நினைவோடையின் metafictional வடிவம்

சென்னை புத்தகத் திருவிழாவில் யுவன் சந்திரசேகரை மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.(முதல் சந்திப்பை அறிய இந்த சுட்டியை க்ளிக்கவும் - http://www.kimupakkangal.com/2013/12/pleasure-of-words.html) அவருடைய பணிவு என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்தும் விஷயம். நாவலின் பிரதியை அவரிடம் கொடுக்கும் போது சட்டென உதிர்த்த வார்த்தை I am honoured! இதனை எல்லோராலும் சொல்ல முடியுமா ? யோசித்து பாருங்கள். ஒரு நிமிடம் எனக்கு புல்லரித்தே போனது. புத்தக திருவிழா செல்வதற்கு முந்தைய நாள் தான் அவருடைய நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். பாதியிலேயே விட்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. சிறுகதை தொகுப்பு என்பதால் மனம் அதிகமாக கலங்கவில்லை. இன்று தான் மீதத்தை வாசிக்க முடிந்தது. இதையும் அவரிடம் சொல்லும் போது சட்டென முகத்தில் அரும்பிய சிரிப்புடன் வாசிச்ச வரைக்கும் எப்படி இருந்திச்சு சொல்லுங்கோ எனக் கேட்டார். எழுத்து எழுதுபவனுக்கு அன்பை மட்டும் தான் சொல்லிக் கொடுக்கிறதோ என்ற கேள்வி எனக்குள் அப்போது தோன்றிற்று. ஏன் என்று இத்தருணம் வரை தெரியவில்லை. நான் வாசித்த அந்த தொகுப்பு தான் யுவன் சந்திரசேகரின் "ஏற்கனவே".


யுவன் சந்திரசேகரின் குள்ளச் சித்தன் சரித்திரம் என்னும் நூலை மட்டுமே வாசித்திருக்கிறேன். அதுவும் வித்தியாசமான கதைசொல்லல் முறையில் உருவான நாவல். நாவல் என்பது பெருங்களம். அங்கு மாற்று கதைசொல்லல் முறையில் ஒரு புனைவை உருவாக்க முனையும் போது பல சிக்கல்களை யூகத்தில் சந்திக்க வேண்டியிருக்கிறது. சொல்ல நினைக்கும் கதை இந்த கட்டமைப்பில் வாசகனுக்கு சென்று சேருமா ? நாம் நினைத்தவாறே கதை அவர்களின் வாசிப்பிலும் உயிர்ப்பெறுமா ? இதற்கான விடை என்னவோ ரகசியமாக மட்டுமே அந்தந்த எழுத்தாளர்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. காரணம் வித்தியாசமான கதைசொல்லல் முறை வாசகனை எப்போதும் பிரக்ஞையுடன் இயங்க வைக்கிறது. கதையை அவனுக்கு கண்ணாமூச்சி ஆக்குகிறது. இது எல்லோரிடத்திலும் எடுபடாது.

அதே நேரம் இந்த முயற்சிகளை சிறுகதையில் செய்யலாமா எனில் அது இன்னமும் கடினமான விஷயம். நாவல் முன்னமே சொன்னது போன்று பெருங்களம். அங்கே செய்யும் தோறும் வாசகனுக்கு ஏதேனும் ஒரு பக்கத்தில் கதை பிடிபடும் என்னும் நம்பிக்கை ஏற்படும். சிறுகதையோ சின்ன தளம். அங்கே பொறுமை அதிகமாக சோதிக்கப்படும். தோல்விகளுக்கே அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றது.

மெடாஃபிக்‌ஷனின் முறைமை ஏன் தேவை என்பதை அடிப்படை கேள்வியாக கொண்டால் சமகாலத்தின் ஒரு நுட்பமாகவே இதை காண்கிறேன். சின்ன குழந்தைகள் முதற்கொண்டு பாரம்பரியமாக சொல்லப்பட்டு வரும் கதைகளை கூறும்போது அங்கிருக்கும் லாஜிக்கல் குறைகளை கேள்விகளாக கேட்கிறார்கள். தர்க்கம் செய்கிறார்கள். இதை சமன் செய்யும் நுட்பத்தை மெடாஃபிக்‌ஷன் கொண்டிருக்கிறது. கதைசொல்லியே தன் கதையை ஆய்வுக்குட்படுத்துகிறான். அந்த செயலையும் கதையாக்குகிறான். அப்போது வாசகனுக்கு மிக அருகில் அக்கதை செல்கிறது.

இந்த நுட்பத்தை கையாள வேண்டுமெனில் எழுத்தாளன் நிச்சயம் கதைக்குள் வர வேண்டுமா எனும் அடுத்த கேள்வி எழுகிறது. இதை தான் யுவன் சந்திரசேகர் வேறு மாதிரி இக்கதையில் கையாண்டிருக்கிறார். கதாபாத்திரங்களை கதைசொல்லியாக்கி அங்கே நுட்பங்களை கொணர்கிறார். மேலும் இந்த நுட்பங்களை உள்ளே வரவைக்க வேறு சில கதாபாத்திரங்களையும் உருவாக்குகிறார். எப்படியெனில் நிகழும் சம்பவங்களை பன்முகப் பார்வைகளில் கூறுகிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயங்களை பகுப்பாய்கிறது. மையமாக இருக்கும் கதாபாத்திரம் கேள்விக்குள் சம்பவங்களை உட்படுத்துகிறது. ஒவ்வொரு கதையிலும் விதவிதமான கதைசொல்லிகளை நமக்கு கொடுக்கிறார் யுவன் சந்திரசேகர்.

அதே போல தொகுப்பு இருவிதமாகவே உருவாகிறது. ஒன்று ஒரே தன்மைகளை கொண்ட கதைகள். நாஞ்சில் நாடனின் கும்பமுனிக் கதைகளைப் போன்று. அவருக்கு கும்பமுனி எனில் இவருக்கு கிருஷ்ணன். அல்லது ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத கதைகளை தொகுப்பது. இதையும் தாண்டி எனில் காலவாரியாக வைப்பதாக ஏற்றுக்கொள்ளலாம். இந்த தொகுப்பில் எல்லா கதைகளிலும் மையக்கருவொன்று இழையோடுவதை எளிதில் கண்டடையலாம். அது தான் நினைவோடை. மனிதனுக்கு மட்டுமே இருக்கக்கூடிய சக்தியாக இதை கருதுகிறேன். இதை எதிர்மறையாகவும் காண வாய்ப்புகள் இருக்கிறது. ஸோர்பா தி க்ரீக் நாவலின் மையம் நிகழ்காலத்தை அனுபவிப்பது மட்டுமே. இருத்தலே வாழ்தலுக்கான பெரிய சவாலெனும் போது ஏன் அதை கொண்டாடக்கூடாது ? மனிதனுக்கு இது புறம்பானது. கடந்த காலத்தின் நினைவுகளும் எதிர்காலத்தின் கற்பனாதீத எதிர்பார்ப்புகளுமே நம்மை வாழ்வதற்கு உந்துகின்றது. இங்கு தான் பிரச்சினையே ஆரம்பிக்கின்றது. எதிர்காலம் கற்பனையில் சாதகமாகவே அமைகின்றது. கடந்தகாலமோ எண்ணற்ற கசப்புகளை சுமந்து கொண்டிருக்கிறது. மனிதன் அதைத் தான் எளிதில் அடையாளம் கண்டுகொள்கிறான். இது நிகழ்காலத்தை பெரிதுமாக பாதிக்கின்றது.

இந்த விஷயத்தை எல்லா கதைகளிலும் வித்தியாசங்களுடன் புனைவாக்கியிருக்கிறார். நம்முடைய போட்டோவைக் காணும் போது கடந்த காலத்தின் சில பகுதிகளை நினைவு கூர்கிறோம். அதே வேறு முன்பின் தெரியாத மனிதர்களின் போட்டோக்களை பார்க்கும் போது எங்கேயோ பார்த்த முகமாக இருப்பின் தன் வாழ்வில் கடந்து வந்த மனிதர்களையும் பார்க்காத மனிதராக இருப்பின் கற்பனையான மதிப்பீடுகளையும் கொள்வதை வழக்காக கொண்டிருக்கிறோம். இந்த நுண்மைதான் வாழ்வை அபத்தமாக மாற்றிக் கொண்டே இருக்கிறது. எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை விரிவாக வெவ்வேறு புனைகதைகளாக எழுதியிருக்கிறார். எந்த ஒரு கதையும் முழுமையான காரணியை பின்புலமாக கொண்டிருக்கவில்லை. ஒருவேளை நினைவோடைகளுக்கு காரணம் இருப்பின் அவை நிகழ்பவையாக மாறிவிடும். அதைப் போலவே தான் இக்கதைகளும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. 

பெயர்கள் மூலம் அல்லது சில சம்பவங்களின் மூலம் ஒரு விஷயத்தை நிறுவி கதை முடியும் போது அந்த விஷயத்தை கதைசொல்லியே முறியடிக்கிறார். அப்படி செய்யும் பட்சத்தில் கதையின் மையம் காணாமலாகிறது. இருந்தாலும் கதையின் போக்கு பிசகாமல் செல்வது தான் எழுத்தின் வெற்றி.

இரண்டு கதைகள் உலகளாவிய அனுபவத்தை எனக்கு கொடுத்தது. ஒன்று சோம்பேறியின் நாட்குறிப்பு. இது கட்டுரை வடிவிலான சிறுகதை. இதை மீறல் சிறுகதை என்றும் சொல்கிறார்கள். (கோபிகிருஷ்ணன் தொகுப்பில் கண்டது) தாவோ மியான் என்பவரைப் பற்றிய நூலொன்றைச் சார்ந்த விமர்சனமாக நீள்கிறது. அதன் முலம் அவரின் உருவத்தை வார்த்தைகளில் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உருவாக்குகிறார். இதன் அமைப்பு கடினமானது. காரணம் கட்டுரை என வரும் போது நம்பகத்தன்மையே முதன்மையாகிறது. ஆக நம்பகத்தன்மையுடன் கூடிய புனைவுக்கட்டுரையை உருவாக்க வேண்டும். நாவலில் பயன்படுத்தப்படும் மொழி கட்டுரைக்கு ஒவ்வாது. அதே நேரம் சிறுகதையின் மொழி கட்டுரைக்கான உணர்வை அறவே தராது. இந்த எல்லா அரணையும் சாதாரணமாக உடைத்து செல்கிறது இக்கதை.

அடுத்து விருந்தாளி. காகத்திற்கும் மனிதனுக்கும் இடையே நிகழும் உரையாடல் தான் இக்கதை. இதில் காகம் சார்ந்து மனிதர்கள் கொண்டிருக்கும் கற்பனைவாத விஷயங்களையும் மனிதனையும் காகத்தையும் இணைத்து உருவாக்கப்படும் பிம்பங்களையும் ஒருசேர உடைக்கிறார். மொழியே மனிதனுக்கு எதிர்மறைகளை கற்றுக் கொடுக்கிறது என்பதை அழகாக கூறி இரு விலங்குகளுக்குள்ளான உரையாடலாக மாற்றுகிறார் யுவன்.

இத்தொகுப்பின் முரண் சில கதைகள் கொண்டிருக்கும் நீளம். எல்லாமே வேறுபட்ட அனுபவங்களின் புனைவுகளாக இருப்பினும் ஒரே தலைப்பினுள் வரும் போது அவற்றின் நீளமே பிரதானமாகிறது. உதாரணம் நூற்றிச் சொச்சம் நண்பர்கள் என்னும் சிறுகதை. ஒரு கதையில் கையாளப்பட்டிருக்கும் நுட்பம் அல்லது கரு மற்றுமொரு கதையிலும் தென்படுகிறது. நுண்மையான மாற்றங்களை மட்டுமே அவர் செய்திருக்கிறார். அது பெரிதாக தெரிவதில்லை. உதாரணம் புகைவழிப்பாதை சிறுகதையும் தெரிந்தவர் சிறுகதையும். அறிவியலின் பல விஷயங்களை சிறுகதையினுள் கொண்டு வருகிறார். அந்த குறிப்பிட்ட கதையின் மையக்கருவுடன் தொடர்புடையதாக இருப்பினும் அறிவியல் விஷயங்கள் மட்டும் தனித்து தெரிகின்றன.

குறிப்பிட்ட கதையொன்றில் கேள்வியொன்றை எழுப்புகிறார் - ஆழம் என்பதும் உயரம் என்பதும் நிஜமாகவே வேறு வேறு விஷயங்கள் தாமா ? இந்த கேள்விக்கான சிந்தனையின் தோற்றமாகத் தான் இத்தொகுப்பு முழுமையிலும் இருக்கிறது. புனைவும் அதை கட்டமைத்தலும் வழிநடத்தும் கதைசொல்லலும் செல்லக்கூடிய பன்முக சாத்தியப்பாடுகளை இத்தொகுப்பு முன்வைக்கிறது. எழுத முனைபவர்களுக்கு நிச்சயம் இந்நூல் பன்முக கதைசொல்லியின் திறவுகோலாக இருக்கும்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக