ஜெயமோகன் ஒரு கோச்சர்


ஜெயமோகனின் நூலொன்றை வாசித்து அதன் போதத்தில் திகழ்ந்து கொண்டிருந்தேன். காலை முதல் பயணத்தில் இருப்பதால் கடும் களைப்பு. இந்நிலையில் நண்பரொருவர் அழைத்து ஜெயமோகன் "பெருவலி" கதைப் பற்றியும் அவருடைய மின்னிதழ் பேட்டியையும் வாசித்தீர்களா எனக் கேட்டார். இல்லை என்பதால் உடனே வாசித்தேன். பெருவலி வாசிப்பின் பெரும் வலியாகிவிட்டது. இதைக் கூறியதால் வெகு நாட்களுக்கு இவன் இலக்கியமே வாசிக்கவில்லை ஆதலால் இலக்கியம் புளித்து போயிருக்கும் என சிலர் எண்ணக்கூடும். எனக்கோ மாற்றுக்கருத்தே இல்லை. ஜெயமோகனின் புனைவுகளில் சில தருணங்களை உளமாற ரசிப்பவன் நான். இருந்தாலும் இந்தக்கதை முழுமைக்குமானதொரு திராபை. விவாதிக்க எப்போதும் தயாராய் இருக்கிறேன். அடுத்தது பேட்டி.

நான்காவது பேட்டியை மட்டுமே வாசித்தேன். குறிப்பிட்ட தூரத்திற்கு பின் ஜால்ராக்களின் கேள்விகள் இவை என ஒதுக்கிவிட்டேன். சின்ன உதாரணம் இன்றைய இளைய எழுத்தாளர்களின் எழுத்துகளைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்.

//இன்று வரும் நாவல்களை வாசித்ததுமே தூக்கிப்போடுகிறேன். ஆங்காங்கே சில விஷயங்கள் நன்றாக இருப்பதாகத் தோன்றும், அவ்வளவுதான். இப்போது எழுதுபவர்களில் கணிசமானவர்களுக்கு இங்கோ உலகமொழிகளிலோ எழுதப்பட்ட தீவிரமான இலக்கியம் பற்றிய வாசிப்போ அக்கறையோ இல்லை என்று தோன்றுகிறது. அவ்விலக்கிய மரபின் நீட்சியாக அவர்கள் தங்களை உருவகித்துக்கொள்வதில்லை. பரவலாக வாசிக்கப்படும் பல்ப் ஃபிக்ஷனின் நீட்சியாக தன்னை உருவகித்துக்கொண்டு எழுதுகிறார்கள்.

ஆகவே எந்த ஆழ்ந்த அவதானிப்பும் இல்லாத மேலோட்டமான பாலுணர்வு எழுத்துத்தன்மையே அதிகமாக காணக்கிடைக்கிறது. அது பரவலாகக் கொண்டு சேர்த்துவிடும் என நினைக்கிறார்கள். அவைகூட அனுபவமோ அவதானிப்போ அல்ல. வெறும் பகற்கனவுகள் . என்னைப்போல ஐம்பதைக் கடந்த ஒருவனால் அந்தப் பகற்கனவுலகை ஒரு சிரிப்புடன் மட்டுமே பார்க்கமுடிகிறது. இந்த வகை எழுத்துக்களை பார்க்கையில் சின்னப்பையன்கள் ரகசியமாக அமர்ந்து தன்புணர்ச்சி செய்வதை பார்ப்பது போல உணர்கிறேன். சரிதான் சின்னப்பையன்கள், செய்துவிட்டுபோகட்டும் என்று சிரிப்புடன் கடந்து செல்லத்தான் தோன்றுகிறது
-ஜெயமோகன்//

இளைய தலைமுறையின் எழுத்தாளர்களை நானறிவேன். சிலர் வீம்பிற்கென வாசிக்கும் நூல்கள் சாரந்து எழுத்து வடிவில் பிரஸ்தாபிக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நான் இதை வாசித்தேன் இதை உணர்ந்தேன் எனக் கூற ஆரம்பித்தால் மூத்த எழுத்தாளர்கள் எனும் பிம்பத்தில் ஒளிந்து கொண்டிருப்பவர்கள் ஸ்தூலமாக சொல்லி வைத்திருக்கும் கருத்துருக்கள் சந்தேகமின்றி சிதலமடைந்துவிடும். இளைய தலைமுறை என வயதால் கணக்கிடும் போக்கு இருக்கும் வரை அவர்களால் நிச்சயம் நல்லதொரு படைப்பை நல்க முடியாது என்பது என் ஆணித்தரமான கருத்து. எழுத்து சுயசாதனைக்கான விஷயமல்ல என்பதை எல்லோருமே அறிவர். ஆனாலும் எழுத வரும் மனம் தன் எழுத்தை எல்லோரும் வாசிக்க வேண்டும் என்ற முனைப்புடனேயே வருகிறது. இதில் பிழை என்ன உள்ளது என கேட்கிறேன் ? தன் குழந்தையை ஊரார் கொஞ்ச வேண்டும் என்பதில் அர்த்தப்பிழை இல்லையே ? இங்கோ வயதால் நிராகரிக்கப்படுகிறது. எழுத ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன் எனக் கூறினாலே என்ன என்ன வாசித்திருக்கிறாய் என்னும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இலக்கியம் நிறுவனமாக்கப்பட்டால் மூத்த எழுத்தாளர்களும் விலை போகக்கூடிய பொருட்களாகத்தான் ஆவார்கள். அவர்களுக்கு அது வருத்தமாக இருக்கலாம். இளையதலைமுறைக்கு அப்படி இருக்க துளிக்கூட வாய்ப்பில்லை. காரணம் இலக்கியத்தினுள் நுழையும் போதே நிறுவனத்தின் சாயலை சூழல் அவனுக்கு கொடுத்துவிடுகிறது.

மேலும் சமகால இளைய தலைமுறையின் படைப்புகள் சிறுவர்களின் தன்புணர்ச்சி போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். நானும் அவர் கூறும் இளைய தலைமுறையின் ஒருவன் என்பதால் மட்டுமே இப்பதிவை எழுதவில்லை. என் எழுத்துகள் நாற்றத்துடன் கூடிய சுயமைதுனமாக இருந்துவிட்டு போகட்டும். ஆனால் என்னுடன் எழுதுபவர்கள் அவர்களின் சமகால அனுபவங்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய பிரச்சினைகளை ஆராய்கிறார்கள். மேலும் தன்புணர்ச்சி கூட அதுநாள்வரை அறிந்திராத தரிசனத்தையும் உச்சத்தையும் செய்பவனுக்கு அளிக்கக்கூடியது. முதன்முதலாய் செய்வதாக இருப்பின் காலத்திற்கும் மறக்காது என்பதை எல்லோரும் அறிந்திருப்பார்கள். ஆக அவர் கோட்பாட்டளவில் குறிப்பிடும் உலகளாவிய தன்மைக்கு அது அவனுக்கு நகர்ந்துவிடுகிறது. அதை அவர்கள் பதிவு செய்வார்களானால் நானும் அத்தலைமுறையினரின் பங்கு என்பதில் பெருமிதமே கொள்வேன்.

மேலும் சமகால படைப்பு ஒன்று புறக்கணிக்கக்கூடிய எல்லா சாத்தியப்பாடுகளையும் கொண்டிருப்பின் அவர்களின் குறைகளை எடுத்துரைக்க ஜெயமோகனைப் போன்ற ஸ்காலர்கள்(அறிஞர்கள்) நிச்சயம் வேண்டும். இங்கோ அவரவர்களின் இடங்களை தக்கவைத்துக் கொள்ள நிகழ்த்தப்படும் போராட்டமாகவே இலக்கியம் உருமாறியிருக்கிறது. இந்நிலையில் குரு அல்லது மூத்தோர் இளையோர் போன்ற பாகுபாடுகளை கலைரீதியாக யாரிடமும் எதிர்பார்க்க முடியாது. கூட்டம் சேர்த்து சுயசாதனையை கோஷம் போடச் செய்யும் பெருந்தலைகள் தலையெடுத்து நிற்கும் வரை "எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ?" எனும் வாசகம் பழைமையிலிருந்து சமகாலத்திற்கு உயிர்ப்புடன் கடத்தப்பட்டுக் கொண்டேதானிருக்கும்.

நாம் நம்மை சிறுமையாக பார்க்க தவறிவிட்டோம் என்பது மட்டுமே உண்மை. அப்படி பார்க்கத் தெரிந்தவர்கள் சிறுபான்மையினராக மாறி(மறைந்து)விட்டார்கள். இந்த சிறுமை தாழ்வு மனப்பான்மை சம்மந்தமான கூற்று அன்று. ஞானம் சம்மந்தமானது. இதை புரிவதற்கேனும் நல்லிலக்கியங்கள் வாசிக்கப்பட வேண்டும்.

எழுதமாட்டேன் என கூறிவிட்டதால் இங்கேயே சின்னதாக நூலைப் பற்றியும் எழுதமாட்டேன் என முடிவெடுத்ததையும் சொல்லிவிடுகிறேன். நான் வாசித்த நூல் ஜெயமோகனின் நாவல் கோட்பாடு. என்னை வாசிப்பதே பத்து பேர் தான். அவர்கள் நான் எழுதியதனாலேயே வாங்குவார்கள் என்பது நிச்சயமின்மை பாற்பட்டது. சொல்லவந்த விஷயம் அந்நூலில் அவர் சொல்வது கதை நிகழ்கிறது எனில் அதில் சொல்லப்படும் விஷயம் கதாபாத்திரங்களை தாண்டி உலகளாவிய அதன் மையக்கருவை நோக்கி நகர்ந்து தர்க்கத்தை நிகழ்த்த வேண்டும் என்பது. பெருவலி சிறுகதையில் நிகழ்ந்திருப்பதோ இதன் எதிர்ப்பதம். தனிமனிதன் தனக்குள் ஆழ்ந்து போகும் போது தரிசனத்தை உணர்கிறான் எனில் அங்கே அவன் சிறுமையாகிறான். தனக்குள்ளே மிகப்பெரிய ஆகிருதி இருப்பதை உணர்கிறான். நான் என்னும் அகந்தை அழிகிறது. இங்கோ கட்டற்று பெருகி ஓடுகிறது. இது தான் தரிசனம் எனில் அதை வாசகனாய் நிராகரிப்பதில் பெருமை கொள்கிறேன். அவர் கூறும் எல்லா கோட்பாடுகளும் நாவல் என்னும் இலக்கிய நுட்பத்தின் பன்முக அழகியலை மிகத் தெளிவாக ஆராய்கிறது. நாவல் எழுதுவது எப்படி என்னும் கேள்விக்கு நிச்சயம் பதில் தராது. ஆனால் நாவல் எனில் என்ன எனும் கேள்விக்கு முழுமையான பதிலை தருகிறது. முதல் பத்தியில் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன் என சொன்னேன் அல்லவா அவரிடமே ஒரு கேள்வி கேட்டேன். கேள்வியை மறைத்து அவர் சொன்ன பதிலை மட்டும் தருகிறேன்.

ஜெயமோகன் ப்ளேயர் இல்லை. ஆனா நல்ல கோச்சர்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக