மரணத்தின் வாழ்வுதனை நோய்கள் கவ்வும்

இந்திய இலக்கியங்களில் முக்கியமாக பேசப்படும் மொழி வங்காளம். அங்கிருந்து பல அற்புத நூல்கள் உருவாகி பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சிறந்தது என பட்டியலிட்டால் பல எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்படும் நூல் தாராசங்கர் பந்தோபாத்யாய எழுதிய "ஆரோக்கிய நிகேதனம்" ஆக இருக்கும். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் த.நா.குமாரசாமி. மேலும் இவரது பல நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன். அதை மீண்டும் பதிப்பித்தால் இனிவரும் எனைபோன்ற வாசகர்களுக்கு பேருதவியாய் இருக்கும். இப்போது நாவலுக்குள் செல்வோம்.

சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய நூல்களில் இந்நூலையே முதலில் வாசிக்க வேண்டும் என்று எடுத்தேன். ஒரு நாவல் முழுக்க முழுக்க வர்ணனைகளிலும் விவரிப்புகளிலும் செல்லுகிறது. மேலும் மருத்துவர் நோயாளிகளுடனான பேச்சுகளாகவே செல்கிறது எனில் அதை ஒருவரால் வாசிக்க முடியுமா ? இக்கேள்வி நாவலை வாசித்து முடிக்கும் போதே என்னுள் எழுந்தது. இதே தன்மையை சிறிதும் பிசகாமல் ஏதோ உணர மட்டுமே கூடிய மையத்தை ஆசிரியர் நாவலின் கருவாக அறுநூறு பக்கங்களில் பேசியிருக்கிறார்.

மரணம் எல்லோருக்கும் சம்பவிக்கக்கூடியது. மானுடத்தின் ஒரு விளிம்பு என்று கூட கூறலாம். இங்கே தான் முரண் ஏற்படத் துவங்குகிறது. விளிம்பு எனும் போது அதன் இருமங்கிலும் என்ன இருக்கிறது என்பது அணுகுபவனுக்கு முக்கியமான விஷயமாகிறது. ஒருபக்கம் எல்லோராலும் அறியக்கூடிய ஒன்று அஃதாவது வாழ்க்கை. விளிம்பு வரை மட்டுமே அறிந்த இந்த அறிவால் அதன் அப்பால் இருக்கக்கூடிய விஷயத்தை கற்பனை மட்டுமே செய்யமுடிகிறது. இந்த கற்பனை எதனால் வரும் ? எல்லோராலும் இதை புரிந்து கொள்ள முடியுமா ?

இந்த கேள்விகளை ஆராய முனையும் போது நம் முன்னே இன்னுமிரு கேள்விகள் விரிவடைகிறது. வாழ்வு சார்ந்த விஷயமும் அறிதல் சார்ந்து இருக்கும் விஷயமும் ஒன்றா ? ஏகப்பட நூல்களை வாசிக்கிறோம். அந்நூல்களிலிருந்து விஷயங்களையும் அறிந்து கொள்கிறோம். இந்த அறிதல் அறிவு என்று சேகரமாகுமே தவிர வாழ்க்கை முழுக்க உதவிக்கு வராது. இதைத் தாண்டிய விஷயமே ஞானம். அறிதலால் மட்டும் கிடைக்கக்கூடியது அல்ல இது. அனுபவமும் அறிவும் மோதும் இடங்களில் அனுபவம் வெற்று பெறுமாயின் அங்கே வெளியே சொல்ல முடியாத பல பதில்கள் நமக்கு கிடைக்கின்றன. வாழ்வியல் எடுத்துக்காட்டு எனில் வயதில் மூத்த அம்மா அப்பாவை நாம் டா போட்டு அழைக்க முனைவதில்லை. ஆனால் அதே வயதினர்களை அழைக்க மனம் யோசிப்பதில்லை. இது இரண்டையும் பகுத்தறிய ஏதோ ஒரு விஷயம் நம்மை உந்துகிறது. அடுத்தவனின் மீது வரும் கருணை, உதவி செய்ய ஏங்கும் மனம் என எல்லாமே அனுபவத்தின் சாயைகள். அதே போல் ஞானம் சபிக்கப்பட்டது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்கின்றனர். இதை ஞானமே உணர்த்துகிறது. ஞானவான்களின் இடம் பொருளற்றதாகவே இருக்கும்.

இந்த ஞானம் யார் யாரெல்லாம் அடைகிறார்கள் என்று பார்த்தால் எல்லோருமே கஷ்ட காலத்தில் மரணத்தின் நிழல் படியும் இடங்களில் கண்டறிந்திருக்கிறார்கள். புத்தருக்கு பிணம், கர்த்தருக்கு பிணி என. மரணத்தை நோக்கியது தான் இந்த வாழ்க்கையா என்னும் அடிப்படை கேள்வி இந்த வாழ்க்கை என்பது எதற்கு என்னும் ஆதார ஸ்ருதியை ஆராய அவர்களுக்கு வழிவகுத்திருக்கிறது. அங்கிருந்தே ஞானத்தின் மரபு தோன்றுகிறது. வாழ்க்கை ஆரம்பம் எனும் விஷயத்தை கொண்டிருக்கிறது எனில் அந்தம் என்பதையும் கொண்டிருக்க வேண்டும். ஆக மரணம் சாதாரண சுழற்சியின் சிறு அங்கம். அப்படியெனில் ஏன் அதைக் கண்டு எல்லோரும் அஞ்சுகிறார்கள் ? இதன் பிண்ணனி என்னவாக இருக்கும் ? இந்த எல்லா விஷயங்களை மிக சிறப்பாக பகுப்பாய்கிறது ஆரோக்ய நிகேதனம் நாவல்.


இந்நாவலின் வடிவமைப்பே என்னை வியப்பில்  ஆழ்த்துகிறது. படிமங்களை அடுக்கடுக்காக வைத்துக் கொண்டே ஆசிரியர் செய்ய/சொல்ல நினைத்த தர்க்கத்தை செய்திருக்கிறார். சமீபத்தில் கோணங்கியை சந்தித்து பேசிய போது அவர் சொன்ன வார்த்தைகளிலிருந்து ஒரு விஷயத்தை தெளிவாக்கிக் கொண்டேன். எத்துணை தர்க்கம் அல்லது வர்ணனைகளை வேண்டுமெனினும் வைக்கலாம். ஆனால் ஒரு கட்டத்தில் கூட நாம் நாவல் தான் வாசிக்கிறோமா என்னும் சந்தேகத்தை வாசகனுக்கு உருவாக்கிவிடக்கூடாது என்றார். இதை இந்நாவல் கச்சிதமாக செய்கிறது. பல்வேறு புதிய விஷயங்களும் மரணம் சார்ந்த தர்க்கங்களும் பக்கத்திற்கு பக்கம் நிகழ்ந்தாலும் புனைகதையையே இந்நாவல் அழகாக பேசுகிறது.

நாயகனின் பெயர் ஜீவன் மஷாய். தந்தை வழியாக நாடி வைத்தியத்தை கற்றவர். தந்தையின் வழியையே பின்பற்றி ஆரோக்ய நிகேதனம் என்னும் அவருடைய  கேந்திரத்திலேயே சிகிச்சை செய்து வருகிறார். பல மனிதர்கள் அவரிடம் வந்து தங்களுடைய நோய் எப்போது குணமாகும் என்பதை கேட்டு கேட்டு செல்கிறார்கள். இவருடைய பிரச்சினை யாதெனில் நாடியை பிடித்த உடனேயே அவர்களின் நோய், ஆயுள், மரணம் என எல்லாமே தெரிந்துவிடுகிறது. அப்படி தெரிந்தால் தான் பரவாயில்லையே இந்த மனிதரோ அதை அவர்களிடமே சொல்லிவிடுகிறார். இது பெரும் பிரச்சினையாக மாறுகிறது. அரசியலாக உருவெடுக்கிறது. அவருடைய மனைவி ஆத்தர் பௌவிற்கு இது பிடிக்கவில்லை.

மரணத்தை சொல்லும் விஷயம் பரவும் அதே நேரத்தில் அவ்வூரிற்கு நவீன மருத்துவம் வர ஆரம்பிக்கிறது. முன்னரே அது புழக்கத்தில் இருந்தாலும் பரவுவது என்னமோ ஜீவனின் சமயத்தில் தான். அவரும் அந்த ஆங்கில மருத்துவத்தையே படிக்க நினைத்தவர். சில தடங்கல்களால் வழிமாறி நாடி வைத்தியத்தில் வந்து நின்றுவிட்டது. இந்த தடங்கல்கள் எல்லாமே விரிவாய் நாவலில் வருகிறது. அல்லோபதி மருத்துவம் ஊரினுள் நுழையும் போது கதை இரு பிரிவாக பிரிகிறது. ஒன்று அல்லோபதியின் நவீன மருத்துவம் மற்றும் ஜீவனின் வாக்கின் மேல் மக்களுக்கு இருக்கும் பயம். மரணத்தின் நாளை அறிந்து கொள்ளும் தருவாயிலேயே அந்நாளிற்கான காத்திருப்பு மனிதனுள் எழ ஆரம்பிக்கும். இந்த அடிப்படை பயம் தான் நாவல் முழுக்க தொடர்கிறது.

பல நோயாளிகள் மரணத்தை எதிர்நோக்குகின்றனர். அவர்களால் மட்டும் எப்படி அது முடிகிறது ? எல்லோராலும் முடியாமல் போகும் காரணம் என்ன ? மரணத்தை தேவதை என சொல்லுகிறோம். அப்படியெனில் மரணம் அன்புதானே ? இந்த கேள்விகளுக்கும் நாவலில் விடை கிடைக்கிறது.

நாவல் ஆரம்பத்திலிருந்து ஜீவன் மஷாய்க்கு எதிரான சம்பவங்களாகவே இருக்கிறது. ஆனால் உள்ளார்ந்து ஓடும் ஸ்ருதி முழுக்க முழுக்க அவரின் மருத்துவ மதிப்பீடுகளால் உருவாகும் பகுதிகளாகவே இருக்கின்றன. அல்லோபதி மருத்துவர் பிரத்யோத் வந்தபின் நாவல் துவந்துவமாக மாறுபடுகிறது. அங்கே இரு மனிதர்கள் மோதுவதில்லை. மாறாக இரு மருத்துவம் மோதுகிறது. இரு தத்துவங்கள் மோதுகின்றன. இந்த மோதலை தான் நாவல் முழுக்க காணமுடிகிறது.

மேலும் ஜீவன் மஷாய் காணும் வீழ்ச்சியின் விகிதம் அனுபவிக்க இயலாத ஒன்று. சேவை என வந்த பின் அங்கே பணம் முக்கியமானதாகவே படாது. அதை செய்ய முனைவோரின் மனம் எப்படி இருக்கும் மற்றும் அதை பார்ப்போரின் மனம் எப்படி இருக்கும் என்னும் நிலையையும் நாவலில் பதிவு செய்திருக்கிறார். வீழ்ச்சி எதிர்பார்ப்பதாகவே இருப்பின் அது எப்படி வீழ்ச்சியாகும் ? வீழ்ச்சியின் அழகியல் வர்ணனைக்கு உட்பட்டதா அப்பாற்பட்டதா ? ஆகிய கேள்விகளுக்கு கதை பதில் சொல்கிறது.

இந்நாவல் நிகழ்த்தும் துவந்துவங்கள் வெற்றிக்கான வழியை வாசகருக்கு கோலவில்லை. மாறாக மரண தேவதையின் உருவத்தை நோக்கி செல்கிறது. மருத்துவம் ஒரு பக்கம் அறிவாகவும் மறுபக்கம் ஞானமாகவும் இருக்குமாயின் அவ்விரு தன்மைகளிடையே நிகழும் அரசியல் எவ்வாறாக இருக்கும் என்பதை நாவல் பக்கங்களில் விவரிக்கிறார். மேலும் நோய்களை சாமான்ய மனிதர்களும் மருத்துவர்களும் எப்படி பார்கிறார்கள் என்பதையும் கூறுகிறார். நோய்களும் மரணமும் எப்படி பிணைந்தவை என்பது நாவலில் அடிக்கடி கூறப்படும் பகுதி. நோய்க்கென சிறப்பு கதையொன்றும் இருக்கிறது. சுவாரஸ்யமான கதையும் கூட.

தனிமனிதன் உணரக்கூடிய சுயானுபவத்திலிருந்து அடையக்கூடியதே ஞானம். அந்த பாதையில் சென்ற ஒருவனின் சுயசரிதை எப்படி இருக்குமோ அது தான் ஆரோக்கிய நிகேதனம் என்னும் நாவல். ஜீவன் மஷாயின் வாழ்க்கையை முழுதுமாக கூறுகிறது. நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல்.

பி. கு :  இப்போது கானல் வெளியீடு இந்நூலை வெளியிட்டிருக்கின்றனர். இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு என்பதை அட்டையில் இட்டிருக்கிறார்களே ஒழிய அதற்கான முனைப்பு அமைப்பில் இல்லை. எழுத்துப்பிழைகளை பக்கத்திற்கு பக்கம் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றனர். முன்னர் வேறு பதிப்பகம் கொண்டிருந்த பதிப்பிலும் இப்படியா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த பிழைகள் நம்மை(வாசிப்பை) தொந்தரவு செய்யாது. திருத்தப்பட்டால் வாசகர்களுக்கு பேருதவியாய் இருக்கும்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக