இயற்கையுடனான பிள்ளைப்பிராயம்கி.ராஜநாராயணனை நான் வாசித்ததில்லை. அதற்காக வாசிக்காமலே என் வாசிப்பு வாழ்க்கை முடிந்துவிடும் என எண்ண வேண்டாம். அவரைப் பற்றி பலரின் கருத்துகளை அறிந்து வியப்பே அடைந்திருக்கிறேன். குறிப்பாக கிருஷ்ணன் நம்பிக்கும் கி.ராவிற்கும் இடையே இருந்த நட்பு வாசிக்கவே கி.ரா மீதான என் ஆவல் மேலோங்க காரணாமாகயிருந்தது. கரிசல் இலக்கியத்தின் முக்கியமானவராக கி.ராவின் எழுத்து பல நுட்பங்களை கொண்டிருக்கிறது என்பதை இப்போதே முதன்முதலாய் ருசிபார்த்து அறிந்துகொள்கிறேன்.

நாவலுக்குள் செல்வதன் முன் அந்நாவல் வாங்கும் போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை கூற விழைகிறேன். கடந்த சென்னை புத்தக திருவிழாவில் காலச்சுவடு பதிப்பகத்தில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். ஏதோ ஆய்வு செய்கிறார்போல. என்னிடம் சில புத்தகங்களை கொடுத்து வலுக்கட்டாயமாக வாசிக்க சொன்னார். வெகு சீக்கிரத்திலேயே என்னை எழுத்தாளர் என அறிந்து கொண்டார். பின் தான் வதையே ஆரம்பித்தது. வாசிக்க வேண்டிய விஷயங்கள் கடலென இருக்கிறது. அவற்றை கடந்தபின் எழுத வரலாம். இப்போது உன் சரக்கு செல்லாதது என்னும் தொனியிலேயே சில நூல்களை என் தலையில் கட்ட விரும்பினார். என் திறமைகள் அனைத்தையும் கலந்து சமாளித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் வேறொரு பதிப்பகத்தில் இருக்கும் கி.ராவின் நூலொன்றை கட்டாயமாக வாசிக்க சொன்னார். என்னதான் கடுந்தொல்லை கொடுத்தாலும் அந்நூலில் அப்படி என்ன இருக்கிறது என வாங்கினேன். அதே நேரம் அபத்தமான விஷயம் யாதெனில் அதற்கு பிறகு காலச்சுவடு அரங்கிற்கே நான் வரவில்லை. டேக் டைவர்ஷன் எடுத்து சென்றுவிட்டேன். அந்த நூல் தான் கி.ராஜநாராயணனின் “பிஞ்சுகள்”


இந்நூல் எழுத்துப்பிரதியிலேயே இலக்கிய சிந்தனை பரிசை வென்றது என்னும் பெருமையை தாங்கி நிற்கிறது. நூலை வாசிகும் வரை மேலே சொன்ன கசப்பான அனுபவமும் அந்த மனிதரின் முகமுமே என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. வாசிக்க ஆரம்பித்த முதல் பக்கத்திலேயே நாவலினுள் முழுமையாக நுழைந்து கொண்டேன்.

குழந்தைகள் இலக்கியம் மிக முக்கியமான பங்கினை வாசிப்பில் கொண்டிருகிறது. அதற்கான பிரதான காரணம் குழந்தைகள் என்றாலும் பெரியவர் வரை அந்நூல் வாசிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு புதியதான விஷயங்களை புகுத்துவதாகவும் பெரியவர்களுக்கு இழந்த ஏதேனும் ஒரு பருவத்தை அல்லது கனவை ஞாபகமூட்டுவதாகவும் இருக்க வேண்டும்.

இப்போதிருக்கும் தலைமுறையினர் இழந்த பெரிய விஷயம் இயற்கை.  நம் பெற்றோர்களின் காலத்தில் பலதரப்பட பறவைகளையும் விலங்குகளையும் செடி கொடி மரங்கள் போன்றவற்றையும் அன்றாடமாக பார்த்து வந்திருக்கிறார்கள். அன்றாடமாக இயற்கை மாறியிருந்த நிலையில் அவை வியப்பூட்டுபவையாகவும் அசாதாரண படைப்பாகவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதே நேரம் இன்றைய நிலையில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகளை ருசித்து பின் அதன் ஃப்லேவர்களை வைத்து மூலப்பொருளை தேடிச் செல்லும் நிலை இன்றைய தலைமுறையின் தலையில் விழுந்திருக்கிறது. விலங்குகளுக்கு உயிரியல் பூங்காக்களும், பறவையினங்களுக்கு சரணாலயங்களும் செடிகளுக்கும் மரங்களுக்கும் பொடானிக்கல் கார்டன்களையும் தேடி செல்ல வேண்டியதாய் இருக்கிறது. இந்த நிலையில் சொல்லித்தர வேண்டியவை இயற்கையே அன்றி கட்டமைக்கப்பட்ட கல்வி அல்ல.

இதை வேறு விதமாக கூற வேண்டுமெனில் கல்வியுடன் இணைந்து இயற்கையை கட்டாயமாக்க வேண்டும். அதே நேரம் இயற்கையை கல்வி என்னும் தொனியில் கூறினால் சிறுவர்களுக்கு நிச்சயம் அலுப்பு தட்டக்கூடியதாகிவிடும். காட்டிற்கு ராஜா சிங்கம் என்னும் விஷயத்தை எந்த குழந்தையும் மறப்பதில்லை. காரணம் அவை கதைகளாக போதிக்கப்பட்டவை. விலங்குகள் எவ்வளவு தூரம் கதைகளுக்குள் இடம்பெற்றிருக்கின்றனவோ அப்படி பறவைகளும் செடிகளும் இடம்பெறவில்லை. நவீன மருத்துவமும் மருந்துகளும் பெரு முதலாளிகளின் வணிகக் கூடமாகியிருக்கிறது. அதற்கு சிறுவயதிலிருந்து சொல்லிக் கொடுக்கப்படாத இயற்கையே காரணமாகும். இந்த விஷயங்களை பூரணம் செய்வது இலக்கியமாக இருக்கிறது.

கதைகள் எல்லாவற்றையும் கற்பனையின் வடிவத்தில் உருவமாக்குகிறது. அதை நேரில் காணும் போது கற்பனையுடன் இணைந்து மனதில் ஆழப்பதிகிறது. ஓநாய் குலச்சின்னம் நாவலை வாசித்தது முதல் எனக்கு பிடித்த விலங்காய் ஓநாயே மனதுள் நிற்கிறது. சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று தேடி ஓநாயைக் கண்டால் என்னுள் பரிதாபமே மிஞ்சியது. வெளியே அட்டையில் இந்திய ஓநாய் என்று எழுதியிருந்தார்கள். என்னுள்ளே இருந்த ஓநாய் வீரத்தின் அடையாளம். இங்கிருந்ததோ பச்சாதாபத்தின் பெரியமிச்சம். இருபத்தியோரு வயதுக்காரனுக்கே இப்படி எண்ணம் தோன்றுகிறது எனில் பத்து வயதிற்குள்ளாக இவை எல்லாவற்றையும் போதித்தால் அக்குழந்தையின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம். இது தான் இன்றைய தேவையாகவும் அமைகிறது.

இந்த எல்லாத் தேவைகளையும் கி.ராஜநாராயணனின் குறுநாவல் பூர்த்தி செய்கிறது. வெங்கடேசு என்னும் கதாபாத்திரத்தின் நினைவோடையில் நாவல் நகர்கிறது. அவனுடைய நிகழும் வயதே பத்திற்குள்ளாகத்தான் இருக்கும். அதற்குள்ளாக அவனுக்கென இருக்கும்  இயற்கையுடனான நினைவுகள், கசப்பான அனுபவங்கள், பிரிவுகள், சிலர் விளையாட்டாக சொல்லிக் கொடுத்த விஷயங்கள் என நீளமாக தன் வளர்ச்சியை கொண்டிருக்கிறது. வெங்கடேசுவிற்கும் இயற்கைக்கும் இடையேயான பிணைப்பே நம்முள் நிதர்சனமான இடத்தை பிடிக்கிறது.

சிறார்களுக்கு ஏற்ற நிறைய விஷயங்களை கூறும் அதேநேரம் யாருக்கும் சலிப்பினை அளிக்காமல், கரிசல் மொழியில் வேகமாக கதையொன்றையும் கூறுகிறார். பிஞ்சுகள் பிஞ்சுகளுக்கு மட்டுமல்ல நம்முடைய பிள்ளைப்பிராயத்தில் இழந்தவற்றையும் அடைந்த வேறு சில விஷயங்களையும் நினைவோடையாய் நகர்த்தி செல்ல உதவும் அற்புதமான குறுநாவலாகும்.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக