நவீனம் நோக்கிய கால்நூற்றாண்டுப் பயணம் (5)
கல்குதிரையில் புனைவுகளைத் தாண்டி எங்கும் நிறைந்திருக்கும் விஷயமாக இருப்பது கவிதைகள். கவிதைகள் சார்ந்த என் அறிவு தத்தி என்பது என்னவோ நுற்றுக்கு நூறு உண்மை. கவிதை சின்னதான அளவில் பெரிதான விஷயங்களை பேசக்கூடியன. எவ்வளவுக்கு எவ்வளவு சுருக்கம் கொள்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவை வசீகரமானதாக இருக்கிறது. அதே நேரம் கவிதையின் தீவிர ரசிகனுக்கு இது வசீகரமானதாக புரட்டிப் போடக்கூடிய விஷயமாக இருக்கக்கூடும். என்னைப் போன்ற அபத்தங்களுக்கு கவிதையினை புரிய முக்கால் பகுதிகளாவது வெளிப்படையாக இருக்க வேண்டும். லக்ஷ்மி மணிவண்ணன், ஷங்கர்ராமசுப்ரமணியம், ரேமண்ட் கார்வர் போன்றவர்களின் கவிதைகளை வாசித்தவுடனேயே புரிதல் கொண்டு அதன் லயத்துடன் அதிகமாக ரசிக்கிறேன். நிறைய கவிதைகள் மீள்வாசிப்புகளுக்குள்ளும் சிக்காமல் புரிதலுக்கு விளையாட்டு காட்டுகிறது. என்றாவது புரியக்கூடும் என்பதே என் அவதானிப்பு.

இந்த சிக்கல் எனக்கு மட்டும் இருப்பதாக தெரியவில்லை. அநேகம் பேருக்கு கவிதை புரியாமல் போய்விடுகிறது. கவிதை என்பதற்கு பிண்ணனியில் காதல் ரசம் ஒளிந்து கொண்டிருப்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும். காதலை உடைத்துக் கொண்டு வெளிவரும் எத்தனையோ கவிதைகள் வீரியம் மிகுந்ததாய் சில அரசியல் கோட்பாடுகளை தர்க்கம் செய்வதாய், சில தத்துவார்த்த பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதாய் அமைந்திருக்கிறது. இது போன்ற தீவிர கதியில் இருக்கும் கவிதைகளுக்கு தான் புரிதல் சார்ந்த பிரச்சினைகள் எழும்புகின்றன.

கல்குதிரை இதற்கு உதவ என்றே ஏகப்பட்ட கட்டுரைகள் கவிதைகள் சார்ந்து பங்கெடுத்திருக்கிறது. கவிதை ஆற்றக்கூடிய விஷயங்கள் என்ன, அதன் தன்மைகள் என்ன, வாசிப்புகள் எதனுடன் இழைக்கூடியதாய் இருக்க வேண்டும், அரசியலை கவிதைகள் எப்படி நாடுகின்றன, கவிஞனின் குணம் எப்படி கவிதையுடன் இரண்டறக் கலந்திருக்கிறது, கவிஞன் தனக்கான மொழியை எப்படி தெரிவு செய்கிறான் என சகல கேள்விகளுக்கும் பதில் உரைக்கின்றன விரவிக் கிடக்கும் கட்டுரைகள். ஒவ்வொரு கவிஞர்களை குறிப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரைகளாக இருப்பதால் கவிதைகள் சார்ந்த பலதரப்பட்ட பார்வைகளை நம்மால் இதில் உணர்ந்து கொள்ளமுடிகிறது. கவிதை எழுத முனைபவர்களுக்கு நிச்சயம் மாபெரும் பொக்கிஷமாய் இந்த கல்குதிரை இருக்கும்.

கட்டுரைகளை கல்குதிரையில் மூன்றாக பிரிக்க நினைக்கிறேன். கவிதை சார்ந்த கட்டுரைகள், புனைவு சார்ந்த கட்டுரைகள், இதர கட்டுரைகள். புனைவு சார்ந்த கட்டுரைகள் குறைவாகவே இடம்பெற்றிருக்கின்றன. அதில் முக்கியமானது சாமுவேல் பெக்கட் பற்றிய கட்டுரை. அவருடைய நாவல் பின்நவீனத்துவத்தின் நாவலாக கருதுகிறார்கள். மூன்று பாகங்களும் இணைந்ததான அவருடைய நூல்கள் – மோலான், மெனோன் டைஸ், அன்னேமபிள். இந்த மூன்று பாகங்களும் புரிதலுக்கு பெரும் சவால்களை கொடுக்கக்கூடியன. இவற்றை கோட்பாடுகளை கொண்டு மிக அழகாக முபீன் சாதிகா கட்டுடைக்கிறார். ஃப்ராய்டின் தத்துவம், எதிர்-ஈடிபஸ் கோட்பாடு என எல்லாவறையும் சின்னதான கதையினையும் சொல்லி அழகாக முன்வைக்கும் விமர்சனம் நேர்த்தியாக வாசகனை ஈர்க்கிறது. இதைத்தாண்டி சத்தகின் கைமண், எம்.டி.முத்துகுமாரஸ்வாமியின் நூல் குறித்த விமர்சனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

கோணங்கி இரண்டு விமர்சனங்களை எழுதியிருக்கிறார். காடோடி மற்று குறத்தியாறு நூல்களை சார்ந்து. கோணங்கியின் விமர்சன முறை வித்தியாசமாக இருக்கிறது. நாவலை அதிகமாக தீண்டாமல் அதனிலிருந்து எப்படியெல்லாம் புனைவுகளை உருவாக்கலாம் என்பதையே முன்வைக்கிறார். அதற்கு இணைகோடாக பல உலக இலக்கியங்களை எடுத்து புனைவின் தன்மையை ஸ்தாபிக்க முயல்கிறார்.

இதர கட்டுரைகள் என்னும் இடத்தில் இரண்டு மிக முக்கிய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒன்று ஆர். பிரேம்குமார் மொழிபெயர்த்திருக்கும் வால்டேர் பெஞ்சமினின் “கதைசொல்லி” என்னும் கட்டுரை. இந்த கட்டுரை கதைசொல்லி என்னும் பதத்தை அதன் வரலாற்று பார்வைகளுடன் ஆராய்ந்து செல்கிறது. கதைசொல்லியின் தேவையென்ன, அவன் செய்ய வேண்டிய பணி என்ன, கதை சொல்லி சிறுகதையினுள்ளும் நாவலினுள்ளும் நுழையும் போது எப்படியெல்லாம் தன்னை உருமாற்றம் செய்து கொள்கிறான், அப்படி செய்தபின் அவர்கள் கதைசொல்லி என்னும் நிலையில் இருக்கிறார்களா அல்லது யாரேனும் ஒரு தனிநபரின் அதிகாரத்தினடியில் வந்துவிடுகிறதா என பலதரபட்ட கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்த கட்டுரை. கதை என வரும் இடத்தில் கதைசொல்லியினை கையாளவேண்டியதற்கு செய்ய வேண்டியன யாவை என்பதை பெரிதாக எடுத்துணர்த்துகிறது இந்தக்கட்டுரை.

இரண்டாவது கட்டுரை வரதராஜன் ராஜு மொழிபெயர்த்திருக்கும் ஆரோன் மெஸ்கினின் “காமிக்ஸின் அழகியல்”. இந்த தலைப்பு மட்டுமே பொறுத்தமற்றதாக இருக்கிறது. காமிக்ஸின் அழகியல் என வரும் போது அதன் அமைப்பு, அதனூடே இருக்கக்கூடிய மொழி என்பவற்றோடு நின்றுவிடுகிறது. இந்தக் கட்டுரையோ அதையும் தாண்டி காமிக்ஸ் கலைவடிவத்தினுள் சேருமா ? கலைக்கென இருக்கும் கோட்பாடுகள் எத்துணை தூரம் காமிக்ஸுடன் இணைந்தும் பிரிந்தும் செல்கின்றன ? தத்துவார்த்த பிரச்சினைகளை காமிக்ஸால் பேச இயலுமா என்பவற்றை மிக நீண்ட சுவாரஸ்யமான தர்க்கமாக மாற்றியிருக்கிறார்.

இதைத் தாண்டி கல்குதிரை சிறிபத்திரிக்கை சார்ந்து கூற வேண்டுமெனில் வாசித்த எல்லா கதைகளையும் தான் கூறவேண்டிவரும். பின் கல்குதிரைக்கு வாசிப்பில் இடமில்லாது போய்விடும் என்பதால் சொல்லாமல் வாசிப்பிற்கு விட்டு விடுகிறேன். முன்பே சொன்னது போல கல்குதிரை எழுத முனைபவர்களுக்கான படிப்பினை. அதனை எத்தனை பேர் வாசித்து அனுபவித்து கற்று தங்களை முன்னெடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் தான் கல்குதிரையின் செயல்பாடு அமைந்திருக்கிறது. சி.சு செல்லப்பா, க.நா.சு போன்றோரின் தடத்தில் தன்னை செயல்பாடாக மாற்றியிருக்கிறார் கோணங்கி. கோணங்கியின் எழுத்தை பிடிக்காதவர்கள் அவரை ஒதுக்கிவிட்டு ஏனைய இலக்கியவாதிகளை வாசிக்கலாம். ஆனால் அப்படி கல்குதிரையை நம்மால் ஒதுக்கிவிடமுடியாது. தமிழிலக்கியத்தின் அசைக்கமுடியாத ஸ்தூலமாக மாறி நிற்கிறது கல்குதிரை. அதற்கு நம்மால் செய்யக்கூடியது வாசிப்பு மட்டுமே. அதுவே நம்மை இலக்கியத்தின் பெருவெளிக்கு இட்டுச்செல்லும் சின்ன கருவி.
 
அடுத்த கல்குதிரையின் இளவேனிற்காலத்திற்காகவும் முதுவேனிற்காலத்திற்காகவும் காத்திருக்க தொடங்குகிறேன். . . 

கல்குதிரை சிறுபத்திரிக்கையை வாங்க பின்வரும் விலாசத்தையோ அல்லது அலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளவும். . .

கோணங்கி
6/1700, இந்திரா நகர்,
கோவில்பட்டி - 628502
9952546806

Share this:

CONVERSATION