நவீனம் நோக்கிய கால்நூற்றாண்டுப் பயணம் (3)பொலானோவின் கதைகளை தவிர்த்து ரேமண்ட் கார்வர், இடாலோ கால்வினோ, மயீகோ கனாய், ஹூலியோ கொர்த்தஸார், ஷொவானிபாப்பினி, ஹருக்கி முராகமி, யசுனாரி கவாபாத்தா, ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ், விளாதிமிர் நபகோவ், சார்லஸ் பேக்ஸ்டார் போன்றோரின் கதைகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. விளாதிமிர் நபக்கோவ் மற்றும் ஹருக்கி முராகமியின் சிறுகதைகள் போக மீத எல்லா கதைகளும் என்னை புரட்டியே போட்டன.

ரேமண்ட் கார்வர் : இவருடைய சிறுகதையான “கனவுகள்”ஐ ஜி குப்புசாமி மொழிபெயர்த்துள்ளார். எல்லா மனிதருள்ளும் தனியொரு மனிதன் இயங்குபொருளாக இருக்கிறான். வெளியே சிரிக்கும் மனிதரை காணக்கூடிய எல்லோராலும் உள்ளே அழுது கொண்டிருக்கும் மனிதனை பார்க்க முடிவதில்லை. ஆனால் இரண்டுமே ஒரே விசையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சில உணர்வுகளை வெளிக்காட்டியும் சில உணர்வுகளை மறைத்துமே மனிதன் தன்னை இயக்கிக் கொள்கிறான். உண்மை என்னவோ மறைபொருளிடமே தஞ்சம் கொண்டிருக்கிறது. இந்த மறைத்தலையும் வெளிக்காட்டலையும் கொஞ்சமும் ஏற்றாமல் இறக்காமல் யதார்த்தமாய் தருபவர் ரேமண்ட் கார்வர். அவருடைய எழுத்தின் வீரியமே இந்த உள்ளார்ந்த உணர்வுகளை நம்மை வாசிப்பின் மூலம் உணர வைப்பதே. இக்கதையிலும் கனவும் யதார்த்தமும் வேறு வேறாக இருக்கும் த்வனியை மிக ரம்மியமான கதையாக ஆக்கியிருக்கிறார். கதை போகும் ரம்மியமும் அது கொண்டிருக்கும் வன்மும் இருவேறு துருவங்களை சார்ந்தவை. அதை ஒருங்கிணைக்கின்றன கார்வரின் வரிகள்.

இடாலோ கால்வினோ : தீவிர வாசகனுக்கு தனியான உலகமெனில் அது வாசிக்கும் நூலாகத்தான் இருக்கும். அதற்கு எதிரில் தான் உலகத்தின் லௌகீக விஷயங்கள் இருக்கின்றன. அந்த வாசகனை பொறுத்தமட்டில் வாசிப்பே சாகசம். அவனை வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு நூலைத்தாண்டி வெளியில் இருக்கும் விஷயமே சாகசத்திற்குரிய பொருள். இதை வாசகன், வாசிக்கும் நூல், முன்னிருக்கும் பேரிளம் பெண், இரண்டு பேருக்கும் முன்னே இருக்கும் கடல் என ஒன்றிணைத்து வசீகரமான புனைவாக்கியிருக்கிறார் இடாலோ கால்வினோ. அச்சிறுகதையான”ஒரு வாசகனின் சாகசம்” நர்மதா குப்புசாமியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

யசுனாரி கவாபாத்தா : மனிதனுடைய ஒவ்வொரு உறுப்புகளும் தனித்தனியான இருத்தலை, இன்னமும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் முழுமனிதனை தாண்டிய இருத்தலை கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியே உணர்ந்து அதன் செயல்பாட்டை விவரிக்க ஆரம்பித்தால் அந்த குறிப்பிட்ட உறுப்பு இல்லையெனில் வாழ்க்கையே அர்த்தமற்று போய்விடும் என எண்ணவைக்கும். சிஹாபுதின் பொய்த்தும் கடவு எழுதிய யாருக்கும் வேண்டாத கண் அது போன்றதொரு கதை தான். இதே மாதிரியான கதைதான் யசுனாரி கவாபாத்தா எழுதிய “ஒரு கை”. தமிழில் இரா. அசோக் மொழிபெயர்த்துள்ளார். இக்கதையினூடே இருக்கக்கூடிய காதல் ரசம் சொட்டும் தன்மையும் மென்மையான தர்க்கங்களும் வசீகரமாக இருக்கின்றன. குறிப்பிட்ட உரையாடல் என்னை வெகுநேரம் ஸ்தம்பிக்க வைத்தது. பெண்ணுடைய கையினை எடுத்து செல்கிறான் நாயகன். அந்த கையும் அவனும் உரையாடுவது தான் இப்பகுதி. கை பேசுகிறது,

“மனிதமுடைய எதுவும் என்னைப் பார்க்காது, பார்த்தால் அது சுயமாகத்தான் இருக்கும். உன்னுடையது”
“சுயமா ? என்னதது ? எங்கிருக்கிறது ?”
“வெகு தூரத்தில்” என்றது கை ஆறுதலுக்காக பாடுவதைப் போல. “மனிதர்கள் சுயத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள், வெகுதூரத்தில்.”
“அதை வந்தடைவார்களா அவர்கள் ?”
“வெகு தூரத்தில்” என்று மீண்டும் கை கூறியது.

மயீகோ கனாய், ஷொவானிபாப்பினி : இவ்விரு எழுத்தாளர்களின் கதைகளையும் ஒன்றாக கூறுவதன் காரணம் இருவரின் கதைகளும் எழுத்தும் அதனால் பாதிக்கப்படும் தனிமனித வாழ்கையும் சார்ந்ததாக இருக்கிறது. மயீகோ கனாயின் கதை “குரல்”. அதை ஶ்ரீதர்ரங்கராஜ் மொழிபெயர்த்துள்ளார். இதில் கற்பனை உருவமாக குரலை உருவகித்து எழுத்தாளரின் சுயத்தை எழுத்தாளருக்கே சந்தேகமாக காட்டுவதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஷொவானிபாப்பினியின் கதை “நீளும் இரவுநேரப் புனைவுகளின் விருந்தாளி”. இதை எழில் சின்னத்தம்பி மொழிபெயர்த்துள்ளார். இதில் முழு உருவத்தையுமே உருவாக்குகிறார் ஆசிரியர். ஆனால் முன்னர் சொன்ன கதைக்கு எதிர்மாறாய் உருவாகும் கதாபாத்திரமே தன்னை கட்டுடைத்துக் கொள்கிறது. சுயத்தை கட்டுடைக்க சிறுமையாக்க இன்னொரு சுயத்தின் அதிகாரம் தேவைப்படுகிறது. அதிகாரத்தை ஆமோதிக்கும் அதிசயக்கதக்க கதைகளை இங்கேயே முதல் முறையாக வாசிக்கிறேன். இரண்டுமே வித்திசாயமான கருக்களை மாறுபட்ட கோணத்தில் பதிவு செய்யும் கதைகள்.

ஹூலியோ கொர்த்தஸார் : எல்லா குழுமங்களுமே அது அரசு சார்ந்ததாகவோ தனியாரிடத்து மையங்கொண்டதாகவோ இருப்பினும் அது இயந்திரத்தைப் போல ஒன்றன் கீழ் ஒன்றாய் நிலைத்து நிற்கிறது. தாஸ்தாயெவ்ஸ்கி தன்னுடைய புவர் ஃபோக்(Poor Folk) நாவலில் இப்படி கூறுகிறார் - All the world is built upon the system that each one of us shall have to yield precedence to some other one, as well as to enjoy a certain power of abusing his fellows. Without such a provision the world could not get on at all, and simple choas would ensue. இதை முழுக்க முழுக்க புனைவின் உருவத்தில் அழகியல் கூடிய வகையில் கொர்த்தஸார் சிறுகதையாக்கியிருக்கிறார். “மேன்கஸ்பியஸ்” என்பதே சிறுகதையின் பெயர். தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் செ.ஜார்ஜ் சாமுவேல். மேன்கஸ்பியஸ் என்னும் விலங்குகளை பராமரிக்கும் அமைப்பின் கீழுள்ள கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழும் சிறு பிசகு ஒட்டு மொத்த அமைப்பை எப்படி பாதிக்கிறது என்பதை விரிவாக எங்குமே சலிப்பினை ஏற்படுத்தாமல் கூறியிருக்கிறார்.

ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் : எட்கர் ஆலன் போவின் மறைவினை ஒட்டி அவருடைய ஞாபகார்த்தமாய் அவருடைய வாழ்வின் அம்சங்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட சிறுகதையே சா. தேவதாஸால் மொழிபெயர்க்கப்பட்ட “போ இறந்த பிறகு அல்லது கலங்கரை விளக்கம்” என்னும் சிறுகதை. இக்கதையின் பின்னால் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் சிறுகதையின் தன்மையை அதிகப்படுத்துகின்றன. மேலும் சிறுகதையின் கட்டமைப்பும் நாயகன் எழுதும் நாட்குறிப்புகளாக இருக்கின்றன. தனியாக நாயொன்றுடன் கலங்கரை விளக்கத்துள் இருக்கும் பணியாளன் நாயகன். அங்கிருக்கும் அவன் நாட்களை கதை சொல்லிக் கொண்டே போகிறது. கதையினூடே அவனுடைய கடந்தகாலமும் எட்டிப் பார்க்கிறது. தனிமை வியாதியாக மாற்றும் தீவிரத் த்வனியுடன் கதை நகர்வது சிறுகதையின் உச்சம்.சார்லஸ் பேக்ஸ்டர் : இவருடைய கதை “க்ரீஃபன்”. தமிழில் இதை ஆர்.சிவக்குமார் மொழிபெயர்த்துள்ளார். குழந்தைகளுக்கான கதையாக இக்கதை இருக்கிறது. குழந்தைகளின் உலகம் மீமாய விஷயங்களால் ஈர்க்கப்படுவது. அதே நேரம் அவர்களுக்குள்ளே இருக்கக்கூடிய சின்னதான தர்க்கங்கள் அந்த மீமாய உருவாக்கங்களை கட்டுடைத்து பூமிக்குள்ளே இருக்கக்கூடியதாக மாற்ற வேண்டும் என்னும் முனைப்புடன் இருப்பது. இது குழந்தைகளின் வளர்ச்சியை காட்டும் பருவம். இந்த இரு விஷயங்களும் சிறுகதையினுள்ளே அழகாக அரங்கேறுகிறது. புதிய வாத்தியாராக வகுப்பிற்கு வரும் ஃப்ரெங்க்ஸி. அவர் குழந்தைகளுக்கு சொல்லும் கதையுடன் இச்சிறுகதை தனக்கான ஆரம்பத்தை கொள்கிறது. ஃப்ரெங்க்ஸி சொல்லும் கதைகளைக் காட்டிலும் குழந்தைகளின் தர்க்கம் ருசிகரமாக இருக்கிறது.

(அடுத்திவு கல்குதிரையில் வெளியாகியிருக்கும் காமிழ் டைப்பாளிளின் டைப்புகள் பற்றிது. . .)

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக