மீனவனுக்கேயான குரல்கள்

நான் மலைகள் சூழ்ந்த பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆனாலும் மலைகளைப் பற்றிய முழுப்புரிதல் என்வசம் இல்லை. மலைகளுக்கு செல்லும் போதெல்லாம் மனதோரம் எழும் பரவசம் தான் எப்போதும் என் நாஸ்டால்ஜியாவாக அமைந்திருக்கிறது. எல்லா நினைவுகளையும் ஒருசேர இணைக்கும் விஷயம் மலைகள். இதிலிருந்து என்னால் எப்போதும் தப்பிக்க முடிவதில்லை.

கடலைப் பற்றியபெரிதான புரிதல் எனக்கில்லை. ஒரு முறை மட்டுமே மீனவனை அருகில் கண்டிருக்கிறேன். ராமேஸ்வரம் சென்றபோது அருகில் படகின் மூலம் கடலுக்குள் செல்லலாம் என்றனர். அதுதான் கடலுடன் எனக்கு ஏற்பட்ட முதல் பரிச்சயம். படகு ஆடிக் கொண்டே இருந்தது. மனம் முழுக்க பயம். கடல் என்றாலே பயம் என்னும் பிரமை எனக்குள் தோன்ற ஆரம்பித்தது. நடுக்கடலருகில் செல்லும் போது படகை ஓட்டியவர் கீழே பவளப்பாறைகள் இருக்கும் இறங்கு தம்பி என்றார். ஏற்கனவே எல்லோரும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தோம். எங்களுடன் இன்னுமொரு குடும்பமும் அருகில் இருந்தனர். அவர்களுக்குள்ளேயும் பயம். அந்த படகோட்டியோ கைவசம் மூச்சுவிடுவதற்கான சின்னதான குழாய் ஒன்றை வைத்துக் கொண்டு நான் பாத்துக்கறேன் இறங்கு தம்பி என்றார். எனக்குள் நம்பிக்கை எழவில்லை. அவர் செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நீர் அவருக்கான வீடு என்பது போல குதித்தார். கீழே பவளப்பாறைகள் இருக்கின்றன என்றார். அதிலிருந்த சின்னதான கல்லை எடுத்துக்  கொடுத்தார். கொடுக்கும் போது இவ்ளோ தூரம் வந்திட்டு இறங்காம இருக்கீங்க தம்பி. வந்ததுக்கு இதையாவது எடுத்திட்டு போங்க என்று பவளப்பாறைகளைப் பற்றி நிறைய கூறினார். எல்லாம் என்னிடமிருந்து மறந்து போயின. நினைவில் நின்றதெல்லாம் அந்த பவளப்பாறை மட்டுமே. அதிலிருந்து வெண்ணிறத்தில் சின்னதான நண்டொன்றும் வந்தது.

இது நிகழும் போது என் வயது எட்டு அல்லது ஒன்பது. அதன்பின் எப்போதும் கடல்விரும்பியாக இருந்தேன். கடலைப் பார்க்கும் போதெல்லாம் நீச்சல் தெரியாததன் குற்றவுணர்ச்சி இன்னமும் என்னை குத்திப் பிடுங்கும். கடல் ஒரு வீடு. அப்பாவியான வீடு. இந்த இரண்டாம் கூற்று சொல்வதன் காரணம் சமீபத்தில் வாசித்த நூல். அதை எழுதியவர் வறீதையா கான்ஸ்தந்தின். அவர் எழுதியஎன்னைத் தீண்டிய கடல்என்னும் நூலே கடல் சார்ந்த பன்முகப் பார்வைகளையும் கடல் எப்படி அப்பாவியகிறது என்பதையும் அறிய பேருதவியாய் இருந்தது. மனிதனைப் போல குரலிருப்பின் கடல் எப்போதோ போராட்டங்களில் இறங்கியிருக்கும். அத்தனை அட்டூழியங்கள் கடலைச் சுற்றி நிகழ்ந்திருக்கின்றன. கடலால் பொறுமையுடன் வேடிக்கை பார்க்க முடிகிறது. ரத்தங்களையும் அரசியல் வடுக்களையும் தன் மேல் சுமந்து கொள்ள முடிகிறது, ஆழிப்பேரலையாய் அப்பாவிகளிடம் தன் கோபத்தை காட்ட முடிகிறது. அப்படிப்பட்ட அப்பாவியான கடலைத் தான் இந்நூல் காட்டுகிறது.


இவ்வளவு கூறினாலும் இந்த நூல் கடலைப் பற்றி எதையும் கூறுவதில்லை மாறாக அதிலேயே வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் மீனவர்களை மையப்படுத்துகிறது. எல்லை பேதமற்ற மீனவர்களை மையப்படுத்துகிறது. மீனவர்களை சுரண்டொழிக்கும் அரசியல் அராஜகங்களை பட்டவர்த்தனமாக்குகிறது. மீனவர்களின் வரலாற்றையும் கூறுகிறது. ஒரு ஆக்ரமிப்புகள் சமீபமாக தோன்றியதாக நிச்சயம் இருக்காது. அதன் வேர்களிலிருந்து தொற்று நோயைப் போல தொடர்ந்து வரும் விஷயங்கள் தான் அராஜகங்களை ஏற்றுக் கொள்ளும் மனமாக மனிதனை மாற்றியிருக்கக் கூடும் என்று கூறுகிறார். அதன்படி பன்முக பார்வைகளில் இருக்கும் முக்குவர், பரதவர், கிறித்துவர்களின் ஆக்ரமிப்பு, அரசியலின் தாக்கம், தனியார் மையமாக்கும் மீனவத்துறை, புறக்கணிக்கப்படும் மீனவன் என்று நெடும் வாதங்களை முன்வைக்கிறது. பிரதானமாக முன்வைக்கும் விஷயங்களை பார்த்தால். . .

1. நெத்திலி மீனை வைத்து மீனவர்களின் தேவையை விளக்க முனைகிறார். அரசு மானியமாக மீனவர்களுக்கு ஒதுக்கும் பணம் மட்டுமே போதாது. மாறாக அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். ஆழிப்பேரலைக்கு பின்னான கடலோரப் பகுதிகளை அநேகம் பேர் தத்து எடுத்துக் கொண்டனர். அது வியாபார யுக்தியே ஒழிய மீனவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டுருவாக்கும் செயல்கள் அல்ல. வாழ்வாதாரத்தை உயர்த்த அத்தியாவசியத்திற்கும் குறைவான இடங்களை வழங்குதல் மட்டும் போதாது. மாறாக அவனின் வேலைக்கு தேவையான படகுகள், மீன்பிடிக்கும் வலைகள் என எல்லாவற்றையும் அளிக்க வேண்டும். இந்த தன்னார்வ மனிதர்களைவிட அரசாங்கம் இதை செய்திருக்க வேண்டும். அதை தவறிருக்கிறது. அதற்கு தான் நெத்திலி மீனை கூறுகிறார். நெத்திலி மீன் மழை காலங்களில் மட்டுமே வரும். அதை கருவாடாக்க வெயில் தேவைப்படுகிறது. அது கிடைக்காத பட்சத்தில் செயற்கை முறையிலான அம்சங்கள் தேவைப்படுகின்றன. இது தான் மீனவனின் அடிப்படை தேவை. இது நிறைவேறவில்லை.

2. அடுத்து மீனினால் மட்டும் நாட்டிற்கு கிடைக்கும் லாபம் 32000 கோடியாம். இத்தனையிலிருந்து மீனவர்களின் நிலை மேலே வராததன் காரணம் என்ன ? மீனவர்களின் அவலங்களை பற்றி பேசுவதற்கு அவர்கள் படும் இன்னல்களை சிறிதளவிலேனும் அதைப் பற்றி பேசுபவர்கள் அறிந்திருக்க வேண்டும். அதற்கென தனியான துறையும் அரசின் உயர்மன்றத்தில் நாற்காலியும் வேண்டும். இரண்டுமே நம் நாட்டில் இல்லை!

3. மீனவர்கள் மீன்களை பிடிக்க கடலினூடே செல்லும் போது எல்லைகளை கடக்க நேரிட்டால் உயிர் கூட்டை கடந்து விடும் அபாயம் இருக்கிறது. இந்த எல்லைகளை எப்படி வரையறுப்பது என்பதும் கண்டறியமுடியாதது. படகுகளில் செல்லும் போது காற்றடித்தால் கூட இவர்கள் குறிப்பிடும் எல்லைகளை கடக்க நேரிடும். இது தற்செயல் நிகழ்வு. எடுக்கப்படும் உயிருக்கு தெரியுமா தற்செயல் எனில் என்னவென்று! இதற்கு காரணமாக இருக்கும் இருநாட்டினரான இந்தியா-இலங்கை மௌனமாக இருப்பது தான் மீனவர்களுக்கு கேள்விக்குறியாக இருப்பது

4. பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள் பிடிக்கப்படுகிறார்கள். பாகிஸ்தானில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் பிடிக்கப்படுகிறார்கள். அவர்களை உடனே மீட்க இந்தியா மட்டும் தயக்கம் காட்டுகிறது. இந்த அவல நிலை ஏன் ? இதைப் பற்றி பேசவாகவேனும் மீன்வளத்துறைக்கும் மீனவ சமூகத்திற்குமான பிரதிநிதி தேவை என்கிறார். இந்த இடத்தில் யாதொரு நாட்டையும் ஆசிரியர் எதிரியாக்குவதில்லை. மாறாக அவர்கள் நாட்டிலிருக்கும் மீனவர்களுக்கும் இந்நிலை ஏற்படலாம் என்று மீனவர்களுக்கான பொதுக்குரலை எழுப்புகிறார்.

5. ஆழிப்பேரலைக்கு பின் பூர்வக்குடி மீனவர்கள் காணாமல் போகலாயினர். இந்நிலையில் மீன்பிடிப்பதில் வல்லவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் கடலைப் பற்றிய போதிய அறிவு இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். எல்லா மீன்களும் சுரண்டப்படுமாயின் மீனவர்களுக்கு தொழிலே இல்லாமல் போய்விடும். ஆக பூர்வக்குடி மீனவர்களிடமிருந்து வித்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு வர வேண்டும். அல்லது அரசே முன்னெடுத்து கடலைப் பற்றிய விஷயங்களை கற்றறிவிக்க வேண்டும்.

6. சார்க் மாநாடு ஒற்றுமைகளுக்காக நிகழும் மாநாடாக இருந்தும் அங்கு மீனவர்களின் பிரச்சினை சார்ந்து குரலெழுப்ப வாய்ப்பில்லாதது ஏன் ?

இந்த எல்லா கேள்விகளையும் ஆதாரங்களுடனும் கணக்கெடுப்புகளுடனும் வறீதையா முன்வைக்கிறார். இதன் ஆணிவேர்களை அறிய வரலாற்று பக்கமும் சென்று கரைப்பகுதி மக்களின் வரலாறுகளையும் அங்கிருந்து ஒடுங்கிப் போதலின் மனநிலையையும் மிகத்தெளிவாக விளக்குகிறார்.

வெறும் கேள்விகளோடு அல்லாமல் மீனவர்களுக்கு அரசு ஆற்ற வேண்டிய விஷயங்களையும் முன்னெடுத்துக் கூறியிருக்கிறார். இத்தொகுப்பின் கடைசி அத்தியாயம் முழுக்க அவரின் நிறைவேற்ற வேண்டிய செயல்திட்டங்களாக இருக்கின்றன. அரசியல் சுரண்டல்களைத் தாண்டிய மீனவ சமூகத்தை உருவெடுக்க அவரின் திட்டங்கள் நிச்சயம் வழிவகுக்கும். இந்நூல் சொல்லும் எல்லாவித சுரண்டல்களும் இருத்தலையே கேள்விக்குள்ளாக்குகின்றது. பூர்வக்குடி தொழிலை விட்டொழித்து புலம்பெயர்கின்றனர் மீனவர்கள். அரசு வருவாயை எதிர்நோக்குகின்றது!

என்னைப் போன்று கடலினூடே அதிகம் பரிச்சயமில்லாத மனிதனுக்கு இந்நூல் கடலலைகள் எல்லாம் கோபத்தை சுமந்து கொண்டு வரும் ரௌத்திரமொழியோ என்று தோன்ற வைக்கிறது. மாசடைந்திருக்கும் கடலால் தான் நம் தேசம் சூழ்ந்திருக்கிறது. மாசிற்கு காரணமாகவே தேசம் அமைந்திருப்பது கடலின் விதி தான் போலும்!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக