நாற்றத்துடனான ஞானம்

இவன் என் ஆழ்நிலை ஆராய்ச்சிக்கு ஏற்ற அருமையான பாத்திரம்.
இவன் என்னை நான் என்பான்; நான் இவனை நான் என்பேன்.
சோதனை செய்வதற்கு என்னைவிட நல்ல பாத்திரம் கிடைக்குமா என்ன ?

ருஷ்ய எழுத்தாளர் ஃப்ரான்ஸ் காஃப்கா புதிய கோட்பாட்டை அக்காலத்தில் நிறுவியிருக்கிறார். அது சர்ரியலிஸத்திற்கு ஒருப்படி மேலே இருந்தது. இதனை நிறைய முறை இதே இணையத்தில் எழுதியிருக்கிறேன். அதை பல திரைப்படங்களிலும் பல நாவல்களிலும் முயன்றிருக்கிறார்கள். அதற்கான சிறந்த உதாரணம் கிறிஸ்தோபர் நோலன் இயற்றிய டூடுல்பக் என்னும் குறும்படம். சர்ரியலிஸம் நிகழ் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வேறு வகைமையில் கண்டடைகிறது. எப்படியெனில் கற்பனையான ஒன்றாக தன்னை உருவாக்கி அங்கிருந்து உலகொன்றை தோற்றுவிக்கிறது. அங்கே புறவுலக பிரச்சினைகள் எளிமையாக உருக்கொள்கின்றன. அவற்றிற்கான தீர்வுகளை எளிதாக கண்டுகொண்டு சாந்தம் அடைந்து கொள்கிறான். இது புற உலக பிரச்சினைகளை பேசுகிறது எனில் காஃப்கா உருவாக்கிய கேஃப்கேஸ்க் என்னும் கோட்பாடு மனிதனையே பிரச்சினையின் மூலதனமாக்குகிறது.

தன்னிடமிருந்தே பிரச்சினைகள் முளைக்கின்றன. அதை எதிர்கொள்ள முடியாமல் கோழையாகிறான். பயப்படுகிறான். தப்பிக்க முனையும் போது தான் சாவதானமாக இருக்க ஏதேனும் இடமொன்றை தேர்வு செய்து கொள்கிறான். அது கற்பனை உலகமாக அல்லது ஏதேனும் பொருளாக இருக்கலாம். இங்கு தான் மற்றொரு பிரச்சினை உருவாகிறது. தன்னை ஆசுவாசம் செய்து கொள்ள தனக்குள்ளேயே சித்தரிக்கப்படும் உலகில் புதிதாய் பிரச்சினை உருவெடுக்கிறது. இது எப்படி சாத்தியம் என கேள்வி எழலாம். அவர்களாகவே உருவாக்கிய ஓருலகில் எப்படி அவரே அறியாமல் பிரச்சினைகள் முளைக்கும் என. நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. யதார்த்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே எல்லா மனிதனின் ஆசையாக இருக்கிறது. இதை வேறு விதமாக கூற வேண்டுமெனில் நினைத்த பதவியை யதார்த்தமாக வாழ வேண்டும் என்பதே அடிப்படை ஆசை. அது நிறைவேறாத போது கனவுகளில் அல்லது வேறொரு பௌதீக உலகில் அப்படி வாழ ஆரம்பிக்கிறான். அதனுள்ளே மூழ்கி செல்லும் போது எது யதார்த்தம் என்னும் பிரச்சினை எழுகிறது. இங்கே தான் அவன் மீண்டுமொரு ஆசுவாசத்தை தேட ஆரம்பிக்கிறான். இது ஒரு சுழற்சி. தேடலில் கட்டற்றவன் மனிதன். இருந்தாலும் அவனின் ஆசைகளும் தேடலின் முடிவுகளும் எண்ணிலிகளால் நிறைந்திருக்கின்றன.

இதை வைத்து தமிழில் நாவல் வரக்கூடாதா என நிறைய எண்ணியிருக்கிறேன். தமிழர்களிடம் இதற்கான நிறைய காரணங்கள் அன்றாட வாழ்க்கையில் இருக்கின்றன. அடுத்தவன் என்ன சொல்லுவான் என்பதே நம் முதற் கேள்வியாக இருக்கிறது. இதிலிருந்து ஒரு சமூகம் எப்போது வெளிசெல்கிறதோ அப்போது தான் இந்த தத்துவம் அல்லது கோட்பாடு காலாவதியாகும். இங்கோ இன்னமும் நிலவிக் கொண்டுதானிருக்கிறது. எல்லா மனிதர்களும் மாணவர்கள் முதல் வயோதிகர்கள் வரை தாழ்வுமனப்பான்மையால் பீடித்தவர்களாக இருக்கிறார்கள். கற்பனை நிரம்பிய சம்பவங்களுக்கு தீர்வுகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதை இலக்கியம் எப்படி ஆராய்கிறது என்றறிய நிறைய ஆசை கொண்டேன்.

தமிழில் அதற்கேற்ற ஆக்கங்கள் இருக்கின்றன. சிறந்த உதாரணம் நகுலன். தன்னையே கூண்டிலேற்றுகிறார். கேட்க வேண்டிய அனைத்து கேள்விகளையும் கேட்டு கற்பனைகளையும் யதார்த்தங்களையும் துயிலுரிக்கிறார். விஷயம் யாதெனில் அவருடைய எழுத்து வாசகர்களுக்கு abstract ஆக தெரிகிறது. முழுமையடையவில்லையோ என்பதே பிரதான கேள்வியாக இருக்கிறது. முழுமையடையும் படைப்புகளைத்தாம் நாம் புரிந்தது என்னும் பதத்தினுள் அடக்குகிறோம். புரிதல் முழுமை நோக்கியதாய் நேர்க்கோட்டுத் தன்மையுடையதாய் இருக்க வேண்டும் என்பதை நம் மனம் கற்பிதமாக கொண்டிருக்கிறது. நகுலன் செய்த அதே விஷயத்தை வேறு ஒரு உருவத்திலும் கட்டமைப்பிலும் புனைவிலும் எம்.வி.வெங்கட்ராம் அழகியல் நேர்த்தியோடு செய்திருக்கிறார்.   அந்த படைப்பின் பெயர் "காதுகள்".


ஏற்கனவே இவருடைய "நித்யகன்னி"(க்ளிக்கி வாசிக்கலாம்) நாவலை வாசித்து பிரமித்து இருந்தேன் என்பதே உண்மை. அறம் மற்றும் தர்மத்தை எல்லா படைப்புகளும் ஆராய முனையும் போது அந்த அறத்தையே கூண்டிலேற்றினார் எம்.வி.வி. இதே ஆசையுடன் தான் இந்நாவலையும் வாசிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப சில பக்கங்கள் முழுக்க நாயகன் மகாலிங்கத்தின் புராணமாக ஓடுகிறது. அவனுக்குண்டான ஆசை, தாபம், வேலை, அதில் கண்ட தோல்விகள், அவன் கண்ட வாழ்க்கை, வாழ்க்கை பார்த்த மகாலிங்கம் என பன்முகப்பார்வையில் மகாலிங்கத்தின் வாழ்வை கூறுகிறார். அவனுடைய வாழ்வில் ஏற்பட்ட சூழல் சார்ந்த அழுத்தங்களினால் பிறழ்வு ஏற்படுகிறது. நிறைய விஷயங்களை கற்பனை சக்தி கொண்டு சிந்திக்க ஆரம்பிக்கிறான். காலத்துடன் குழம்பிப் போகிறான். இதையெல்லாம் கூறிய பின் கதைசொல்லி கூறும் ஒரு வரி கதையை முழுதாக மாற்றுகிறது.

"இவனுடைய இந்த தடுமாற்றத்துக்கு மூலக்காரணம் காதுகளே என்று எனக்கு தோன்றுகிறது"

இதற்கு பிறகான நாவலின் உருவம் வேறு ஒரு திசையில் வாசகனை இட்டு செல்கிறது. மனிதனின் காதுகள் அதிகபட்சமாக செய்யக்கூடியன கேட்பது தான். இந்த கேட்டல் என்னும் செயல் தன்னார்வத்துடன் இயங்க ஆரம்பித்தால் என்ன ஆகும் ? புலன்கள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கிறது. இதை சரியாக கூற வேண்டுமெனில் பூச்சியை வைத்து சொல்லலாம். பூச்சியை என்றேனும் அடித்து கொன்றிருக்கிறீர்களா ? பூச்சியின் சப்தத்தை காதுகள் சேகரித்து வைத்திருக்கின்றன. அதன் உருவை கண்கள் கண்டிருக்கின்றன. அடித்தால் வரும் நாற்றத்தை நாசிகள் அறிந்திருக்கின்றன. இப்போது விஷயம் யாதெனில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அந்த பூச்சி காதருகில் சத்தம் போட்டுக் கொண்டிருப்பது போல ப்ரமை எழுந்தால் என்ன ஆகும் ? கற்பனையின் துணை கொண்டு எல்லா புலன்களும் ஓசைக்கான உருவத்தை மனிதனுக்கு கொடுக்கும். இந்த சம்பவத்தை புலன்கள் தன்னிஷ்டப்படி செயல்படுகின்றன எனக் கூறலாமா அல்லது மனிதனின் பிரக்ஞை இப்படியெல்லாம் சிருஷ்டிக்கிறது எனக் கூறலாமா ? இந்த அடிப்படை விஷயத்தை தான் இந்நாவல் முழுமைக்கும் பேசுகிறது.

மகாலிங்கத்தின் வாழ்க்கையை மூன்று விஷயங்கள் பெரிதாக பாதிக்கிறது. ஒன்று குடும்பம் மற்றொன்று அவனுடைய எழுத்து மற்றொன்று முருகன். முருகனின் மீது தீராத பக்தியை கொண்டிருக்கிறான். எழுத்து என வரும்போது சுய வாழ்க்கையையே புனைவுகளாக எழுதுபவன். வீட்டிலோ எப்போதும் வறுமை. வேலையென சரியாக எதுவும் இல்லை. முருகனே துணை நிற்பார் என இருக்கிறான். அப்போது தான் அவனுக்கான பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. அது தானாக கேட்கும் ஒலிகள்.

அதுநாள்வரை அவன் கேட்டுவந்த எல்லா வார்த்தைகளையும் குரல்கள் பேசுகின்றன. இந்த குரல்கள் என்னும் விஷயத்தை எடுத்தால் அதில் அவர் கூறும் விஷயங்கள் உலக அனுபவங்களாக இருக்கின்றன. மனிதன் எப்போதும் இரட்டைத் தன்மைக்குள் சிக்குண்டு கிடக்கிறான். நன்மையும் தீமையுமாவன. சின்ன வயதில் அப்பா திட்டும் போது இவர் இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என தோன்றக்கூடும். இது தான் பின்னாட்களில் கனவுகளாக வர வாய்ப்புகள் இருக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆக எல்லா சம்பவங்களையும் மனம் இருகூறாக பிரித்து ஆராய்கிறது. நன்மையிலும் பார்க்கிறது. தீமையிலும் அணுகுகிறது. எது சிறந்தது என்பதை இந்த ஊணுடல் தீர்மானிக்கிறது. இந்த தர்க்கங்கள் அரூபமானவை. இதற்கு இந்நாவல் உருவம் கொடுக்கிறது. அது தான் காதுகள்.

இந்த காதுகளை வேறொரு படிமமாக்கி அடுத்ததான விஷயத்தை கூற ஆரம்பிக்கிறார். ஞானம் என்பது என்ன ? அதற்கும் தெய்வத்திற்கும் என்ன சம்மந்தம் ? இரண்டு குரல்கள் அவனுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்று மற்றொன்றை வர்ணிக்கிறது. அதற்கு எதிர்வினையாற்றும் குரல்,

"'நீ வருணிக்க வேண்டாம். நான் யார் என்று எனக்கு தெரியும்'
'ஒனக்கு அத்தனை ஞானம் வந்தாச்சா ?'
'நான் ஞானத்தின் மொத்த அருவம்'
'ஆ! அதான் ஒங்கிட்ட வந்தாலே இப்படி நாத்தமா நாறுது! ஞானம் வந்துட்டா தூரமானா கூட குளிக்க வேணாம் இல்லே ?'"

நான் யார் என்பதை அறிந்தாலே ஞானத்தின் ரசத்தை அறிந்துவிடலாம். இதை பல யோகிமார்களும் ஞானிகளும் முயன்றிருக்கின்றனர். இந்நிலையில் மகாலிங்கத்திற்கு எந்த நானை கண்டறிவது என்பது குழப்பமாகிறது. காதுகளின் மூலம் கேட்கும் ஒலிகள் அவனுள்ளிருந்து உருவாகின்றவை. அப்படியெனில் அதன் சிருஷ்டியும் அவன் தானே ? அதுவும் ஒரு நான் தானே ?

ஞானத்தை அடைய இருக்கும் ஒரே வழி தெய்வத்திடம் சரணாகதி அடைவது. இந்த தன்மையை மகாலிங்கமும் மேற்கொள்கிறான். அவனுக்கு கிடைத்த தெய்வம் முருகன். இந்த பதத்தை வைத்து எம்.வி.வி தன்னாலான பகடிகளை செய்கிறார். முன்ஜென்மங்களில் காளியை வேண்டியிருக்கிறான் நாயகன். அந்த காளி அவன் மேல் மோகித்தே விட்டாள். இந்த ஜென்மத்தில் வேறொருவனை அதுவும் தன்னை விட தாழ்ந்தவனை வழிபடுகிறானே என அவனை தன்வசமாக்க முயல்கிறாள். இந்த முயல்தளினூடே எண்ணற்ற தர்க்கங்களை செய்கிறார் எம்.வி.வி. எம்.வி.வி எப்படி பிற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுகிறார் என்பதையும் இந்த தர்க்கத்தின் மூலக்கூறிலிருந்து தான் அறிய முடிகிறது. ஆத்மஞானம் செய்யும் தொழிலில் அல்லது தன்னில் ஆழ்ந்த நிலையில் ஏதேனும் கலையில் வெளிப்படக்கூடிய ஒன்று. இதை பல நாவல்கள் வெவ்வேறு வழிகளினால் பேசுகின்றன. இங்கோ ஞானமே தர்க்கத்தின் பொருளாகிறது. காளியின் ஆசையினை பாருங்கள்

"சொல்லைச் சோர்வுபடுத்தி திகைக்க வைக்கும் ஒரே இன்பம் - கலவி இன்பம் தான். காமத்தை துறந்தவர்களுக்கே ஆத்மஞானம் கிட்டும் என்று அறிவீனர்கள் பேசுவார்கள். காம உணர்ச்சி எவ்வளவு உயரச் சிகரத்திற்கு ஏற்ற முடியும் என்பதை நான் உனக்கு உணர்த்தப் போகிறேன். பிறகு காமசுகப் பரவசத்தால் ஆத்மஞானத்தை உனக்கு கொடையாக வழங்கப் போகிறேன், பார்!"

இந்த காளியின் பாத்திரம் நிறைய இடங்களில் ஆண்டாளை எனக்கு நினைவூட்டியது. அவளுக்கு பெருமாளின் மீது கொண்டிருந்த அளப்பறிய பற்று காலமாற்றத்தால் இப்படியும் இருக்கலாம் என்னும் பகுதிகளாகவே இவை இருந்தன. மேலும் ஆத்மஞானத்திற்கு விளக்கமொன்றும் அவள் அளிக்கிறாள்,

"ஆத்மஞானம் - SELF REALISATION என்பது இது தான். You realise yourself by transcending flesh by means of flesh. Was that not a marvelous experience ? Oh, You want a repeat performance ?... No, no, not now. I'am damn tired. Thank you very much, Mali! Ta ta. . ..என்றவாறு அந்த பெண்ணுருவம் மறைந்தது"

நாவல் முழுக்க ஆங்கிலத்தில் அங்கங்கு பகுதிகள் வருகின்றன. உலகம் முழுக்க வார்த்தைகளால் நிரம்பியிருக்கிறது. அதில் சில வார்த்தைகள் தேவையாகவும் சில வார்த்தைகள் தேவையற்றதாகவும் அவரவர் புரிதலுக்கேற்று மாறிவிடுகின்றன. இந்த புரிதலின் முதற்படியாக அமைவது என்னவோ காதுகள் தான். ஆனால் அக்காதுகள் கற்பனையாக மாறியிருப்பின் மனிதனின் அன்றாடம் எப்படியெல்லாம் சிதைவுறும் என்பதை நேர்த்தியுடன் எழுத்தாக்கியிருக்கிறார். ஞானத்தை நோக்கிய தேடலில் எண்ணற்ற இடர்கள் வரும் என்பதை புராணம் முதற்கொண்டு இந்த தமிழ் சமூகம் கண்டுவருகிறது. இங்கே வரும் இடர்கள் சமகாலத்திற்கேற்றவையாய் இருக்கின்றன. என்னுள்ளேயே மறுதலிக்கப்பட்ட உலகமொன்று இருக்கிறது. அதை புறக்கணிக்க தெரியாமல் நான் எதை நோக்கியும் செல்ல முடியாது என்பதை உணர மகாலிங்கம் பெரும்பயணம் செய்கிறான். அவனுக்கான பதிலாக நாவலிலேயே ஒரு வரி வருகிறது

"God is not that cheap".

பி.கு : முன்னுரையும் பின்னுரையும் இல்லாமல் இருந்திருப்பின் நாவலை இன்னமும் கொண்டாடியிருந்திருப்பேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக