புனைவின் ஆடி விஷ்ணுபுரம்எதையும் உன் அனுபவ வட்டத்திற்குள் கொண்டுவந்து யோசி. உன் அனுபவத்தை மீறியவைக் கூட அனுபவத்தின் தருக்கத்திற்கு உட்பட்டவையாக இருந்தாக வேண்டும். அதுவே ஞானவழி. மீதியெல்லாம் சுய ஏமாற்று. ஞானவழியில் நிம்மதி இல்லை. ஆனால் கர்வமும் சுயதிருப்தியும் உண்டு. ஆனந்தத்தில் பெரிய ஆனந்தம் அதுவே. .”


ஜெயமோகன் என்றாலே இண்டலெக்சுவலான பிம்பமொன்று புனையப்பட்டுள்ளது. அவரது புனைவுகளும் அதன் மொழி நுட்பங்களும் புரிதலுக்கு அப்பாற்பட்டவையாகவே கருதப்படுகின்றன. அல்லது புரியாத்தன்மையை நிரம்பப் பெற்றிருக்கும் சொற்குவியல் என்றே புரிதல் கொள்ளப்படுகின்றன. நிறைய நண்பர்களின் கூற்றுகள் இந்த நிலையிலேயே இருந்திருக்கிறது. இவற்றை மீறி அவருடைய அறம், காடு, இரவு, அனல்காற்று போன்ற நாவல்கள் வாசிக்கப்படுகின்றன. இந்த முரணை அறிய முயலும் போது சில விஷயங்கள் மெல்ல எனக்கு புலனாயிற்று.

ஜெயமோகனின் எழுத்தில் பிரதானமாக அமைவது தர்க்கம். அந்த தர்க்கங்களும் மேலெழுந்தவாரியாக ஆரம்பித்து அதன் ஆழம் வரை பன்முக பார்வைகளில் இழுத்து செல்லப்படுகிறது. இரவு நாவலிலும் இந்த தர்க்கங்களைக் காணலாம். ஆனால் இந்த தர்க்கங்கள் அல்லது கதாபாத்திரக்களினூடான வாதங்கள் அன்றாடம் காணும் விஷயங்களில் இருந்து ஆரம்பிக்கும் போது சாமான்ய வாசிப்பில் புரியக்கூடியதாகிவிடுகிறது. இதே விஷயங்கள் தத்துவம், ஆன்மிகம், புராணங்களை கட்டுடைத்தல், அவற்றை வேறு சில புராணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தல் என வரலாற்றுத் தன்மையுடனும் சங்கத்தமிழ் சொற்களுடனும் சொல்லும் போது புரிதலில் சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. வெண்முரசு நாவல்கள் தொடர்பான வெளியீட்டு விழாவில் கூட நாஞ்சில் நாடன் ஜெயமோகன் பயன்படுத்தும் சொற்களுக்கு தனி அகராதியைக் கொண்டுவரலாம் எனக் கூறியிருந்தார். அச்சொற்கள் நவீனம் நோக்கி செல்லும் இலக்கிய பயணத்தில் மறைந்து கொண்டிருக்கின்றன.

அடுத்து அவர் உருவாக்கும் புனைவை கூற வேண்டும். எந்த அளவிலான புனைவாக இருந்தாலும் இருக்கும் அமைப்பை விட்டு வெளியே செல்ல விடுவதில்லை. சிறுகதையாக இருந்தாலும் நாவலாக இருந்தாலும் புனைவு அந்த கட்டமைக்கப்பட்ட இடத்தினுள்ளேயே ஆரம்பித்து அதனுள்ளேயே முடிந்தும்விடுகிறது. சின்ன உதாரணம் வெண்முரசின் இரண்டாம் நாவல் மழைப்பாடல். கிட்டதட்ட அரசியல் நாவல் என்றே அதனைக் கொள்ளலாம். அத்தனை தூரம் நாட்டின் அரசியலை எப்படியெல்லாம் தந்திரங்களும் பெண்களும் பங்கிடுகிறார்கள் என்பதை மிகத் துல்லியமாக காண்பித்திருப்பார். இதை கூறுவதன் காரணம் வெண்முரசு இன்னமும் வரவிருக்கும் பாகங்களையும் இணைத்த பெரிய நூல். ஆனாலும் இரண்டாம் நாவல் தனித்த நாவலாக தனக்கான கதையை, துவந்துவத்தை, தத்துவத்தை, தர்க்கத்தை உருவாக்கி அதனுள்ளேயே முடிந்துவிடுகிறது. அதற்கு முந்தைய நாவலை வாசிக்க வேண்டும் என்னும் அம்சம் புனைவினை இடர்வதில்லை.

நாவலொன்றை புனைய பல தரவுகள் தேவைப்படுகின்றன. இவருடைய நாவல்களில் அப்படியான விஷயங்கள் நிறையவே இருக்கிறது. இந்த நிலையில் ஓருலகத்தை அப்படியான புனைவின் வடிவில் உருவாக்க முடியுமா என்னும் கற்பனையான கேள்வி என்னுள் எழுந்தது. அவருடைய கற்பனைகள் எதுவுமே வாசகனின் நிலைக்கு இறங்குவதில்லை. மாறாக வாசகனை தன்னுடைய இடத்திற்கு இட்டு செல்பவை. காடு இரவு போன்றவையெல்லாம் சின்ன அம்சத்தின் ஆழங்களுக்கு செல்பவை. எல்லாம் அடங்கிய பிரபஞ்சத்தை கற்பனையினால் உருவாக்கினால் எப்படி இருக்கக்கூடும் என்னும் கேள்விக்கு பதிலே ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம்.


எல்லா காலத்திலும் செவ்வியல் படைப்புகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அதன் நோக்கம் என்ன ? பலவிதமான படைப்புகள் தோன்றும் தருணத்தில் ஏன் செவ்வியல் படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்னும் கேள்வியுடன் நாவலின் பக்கங்கள் முன்னுரையில் துவங்குகின்றன. ராமேஸ்வரம் கோயிலினுள்ளே நிற்கும் போது அவருக்கு இது போன்றதான நாவலை உருவாக்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்றுகிறது. கோயில் பல புராதனங்களையும் வரலாறுகளையும் தனக்கென சில பாவ புண்ணிய பரிகாரங்களையும் கொண்டிருக்கிறது. வெறும் சிலைகள் ஒருபோதும் கோயிலாவதில்லை. அது புறத்தோற்றமே. அதன் அகத்தில் எண்ணற்ற கதைகள் உலவிக் கொண்டிருக்கின்றன. தத்துவங்களாலும் ஞானத்தாலும் நிரம்பிய தரிசனங்கள் பிணைந்திருக்கின்றன. அதை எல்லோரும் அறிவதில்லை. காலத்திற்கொப்ப சிலர் அதை முழுமையாக அறிகிறார்கள். அடைகிறார்கள். இதையே செவ்வியல் படைப்பும் செய்கிறது.

விஷ்ணுபுரம் செவ்வியல் படைப்பா ? விஷ்ணுபுரம் எனில் என்ன ? மேலே கூறியது போல இதுவும் ஒரு ஊரினைப் பற்றிய கதை தான். கதை என்பதை விட ஆசிரியர் தன் எழுத்தைக் கொண்டு ஊரை நிர்மாணிக்கிறார். ஊரை புனைவினூடாக நிர்மாணிக்கும் போது அதற்கான வரலாறுகளும் தத்துவங்களும் இன்னபிற உள் அம்சங்களும் அவ்வூரிற்கென பிரத்யேக கலைகளும் இருக்க வேண்டும். இவையெல்லாம் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் பொதுவான பிரம்மம் ஒன்று இருக்க வேண்டும். இப்படியான பல பிரம்மங்களே ஒவ்வொரு ஊரினையும் மதங்களையும் ஆண்டு கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் all mighty என பொதுப்படையாக விளிக்கிறார்கள். இங்கே அப்படி பிரம்மமாக இருப்பது விஷ்ணு. அதனால் அவ்வூரும் விஷ்ணுபுரமாகிறது.

உலகத்திலுள்ள எல்லா இதிகாசங்களையும் புராணங்களையும் நோக்கும் போது அதிகாரத்தின் வெறியினால் ஒரு பீடத்தை மற்றொருவர் அடைய எத்தனையோ போட்டிகளையும் போர்களையும் நிகழ்த்தியிருக்கிறார்கள். எல்லா மதங்களும் அழித்தலையும் அழிதலையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. யூத மதத்திற்கும் கிறித்துவ மதத்திற்குகமான தொடர்பை பொருள்முதல்வாதமாக நோக்கினால் அது ஒரு பீடத்தை இன்னொறு ஆக்ரமிப்பதற்கு சமமே ஆகும். நம் நாட்டில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என நாத்திகம் வரை ஏதோ ஒன்றை தன்வசம் இருக்கும் ஆயுதங்களால் புறமொதுக்கி முன்வந்திருக்கின்றன. தங்களை நிலைநிறுத்த வேறொன்றை அவர்கள் ஒதுக்கியாக வேண்டிய நிலை.

இவையெல்லாம் ஏன் நிகழ்ந்திருக்கின்றன என்னும் வாதத்தில் முதன்மையாக நமக்கு கிடைப்பது எல்லாவற்றிற்கும் பொதுவான தத்துவம் ஒன்றை நிறுவுவது. இருக்கும் உலகை அப்படியே அனுபவிப்பதும் அதை அணுஅணுவாக பகுப்பாய்வதுமாக இரண்டு மார்க்கங்கள் நம்முன் விரிகின்றன. முதலாவதில் பிரச்சினையே இல்லை. இரண்டாவதில் தான் தர்க்கங்கள் எழுகின்றன. பகுப்பாய்தல் அவரவர் புத்திகளுக்கு ஏற்ப நிகழ்கின்றன. ஆக தரிசனங்களும் கண்டடையும் உண்மைகளும் மனிதர்களுக்கேற்ப தனித்துவம் வாய்ந்தவை. அவற்றை நிச்சயம் பொதுமை படுத்த முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி ஒட்டு மொத்த உலகத்திற்கும் பொதுமையான கருத்தினை அல்லது தத்துவத்தினை நிறுவ முடியும் ? அப்படியே பொதுப் பிரம்மம் ஒன்றை நிறுவினால் அது யாதாக இருக்கும் ? அது யாருடைய வெற்றியாக இருக்கும் ? பிரம்மத்தின் வெற்றியா அதை நிறுவிய மனிதனின் வெற்றியா ? ஒருவேளை மனிதனின் வெற்றியாக இருப்பின் பிரம்மம் அர்த்தமிழந்துவிடுமே ? அப்படியாயின் மனிதனின் கண்டறிதல் கண்டுகொள்ளப்படாமலே போகுமா ? கண்டடைந்த ஞானம் அங்கீகாரமற்று போகுமா ? ஞானம் அங்கீகாரம் தேடக்கூடியதா ? இப்படி எல்லா கேள்விகளுக்கும் தெளிவுற விடை கூறுகிறது ஜெயமோகனின் விஷ்ணுபுரம்.

பாண்டிய மன்னனின் ஆட்சியில் இருக்கும் பெரிய நகரம் தான் விஷ்ணுபுரம். இதன் அடிநாதாமாக இருப்பது விஷ்ணு. அவரைப் போற்றியும் வரலாற்றை கூறியும் நிறைய கதைகள் காவியங்கள் அங்கே புனையப்படுகின்றன. எங்கெங்கிருந்தோ அம்மாநகரிற்கு ஞானத்தின் சிறு பகுதியையாவது உணர வேண்டும் என மக்கள் வருகின்றனர். அங்கே மண்ணுக்கடியில் விஷ்ணுவின் சிலையொன்று இருக்கிறது. அதையே பிரதானமாக பூஜிக்கிறார்கள். மேலும் அக்னிதத்தன் என்னும் முன்னோரிடமிருந்து விஷ்ணுபுரம் தனக்கான வரலாற்றை நிர்மாணிக்கிறது. அங்கே சோனா என்னும் நதி ஓடுகிறது. அதற்கென தனிக்கதையும் உண்டு.

இங்கு வரும் எல்லோருமே ஞானத்தை அடையவே வருகின்றனர். ஞானம் தேடலினூடே கண்டடைவது. இன்னமும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் தேடலில் அறியும் விஷயம் சார்ந்தும், பயணத்தினூடே கொள்ளும் அனுபவங்கள் சார்ந்தும் நிகழும் தர்க்கம் உணர்த்தும் விஷயமே ஞானம் என்கிறது விஷ்ணுபுரம். இதை அங்கே இருக்கும் எல்லோராலும் உணரப்படுவதில்லை. மேலும் ஞானத்தை சின்னதான மையத்தினை வைத்து அடைந்துவிடமுடியாது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயங்களில் ஞானம் ஏற்படலாம். கதையாசிரியன், பாடகன், ஓவியன், சிற்பக்கலைஞன் என பல கலைஞர்கள் தங்களின் கலைகளினூடே ஞானத்தை அடைகின்றனர். வேறு சிலர் தங்களுக்கான ஞானம் ஞானமார்க்கம் அற்றதே என்பதை புரிந்து கொண்டு அடைகின்றனர். இவையெல்லாவற்றயும் நூலினுள் அடக்கியுள்ளார்.

இதை இன்னமும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் நாவலில் வரும் கதாபாத்திரங்களை வைத்து கூறலாம். திருவடி என்னும் கதாபாத்திரம் இசையை முதன்மையாக்குகிறது. இயற்கைக்குள் இருக்கும் இசையை கருவிகள் மூலம் வருவது என்பதை நிராகரிக்கிறது. இசையே பிரம்மம். இன்னமும் சொல்லப்போனால் இசை என்பது கூட ஒலிக்கு கொடுக்கப்படும் வடிவத்தின் பெயர். ஆக ஒலியே பிரம்மம் என ஞானத்தை அடைகிறது. நாவலில் இரண்டு சிற்பிகள் வருகிறார்கள். விஷ்ணுபுரமெங்கும் சிற்பங்களாலும் காவியங்களாலும் நிரம்பியிருக்கிறது. இந்த நிலையில் இரண்டு சிற்பிகளின் கோட்பாடுகளும் முரண்பாடுகளுடன் இருக்கின்றன. ஒரு சிற்பியின் வாதம் சிற்பக்கலையின் உச்சம் தெய்வாம்சத்தை அடைகிறது என்பது. கைதேர்ந்த சிற்பியினால் வாழ்நாள் முழுமையிலும் உச்சத்தை தொடக்கூடிய ஒரு சிற்பத்தைதான் வடிக்க முடியும். அது தெய்வத்தன்மை பொருந்தியதாகும் என்கிறார். மற்றொருவர் சிற்பங்களில் மனிதனின் உள்போதமான கலையே முதன்மை பெறுகிறது. தெய்வீகம் என்பது அதன் மேல்பூச்சு என்கிறார். சூரியதத்தர் நியாய நீதிகளிலும், பிங்கலன் மனித உணர்வுகளிலும், சங்கர்ஷணன் காவியங்களின் மேல் இருக்கும் கர்வத்திலும், அக்னிதத்தன் தத்துவத்தின் போதத்திலும் ஞானமார்க்கத்தை அடைய முனைகிறார்கள்.

விஷ்ணபுரம் சாபம் ஒன்றையும் சுமந்து வருகிறது. அது நாவலின் மையசரடுடன் இணக்கமாக இணைந்திருக்கிறது. விஷ்ணுபுரத்தில் காலம் சுழற்சி முறையில் இயங்குகிறது. அப்படியெனில் நடந்தவை மீண்டும் நிகழ்கின்றன. அப்படியே எதிர்காலத்திலும் நிகழும் என்பதே. இதை தர்க்கத்தால் மிக அழகாக முன்வைக்கிறார். அதாவது இதுவே பெரிய துவந்துவத்தை முன்னிறுத்துகிறது. ஏற்கனவே நிகழ்ந்தவை மீண்டும் நிகழ்கிறதெனில் இப்போதிருக்கும் மனிதர்களின் இருத்தலும் அவர்களின் பிரக்ஞையும் அது கொள்ளும் ஞானமும் அர்த்தமற்றதாகிவிடுகிறதே ? அப்படியெனில் சுயம் என்ற ஒன்றே அழிந்துவிடுகிறதே ? பின் வாழ்வதில் என்ன அர்த்தம் என. அதற்கு கதாபாத்திரத்தினூடே அவர் அளிக்கும் பதில் ஞானத்தை அடைய வேர்களை தேடி செல்கிறோம். அந்த வேர்கள் கடந்தகாலத்தில் இருக்கின்றன. வேர்களிலிருந்து நமது சுயத்தை நிர்ணயிக்க முயல்கிறோம். நிர்ணயம் ஆகும் தருணத்தில் வேர்களை அறுத்தெறிந்து நமக்கான புதிய வேர்களை நம்மிடமிருந்தே உருவாக்குகிறோம் என. இதன் சுழற்சியிலேயே உலகில் பரிணாமங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நாவலும் காலத்தின் சுழற்சியை புனைவில் கூறுகிறது.

நாவல் மூன்றாக பிரிந்து இருக்கிறது. ஶ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி என மூன்று பிரிவுகளை கொண்டிருக்கிறது. மூன்றையும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் எழுதுகின்றன. முதல் பகுதியான ஶ்ரீபாதம் விஷ்ணுபுரத்தில் நிகழும் கோலாகலமான திருவிழா. இங்கு தான் திருவடி, பிங்கலன் என மேலே கூறப்பட்ட எல்லா கதாபாத்திரங்களும் இடம் பெறுகின்றன. இந்த பகுதியில் தான் பெண்களும் அதிகமாக இடம்பெறுகிறார்கள். எல்லா பெண்களும் தங்களுக்குள்ளேயே சில தேடல்களை வைத்திருக்கின்றனர். மேலும் பெண்களிடம் ஞானத்தின் பாதை இருக்கும் என பல கதாபாத்திரங்கள் சந்தேகம் கொண்டு தேடுகின்றனர். அதேநேரம் நாவலில் வரும் எல்லா பெண் கதாபாத்திரங்களும் பலகீனமாகவே இருக்கின்றன. இதன் ஒரே விதிவிலக்கு நாவலின் கடைசியில் வரும் நீலி. இது ஏன் என்பது நாவல் முழுக்க புரியவில்லை. மேலும் இந்த பகுதியில் நிறைய கதாபாத்திரங்கள் இடம்பெறுவதால் கதையின் தொடர்ச்சியை பின்தொடர்வது கடினம். அதே நேரம் நிகழ்வுகளாக இருக்கும் இப்பகுதிகளை ஜெயமோகனே மூன்றாம் பகுதியான மணிமுடியில் கட்டுடைக்கிறார். அப்போது சொல்லப்பட்ட கதைகள் ஞானத்தின் பக்கம் சாய்கிறது. கதைகள் தரிசனங்களாக பரிணமிக்கின்றன.

நாவலின் இரண்டாம் பகுதி கௌஸ்துபம். இங்கே கிருஷ்ணபட்சி பரீட்சை என்ற போட்டியொன்று நிகழ்கிறது. அது விஷ்ணுபுர தத்துவார்த்தவாதிகளை வாதுச்சண்டைக்கு இழுக்க வேண்டும். அப்படி இழுப்பவர் தோற்றால் அவர்களுக்கு தண்டனையே மிஞ்சுகிறது. அது உயிரையும் எடுக்கும் வல்லமை கொண்டது. அதேநேரம் வெற்றி கொண்டால் விஷ்ணுபுரத்தின் ஆன்மீக பீடத்தில் இடமெடுத்துக் கொள்ளலாம். இப்பகுதியில் வாதுக்கு வருபவன் அஜிதன். அவன் ஒரு பௌத்தன். அவனுடன் நிகழும் தத்துவப் போர் இருநூறு பக்கங்களுக்கு நீள்கிறது.

இந்தப்பகுதியை எந்த அளவிற்கு ரசித்தேனோ அதே அளவு வெறுக்கவும் செய்தேன். இந்துமதம் தன்னுள்ளே பல கிளைகளை கொண்டுள்ளன. எல்லோரும் தங்களுக்கே ஆன சில மையக் கோட்பாடுகளை கொண்டு அதன்வழியே தங்களை உருவமெடுத்துக் கொள்கிறார்கள். அந்த உருவத்திலிருந்தே தர்க்கத்தை ஆரம்பிக்கிறார்கள். தர்க்கம் ஆரம்பமோ முடிவோ அற்றது. அதனூடே ஞானம் சிறுதுளியென எங்கோ ஒளிந்து கொண்டிருக்கும் . அதை அவரவரின் திராணிக்கேற்ப அடைந்து கொள்வர் என்பதை இந்த பகுதியில் அழகாக உணரலாம். இந்த எல்லா பிரிவுகளும் இணைந்து பௌத்தனை தோற்கடிக்க போராடுகின்றனர்.

இந்த போராட்டங்களெல்லாம் பிரபஞ்ச தத்துவங்களுடன் இணைந்திருக்கின்றன. இங்கு தான் என் வெறுப்பே ஆரம்பித்தது. ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவல் ஃப்ராய்டிற்கு உதவியதாக வாசித்துள்ளேன். அதற்கு காரணம் புனைவினூடாக மனித மனத்தை கூறுபோட்ட கலைஞனின் ஞானம். அந்த அளவிலான அறிவியல் விஷயங்கள் இதில் நீக்கமற நிறைந்துள்ளன. இன்று அறிவியலில் காணப்படும் ப்ரோட்டான், நியூக்லியஸ் போன்ற அணுவின் உட்பகுதிகள் வரை இந்நாவல் ஆராய்ந்து கொண்டே சிருஷ்டியின் ஆரம்பத்திற்கு செல்கிறது. ஆனால் தேவபாஷையைப் போல மதங்களின் பின்னே இவை ஒளிந்து கொண்டிருக்கின்றன. இதே விஷயங்கள் சமகாலத்தின் தொனியுடன் வந்திருப்பின் அறிவியல் நாவலாவதற்கான எல்லா வாய்ப்பினையும் பெற்றிருக்கும். இப்போது ஆன்மீகம் மற்றும் ஞானத்தின் மையத்தில் நாவல் உருண்டோடுகிறது.

மேலும் இந்த பகுதியில் அடையாளங்களுக்கான வெறியை புனைவாக்கியிருக்கிறார். பௌத்தனை எதிர்க்க வேண்டும் என்னும் முனைப்பிலும் சரி, முந்தைய  பகுதியான ஶ்ரீபாத திருவிழாவிலும் சரி இந்த அடையாளங்களை சுமந்து கொண்டும் அதன் கர்வத்தினூடேயும் அலையும் மனிதர்கள் ஞானத்தைக் கண்டு எப்படி அஞ்சுகிறார்கள் என்பதும், ஞானம் என்பதே அறியாதவனுக்கு விஷ்ணுபுரம் எப்படி ஒன்றுமற்றதாகிவிடுகிறது என்பதையும் சொல்கிறார்.

மூன்றாவது பகுதி மணிமுடி. இது விஷ்ணுபுரத்தின் அழிவை பேசுகிறது. பல யுகங்களால் இந்த பிரபஞ்சத்தின் காலம் செப்பனிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு யுகங்களும் தனக்கென முடிவொன்றை தன்வசமே கொண்டிருக்கிறது. அவை வகுக்கப்பட்ட அறங்கள் பிறழும் போது நிறைவேறுகிறது. அப்படியான தருணத்தை இப்பகுதி முழுமைக்குமாக பேசுகிறது. மேலும் இப்பகுதியில் நாவலின் கட்டமைப்பு முழுதுமாக சிதிலமடைகிறது. ஓரிடத்தில் அவர் குறிப்பிடுகிறார் மீன் கடலில் நீந்திக் கொண்டிருக்கிறது. ஆனால் மீனிற்கு தெரியாது இது தான் கடல் என்று. இது தான் மூன்று பாகங்களும். முதல் பாகம் விஷ்ணுபுரத்தின் புறத்தோற்றத்தையும், இரண்டாம் பாகம் அகத்தோற்றத்தையும், மூன்றாம் பாகம் எல்லாவற்றையும் புராணமாக்குவதையும் கூறுகிறது.

இந்நாவல் பலருக்கு புரியாமல் போவதற்கான முக்கிய காரணம் இது புழங்கும் காலமே ஆகும். முன்னர் இது அறிவியல் நாவலாவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் கொண்டிருக்கின்றன என கூறியிருந்தேன். அது முடிவுகள் அல்ல. மாறாக இயந்திரத்தனமான உலகில் அதே விஷயங்கள் பிரபஞ்ச இயக்கவியல் சார்ந்த பருப்பொருளாக மாறியிருக்கும். எப்போது மதம் ஆன்மீகம் என்னும் போர்வைக்குள் வந்துவிடுகிறதோ அப்போதே அது தத்துவமாகிவிடுகிறது. தத்துவம் என்றாலே புரியாது என்பது அடிப்படைவாதத்திற்கு கிடைக்கப்பெற்ற கொடுஞ்சாபம்! மேலும் விஷ்ணுபுரம் நாவல் முழுமையை அளிக்கிறது. புரியாது செல்வதற்கென நிறைய பக்கங்கள் இருக்கின்றன. அவற்றை வேறு ஒரு பக்கத்தில், வேறு ஒரு பாகத்தில், வேறு ஒரு அத்தியாயத்தில் நிச்சயம் விளக்கமளிக்கிறார். அதனாலேயே நாவல் முழுமையாகிறது.

காலத்தின் சுழற்சியில் சிக்குண்டு இருக்கிறது விஷ்ணுபுரம். அதன் சுழற்சியில் ஆதியையும் அந்தத்தையும் கொண்டு மறுபடியும் நிர்மாணித்துக் கொண்டே செல்கிறது. ஆதிக்கு முன்னும் அந்தத்திற்கு பின்னும் இருப்பவற்றை காரண காரியங்கள் கொண்டு விளக்க முற்படுகிறது. சுழற்சி முறை என வரும் போது ஆதியும் அந்தமும் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. அப்படியெனில் ஆதியின் ஆடி அந்தம் எனக் கொள்ளலாமா ? நாவலினூடே வரும் எல்லா தர்க்கங்களும் ஒரு மையப்பொருளின் ஆடியாகவே அமைகிறது. சுயத்தின் ஆடியே ஞானம். அதனால் தான் ஞானம் சுயத்தை அறிதல் என்பதை நோக்கியே நகர்கிறது. ஆனால் அதை அடைய ஏதேனும் ஒரு மீடியம் தேவைப்படுகிறது. அது கலை, தெய்வம், தத்துவம் தர்க்கம் என எதுவாக வேண்டுமெனினும் இருக்கலாம்.

ஞானத்தை நோக்கிய எல்லா வழிகளையும் முன்னிறுத்தி புனைவை ஜெயமோகன் உருவாக்கியிருக்கிறார். அந்த புனைவின் வழியே ஞானத்திறாகன் விளக்கமொன்றையும் அளிக்க முனைந்திருக்கிறார். அந்த புனைவின் ஆடியே விஷ்ணுபுரம்.

பி.கு : நான் மொத்த நாவலுக்கான சின்ன பதிவையே வெளியிட்டிருக்கிறேன். இது ஒரு அவுட்லைன். உள்ளிருக்கும் ஒவ்வொரு உபகதைகளும் எண்ணற்ற தர்க்கங்களை எழுப்பக்கூடிய சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கின்றன. விஷ்ணுபுரம் பல படிமங்களாலான மாநகரம். அதன் ஒவ்வொரு இழையும் பிரம்மத்தை நோக்கி நகர்கிறது. நாவலில் வரும் ஒவ்வொரு உப குழுக்களின் மையக்கோட்பாடுகளையும் அறிந்திருப்பின் நாவலை நுண்ணியமாக புரிதல் கொள்ளலாம். தர்க்கத்தை இன்னமும் முன்னிழுக்கலாம்.

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

கானகம் said...

தமிழ் எழுத்துலகில் நடந்த மிக முக்கியமான சாதனை இந்த விஷ்ணுபுரம். நான் கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு முன்பு 4 நாட்கள் பித்துப்பிடித்தது போல முழுதும் வாசித்தேன். முதல் 50 பக்கங்களை கடப்பது மட்டுமே கடினம், அதன்பின்னர் விஷ்ணுபுரம் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும். வண்டிகளில் விஷ்ணுபுரம் உள்ளே வருவோர் கோபுரத்தை முழுமையாக காண்பதற்காக தூரத்திலிருந்தே பார்த்துக்கொண்டே வருவார்கள். அதில் ஒரு சிலர் தூங்கிவிட்டு அய்யோ அந்தக் காட்சியை தவறவிட்டுவிட்டேனே என அங்கலாய்ப்பார்கள். அந்தக் காட்சியின் முக்கியத்துவம் கதை முழுக்க விரவிக்கிடக்கும். கோபுரத்தின் அடியில் வாழும் இருள் உலக மனிதர்கள், குஷ்ட ரோகிகள், பந்தியில் உணவுக்காக அடித்துக்கொள்ளும் பிராமணர்கள், நெய்யப்பம் கொண்டு செல்லும் வண்டி சரிந்து இஷ்ட மோட்சம் அடையும் ஒருவன், ஓரினச் சேர்க்கையாளர்கள், அழகான கானகம், சூன்யாவதம், என ஒரு மாநகரில் என்னென்ன காணக்கிடைக்குமோ அதையெல்லாம் எழுத்தினால் நம் கண்முன் கொண்டுவைக்கும் எழுத்து வித்தைக்காரர், ஜெயமோகன்.

இனி இப்படி ஒரு நாவல் தமிழில் எழுதப்படப்போவதில்லை என்றே நினைத்திருந்தேன். அது ஜெயமோகனாலும் முடியாது என. ஆனால், வெண்முரசு நாவல் பல விஷ்ணுபுரங்களையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

அருமையான வாசிப்பனுபவம் விஷ்ணுபுரமென்றால், அதை இப்படி அசைபோடுதல் அதைவிட இனியதோர் அனுபவம். அருமையான எழுத்து.

Anonymous said...

அருமையான திறனாய்வு. பதிவிற்கு நன்றி.

Post a comment

கருத்திடுக