பலவீனத்தின் மறுபெயர் கிருஷ்ணன் நம்பி

தமிழின் சீரிய இலக்கிய வாசகர்கள் இந்த தலைப்பை கண்டு வெகுண்டெழ வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இது நானாக கொடுக்கும் தலைப்பு அல்ல. மாறாக அவரே சுயபச்சாதாபத்துடன் கொடுத்திருப்பது. சுந்தர ராமசாமிக்கு அவர் அனுப்பிய கடிதங்களுள் இந்த வரியை கண்டறிந்தேன். எவ்வளவு பெரிய இடர்களுக்கிடையிலும் அன்றாடம் தன் மேல் விழும் குடும்ப விழுமியங்களிலிருந்தும் தப்பித்து இலக்கிய பாதையில் செல்ல முனைந்தவர் தன்னைப் பற்றியே சொன்ன வார்த்தை இது என்றால் நம்பமுடிகிறதா ?

ஒரு மொழியின் க்ளாஸிக் எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்க நேரிடும் போது நம் வாழ்க்கையையே இவர் எழுதியிருக்கிறாரே என நினைக்கிறோம். காரணம் செவ்வியல் தன்மை கொண்ட படைப்புகள் பல அகங்களையே ஆராய்கின்றன. புறங்களை ஓவியங்களாக்கி கடந்து விடுகின்றன. இங்கே தான் எனக்கான பிரத்யேக சந்தேகம் எழ ஆரம்பிக்கின்றது. கடந்த காலத்தில் இருந்த எழுத்தாளன் என் வாழ்க்கையை கதையாக்கியிருக்கிறான் எனில் அவன் முற்போக்குவாதியாக எழுதியிருக்கிறானா அல்லது நான் காலத்தால் பின்னோக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேனா ? மேலும் இது எனக்கு மட்டுமான உணர்வல்ல. பல நூல்களை வாசிக்கும் போது நம்மையே வேறு சில கோணங்களில் வேறு சில உருவங்களில் காணும் போது நம்மிடத்தே எழும் உணர்வெழுச்சிகள் இவை.

இதை சமூகம் சார்ந்து பெரிய அளவிலும் அணுகலாம். ஒரு சமூகம் பல ஆண்டுகாலமாய் ஒரே போன்ற அகவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறதா ? எஸ்.ராமகிருஷ்ணன் இலக்கிய முகாமொன்றில் கூறினார். ஒரு காலகட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் தமிழகத்திலும் இந்தியாவிலும் கொடிகட்டி பறந்தது. ஆதலால் எழுத்தாளர்களின் படைப்புகளில் பெருவாரியான இடத்தை அவை எடுத்துக் கொண்டன என்று. இப்போதைய சூழ்நிலையில் இந்த கதைக்கருவை ஒப்பிட்டு பார்க்கும் போது வேலையில்லா திண்டாட்டம் என்னும் விஷயம் நிலவத்தான் செய்கிறது. அதன் படிநிலையோ சற்று உயர்ந்திருக்கிறது. அப்போது ஒரு வேலை இருந்தால் போதும் என்றிருந்தது. இப்போது வேண்டிய வேலை கிடைத்தால் போதும் என மாறியிருக்கிறது. இது தான் இலக்கியத்தின் காலநிலை மாற்றம்.

கரு சார்ந்து மட்டும் இலக்கியம் அமைந்துவிடப் போவதில்லை. அதை எடுத்து செல்லும் வடிவமும் முக்கியமாக போகிறது. வடிவங்கள் எல்லாவிதமான கதைகளுக்கும் தேவையா என இலக்கிய ரீதியான கேள்வியொன்று கிளம்புகிறது. வடிவம் கதைசொல்லல் முறையில் தன் திறனை காட்ட பேருதவியாய் இருக்கிறது. ஆழத்தை தொடும் கதைகளுக்கும் அல்லது நீண்ட கதைக்களனையும் உக்கிரம் கொண்டுள்ள கதைகளுக்கும் இவை தேவையில்லை. இருந்தாலும் சில எழுத்தாளர்கள் இதை கையாண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு கூற வேண்டுமெனில் இரண்டாம் உலகப் போரில் டிரஸ்டென் என்னும் இடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் காணாமல் போன பல விஷயங்களை இந்த உலகம் மறந்து இருந்திருக்கிறது. அங்கிருந்து தப்பித்த ஒருவன் கதைகளை கூறுவதாக வரும் நாவல் கர்ட் வனேகட்டின் ஸ்லாடர்ஹவுஸ் 5. இது ஏலியன்கள், நான் லீனியர் கதைசொல்லல், வரலாற்றை பகடி செய்தல் என கட்டுமானத்தில் பல படிமங்களை கொண்டிருக்கிறது. தமிழில் ஒரு உதாரணம் கூற வேண்டுமெனில் சோ.தர்மனின் கூகை. கரிசல் கதையிலேயே மாயப்புனைகதைகள், அத்தியாயமில்லா பகுதிகள் என ஆச்சர்யபடுத்துகின்றன.

கட்டமைப்பு பெருவாரியான வாசகர்களின் கவனத்தை ஈர்க்கப் போவதில்லை. ஒரே கட்டமைப்பில் பல கதைகளை கூறிக் கொண்டே செல்லலாம். ஆனால் வாசகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும் என்பதால் தான் நானாவித வழிகளில் எழுத்தாளர்கள் முயன்றிருக்கிறார்கள். இப்படி எழுத முனையும் போதும் எவ்வித கருவை எப்படி சொல்ல எடுக்கிறோம் என்பது முக்கியமாகிறது. கதை என்னும் ஒரு வஸ்து கரு மற்றும் கட்டமைப்பு என இரண்டு பெரும் விஷயங்களை சுமந்து செல்கிறது. கதைக்கொப்ப எது முதன்மையாக வேண்டும் என்பதை எழுத்தாளன் தான் தீர்மானம் செய்ய வேண்டும். இதை அறிந்து கொள்ள எழுத்தாளனாக நினைப்பவன் பல கதைகளை கடந்து வர வேண்டியிருக்கிறது.

கரு இல்லாத மனிதர்களே இல்லை. ஆனால் இந்த அல்கெமியை அறிந்தால் தான் செறிவான இலக்கியத்தை ஒருவரால் அளிக்க முடியும். சம்பவங்கள் வேறு, அதன் மூலம் கொள்ளும் அனுபவம் வேறு, அதை கலையாக்குவது வேறு. இந்த மூன்று நிலைகளையும் வாசிப்பனுபவம் மூலம் அடையும் கற்பிதமும் இணையும் போது சிறந்த கதையை உருவாக்க முடிகிறது. அப்படி உருவாக்கியவர்களில் முக்கியமானவராக கிருஷ்ணன் நம்பியை கருதுகிறேன். அவரது முழு ஆக்கங்களை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கடந்த சென்னை புத்தக திருவிழாவில் நூற்றி ஐம்பது ரூபாய்க்கு கிடைத்தது அடியேன் இலக்கியத்திற்கு செய்த புண்ணியம் என நினைக்கிறேன்.


கிருஷ்ணன் நம்பி குழந்தைப் பாடல்களைத் தான் முதலில் எழுதியிருக்கிறார். பின்னரே கவிதை, விமர்சனம், சிறுகதை என ஆரம்பித்து இருக்கிறார். அவருடைய முழு ஆசையே நாவலொன்று எழுத வேண்டும் என்பது தான். அதற்கான முத்தாய்ப்பும் செய்திருக்கிறார். சில பக்கங்களும் நகர்ந்திருக்கின்றன என்பதை சில கடிதங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. முதலில் கவிதைகளையும் குழந்தைப் பாடல்களையும் சின்னதாய் சொல்லி முடித்துவிடுகிறேன். இரண்டிலும் இலக்கிய நயங்களை அதிகமாக கையாண்டிருக்கிறார். எதுகை மோனை இயைபு அணி போன்ற இலக்கிய toolகளை செவ்வனே பயன்படுத்தியிருக்கிறார். மரபுவழிக் கவிதைகளையே அவர் அதிகமாக இயற்றியிருக்கிறார் என்பது கவிதைகளை கடந்து செல்லும் வாசகனால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.

சிறுகதைகளுக்கு வருவோமானால் பெருந்தொண்டாற்றியிருக்கிறார் என்றே கூற வேண்டும். இருபத்தைந்து சிறுகதைகளையே இயற்றியிருக்கிறார். ஆனால் அதை இயற்ற பெரும் பயணத்தை அனுபவத்தாலும் வாசித்தலினாலும் செய்திருக்கிறார் என்பதும் புலனாகிறது. இருபத்தி ஐந்தும் தனித்துவம் வாய்ந்தவை. சில கதைகள் கருவால் ஒன்று போலவே தோன்றினாலும் அதை உருவாக்கிய விதத்தில் தனித்துவத்தை வாசிப்பின் மூலம் உணர வைக்கிறார்.

கிருஷ்ணன் நம்பியின் கதைகள் எதுவுமே ஆழத்தை நோக்கி செல்வதில்லை. மாறாக சாமான்ய மனிதனின் உள்ளே பொதிந்திருக்கும் அல்பத்தனங்களை பெரிதுபடுத்தி காட்டுகின்றன. பணக்கார மனிதனாவது எல்லோர் மனதிலும் ஆழப் பதிந்த விஷயம். சுருங்கச் சொன்னால் அது பெரும்கனா. பணம் புரளும் இக்காலத்திலேயே அப்படியெனில் இவரின் காலமான 1950-70களை நினைத்துப் பாருங்கள். இங்கிருந்து இவர் இரு வேறு கருக்களை கையிலெடுக்கிறார். ஒன்று பணக்காரனாக என்ன என்ன இழிநிலைகளுக்கு செல்ல சாமான்யன் தன்னை தயார் படுத்திக் கொள்கிறான் என்பதையும் மற்றொன்று பணக்காரனாக இருப்பவனுள்ளே என்ன என்ன கீழ்மைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதையும் தான் பெருவாரியான கதைகள் பேசுகின்றன.

நிறைய கதைகள் குழந்தைகளுக்கான உலகை சித்தரிக்கின்றது. அங்கே இவ்விஷயங்கள் இருப்பதில்லை. மாறாக இதன் வேறு ஒரு உருவமான பலகீனம் குடி கொள்ள ஆரம்பிக்கிறது. கனவும் யதார்த்த வாழ்க்கையும் வேறு வேறாக இருக்கும் பட்சத்தில் கனவினை அடைய முடியாதோ என்னும் பயம் வாழ்பவனின் மனதில் ஒட்டிக் கொள்கிறது. பயத்துடனேயே வாழ்க்கையை நடத்துகிறான். பலம் கொண்டவர்களின் கைகளில் சிக்குண்டு தவிக்கிறான். கற்பனை திறன் கொண்ட பயம் அவனை முன்னேற விடாமல் திக்கு முக்காட செய்கிறது. இதைத் தான் எல்லா சிறுவர்கள் மையமாக இருக்கும் கதைகளிலும் நிகழ்கிறது. சில கதைகளில் பெரியவர்கள் பலம் கொண்டவர்களாகவும் வேறு சில கதைகளில் சிறியவர்கள் பலம் கொண்டவர்களாகவும் விளங்குகிறார்கள். இது நம்பியின் சோதனை முயற்சிகளில் ஒன்று என தெளிவாகிறது.

எல்லா கதைகளிலும் ஒவ்வாமை துரத்திக் கொண்டு வருகிறது. கதை நிகழ்கிறது எனில் அந்த இடம் சார்ந்த வர்ணனைகள் தேவைப்படுகின்றன. இதுவும் கதையைப் பொறுத்து தான் அமைகின்றன. இவருடைய கதைகள் எல்லாமே பௌதீக உலகிலும் பெருவாரியான இடத்தை ஆக்ரமிக்கின்றன. இருந்தாலும் அதை கதாபாத்திரங்களிடமிருந்து பிரிக்கும் விதம் மிக அழகாக இருக்கிறது. தொகுப்பின் முதல் கதையான "சுதந்திர தினம்" கதையில் சிறுவர்களை வர்ணிக்கிறார், பள்ளியினை வர்ணிக்கிறார், கலெக்டர் வருவார் வந்தபின் உணவு கொடுப்பார்கள் என்பதையும் வர்ணிக்கிறார். எல்லாம் செய்த பின்னர் நாயகனாக வரும் சிறுவன் சடுதியினுள் தள்ளப்படுகிறான். அங்கே பிரமாதமாக வர்ணித்த எல்லா நிலவியலும் காணமலாகின்றன. இப்படி நிறைய கதைகளை இத்தொகுப்பிலிருந்தே எடுத்துக்காட்டாய் கூறலாம்.

இவருடைய கதைகளில் திருப்பங்கள், முடிவினை நோக்கி செல்தல் போன்ற பாவ்லாக்கள் எதுவுமே இல்லை. ஆனாலும் சிறுகதைகளின் முடிவினில் ஒரு திருப்பத்தை அளிக்கிறார். அது உணர்ச்சிகளின் எல்லைகளாக வாழ்வின் நிதர்சனங்களாக மாறிவிடுகிறது. சராசரி கதைகளுக்கும் இலக்கியத்திற்கும் இருக்கக்கூடிய மெல்லிய சரடினை அங்கே நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. சராசரி கதைகளில் முடிச்சுகளை முன்னே வைத்து பின்னர் திருப்பங்களாக அதை அவிழ்க்கும் போது திருப்தி ஏற்படுகிறது. இங்கோ முடிச்சுகளின்றி திருப்பங்களை காட்டும் போது நெகிழ்ச்சி ஏற்படுகிறது. சஞ்சலங்களையும் வாழ்வின் கசப்புகளையும் அவை உணர்ச்சிகளாய் எடுத்துரைக்கின்றன.

எங்கெல்லாம் நம்பி தன் வெற்றியை காண்கிறாரோ அங்கு தன் வீழ்ச்சிகளையும் ஒளித்து வைத்திருக்கிறார். அவருடைய கதைகள் இக்காலத்திற்கு பொருந்துமா எனில் 75 சதவிகிதம் நிச்சயம் பொருந்தும். மீதி பொருந்தாததற்கு காரணம் அவருக்கு பின் வந்த எழுத்தாளர்கள். பல படிமங்களுக்கும் கருக்களுக்கும் கர்த்தாவாக அவர் இருப்பினும் அவருக்கு பின் வந்த எழுத்தாளர்கள் புனைவுகளில் ஆழம் தேடி செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள். நம்பிக்கோ அடிப்படைவாதத்தில் தான் பிரச்சினைகளே எழுந்திருக்கின்றன.

"தங்க ஒரு..." என்னும் இக்கதையை வாசித்து பாருங்கள் - http://azhiyasudargal.blogspot.in/2010/09/blog-post_21.html. இந்தக்கதையில் சில அரசியல் விஷயங்களை பகடிக்குள் ஆக்குகிறார். விரலளவில் இருக்கும் மனிதனை காண்கிறான் நாயகன். தங்க வீடொன்று வேண்டும் என சென்னையில் அலைகிறான். அவனுக்கும் அந்த குள்ள மனிதனுக்கும் இடையே நிகழும் உரையாடலே கடிதம் வாயிலாக வாசகனுக்கு சொல்லப்படுகிறது. கடைசி வரை சின்ன கருவின் பன்முக ஆழங்களை தரிசனங்களாக காட்ட முனைகிறார். அவர் வீழ்ச்சியுறும் தருணமோ கடைசியாக கடிதத்தில் தன் பெயர் இடும் இடத்தில் "உயரமான உன் கணவன்" என இடுவதால் பேசிய விஷயங்கள் எல்லாம் அற்று அந்த உருவ வேறுபாடு பிரதானமாகிறது. காஃபகாவின் மெடமார்ஃபாஸிஸ் நாவலும் இதையே சொல்லுகிறது. ஆனால் அங்கே கதைசொல்லல் முறை நிகழ்வதாக இருக்கிறது.

கோணங்கியை சமீபத்தில் சந்தித்த போது காணும் உலகை objective ஆக மாற்றுவதே கலை என்றார். அது காலத்திற்கேற்ப மாறும் தன்மையுடையது. இந்த தன்மையை நம்பியுடைய எழுத்துகளில் நன்குணர முடிகிறது. ஆனால் அது அக்காலத்திற்கேற்றவாரு அமைந்துவிடுவதே பெரும் வருத்தமாய் இருக்கிறது. இருபத்தைந்து சிறுகதைகளும் சோதனை முயற்சிகள். அதில் ஒவ்வொன்றிலும் அவர் வெற்றியே பெறுகிறார் என்பதில் மட்டும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

வீழ்ச்சியும் வளர்ச்சியும் ஒருசேர புனைவுகளில் இருந்தாலும் அவருடைய கட்டுரைகள் செவ்வியல் தன்மையுடனும் ரௌத்திரத்துடனும் செறிவாக இருக்கின்றன. புனைவு சார்ந்தும் வாசிப்பு சார்ந்தும் இருக்கும் அவருடைய அன்றாட வாழ்க்கை மெய்சிலிர்க்க வைக்கிறது. சமகாலத்தில் ஒன்றை எழுத முனையும் போது வேர்களிலிருந்து ஆரம்பித்து பின் அதன் வீழ்ச்சியை கூறி பின்னரே சமகாலத்தை போற்ற வேண்டும். இல்லையெனில் அதன் தனித்துவத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று அவர் கொள்ளும் கோபத்தை வெகுவாக ரசித்தேன். அவருடைய செருக்கிற்கு ஓர் உதாரணம்,

"படைப்பில் எதையும் தாராளமாக எழுதலாம் என்பது ஒருபுறமிருக்க, எழுதியதை கலாபூர்வமாக நியாயப்படுத்திவிடும் வன்மை படைப்பாளிக்கு இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்"(கி.ரா படைப்பு சார்ந்து எழுதிய கட்டுரையிலிருந்து)

பரந்துபட்ட வாசிப்புகளிலிருந்து அவர் கற்றுக் கொண்டே இருந்திருக்கிறார். எழுத்தாளனாக வேண்டும் என்பது அவரது வைராக்கியம். அதற்கொப்ப அவரின் எழுத்து பேசியிருக்கிறது. புனைவுகளுக்கும் கட்டுரைகளுக்கும் அதே நேரம் எழுத்தாளர்களுடனான தனிப்பட்ட உறவுகளுக்கும் அவரின் எழுத்துகளே சான்றாகியிருக்கின்றன. கி.ராஜநாராயணன், மௌனி, சுந்தர ராமசாமி ஆகியோருடனான கடித போக்குவரத்துகளை பார்க்கும் போது சமகால நிலையை நினைத்து பொறாமையாக இருக்கிறது. அதிலும் அவர்களின் நட்பு என்னை திக்கு முக்காட செய்கிறது. கி.ரா சில மாதங்களுக்கு கடிதம் எழுதவில்லை போலும். அதற்காக நம்பியின் கடிதத்தில் நான்கு வரி கவிதையொன்றிருக்கிறது.

"ஏதுபிழை யான்புரிந்தேன் என்னதுயர் யான்விளைத்தேன்
ஏதய்யா உன்தாபம் என்மேலே - ஆதரவாய்
இன்றே ஒருசொல் எழுதவியேல் என்துயரம்
சென்றோடிப் போகுமிது சேதி!"

பாருங்கள் இலக்கியம் கண்ட நட்பை. வெகுநேரம் இந்த வரிகளையே வாசித்துக் கொண்டிருந்தேன். 

எழுத்து அரங்கம் என்னும் கட்டுரையில் அனுபவத்திற்கும் கலைக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய தொடர்பை மிக அழகாக விவரிக்கிறார். உலக இலக்கியவாதிகள் வரையிலான எடுத்தாளுமைகளைக் கொண்டு அனுபவம் கலையாக மாறக்கூடிய வேதியியல் மாற்றத்தை எடுத்துரைக்கிறார். ஜனரஞ்சக பத்திரிக்கைகளுக்கும் இலக்கிய நூல்களுக்கும் இடையே நிகழ்வது போர். அங்கே வெல்வது யாரென்று யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் புறக்கணிக்கப்படுவது என்னவோ இலக்கியமாகத் தான் இருக்கிறது என்கிறார். கதைகளைக் காட்டிலும் அவருடைய கட்டுரைகள் காலத்தை கடந்தும் நிற்கக்கூடிய தன்மையை கொண்டிருக்கிறது. அதனுள் அவர் எடுத்துக் கொள்ளும் விஷயமும், அது அக்காலத்தியதாக இருப்பினும் அதன் மூலம் அவர் நிலை நிறுத்தும் விஷயமும் காலத்தின் சார்பில்லாமல் ஆழமாக இருக்கின்றன.

இலக்கியத்திற்காகவும் நண்பர்களாக சம்பாதித்த இலக்கியவாதிகளுடன் வாழ்வதையுமே பெரும்பணியாய் கொண்ட நம்பியின் யதார்த்த வாழ்க்கை எல்லா எழுத்தாளர்களைப் போலவே பிரச்சினைகளுடனும் குடும்பச் சிக்கல்களுடனும் தான் அரங்கேறியிருக்கிறது. அங்கீகரிக்கப்படாத, ஜன ரஞ்சகத்துடன் சமரசம் செய்து கொள்ளாத இலக்கியவாதியின் வாழ்க்கை புறக்கணிப்புகளூடே தான் அரங்கேறியிருக்கிறது. அதனையும் தன் புனைவில் வெளிக்காட்ட முனைந்திருக்க்கிறார். அதை அவருடைய கட்டுரைகளிலும் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. "மீண்டும் நீருக்குள். . ." எனும் கதையில் எழுத கரு கிடைக்காமல் தவிக்கிறான் நாயகன். மனைவி அவனின் அல்லலுறுதலை கண்டு எக்களிக்கிறாள். கதை கிடைக்கிறதா இல்லையா என்பதே கதை. அதன் கடைசியில் அவன் சொல்லும் விஷயம்,

"எழுதுகிறவன் என்றாலே, என் அருமை மனிதர்களே, உங்களுக்கு இளப்பம் தான். ஆமாம். உங்களைப் போல் எங்களுக்கு லௌகீக திறமைகள் கிடையாது. உங்களைப் போல் எங்களுக்கு வட்டி வாங்கக் கணக்குப் பண்ண தெரியாது. நாங்களெல்லாம் ஒருமாதிரியான காலத்துக்கொவ்வாத அசடுகள். கேட்டீர்களோ, நீங்கள் எங்களுக்கு 'செக்' ஒன்றும் எழுதிக் கொடுக்க வேண்டியதில்லை. நேரம் கிடைத்தால், நாங்கள் எழுதுவதை கொஞ்சம் படிக்க முடியுமா என்று பாருங்கள். நீங்கள் படித்தாலும் படியாவிட்டாலும் நாங்கள் கிறுக்கிக் கொண்டேதான் இருப்போம். மீனுக்கு தண்ணீரே ஜீவன். நானும் ஒரு மீன். சிறிது நேரம் தரையில் தூக்கி வீசப்பட்டு தவியாய் தவித்தேன். மீண்டும் என் அருமைக் கடவுள் என்னை நீரில் தள்ளியாகி விட்டது. மீண்டும் எனக்கு உயிர் வந்துவிட்டது. இனி நான் எழுதுவேன்."

கிருஷ்ணன் நம்பியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியதே நிறைய இருக்கிறது. அவரின் புரிதல் சார்ந்த நுண்ணுணர்வும் கதைகளின் தேவை சார்ந்து, அதை கட்டமைப்பது சார்ந்து இருக்கும் நுண்மைகளையும் கற்கவே ஓராயுள் போறாததாக இருக்கிறது. இருபத்தைந்து கதைகளே என அவர் ஆசுவாசம் கொண்டாலும் அதனூடே இருக்கும் படிமங்களையும் நுட்பங்களையும் ஆராய நமக்குள்ளே ஒரு கிருஷ்ணன் நம்பி தேவைப்படுகிறது. பலவீனத்தின் மறுபெயர் கிருஷ்ணன் நம்பி எனில் வாசிக்கும் போது நம்முள்ளே இருக்கும் பலவீனங்களும் வெளிக்கொணரப்படுகின்றன என்பது என்னவோ மறுக்க முடியாத உண்மையாகிவிடுகிறது.

வாசிக்கும் போது பலவீனத்தை கொண்டாடும் இலக்கியமாகவே கிருஷ்ணன் நம்பியின் ஆக்கங்கள் இன்றளவும் திகழ்கின்றன.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக