாற்றுகிறார். தாயின் மீது மகனுக்கும் தந்தையின் மீது மகளுக்கும் காமம் சார்ந்த ஈர்ப்பு இருந்தே வருகிறது. இது தவறில்லையா என்னும் குற்றவுணர்ச்சி எங்கு தோன்றுகிறதோ அங்கு தான் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் ஆரம்பத்தினை கொள்கிறது. இதற்கு முடிவு இல்லையா எனும் போது கல்வியாலும் பிரக்ஞையை மேம்படுத்தி சமூகக் கட்டுபாடுகளுடன் தனிமனிதனை மாற்றும்போதும் அவனுடைய சுயமும் இச்சைகளும் கலாச்சார மீறல்களை மீறாமல் இருக்கும் என்கிறார்.

இதை இந்தப் பதிவின் ஆரம்பத்தில் கூறக்காரணம் இந்த ஈடிபஸ் காம்ப்ளெக்ஸினை கையிலெடுத்து அதை காதலின் அம்சமாக மாற்றி அதற்கான தீர்வினையும் அழகியல் நிரம்ப கொடுத்திருக்கிறார் டி.எச். லாரன்ஸ். இது அவரின் மூன்றாவது நாவல். நிறைய முறை மாற்றி மாற்றி இந்நாவலை அவர் இயற்றியிருக்கிறார். மேலும் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த நூறு நாவல்களில் இந்நாவல் எப்போதும் இடம்பெற்றிருக்கிறது. இந்த காம்ப்ளெக்ஸிற்கு அவர் கொடுக்கும் தீர்வும் மனித மனம் அதையும் எதிர்நோக்கக்கூடுமோ என அவர் எழுப்பும் கேள்வியும் நாவல் முடிந்தும் நம்முள் நிலைபெற்று நிற்கிறது. அப்படி அவர் இயற்றிய நாவலே – SONS AND LOVERS.


சுரங்கத்தில் வேலைப்பார்க்கும் குடும்பம் வால்டர் மோரலுடையது. அவருடைய மனைவி கெர்ட்ரூட் கப்பார்ட். அவர்களுடைய குழந்தைகள் வில்லியம், ஆன்னி, பால். கணவர் சுரங்கத் தொழிலுக்கு செல்வதால் அங்கிருந்த களைப்பினை போக்க நிச்சயம் மதுவினை உட்கொண்டாக வேண்டும். ஆனால் அது அதிகமாகும் தருணங்களில் அதுவே மனைவின் வதைபடுதலுக்கு காரணமாகிவிடுகிறது. இதனால் முழுதும் நொந்த மனைவியிடம் கணவன்பால் இருந்த காதல் காணாமலாகிறது. இதை அவளே உணரும் போது என்னிடம் இருக்கும் காதலை யாருக்கேனும் நான் பங்கிட்டுக் கொள்ள வேண்டுமே என ஏங்குகிறாள். மூத்த மகன் வில்லியமிடம் பாசத்தை பொழிகிறாள். வில்லியம் வேலை கிடைத்து நாட்டிங்காம்ஷைரிலிருந்து லண்டன் சென்றுவிடுகிறான். அங்கு அவன் காதல் வயப்பட்டு ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறான். பின் நிமோனியா காய்ச்சலில் இறந்தும்விடுகிறான். இதற்கு பின் தான் நாவல் தன்னுடைய தீவிரத் தன்மையை எய்துகிறது.

காதலை வெளிக்காட்ட இருந்த வடிகாலான வில்லியம் இறந்தவுடன் அவளுடைய கவனம் முழுக்க பாலிடம் செல்கிறது. இது பாலினை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது என்பதே நாவலின் மீதக்கதையாகிறது. கப்பார்ட்டின் குணமும் எண்ணமும் அவளை வசீகரம் மிக்கவளாக அதே நேரம் சமூகத்தின் பார்வையில் வன்மம் நிறைந்தவளாக மாற்றிவிடுகிறது. சிறந்த உதாரணம் எனில் வில்லியம் தான் காதலிக்கும் பெண்ணின் புகைப்படத்தை அனுப்புகிறான். அவள் எல்லாவற்றிலிருந்தும் குறைகளை தேடியெடுத்து குமுறிக் கொண்டே இருக்கிறாள். இது பின்னர் பாலிடமும் நீள்கிறது. தன்னுடைய அன்பை பங்கெடுக்க யாரேனும் வந்துவிடுவார்களோ என்னும் எண்ணமே நாவல் முழுக்க அவளை உருவாக்கிக் கொண்டு வருகிறது.

அதே நேரம் பாலின் வாழ்க்கை காதலுக்கான இடமே இல்லாமல் வறண்டு இருக்கிறது. அங்கு இருக்கும் ஒரே சோலையாக அவனுடைய அம்மா இருக்கிறாள். மிரியம் மற்றும் க்ளாரா என இரண்டு பேர் அவனுடைய வாழ்க்கையில் வருகிறார்கள். இதில் க்ளாரா ஏற்கனவே மணமாகி விவாகரத்து இல்லாமல் பிரிந்து இருப்பவள். இருவருக்கும் அவன் மீது காதல் இருக்கிறது. ஆனால் பாலிடம் இருக்கும் நிலையற்ற தன்மை அவன் மீதான வெறுப்பை அவர்களுக்குள் கொடுக்கிறது.

பாலிற்கு ஒருக்கணம் தேவையெனவும் மறுக்கணம் இவ்வுலகம் தாயால் மட்டுமே இருந்தால் நன்றாக இருக்குமே எனவும் இரு எல்லைக்கு இடையில் ஊசலாட வைக்கிறது. மிரியமிடம் நேரடியாகவே சொல்கிறான் நான் மணமே செய்து கொள்ள போவதில்லை. அம்மாவுடன் இருந்தால் அதுவே போதும் என. அவனுடைய முட்டுக்கட்டையாக தாயின் அன்பே நாவல் முழுக்க இருக்கிறது.

ஈடிபஸின் பிரச்சினையில் தாய் யார் என்பது மகனுக்கு தெரியாமல் மாயத்தன்மையில் இருக்கிறது. இங்கோ என்ன பிரச்சினை ஏன் நிகழ்கிறது என எல்லாமே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அப்படியிருக்கையில் ஏதேனும் ஒரு இருத்தல் காணாமல் போனால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியுமல்லவா ? இது நாவலில் நிகழும் தர்க்கமாக மாறுகிறது. சிறைப்பட்ட வாழ்க்கை தான் காதலுடன் இருப்பதா என்னும் கேள்வியையும் சுமந்துகொண்டு செல்கிறான். என்ன ஆகிறது என்பதை மனதிலிருந்து சிறிதும் நீங்காத வண்ணம் சொல்லி நாவலினை முடிக்கிறார்.

நவீனம் செய்ய வேண்டிய எல்லா விஷயங்களையும் இந்நாவல் செய்கிறது. ஈடிபஸின் பிரச்சினையை வெளிப்படையாக்கி தாயின் பார்வையில் அதை நியாயமாக்க முற்பட்டால் அதுவே லாரன்சின் நாவலாக மாறுகிறது. முடிக்கும் போது எல்லாவித கலாச்சாரத்திற்குள்ளிருந்தும் வெளியே நிற்கும் ஒரு கருவையே இந்நாவல் பேசுகிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்ளலாம். அவர் நியாயப்படுத்துவதை நம்மால் எதிர்க்கவும் முடிவதில்லை என்பதில் தான் நாவல் தன் வெற்றியை கொள்கிறது.

இடங்களில் கொடுக்கும் வர்ணனை, உரையாடல்களில் நீளும் அத்தியாயங்கள், உரையாடல்கள் அற்ற பகுதிகளிலும் வைக்கும் உணர்வு சார் தர்க்கங்கள், ஆங்கிலத்திலும் வரும் பிராந்திய மொழி என அழகாக நீள்கிறது லாரன்ஸின் நாவல். இவருடைய நாவலை என்றேனும் வாசி என இரா.முருகவேள் கூறிக் கொண்டே இருப்பார். சொன்னால் வாசிக்கணுமா என்னும் தலைக்கணம் வாங்கி இத்தனை நாள் கழித்து வாசிப்பது! இவ்வளவு ஏன் சென்ற முறை எழுதியிருந்தேனே அலெக்ஸாண்டர் ஹீமோனின் சிறுகதைத் தொகுப்பு அது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒருவன் சொன்னது. தலைக்கணம் தான் நல்லிலக்கியத்தை கையிலிருந்தும் தாமதமாக வாசிக்க வைக்கிறது. இத்தனை வாசித்தும் அதை இறக்க தெரியவில்லை இந்த பதருக்கு!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக