அபத்தங்களை பின்தொடரும் நிழல்கள்சமீபமாகத்தான் பூமணியின் வெக்கை(http://www.kimupakkangal.com/2015/05/blog-post_9.html) நாவலை வாசித்து பழிவாங்குதல் சார்ந்த இலக்கிய படைப்பு கொடுக்கக்கூடிய அனுபவத்தை எழுதியிருந்தேன். ஆனாலும் அதில் என்னால் முழுமையை உணர முடியவில்லை எனவும் கூறியிருந்தேன். பழி வாங்குதல் என வரும் போது வாழ்வு சார்ந்த நோக்கமாக அந்த குரோதம் மனதுள் குடிகொள்ள ஆரம்பிக்கிறது. அது அறமா அறப்பிழையா அபத்தமா என்னும் உலகியல் விஷயங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில்லை. மேலும் அது சாதாரணமான உணர்வு என கடந்து செல்லக்கூடிய விஷயமுமன்று. மனிதத்தின் எதிர்த்திசையில் பயணிக்கிறது பழிவாங்குதல் என்னும் குணம்.

பூமணியின் நாவலில் கூட ஒரு இடம் என்னை வெகுவாக கவர்ந்தது. அப்பகுதியில் பழி வாங்குதல் அறத்தை நிலைநிறுத்தும் விஷயமாக கூறியிருப்பார். கூறியிருப்பார் என்பதைவிட சொல்லாடல்களின் இடையே நமக்கு தெரியவரும். அடிப்படைவாதங்களின் பட்சத்தில் குற்றம் செய்தவர்களுக்கு அங்கேயே தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்னும் கூற்று ஸ்திரமாக நிலைகொண்டிருக்கிறது. இந்த வாதத்தின் படி பார்க்கையில் பழிவாங்குதல் நீதியின் பக்கம் சார்ந்து நிற்கிறது. ஊருக்கே தவறு செய்பவன் எனக்கு எதிரியாக இருக்கிறான். அவனை நான் சுய காரணத்தால் பழிவாங்குகிறேன். அது பலருக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்குமெனில் நான் செய்ததில் பிழையேது என்னும் தர்க்க ரீதியான கேள்வியை அப்படைப்பு முன்வைத்தது. இந்தப்பகுதி வரும் போது இதையே நாவல் முழுக்க இழுத்து செல்வார் என வெகுவாக எதிர்பார்த்தேன்.

மேலே கூறியது போல தனிப்பட்ட குரோதம் மனிதத்தின் அறமாக உருவெடுக்கிறது. இதை தனிப்பட்ட குரோத அளவிலேயே கொண்டால் ஒரு மனிதனின் வாழ்க்கை இலக்கற்று செல்கிறது என்னும் முடிவிற்கு நாம் வந்துவிடுகிறோம். காரணம் பழிவாங்குதலைக் கடந்த வாழ்க்கைக்கென இலக்கு அவன்வசம் இல்லை. நிராதரவாக நின்றுவிடுகிறான். எல்லோரினுள்ளும் பழிவாங்குவதற்கான இடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. சிறுவயது முதல் யாரையேனும் சொல்லிலாகவேணும் பழிவாங்கியே பழக்கப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் மனிதத்தின் எதிர்த்திசையில் பயணிக்கும் அளவிலான பழிவாங்குதலில் எல்லோரும் வெற்றி காண்பதில்லை. முனைப்புடன் நகர்ந்து சென்று அதன் சாரத்தில் வாழ்ந்து வாழ்ந்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லாமல் அபத்தமாக பலரின் வாழ்க்கை காற்றில் கரைந்துவிடுகிறது. ஆண்டுக்கணக்கில் மண்ணில் வாழ்ந்துவிட்டு சுவடுகளே இல்லாமல் மனிதன் காணாமல் போகிறான் எனில் அவனின் குரோதம் எந்த அளவிற்கு இருக்கக்கூடும் என யோசித்தால் சித்தமே கலங்குகிறது. அப்படியொருவனின் குரோதத்துடன் கடந்து செல்லப்பட்ட வாழ்க்கையை அழகியல் நிரம்பிய நாவலாக்கியிருக்கிறார் தேவிபாரதி. அது அவர் இயற்றிய “நிழலின் தனிமை”.


மனதில் குடிகொண்டிருக்கும் அபத்த உணர்வுகளுக்கு எதிராக இருப்பது அன்பு மட்டுமே. இது கருணை காதல் காமம் என பல உருவங்களில் மனிதனை அடிமையாக்கக்கூடியது. மேலும் அபத்த உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்வனவும் இந்த அன்பாக அமைந்துவிடுகிறது. குரோதமே வாழ்க்கையாக அமையும் ஒருவனுக்கு அன்பின் வாசனையை பன்முக வடிவங்களில் உணர முடியுமெனில் குரோதத்தின் நிலை என்னவாக முடியும் ? எங்கு சென்று பழிவாங்கல் நிறைவுறும் என்பதை மிக அழகாக முன்வைக்கிறார். அன்பும் அதன் எதிர்தரப்பிலுள்ள குரோதமும் நாவலின் ஒவ்வொரு பக்கங்களிலும் மோதுகின்றன.

முப்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை தன்னகத்தே கொண்டு திரிகிறான் நாயகன். அவை முழுதுமாக அக்கசப்பின் காரணமானவனை மிக அருகிலேயே கண்டவுடன் கிளர்ந்தெழ ஆரம்பிக்கிறது. நாயகன் மற்றும் சகோதரி சாரதாவின் வாழ்க்கையை இருண்மைக்கு தள்ளியவன் கருணாகரன். நகர வாழ்க்கையை புறந்தள்ளிவிட்டு பள்ளி ஒன்றிற்க்கு எழுத்தராக வருகிறான் நாயகன். அவனைவிட மேலான பதவியில் அங்கேயே இருக்கிறான் கருணாகரன். அவனின் இருத்தல் நாயகனின் அருகாமையில் இருப்பதை சாரதா அறிகிறாள். எப்படியும் கருணாகரனை நாயகன் கொலை செய்துவிடுவான் என பெரிதாக நம்புகிறாள். அந்த நம்பிக்கை என்ன ஆகிறது என்பது தான் இந்த நீள்கதை.

கருணாகரனின் மீதிருக்கும் வன்மத்தை அதுவரையிலான வாழ்க்கையின் முழுமைக்கும் சுமந்து கொண்டே திரிந்திருக்கிறான். அது நிறைவேறக்கூடிய எல்லா சத்தியக்கூறுகளும் அவன் முன்னே விரிந்து கிடக்கின்றன. அப்போது அவனுக்கு பேரிடராய் அமைவது அன்பாக இருக்கிறது. அந்த அன்பை கடக்கக்கூடிய திராணி அவன் வசம் இருந்தால் நிச்சயம் தன் இலக்கான கருணாகரனை கொலை செய்துவிடமுடியும் என்னும் விஷயத்தை தவிப்பாய் தன் மொழி மூலம் தேவிபாரதி மாற்றுகிறார்.

இந்த தவிப்பு பல விதங்களில் நாவலில் உருவெடுக்கிறது. கருணை காதல் காமம் என வெவ்வேறு ரூபங்களை எடுத்த போதிலும் நாயகன் தப்பித்துப் போதலையே தலையாய கடமையாக கருதுகிறான். சிக்கல்களிலிருந்து தப்பிக்க மட்டுமே முயல்பவனால் எப்படி பழி தீர்க்க முடியும் ? தன்னுள்ளே அடிப்படையாக இருக்கும் மனிதத்தை எதிர்த்து எப்படி இலக்கை அடைய இயலும் ? அன்பு அடிப்படையானது. அன்பிற்கு எல்லோருமே கட்டுண்டு கிடப்பர். அன்பை வழங்கும் இடத்திலும் பெறும் இடத்திலும் வெடுக்கென வன்மத்தை பொழிந்து தள்ள இயலாது. அப்படியொரு நிலை ஏற்படின் அந்த துவந்துவம் எப்பக்கம் சார்ந்ததாய் இருக்கும் அல்லது இருக்கக்கூடும் போன்ற கேள்விகளுக்கு நாவல் விடையளிக்கிறது.

மேலும் நாயகன் ஒவ்வொரு இடங்களினூடாக செல்லும் பயணங்களின் வழியே தன் முழுக்கதையையும் கூறுகிறான். ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு அனுபவங்கள் அவனிடம் சேகரமாகி இருக்கின்றன. எல்லா அனுபவங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டு குரோதமே நிலைபெற்று நிற்கிறது. அப்படி இழுத்து செல்லப்படும் வாழ்க்கையை நாவலின் கடைசி பக்கம் அபத்தமாக்கிவிடுகிறது. நாயகன் காவியத்தனமான வீழ்ச்சியொன்றை அனுபவிக்கிறான். வேகமாக கடக்கும் காலத்தை கணக்கிட மறந்த தன் மறதியை வெறுக்க இயலாமல் ஒன்றுமற்றவனாகிறான். அந்த இடத்தில் நாவலின் மையமும் சிதைவுறுகிறது. எதை மையமாக்கி நாவல் ஆரம்பித்ததோ அது அர்த்தமில்லாமல் சென்றுவிடுகிறது.

இதற்கு முக்கிய காரணமாக அமைவது தேவிபாரதியின் மொழியும் புனைவின் நுட்பமும். பல அடுக்குகளில் கதையை கூறிக் கொண்டு செல்கிறார். ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட கதைகள் மீதமாய் இருக்கின்றன. அவற்றை கோர்வையாக்கி மையத்தை எதிர்த்த மையமொன்றை உருவாக்குகிறார். குரோதம் நாயகனை மட்டும் மையப்படுத்தும் போது அதற்கு எதிரான அன்பு பலரை வைத்து மையமாகிறது. மேலும் கதையை நாயகனே நகர்த்தி செல்கிறான். கதையின் போக்கில் ஏதோ ஒரு கட்டத்தில் அவனுடைய குரல் எதிராளியின் பக்கம் சாய்கிறது. நாவலினூடே நம்மால் அறிய முடியாவிட்டாலும் கதை சொல்லும் போக்கில் அவனே அதை குறிப்பிடவும் செய்கிறான்.

இதை சொல்வதன் காரணம் நாவல் நகரும் போக்கினில் கதாபாத்திரங்கள் எல்லாமே மறைந்து அவை தூக்கிச் சென்ற உணர்வுகள் மட்டுமே நிலையாய் நிற்கிறது. அதே நேரம் எல்லா பாத்திரங்களுமே வீழ்ச்சியை சமபங்கில் அடைகின்றன. ஒவ்வொரு வீழ்ச்சியின் பின்னும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்களை வைத்துப் பார்க்கும் போது எல்லா பாத்திரங்களும் குணத்தினளவில் ஒருவரே என்னும் நிலைபாட்டிற்கு தேவிபாரதியின் மொழி நம்மை இழுத்து வருகிறது.

அன்பே உலகின் அடிநாதம். எத்தனை பெரிய பேரிடர்கள் வந்தாலும் வன்மங்களாலும் வாதையினாலும் உலகம் அல்லலுற்றாலும் ஒரு துளி அன்பு எல்லாவற்றையும் மாற்றவல்லது. அந்த அன்பின் வீரியத்தையே இந்நாவல் வக்கிரமாய் அணுகுகிறது. ஒவ்வொரு பக்கத்தையும் இத்தனை வெகுவாக ரசித்து வாசித்து இன்புற்று பல நாட்கள் ஆகிவிட்டன. வாசிப்பு அனுபவத்தை என்னால் விவரிக்க கூட முடியவில்லை. மொத்தத்தில் நல்லதொரு நாவலை நல்கியதற்காகவேணும் தேவிபாரதிக்கு பிரத்யேக நன்றிகள்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக