தெய்வம் மானிஷ ரூபேனா

நம்மைச் சுற்றியிருக்கும் எல்லா மனிதர்களையும் பாருங்கள். உடலுழைப்பில் ஒவ்வொருவரின் திறனும் தனிப்பட்டே தெரியும். அதே நேரம் அவர்களின் மனம் எப்படி செயல்படுகிறது என்று யூகிக்க ஆரம்பித்தால் நம்ப முடியாத அளவு அது அல்லலுறுகிறது என்பதை எளிதில் கண்டறிந்துவிட முடியும். அதற்கு மூலக்கூறாக இருப்பது காலத்திற்கு இடையே ஊடாடும் நினைவுகளும் ஊகங்களும் தான். கடந்தகாலத்தை சுமந்து கொண்டே திரிகிறான் மனிதன். அது இன்பமானதாக இருப்பின் கவலையில்லை. இவர்கள் சுமந்து செல்வது எல்லாம் கசப்புகளையும் வன்மங்களையும். இது மீண்டும் மனதை நிம்மதியறச் செய்வனவே. இந்த அபத்த சுழற்சியை இயல்பாக்கிக் கொண்டு மனிதன் திரிந்து கொண்டிருக்கிறான்.

இந்த சுழற்சியில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்னும் பிரக்ஞை என்னவோ விழிப்புடன் தான் இருக்கிறது. இந்த உணர்வு அதிலிருந்து எப்படி விடுபடலாம் என்னும் எண்ணத்தை தூண்டுகிறது. பலவழிகளில் யோசிக்கிறான். எளிதில் இது தான் தப்பிப்பதற்கான வழி என்று அவன் அறிந்து கொள்வது மதமும் கடவுளும். இவ்விரண்டும் மனிதனுக்கு எளிதில் ஆசுவாசத்தை கொடுத்துவிடுகிறது. அதற்கு காரணங்கள் இருக்கின்றன. சக மனிதனிடம் தன் குறைகளை கூறினால் அம்மனிதன் தர்க்கம் செய்து குறையில் இருப்பவனின் மேலேயே குற்றம் சுமத்துகிறான். வருத்தம் என்னும் உணர்வு தவறான எண்ணத்தால் நேரத்தை விரயம் செய்துவிட்டேனே என்று குற்றவுணர்ச்சியாக மாறிவிடுகிறது. சுயதர்க்கங்களின் மூலம் ஒரு முடிவுக்கும் வருகிறான். அந்த முடிவை மனதினுள் பதித்து வைப்பதன் மூலம் அடுத்தவர்க்கும் ஆசிரியர் ஆகிறான். எப்படிப்பட்ட நிலையிலும் அந்த முடிவையே உண்மையென நம்பி நிற்கிறான். இதன் சுருக்கம் அவன் கொள்கைவாதியாகிறான்.

அவனாக உருவாக்கும் விஷயமல்ல அது. மதம் அவனை கொள்கைவாதியாக்குகிறது. இந்த மதத்தை எதிர்ப்பதற்கு பலர் கிளம்பியிருக்கின்றனர். அதற்கான மிகப்பெரிய வரலாற்று ஆவணங்கள் இருக்கின்றன. உற்று நோக்கினால் எந்த ஒரு பிரிவும் மதத்தை எதிர்க்கவில்லை. மனிதகுலத்தின் உச்சபட்ச கடமையே வாழ்தல் தான். அதற்கு தோதாக மதம் இருப்பின் இருந்துவிட்டு போகட்டுமே என்னும் எண்ணமே எல்லோரினுள்ளும் இருக்கும். ஆனால் அதே மதத்தின் தலைமையில் நாடு முழுக்க நிகழும் அக்கிரமங்களையும் பிரிவினைகளையுமே பலர் எதிர்த்தனர். இந்த எதிர்ப்பிற்கு மதத்தை பற்றிய புரிதல் முக்கியமாக போகிறது.

இதே புரிதலைக் கொண்டு மக்களுக்கு வேறு ஒரு ஆன்மீக உலகை காட்ட நினைத்தவர் ரஜ்னீஷ் என்னும் ஓஷோ. இந்த மதங்களும் மக்கள் அதன்மீது கொண்டிருக்கும் நம்பிக்கைகளின் அடிப்படைகள் மீதும் சில மாற்றங்களை மட்டுமே செய்கிறார். அவர்களின் வாயிலாகவே சென்று ஆன்மீகத்தின் திறவுகோலாக அமைந்திருக்கிறார். அவர் எழுதிய நூலொன்றை சமீபமாக வாசித்தேன். அது தான்ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை


மதங்களால் எழும் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் மக்களின் மனதில் வேரூன்றியிருக்கும் அடிப்படை கொள்கையில் இருக்கும் பிழையே என்கிறார். எந்த ஒரு மதமும் அது தோன்றியதற்கு காரணமாக யாதொரு மனிதனையும் வைத்திருப்பதில்லை. பௌத்தம் புத்தரிடமிருந்தோ கிறித்துவம் இயேசுவிடமிருந்தோ வந்தது அல்ல. மாறாக அவர்களின் உபதேசங்களை இந்த பெயர்கள் குறியீடுகளாக்கியிருக்கின்றன. இங்கு தான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. அப்படி குறியீடுகளாக்கப்படும் போது மக்கள் அந்த குறியீடுகளின் பின்னே செல்ல ஆரம்பிக்கின்றனர். அப்போது மதம் அடிப்படையாக கொண்டிருக்கின்ற கோட்பாடுகள் காலாவதியாகிப் போகின்றன.

தெய்வம் வேறு தெய்வீகத்தன்மை வேறு. முதலாவது மேலே சொல்லப்பட்ட குறியீடு. இரண்டாவதோ எல்லோராலும் அடையக்கூடிய தன்மை. இந்த இரண்டாவது தான் எல்லா மதங்களும் சொல்வது போல நீக்கமற நிறைந்திருக்கிறது. உலகம் முழுக்க என் வீடு என்று நினைத்து பார்க்கும் தருணத்தில் எண்ணற்ற இயற்கை வளங்கள் இந்த அனுபவத்தை பெருவாரியாக அளிக்கின்றன. இதை எப்போது உணரலாம் என்னும் கேள்வி எழும்போது இப்பதிவின் ஆரம்பத்தில் எழுதிய வார்த்தைகள் உதவுகின்றன. மனதை சூழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற சிக்கல்களை நீக்கிவிட்டு பார்க்கும் போது நிதர்சனமான விஷயங்கள் நமக்கு புலப்படுகின்றன. இயற்கையால சூழப்பட்ட இவ்வுலகின் அங்கமென நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும். அனுபவிக்க முடியும். அதற்கு உதவும் விஷயங்கள் எல்லாம் நல்ல இலக்கியம், கலை, இசை மற்றும் தியானம். இதில் கடைசியாக இருக்கும் தியானம் சில ஆன்மீக சாரங்களை கொண்டிருக்கின்றன.

புத்தர் வருவதற்கு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆதிநாதர் என்றொருவர் தோன்றியிருக்கிறார். அவர் கடவுளை அப்போதே எதிர்த்திருக்கிறார். எதிர்ப்பதற்கு காரணமாக அவர் சொல்வது ஒட்டு மொத்த பிரபஞ்சத்தை ஒருவன் படைத்திருக்கிறான் எனில் எண்ணிலியாக இருக்கும் காலவெள்ளத்தில் அவன் எங்கு இருந்திருப்பான் என்னும் அடிப்படை எதிர்தர்க்கத்தை முன்வைத்திருக்கிறார். மையமான விஷயத்தை நீக்கும் போது அவ்விடத்தில் வேறு எதையேனும் வைத்து சமன்படுத்த வேண்டும். அதை அவர் செய்யவில்லை. மாறாக புத்தர் தன் காலத்தில் தியானத்தை கொண்டு வெற்றிடத்தை நிரப்புகிறார்.

இந்த தியானமும் மையமற்றதாய் இருக்க வேண்டிய கட்டாயத்தை கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இதை ரஜ்னீஷ் தன் தியான வகுப்புகளில் செய்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு இந்த வகுப்புகளுக்கு அவரும் வந்து தியானம் செய்பவர்களுடன் இணைந்து தியானம் செய்திருக்கிறார். ஒருமுறை அவர் அமரும் நாற்காலி மட்டும் வைக்கப்படுகிறது. அவரின் குரல் சொல்கிறது. நான் எப்போது வேண்டுமென்றாலும் இவ்வுலகை விட்டு நீங்கிப் போகலாம். அப்போது தியானத்தை கைவிட்டுவிடுதல் கூடாது. நான் உங்கள் முன்னே அமர்ந்திருக்கும் போது எனக்காக தியானத்தை செய்கிறீர்கள். நான் இல்லாமல் போகும் தோறும் நீங்கள் தியானத்தை தொடர்வீர்களாயின் அதுவே என் பயிற்சிகளுக்கு உயிரூட்டக்கூடியதாய் இருக்கும் என்கிறார்.

இந்த தியானம் எல்லோராலும் அனுஷிக்கப்படுமா என்னும் கேள்வி எழும்போது தான் ஆன்மீகத்திலும் நடைமுறை வாழ்க்கையிலும் பிளவுண்டு கிடக்கும் உலகை விளக்குகிறார். கிழக்கும் மேற்கும் எப்போதும் சந்திக்க முடியாத வகையில் பிரிந்து நிற்கிறது என்கிறார். எப்படியெனில் மேற்கில் இருப்பவர்கள் முழுக்க முழுக்க தனியே வாழ நேர்ந்தவர்கள். அவர்களின் வாழ்க்கை முறை ஆரம்பத்திலிருந்தே தனிமையில் தள்ளப்பட்டிருக்கிறது. கிழக்கில் எல்லாமே கூட்டு வாழ்க்கை முறை. கூட்டுக் குடும்பங்கள் சமீபத்தில் தான் கலைய ஆரம்பித்திருக்கிறது. அப்படியே இருந்தாலும் எங்கும் கூட்டங்கள் கூடிக் கொண்டே தான் இருக்கின்றன. இதனால் தான் ஆதவனால் mob psychology எழுத முடிந்தது போலும்! மேற்கில் இருப்பவர்கள் தனிமையிலிருந்து விலகி கூட்டம் தேடி ஓடுகிறார்கள். கிழக்கில் இருப்பவர்களோ எப்படா கூட்டத்திலிருந்து விடுபடுவோம் என்று தனிமை தேடி செல்கிறார்கள். நம் சந்நியாசிகள் இமயமலைக்கு செல்வதை உதாரணமாக சொல்கிறார். மேற்கில் இருப்பவர்களுக்கு கூட்டு பிரார்த்தனை முறையை எடுத்துக்காட்டு ஆக்குகிறார்.

இந்த இரண்டையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். ஏன் ஒன்றிணைக்க வேண்டும் ? இங்கு வேறு இரண்டு முரண்பட்ட விஷயங்களை இணைக்கிறார். அது தான் ஆன்மீகமும் அறிவியலும். அறிவியல் எல்லாவற்றிற்கும் ஆதாரம் தேடுகிறது. மக்களுக்கு உண்மையை கூறுகிறது. அறிவியல் முழுக்க முழுக்க புறப்பொருள் சார்ந்தது. மனித வாழ்க்கை பொருளாலும் பிரக்ஞையாலும் உருவாகியிருக்கிறது. எண்ணற்ற நாகரீகங்கள் இவ்விரண்டாலும் தோன்றப்பட்டன. அறிவியலாளன் உலகிற்கு பல்வேறு பொருட்களை கொடையாக அளிக்கிறான். அவனுள்ளே இருக்கக்கூடிய எண்ணம் அல்லது பிரக்ஞை எத்தனை சதவிகிதம் உள்ளது ? இந்த கேள்விக்கு பதில் சொல்வது தான் ஆன்மீகம். அகம் சார்ந்த அறிவியல் தான் ஆன்மீகம் என்கிறார். உலகில் இருக்கும் எல்லா பருப்பொருளுக்கும் விளக்கம் அளிக்க முனையும் புறம்சார் அறிவியல் ஒரே பெயரில் அழைக்கப்படும் போது ஏன் அகம் சார் அறிவியல் மட்டும் பல்வேறு பெயராலும் முறைகளாலும் வகைபடுத்தப்பட்டு இருக்கிறது ? அதனால் நான் அதை ஒன்றிணைக்கப் போகிறேன் என்று முரண்பட்ட விஷயங்களை இணைக்கும் தியான முறைகளை கொண்டுவருகிறார்.

மக்களை இந்த தியானம் நோக்கி திருப்புவது எளிதான காரியமல்ல. சிறுவயதிலிருந்து மதத்தை நிந்திப்பவனாகவும் நாத்திகனாகவுமே ஓஷோ(ரஜ்னீஷ் பிற்காலத்தில் பெயரை மாற்றி வைத்துக் கொள்கிறார்) அறியப்பட்டிருக்கிறார். பல்வேறு மத போதகர்களிடம் தர்க்கங்களை செய்திருக்கிறார். இப்படியே அறியப்பட்ட ஒருவரால் நிச்சயம் பெருங்கூட்டத்தை திருப்ப முடியாது என்பதால் மதத்தின் வாயிலாகவே அம்மதம் கூற முற்பட்ட தியானங்களை மக்களுக்கு எடுத்து கூறியிருக்கிறார். இதை ஊடகங்கள் நிச்சயம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இராது. அவர்களின் பலவிதமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்.

அதில் என்னை ஈர்த்த கேள்வி ஒன்றே ஒன்று தான். சந்நியாசியாக வாழ்ந்த அவர் பணகாரனிற்குரிய வாழ்க்கையையே மேற்கொள்கிறார். அதை வினவும் போது ஆன்மீகமே பணக்காரர்களுக்கு உரியது என்கிறார். ஏழையின் மனம் எப்போதும் தேவைகளை தேடியே செல்லும். பணக்காரன் மட்டுமே நிறைய செல்வம் இருந்தும் தேவையானது கிடைக்கவில்லையே, அப்படி நம் தேவைதான் என்ன என்று அறிய ஆன்மீகத்திடம் வருகிறான். ராமர், புத்தர் என எல்லோருமே செல்வந்தர்கள். இந்த செல்வம் பொருளாலும் இருக்கலாம் அறிவாலும் இருக்கலாம் என்கிறார்.

நூலின் கடைசியில் இருக்கும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு சுவாரஸ்யம் மிகுந்ததாய் இருக்கிறது. மட்டி ரஞ்ச் என்னும் பகுதியில் அவரின் பிற்கால வாழ்க்கையும் அதிலிருக்கும் பல வஞ்சகங்களும் நாவல் வாசிப்பை போலவே ஈர்த்து செல்லக்கூடியன. தர்க்கம் வேண்டாம் என்று சொல்லி அவர் செய்யும் பல தர்க்கங்கள் ரசிக்கக் கூடியதாய் இருக்கின்றன. அவர் நிகோஸ் கஸான்சாகிஸ் எழுதிய ஸோர்பா தி க்ரீக் என்னும் நாவலின் நாயகனையே வாழ்க்கைக்கான முன்னுதாரணமாக வைக்கிறார். அவன் எல்லா முரண்களுக்குள்ளும் வாழ்பவன். ஆன்மீகம் சோகத்திலிருந்து சந்தோஷத்திற்கும் நிம்மதிக்கும் மனிதனை கொணர்ந்துவரும் பண்டமல்ல. மாறாக ஆன்மீகமே கொண்டாட்டத்திற்குரிய விஷயம் என்று கூறுகிறார். அதை நானாவித துவந்துவங்களின் மூலம் விளக்குகிறார். எல்லா விளக்கங்களையும் எடுத்துக்காட்டுகளுடன் கையாள்கிறார்.

இதன் மொழிபெயர்ப்பில் தொய்வு ஒன்றிருக்கிறது. நூல் ஆன்மீகம் சார்ந்ததாக இருப்பதால் இருக்கக்கூடும் என நினைக்கிறேன். ஒரே சொற்றொடர்கள் திரும்ப திரும்ப பாராயணம் போல இடம்பெறுகின்றன. எல்லோருக்கும் ஏதோ ஒரு பகுதி நிச்சயம் பிடிக்கும் என்னும் வகையில் நேர்த்தியாக இருக்கிறது ஓஷோவின் கருத்துகள்.

பி.கு 1 : இவ்வளவு கூறியிருந்தாலும் ஓஷோவை எனக்கு பிடிக்கவில்லை. மேலே கூறியிருப்பதெல்லாம் ஐநூறு பக்க நூலில் எனக்கு பிடித்த சிறுபகுதிகள். பிடிக்காததற்கு காரணம் தேடலாம் என்று யோசிக்கிறேன். நானும் ஸோர்பாவை வாசித்திருப்பதால் காரணம் தேடும் எண்ணத்தை கைவிட்டுவிடுகிறேன்.

பி.கு 2 : தலைப்பில் இருக்கும் தெய்வம் என்னும் சொல் இப்போது வேறு அர்த்தத்தை கொடுக்கிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக