ஆதிநாயகனின் கதை

ஜெயமோகனின் நாவல் கோட்பாடு நூலை சமீபத்தில் தான் வாசித்தேன். அது முதல் காவியம் மற்றும் நாவல் கொள்ளும் வேறுபாட்டை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. காவியமும் இதிகாசமும் அறத்தை வலியுறுத்துகின்றன. அதற்கு தோதாக சின்ன சின்ன கதைகள் போதுமானதாக இருக்கிறது. அதே நேரம் நாவல் எனில் அறம் சார்ந்த தர்க்கம் நிகழ வேண்டும். முடிவினை சொல்ல கூடாது. தர்க்கத்தினூடே வாசகனாக மையக்கருவை உணர வேண்டும். ஆக கதை உணர்வு ரீதியான விஷயமாக நாவலில் உருக்கொள்கிறது. ஒருவகையில் கூற வேண்டுமெனில் நாவல் காவியத்தின் சின்ன நீட்சி அல்லது மருவிய வடிவம் எனலாம்.

காவியங்கள் உலகளாவிய அம்சத்தில் நோக்கில் பொதுத்தன்மை நிலவவே செய்கிறது. வேதாகமத்தில் காணக்கிடைக்கும் சில கதைகள் மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் கிடைக்கின்றது. அதே போல் இங்கிருக்கும் சில கதைகள் ஒலிம்பியன்ஸ் மற்றும் டைட்டன்ஸின் கதைகளில் இருக்கின்றன. இந்த ஒற்றுமைகள் எதனால் தோன்றியிருக்கக்கூடும் ? நாகரீகத்தின் வளர்ச்சி சார்ந்து ஒருமித்த கருத்துகள் எழுப்பப்பட்ட கதையாக இருக்கக்கூடும் என்பதே ஒருமனதான முடிவாகிறது.

இந்த எல்லா காவியங்களும் சில காலவரையினால் பிரிவுகளை கொண்டிருக்கின்றன. அவை பேரழிவுகளாக இருக்கிறது. நோவாவின் காலத்தில் வந்த வெள்ளமும் மோஸஸின் காலவெள்ளமும் ஒரே காரணத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அது அடுத்ததான மானுட உலகை நிர்மாணம் செய்ய உதவிற்று. இதே கதைகள் தமிழிலும் நளனின் கதையில் இருக்கிறது. இதனைக் கடந்தவுடன் சில விசேஷ மனிதர்களைக் கொண்டு காலத்தை பிரித்திருக்கிறார்கள். நம் இந்தியாவில் அவை யுகங்களாக சொல்லப்படுகின்றன. த்ரேதா, த்வாபர, கலி என சில கணிக்கப்பட்ட ஆண்டுகள் உதவுகின்றன.

இப்படி எல்லா மத நூல்களாக கருதப்படும் காவியங்களும் சில கணக்கீடுகளை கொண்டிருக்கின்றன. அவற்றினை மையமாக வைத்து பார்த்து எது ஆதிகாவியமாக வருமென சின்ன விளையாட்டினை மேற்கொண்டால் இவையெல்லாவற்றையும் கடந்ததொரு நூல் இருக்கிறது. நூல் என்று கூட சொல்ல முடியாது. கல்வெட்டுகள் என்பது தான் சரியான வார்த்தையாக இருக்கும்.

1839இல் லேயார்ட் என்ற அகழ்வாராய்ச்சியாளர் யதேச்சையாக மெஸ்பட்டோமியாவிற்கு செல்லும் போது அங்கே குனிஃபார்ம் என்று சொல்லப்படுகிற திரிகோண வடிவிலான எழுத்துகளால் நிறைந்திருக்கும் கல்வெட்டுகளை காண்கிறார். சிதறிக் கிடக்கும் அந்த கல்வெட்டுகளை ஒன்றிணைக்கும் போது பெருங்கதையாடலை அவை கூறுவது போன்று தெரிந்திருக்கிறது. அதன் மொழி தன்வசம் கொண்டிருந்த கடினத்தினால் உலகில் இருந்த பல்வேறு அகழ்வாராய்ச்சியாளர்களும் மொழியியல் அறிஞர்களும் இணைந்து அதனை ஆங்கிலத்தில் மாற்றியிருக்கிறார்கள். அப்போது தான் அந்த கல்வெட்டு கில்காமெஷ் என சொல்லப்படும் வீரனின் கதையை கூறுகிறது என்பதை அறிகிறார்கள்.

இந்த கில்காமெஷ் வாழ்ந்த காலம் கிமு2500இல். அவனின் கதையினை முழுதுமாக அந்த கல்வெட்டுகள் கூறுகின்றன. இதை எழுதியவர்கள் அல்லது செப்பனிட்டவர்கள் யார் என்னும் விஷயங்கள் அந்த கல்வெட்டுகளில் இல்லை. இதை பதிந்ததற்கு முக்கிய காரணம் என்னவோ அழிவற்ற தன்மை நோக்கிய தனிமனிதனின் பயணமாகத்தான் இருந்திருக்கிறது. இதை தமிழில் மொழிபெயர்த்திருக்கும் க.நா.சுப்ரமணியனின் திறன் தான் என்னை மேலும் வியப்பில் ஆழ்த்துகிறது. எங்குமே தொய்வு தராத மிக அழகான மொழிபெயர்ப்பு க.நா.சுவுடையது. இந்நூலை வாசித்து முடித்தவுடன் இதை அவர் அறிந்த விதம், மொழிபெயர்க்க தூண்டிய தன்மை, வெளியான பின்னான அவரின் மனநிலையை அறிந்து கொள்ள மனம்  என்னவோ துடிக்கிறது.

இறப்பு சார்ந்து எல்லோரினுள்ளும் ஈர்ப்பும் அச்சமும் இருந்தே வருகிறது. தெளிந்த நீரோடையான விஷயம் பற்றி நம் மனம் எதையுமே சிந்திப்பதில்லை. அறியப்படாத முடிச்சாக மட்டும் இந்த மரணம் இருப்பதால் அதனுள்ளே என்ன இருக்கக்கூடும் எனும் இனம்புரியாத பயம் அச்சுறுத்துகிறது. சிலர் ஆவல் கொள்கிறார்கள். சிலர் மரணத்தைக் கண்டே அஞ்சுகிறார்கள். எத்தனை பேர் மரணத்தைப் பற்றி பேசினாலும் காது கொடுத்து கேட்டுக் கொண்டே இந்த மனித இனம் இருக்கிறது. அப்படிப்பட்ட மரணத்தைத் தான் இந்த நூலும் பேசுகிறது.

புராணம் என்றாலே அதில் நித்தியத்துவம் சார்ந்த புதிரொன்று தொடர்ந்து வருகிறது. நம் இதிகாசங்களிலே கூட இரணியன் கதை, நரகாசுரன் கதை என நிறைய கதைகள் நிலவுகின்றன. மனிதன் இந்த மரணத்தைக் கண்டு அதன் புதிர்களை அறிய விரும்பாமல் தப்பிக்க நினைக்கிறான். அந்த தப்பித்தலின் ஒரு அங்கம் தான் கில்காமேஷ். அதே நேரம் சிலரின் வாழ்க்கையில் பிறரின் மரணம் ஞானத்தை அளிக்கிறது. புத்தர் இயேசு போன்று. கில்காமெஷிற்கு இரண்டையும் அளித்திருக்கிறது என்பது வியப்பான விஷயம்.

கில்காமெஷ் பூதங்களின் அருளினால் சக்திகளைப் பெற்று உலகையே ஆளும் திறன் கொண்ட மன்னனாக இருக்கிறான். ஆளவும் செய்கிறான். அவன் இருக்கும் ஊர் ஊருகி. அங்கே இருக்கும் பெண்களின் கன்னித்தன்மையை அவன் தான் முதலில் அனுபவிக்க வேண்டும் என்றெண்ணுகிறான். அதனை எதிர்க்க முனைபவர்கள் கடவுளிடம் பிரார்திக்கிறார்கள். அவர்கள் ஒன்றிணைந்து அவனுக்கு இணையான காட்டுவாசியை உலகிற்கு அனுப்புகிறார்கள். அவன் தான் எங்கிடு. அழிக்கப்பிறந்தவன் பல உதவிகள் வழியாக ஊருகி வந்து கில்காமெஷுடன் இணைந்து நண்பனாகிறான். இருவரும் இணைந்து சில ராட்சர்களைக் கொன்று வீரதீர சாகஸம் புரிகிறார்கள். எங்கிடு மரணிக்கும் போது தான் கில்காமெஷிற்கு பயம் ஆரம்பிக்கிறது. சாகஸம் புரிந்த வீரனின் வாழ்க்கை சட்டென முடிகிறது எனில் அதுநாள் வரை வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன ? இந்த கேள்விக்கான பதில் மரணதேவனிடம் உள்ளது என பயணம் மேற்கொள்கிறான். எங்கிடு எதனால் இறந்தான் ? மரணதேவனை சந்தித்தானா ? சாகாவரம் கிடைத்ததா ? பயம் தெளிந்ததா ? வாழ்விற்கும் சாவிற்குமான பிணைப்பை அறிந்தானா என்பதே மீதக்கதை.

கில்காமெஷிற்கு முன்கதையும் உள்ளது. அது பெருமளவில் நோவாவின் கதையையே எடுத்துரைக்கிறது. ஆனால் நோவாவின் பிற்காலத்திய வாழ்வு வேதாகமத்தில் அதிகமாக சித்தரிக்கப்படவில்லை. இங்கே கதை நீட்சியை கொள்ளும் போது மனதுள்ளிருக்கும் நோவாவின் கதை சிதிலமடைந்து கில்காமெஷிற்கென பிரத்யேக கதை உருவாகிறது. மேலும் நோவாவின் அகவியலை வேதாகமம் பேசவில்லை. நோவா திரைப்படத்தில் புனைவாக அதைக் காணலாம். இங்கே அது மிக அழகாக செய்யப்பட்டிருக்கிறது.

நூலில் காமமும் நட்பும் பன்முக ரீதியில் பேசப்பட்டிருக்கிறது. கில்காமெஷிற்கும் எங்கிடுவிற்கும் இருக்கும் நட்பும் அதன் பிரிவும் வாசகர்களையும் பாதிக்கிறது. மேலும் அவன் சார்ந்து தனக்குள் எழுந்த பயம்நீங்க மேற்கொள்ளும் பயணத்தில் பல எதிர்விவாதங்களையும் எதிர்கொள்கிறான். கொண்டாடுவதற்காக இந்த உலகே இருக்கும் போது ஏன் மனிதன் க்ஷண நேர மரணத்தப் பற்றி அதிகமாக யோசிக்கிறான் ?

இந்நூலினூடே கேட்கப்படும் பல கேள்விகளும் சந்தேகங்களும் நமக்குள்ளும் தர்க்கங்களை நிகழ்த்துகின்றது. காவியங்களின் குணம் கதை கதாபாத்திரங்களுடன் முடிந்தும் பின் அதனூடாக சொல்லப்பட்ட விஷயம் பொதுமையாகிறது. இங்கும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. இப்போதைக்கும் ஒத்துப் போவது போன்று அழகாக தொகுக்கவும் பட்டிருக்கிறது. அமரத்துவத்தை எதிர்நோக்காத மானுடத்தை யாரும் படைக்கவில்லை. மேலும் மனிதன் சாகலாம். ஆனால் மனித இனம் சாகாது என்பதையே எல்லா காவியங்களும் கூறுகின்றன. முன்னுரையில் கூட உலகம் அழிந்தது என கூற ஒருவன் இருந்தாலும் உலகம் தொடர்கதை தான் என்கிறார் க.நா.சு.

வெறும் மரணம் ஞானம் எனப் பேசாமல் பெண்களின் இருவேறு நிலைகள், காடுகளை வேட்டையாடும் மனிதனின் குணம், குரூரமானவன் சாந்தமாவதற்கு காரணமாக இருக்கும் அன்பு என எல்லாமுமாக தர்க்கப்பொருளாக மாறுகிறது.

சமகாலத்திற்கும் ஏற்றவாறு தர்க்கங்களை இந்நூல் நிகழ்த்துகிறது. இதனை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்நூலை மொழிபெயர்ப்பதின் அவசியம் என்ன என்றொரு கேள்வி எழுகிறது. அதற்கு முன்னுரையில் க.நா.சுவின் பதில் சமகாலத்திற்கும் பொருத்தமாய் குறிப்பாக இலக்கிய செயல்பாட்டிற்கு பொருத்தமாய் இருக்கிறது.
"இந்த நூலைத் தமிழில் இங்கு மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு காரணம்
1. பழமை என்பதன் அர்த்தம் இதன்மூலம் ஓரளவு தெளிவு பெறலாம்
2. ஐரோப்பிய இலக்கியம் கிரேக்க, லத்தின் பாதிப்பினால் ஏற்பட்டது; அந்த பாதிப்பை விட்டு ஆசிய, இந்திய இலக்கியங்கள் நகர வேண்டியது அவசியம் என்று எனக்கு தோன்றுகிறது."

இந்த கூற்று என் கேள்விக்கான பதிலை அளித்ததாக எனக்கு தோன்றவில்லை. சுருங்க சொல்ல வேண்டுமெனில் க.நா.சுவுடன் மிகவிரிவாக பேச ஆசைப்படுகிறேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக