எழுத்தாளனின் பசிநட்ஹாம்சன் நார்வே தேசத்து எழுத்தாளர். அங்கேயே பிறந்து வறுமையிலும் ஏழ்மையிலும் அவதியுற்றிருக்கிறார். சிறுவயதிலிருந்து செருப்பு செய்பவரிடம் அபரண்டீஸாகவும், வேறு சில கூலி வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார். பின் அமேரிக்காவின் தெருக்களில் சுற்றி அந்நாட்டின் அரசியலையும் அறிந்திருக்கிறார். அதை அங்கதமாக எழுதி முதல் நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். அது தான் Intellectual life of modern America. அதற்கு பின் தன் கடந்த கால வாழ்க்கையை நாவலாக்க பெரும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அப்போது தான் அவருடைய முதல் நாவல் வெளிவருகிறது. அது தான் sult. ஆங்கிலத்தில் hunger.வெளியான ஆண்டு 1890.

இந்நாவல் நவீனத்துவத்தின் ஆரம்பமாக கருதப்படுகிறது. அதுவரை பேசப்பட்டு வந்த கதையாடல்களை இந்நாவல் மாற்றி முன்னிலையிலிருந்து கதையை சொல்கிறது. மேலும் வரலாற்று சாயல்களில் படைப்புகள் பெரிதாக வெளிவந்துகொண்டிருந்த காலத்தில் தனிமனிதனின் வாதைகளையும் கற்பனை உலகினூடாக அடையும் அபத்தங்களையும் நாவலாக்கினார் நட்ஹாம்சன். அன்றைய காலத்தில் அதுவே நவீனமாக கருதப்பட்டது. இதற்காக 1920 ஆம் ஆண்டு நட்ஹாம்சன் நோபல் பரிசையும் வென்றிருக்கிறார்.

இதற்கு பிறகான அவருடைய படைப்புகள் பெரிதும் பேசப்படவில்லை. அதற்கு மூலக்காரணமாக அமைந்தது என இரண்டு விஷயங்களை அந்நாட்டின் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒன்று அவருடைய நாஜிப்படைகள் மீதான சார்புத்தன்மை. மற்றொன்று தனிமனிதனின் இடையே இருக்கக்கூடிய பிரச்சினைகளை அழகாக முன்வைத்தவர் நிலவியல் விஷயங்களை பெரிதுபடுத்த ஆரம்பித்திருந்தார். அவருடைய கருத்தாக்கங்கள் மீண்டும் பழமைவாதத்திற்கு செல்ல ஆரம்பித்திருந்தது. அவர் இறந்த பிறகே அவருடைய மொத்த படைப்புகளும் வெளிவர ஆரம்பித்தன. அவருடைய முதல் நாவலான பசியை தமிழில் க.நா.சு மொழிபெயர்த்திருக்கிறார். அகரம் பதிப்பகத்தில் கிடைக்கிறது.


உலகின் ஆதிநோய் என எண்ணினாலே அது பசியாகத்தான் இருக்கிறது. பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். சம்பாதிப்பதானாலும் கலைத்திறனானாலும் பிரதானமாக சொல்வது வாழ்வியலுக்கு அது துணைபுரியுமா என்பதாகவே இருக்கிறது. இதன் நூதன அர்த்தம் பணம் சேர்க்க உதவுமா என்பதேயாகும். பணமே பிரதானமாக இவ்வுலகம் மாறிக் கொண்டு வந்திருக்கிறது. இப்போதைக்கான உலகம் மட்டும் அப்படியல்ல. மாறாக பண்டமாற்று முறையிலிருந்து பணம் என்னும் சாதனம் இடையில் புகுந்த நாள் முதலே அதன் மீதான மோகம் குறையாமல் இருக்கிறது. எத்தனை தான் சேர்த்து வைத்தாலும் எல்லாமே ஒரு ஜான் வயிற்றுக்கு என்னும் அளவிலேயே நின்றுவிடுகிறது.

பணம் கொழிக்கும் அதே ஊரில் தான் சாப்பாட்டிற்கு வழியில்லாமலேயே நிறைய பேர் செத்து மடிகிறார்கள். அவர்களின் எண்ணிக்கைகளை எழுத்தின் வடிவில் உலகிற்கு காட்டுவது என்னவோ பத்திரிக்கையாளர்களும் எழுத்தாளர்களும் தான். இந்த நவீன உலகத்தில் எழுத்தும் கார்ப்பரேட் என்னும் அமைப்பில் புகுந்துவிட்டது. எழுத்தாளர்கள் சம்பாத்தியத்திற்கென தொழிலொன்றை வைத்துக்கொண்டு இரவுகளை அர்பணித்து எழுதுகிறார்கள். கடந்த காலத்தில் பத்திரிக்கைகளிலும் இப்போதைய எழுத்தாளர்களின் நிலை தான் இருந்திருக்கிறது. அவர்களும் அன்றாடங்காய்ச்சிகளாக இருந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் இது எந்நிலையில் இருந்தது என்பது சரிவர தெரியவில்லை. ஆனால் நார்வேயிலும் அமேரிக்காவிலும் வறுமையின் எல்லைக்கோட்டிலேயே பத்திரிக்கையாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பத்திரிக்கையாளனும் எழுத்தாளனுமான ஒருவனின் கதைதான் இந்த பசி. மேலே பொதுமையாக பசியை கூறியதன் காரணம் சாமான்ய மனிதனுக்கு பசியின் வாதை துரத்துகிறது எனில் அவன் அதிகபட்சம் அருகில் உள்ளவர்களையும், கடவுளையும் திட்டிக்கொண்டு வாழ்தலே மோசம் என்று இருந்துவிடுவான். அதே எழுத்தாளனுக்கோ பத்திரிக்கையாளனுக்கோ இந்நிலை எனில் அவன் தன் பசியையே தர்க்கம் செய்து அதை உலகப்பொதுமையாக்கிவிடுவான். அப்படியே இந்நாவலிலும் நாயகன் செய்கிறான்.

எழுத்தாளனின் மூளை பல விஷயங்களால் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. அங்கே பசி குடிகொள்ளும் தருணத்தில் அவனுடைய சிந்தனா சக்தி செயலிழக்க ஆரம்பித்துவிடுகிறது. எழுத்தாளனுக்கு மூலதனமே கற்பனை தான். அங்கே மாசுபட ஆரம்பிக்கும் போது தான் இருத்தல் தேவையற்றது என்னும் நிலைக்கு வருகிறான். மேலும் எழுத்தாளன் தனக்குள்ளே நடுநிலைவாதத்தை பிரதானமாக வைத்திருக்கிறான். நான் சமூகத்தை மதிப்பிடுகிறேன் எனில் அதற்கு தகுதியுடையவனாக, சமூகத்தின் எல்லா அறங்களையும் பின்பற்றும் idealistஆக தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறான். மூன்று வேளை உணவும் அனுப்பும் கட்டுரைகளும் கதைகளும் உடனே பிரசுரமாகிக் கொண்டே இருப்பின் முன்முடிவுகளுடன் மேற்கூறியபடியே வாழ்ந்துவிடலாம். ஏழ்மையும், ஒருவேளை சோற்றுக்கே வழிதேடிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கும் ஒரு எழுத்தாளனால் எப்படி ஐடியலிஸ்டாக வாழ முடியும் ? அவ்விடத்தில் தான் யார் என்னும் தர்க்கத்தை ஆரம்பிக்கிறான்.

சுமந்து கொண்டிருக்கும் அகம்பாவத்தையும் ஏற்றிவைத்திருக்கும் அறிவினையும் கழற்றி வைத்துவிட்டால் பசிக்கு நிச்சயம் வழிகோலமுடியும். நாயகனுக்குள்ளே இருக்கக்கூடிய சாமான்யன் அதற்கு தயாராக இருக்கிறான். நாவலில் நிறைய இடங்கள் இதற்கு உகந்தாற்போல வருகிறது. ஆனால் எழுத்தாளன் எனும் பிம்பமோ அதற்கு செவிசாய்க்க மறுக்கிறது. இந்த துவந்துவத்திலிருந்து எப்படி நாயகன் தப்பிக்கிறான் என்பதையே நாவல் கடன், காதல், எழுத்து, அதிகார அரசியல், பித்தனிலை என பல கோணங்களின் வழியே பேசுகிறது.

மொழியின் ஆதிக்கத்தை ஒவ்வொரு இடத்திலும் நம்மால் காணமுடிகிறது. நாவல் அந்த எழுத்தாளனின் வாயிலாகவே நகர ஆரம்பிக்கிறது. பல இடங்களில் வரும் கேலி, அவமானம், சினம் என பன்முக உருவங்களை நம்மால் பிரித்து கண்டறிந்து உணரவும் முடிகிறது. பசி அவனை பைத்தியமாக்கும் போது பசி என்பது எவ்வளவு கொடுமையான நோய் என்பதை ஆசிரியர் தன் மொழியால் உணரவைக்கிறார்.

க.நா.சுவின் பிற்கால வாழ்க்கையும் வறுமையால் துவண்டிருந்தது என கேள்விப்பட்டிருக்கிறேன். வாடகை கொடுக்கவியலாமல் அவருடைய நாவல் பிரதிகளை தூக்கி சென்ற காலமும் உண்டு. இந்நாவலின் பல இடங்களை வாசிக்கும் போது அவருடைய வாழ்க்கையை பாதித்ததால் மொழிபெயர்த்திருப்பாரோ என எண்ணினேன். சரியாக மொழிபெயர்த்த ஆண்டு நூலில் இல்லை என்பதால் சந்தேகமாகவே அவை என்னுள் முடிந்துவிட்டது.

ஏனோ நாவலின் எல்லா பக்கங்களும் என்னை வெகுவாக பாதித்தன. சில இடங்களில் பசியினால் அவதியுறும் அந்த எழுத்தாளனின் தேடல்களும், புறக்கணிப்புகளும் என்னை பயமுறுத்தின. சாமான்யனின் பசி அவலத்திற்குரியது எனில் எழுத்தாளனின் பசி ரௌத்திரத்திற்கு உரியது என்பதற்கு இந்நாவலே தக்க சான்று. நாவலின் கடைசி பக்கம் நாடே அவமானப்படவேண்டிய விஷயமாக இருக்கிறது. எழுத்தாளன் அந்த மண்ணின் சொத்து. அவனுக்கு பிணியொன்று இருக்கிறதெனில் அதை போக்க வேண்டியது அந்த மண்ணின் கடமை. அதை மண் மறந்தால் அவன் எடுக்கும் முடிவுகள் அபாயகரமானதாக இருக்கக்கூடும். அதுவே இந்நாவலின் முடிவும் கூட.

க.நாசுவின் எளிமையான மொழிபெயர்ப்பில் தங்குதடையின்றி பெரும் அவலத்தை பேசிச் செல்கிறது நட்ஹாம்சனின் பசி.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

க.நா.சு அவர்களுக்கும் நன்றி...

Post a comment

கருத்திடுக