நவீனம் நோக்கிய கால்நூற்றாண்டுப் பயணம் (4)மொழிபெயர்ப்பு சிறுகதைகளை தாண்டி தமிழில் எழுதப்பட்ட சமகாலச் சிறுகதைகளும் கல்குதிரையில் இடம்பெற்றிருக்கின்றன. குணா கந்தசாமி, கௌதம சன்னா, கௌரிபாலன், திசேரா, பாலசுப்ரமணியம் பொன்ராஜ், ந.முத்துசாமி, ராகவன் போன்றோரின் கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

கல்குதிரையின் மூலமாக ஆங்கில சிறுகதைகளுக்கொப்ப சில தமிழின் சமகால எழுத்தாளர்களையும் என்னால் இணங்காண முடிந்தது. அதற்கான சிறந்த உதாரணம் பாலசுப்ரமணியம் பொன்ராஜ். இவருடைய சிறுகதை கடந்த கல்குதிரை இதழிலேயே இடம்பெற்றிருந்தது. வலை என்னும் கதை. அதை வாசிக்கும் போது வலைபின்னலைப் போல சிந்தனையை ஆட்டிவைக்கும் எழுத்தாளனின் திறமையை என்னால் கொண்டாடாமல் இருக்கவே முடியவில்லை. நாட்கணக்கில் அதன் அசையில் இருந்தேன் என்பதே உண்மை.

இம்முறை நூல் வந்தவுடன் யார் யாரின் கதைகள் இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டேன். அதன்படி முதலில் பால்சுப்ரமணியன் பொன்ராஜின் சிறுகதையையே வாசிக்க ஆரம்பித்தேன். ஃபெடிஷ் தன்மையிலான அற்புதமான சிறுகதைகள் அவை. பொருளை மையப்படுத்தி உணர்வுகளை மனிதத்தன்மை அடகு வைத்துக் கொள்கிறது என்பதை வெகுசிறப்பாக எழுதியுள்ளார். கத்தியை எடுக்கும் போது பல காரியங்கள் அதைக் கொண்டு செய்ய முடிந்தாலும் மனம் கொலையுடனேயே கத்தியை தொடர்பு படுத்திக் கொள்கிறது. இதை கதையின் ஓரிழையாய் பிண்ணியிருக்கிறார். அதே நேரம் அமானுஷ்யம் இரண்டாக பிரிவு கொள்கிறது. இருக்கின்ற ஒரு பொருள் இல்லாமல் போவதும் இல்லாமல் போன ஒரு பொருள் உயிர்ப்புடன் இருப்பதாக அஞ்சப்படுவதும் அமானுஷ்யம் தான். இந்த இரண்டையும் பிணைத்து தன்னுடைய “தந்திகள்” சிறுகதையை அழகியலோடு உருவாக்கியிருக்கிறார்.

கௌதம சன்னா எழுதிய முனியும் சமகால படைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கக் கூடியது. யசுனாரி கவாபாத்தாவின் சிறுகதைக்கு என்ன என்ன விஷயங்கள் எல்லாம் பேசினோமோ அது எல்லாமே இங்கேயும் பொருந்தகூடும். இங்கு உறுப்புகளுக்கு பதில் மனிதனுடனேயே இருக்கும் சில அரூபங்கள் என கொள்ளலாம். உதாரணத்திற்கு செவியில் வரும் ஒலி, கண்களால் பார்க்கக்கூடிய ஒளி, நாசியின் நுகரும் தன்மை இத்யாதி என. இதில் ஆசிரியர் மனிதனின் நிழலை எடுத்தாள்கிறார். நிழலை பிரதானப்படுத்தும் போது நிஜம் தோற்கிறது. நிஜம் தோற்கிறது எனில் அங்கே நிஜத்திற்கு என இருக்கும் மதிப்பே தாழ்ந்துவிடுகிறது. நிழல்களால் உலகம் நிரம்ப முடியாது. நிழலுக்கும் நிஜத்திற்குமான சமனிலையை அசாத்தியமாக குலைத்து மீண்டும் ஒன்றிணைக்கிறார். நிழலை ஜெயிக்கவிடும் விதமும் தர்க்கமும் சிறுகதையை சமகாலத்தின் சிறந்த கதையாக தூக்கி நிறுத்துகிறது.

ராகவனின் “உதிரகணம்” உதிரத்தை உரைய வைக்கக்கூடிய கதை. ஈழத்தில் நிகழும் அவலங்களை புனைவிற்குள்ளாக கொண்டு வருகிறார். வதைப்படுபவனே வதையை கூறுவதாக கதை நகர்கிறது. இந்த ஒரே ஒரு புனைவின் இழையை வைத்துக் கொண்டு சிறுகதையை கடைசி வரை புனைந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வதைப்படுபவனால் இப்படியெல்லாம் கதையினை கூற முடியுமா என்னும் கேள்வியும் எழுகிறது. அவ்வளவு உயிரோட்டமாக வதையினை பதிவு செய்கிறார். இக்கதையை வாசித்து கடந்து செல்ல பொறுமை அதிகமாகவே தேவைப்படுகிறது.

இம்முன்று கதைகளே தமிழில் என்னை ஈர்த்தது. இதைத்தாண்டிய கதைகளில் உணர்வுகள் இருந்தாலும் கருத்துகளின் ஆழத்திற்கு செல்லவில்லை. ந.முத்துசாமியின் கதையினை முழுக்க முடிக்கும் போது அங்கத உணர்வை உணர முடியும். அங்கதம் இருவழியிலான முடிவிற்கு இட்டு செல்லக்கூடியது. ஒன்று அது மாபெரும் கட்டமைப்பை உடைத்து நொறுக்கிறது எனக் கொள்ளலாம். இன்னொன்று பெரும் அமைப்பைக் கண்டு பயம் கொள்கிறார்கள் எனவும் கொள்ளலாம். இந்த கருத்துகள் சர்ரியலிஸம் இலக்கியத்திற்கும் பின்நவீனத்துவ எழுத்திற்கும் பொதுவாக  எதிர்வினையாக அமையக்கூடியன. முன்னதில் கதை அமைந்திருந்தால் காலத்திற்கும் நிற்கும். பின்னதில் எனில் சிரிப்பைக் கொணரும் அங்கதமாகவே நின்றுவிடும். இது தான் இங்கு நிகழ்ந்திருகிறது. ஒவ்வொரு கதையிலும் இப்படி சில காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் எல்லாமும் சமகாலத்தில் பல்வேறு இயங்குதளங்களில் வெளியாகியிருக்கும் சிறுகதைகள் என்பதில் மட்டும் மாற்று கருத்து இல்லை.

புனைவு என்னும் தளத்தில் கல்குதிரையில் இருக்கும் மற்றுமொரு விஷயம் நாவலிலிருந்து கொடுக்கப்படும் பகுதிகள். இங்கே கோணங்கி, நிவேதா, கறுத்தடையான், சயந்தன் போன்றோரின் நாவல்களிலிருந்து பகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த பகுதிகளுக்கு எந்த வாசகராலும் வினையாற்ற முடியாது. காரணம் இவை முழுமையல்ல. பெரும் கடலின் சிறுதுளி. நாவல் கொடுக்கக்கூடிய எந்த விஷயத்தையும் அதன் பகுதி கொடுக்கப்போவதில்லை. அதிகபட்சம் இந்நாவல் வாங்க வேண்டும் என்னும் முனைப்பை அந்நாவல் பகுதிகள் கொடுக்கலாம். அந்த எழுத்தாளர் என்ன தளத்தில் நாவலினூடே இயங்குகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கோணங்கியின் நாவல் பெரும்பாலானவர்க்கு புரியாமலே செல்கிறது. அதற்கு பிரதானமானது அவரது மொழி. நேரில் சந்திக்கும் போது அவரிடம் இதை நேரிடையாகவே கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் தார்மீகமாக இருந்தது. ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேஸின் மொழி உலகம் முழுக்க பிரசித்தியானது. கதையின் அமைப்பில் பல மாற்றங்கள் உலகம் முழுக்க நிகழ்ந்து வரும் போது மொழியில் மாற்றம் நிகழ்த்தியவர் போர்ஹேஸ். அப்படியான மாற்றம் தமிழில் ஏற்படவில்லை. அதையே நான் செய்கிறேன் என கூறினார். ஆனாலும் பாழி நாவல் வாசித்த போது அவருடைய மொழி சிடுக்குகள் நிறைய இருப்பதாக எனக்கு தோன்றியது. அதே நேரம் வடகரை ரவிச்சந்திரன் கோணங்கி எழுதிய “த” நாவல் சார்ந்து சிலேட் இதழில் எழுதியிருந்த மிக நீண்ட விமர்சனத்தில் அவரின் மொழியைப் பற்றி கூறியிருந்தார். தமிழ் இலக்கணத்தில் செய்வினை செயபாட்டுவினையினை எல்லோரும் அறிந்திருப்போம். அதில் வினைச்சொல்லை மாற்றிப்போட்டு அதன் காலத்தை மாற்றுகிறோம். இதே சித்துவிளையாட்டு வரிகளுக்கு இடையே கோணங்கியிடம் நிகழ்கிறது. அணிசெய்யப்பட்ட வாக்கியம்(subordinate clause) முன்னதாகவும் முக்கியமான வாக்கியக்கூறு(main clause) பின்னதாகவும் இடம்பெறுகிறது. முழுமையில் பார்க்கும் போது கோணங்கியின் வரிகள் முடிவுகளை காணாதது போல தென்படும். அவையோ முடிவை தனக்குள்ளேயே வைத்திருக்கின்றன. இதை உணர்ந்ததால் அவருடைய “முர்ரி” நாவலிலிருந்த பகுதிகளை கொஞ்சமாக புரிந்து கொள்ள முடிந்தது. நாடகக்கலைஞர்களை மையமாக வைத்து அவர்களின் அரூபங்களிலிருந்து கதையினை நகர்த்துகிறார். ஒவ்வொரு நாடகக் கலைஞரும் தங்களுக்கே உரித்தான திறமையின் உச்சம் தொட்டவர்கள். அப்படி ஒவ்வொருவரையும் இணைத்து அவரவர்களின் கதையினை கூறி பின் மீண்டும் விலக்குகிறார். இந்த முறைமை வாசிகையில் வசீகரமாக இருக்கிறது.
 
சயந்தனின் மண்நகரம் புலம்பெயரந்தவர்களின் அவலங்களையும், கறுத்தடையானின் கோட்டி இருத்தல் சார்ந்த தத்துவங்களையும் நிவேதாவின் அதிநாவல் முழுமைக்குமான புனைவையும் மிக அழகாக பேசுகிறது. நான்கில் நிவேதாவின் படைப்பை அதிகமாக ரசித்தேன். அந்நாவலை அதிகம் எதிர்பார்க்கவும் செய்கிறேன். அதற்கு முக்கிய காரணம் கொடுக்கப்பட்ட பகுதியினுள் ஒரு விஷயத்தை, முழுக்க கற்பனையான விஷயத்தை உருவாக்கி பின் அவரே அதை மர்மங்களிலிருந்தும் புனைவுகளிலிருந்தும் விடுவிக்கும் தன்மை வசீகரமானதனாக இருக்கிறது.

(அடுத்த பதிவு கல்குதிரையில் வெளியாகியிருக்கும் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் பற்றியது. . .)

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக