அர்த்தம் தேடும் அசடுஅசடு என்னும் சொல்லை அதிகமாக பிராமண மக்களிடையே தான் கேட்டிருக்கிறேன். பொதுப்படையில் அசமஞ்சமாக சோம்பேறியாக எதற்கும் உதவாதவனை லூசு, சோம்பேறி, உதவாக்கரை என பல வார்த்தைகளிலும் வேறு சில இடங்களில் கெட்ட வார்த்தைகளிலும் தான் கூப்பிட்டு கேட்டிருக்கிறேன். அப்படி அந்த மனிதர்களை திட்டினாலும் தங்களுடைய சௌகரியத்திற்காக கிண்டலடித்தாலும் அவர்களுக்குள்ளே தாழ்மையுணர்ச்சி தேங்கியே இருக்கிறது. அதை புரிந்து கொள்வதற்கு அவனை விட நாம் மேலானவன் என நம்முள்ளே கொண்டிருக்கும் கர்வத்தை கழற்றி வைக்க வேண்டிவரும். அப்படி செய்யும் பட்சத்தில் அசடு என்னும் பதம் அனர்த்தமாவதற்கு நிறைய வாய்ப்புகள் ஏற்படுகிறது.

இதை சொல்லும் அதே நேரம் அசடாக இருக்கும் மனிதனின் பார்வையில் இந்த உலக விஷயங்களும் வாழ்க்கை சார்ந்த பார்வையும் எப்படி இருக்கிறது என்னும் கேள்வி நம்மை ஆச்சர்யத்தின் பக்கமே கொண்டு செல்கிறது. எல்லோரும் அவனின், ஒரு அசடின் அர்த்தமற்ற செயல்களை கண்டு ஒன்று திட்டுகிறோம் அல்லது கிண்டலடிக்கிறோம். ஆனால் அந்த அசடிடமிருந்து எந்த எதிர்வினையும் வருவதில்லை. இதற்கான காரணமாக இருப்பது ஆரம்பத்திலிருந்தே திட்டுகளுக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் மனது அதை எதிர்க்கும் திராணியை அவனுக்கு அளிப்பதில்லை.

எல்லோரும் மட்டம் தட்டும் தருணத்தில் உண்மையிலேயே தன் நிலை இவர்கள் சொல்வது போல்தானோ என்னும் முடிவை அவனுக்கு நிரந்தரமாகிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு அசடின் பார்வையை இலக்கியமாக்கியிருக்கிறார் காசியபன். இந்நாவல் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறந்த நூறு நாவல்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்ததை கண்டே தேடத் தொடங்கினேன். பல இடங்களில் பார்த்தும் என்னால் கண்டுகொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் விருட்சம் வெளியீடாக வந்திருப்பதை அறிந்து வாங்கினேன். அந்த நூல் தான் காசியபன் எழுதிய “அசடு”.


கணேசன் தான் நாவலில் வரும் அசடு. அவனை நம்பி எந்த வேலையையும் யாரும் கொடுப்பதில்லை. படிப்பும் ஏறவில்லை. எந்த முன்முடிவுகளும் இல்லாமல் யாத்ரீகனாக இருக்கிறான். அவனுக்கென நோக்கங்கள் இல்லை. செல்லும் இடங்களில் எல்லாம் சின்ன சின்ன வேலைகள் செய்கிறான். அதையும் சரிவர செய்வதில்லை. அவனை வளர்ப்பது எல்லாம் பாட்டி தான். அவள் இறந்த பின் அப்பாவுடனும் சித்தியுடனும் வாழ ஆரம்பிக்கிறான். சமூகக் கூற்றுகளுடன் இணைந்து வாழ்வை அர்த்தப்படுத்த முயலுகிறான். அங்கிருந்து அவனது வாழ்க்கை முழு அசடு என்னும் நிலைக்கு மாறுகிறது.

அடிப்படை விஷயங்களில் பொதிந்திருக்கும் அர்த்தங்களை தேடுகிறான். அடிப்படை விஷயங்களாக அவனுக்கு அமைவது மணவாழ்க்கை, கண்முன்னே அவன் காணும் மரணங்கள் ஆகியவை தாம். மரணம் காணாமல் போதல் என்னும் நிலையிலேயே அவனுக்கு இருந்துவிடுகிறது. அவனுக்கென இருக்கும் நண்பன் பெரியப்பாவின் மகன். இந்த பாத்திரத்தை சொல்வதன் மூலம் மட்டுமே நாவல் சார்ந்த பார்வை முழுமையடையும் என நினைக்கிறேன்.

அசேதனங்களைப் பார்த்து மெய்மறந்து நிற்கும் குணமாக இருக்கும் கணேசன் முதல் மரணம் சார்ந்து குழம்பிப் போகும் வரையிலான கணேசனை அறிந்தவன் அவன் தான். அந்த பாத்திரத்தை வைத்தே நாவலை காசியபன் தொடங்குகிறார். பெரியப்பா மகன் படித்தவர்க்கம். இலக்கியத்தை அது காட்டும் தரிசனங்களை அறிந்தவன். அவனுடைய மனது கணேசனின் குணங்களை சில ஸ்திர குணங்களுடன் மோதவிட்டு புரிதல் கொள்ளத் துவங்குகிறது. அல்லது கணேசன் சார்ந்து அவன் கொள்ளும் தீர்மானங்களே நமக்கான பாத்திரமாக படைக்கப்படுகிறது. அதுவே அசடாக இருக்கும் கணேசன் உண்மையில் அசடு அல்ல என்று உணர வைக்கிறது. இது பச்சாதாபம் நிறைந்த சொல்லாடலாகவும் உருமாற்றம் கொள்கிறது.

இந்நாவல் ஆழமன விஷயங்களை மிக எளிதாக பேசினாலும் என்னை ஈர்க்கவில்லை. காசியபனின் எழுத்துமுறை பிடித்திருக்கிறது. எங்குமே தொய்வினை தராமல் சரளமாக கணேசனின் கதையை கூறிச் செல்கிறார். சில இடங்களில் வியப்பினை கூட அளிக்கிறார். 1978இல் வெளிவந்த நாவலில் கூட படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் இடையே ஒவ்வாத்தன்மை நிலைகொண்டிருந்ததை வாசிக்கும் போது அதிர்ச்சியே மிஞ்சியது.

நகுலன் மற்றும் வெங்கட் சாமிநாதனின் முன்னுரைகளை வாசிக்கும் போது காசியபனுக்கு இலக்கியத்தின் மேல் உள்ள ஆர்வமும் படைப்பாக்கத்தின் மீதிருக்கும் முனைப்பையும் அறிந்து வியப்பு மேலிடுகிறது. மேலும் பெரியப்பா மகனாக வரும் பாத்திரமே காசியபனின் வாசிப்பாளுமையை லேசாக உணர்த்தி செல்கிறது.

எல்லோரும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் யாருக்கேனும் அசடுகளாக இருக்கிறோம். அது கடந்து செல்லக்கூடிய விஷயம். அங்கே தோன்றும் அடிப்படை விஷயம் சார்ந்த சந்தேகங்கள் காலத்தின் போக்கில் அனுபவங்கள் மூலம் நிச்சயம் உணர்ந்து கொள்ள முடியும். அதை எல்லோரிடமும் நிரூபணம் செய்யத் தேவையில்லை. அசடு பிறரின் புரிதலில் உள்ளதேயன்றி வாழ்வியலின் அங்கமன்று. அதை உணர்த்தும் நாவல் தான் காசிபயனின் அசடு.

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

ராம்ஜி_யாஹூ said...

அருமையான பார்வை & வாசிப்பு . உங்கள் விவரனையைப் படிக்கையில் (+ கதைக் களத்தை அறிகையில்)
நாவலை வாங்கி வாசிக்கும் ஆர்வம் வந்து விட்டடது

திண்டுக்கல் தனபாலன் said...

// அசடு பிறரின் புரிதலில் உள்ளதேயன்றி வாழ்வியலின் அங்கமன்று... //

அதே... அதே...

Post a comment

கருத்திடுக