அகதி மனத்தின் சிறுவரலாறு

எழுத்தை பிடிக்காமல் போவது வேறு அதை கண்டுகொள்ளாமலே இருப்பது வேறு. சென்னையின் புத்தக திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் எல்லா ஃபேஸ்புக் வாசகர்களின் பக்கங்களிலும் தத்தமது ப்ளாக்குகளிலும் இன்ன இன்ன நூல்களை வாசியுங்கள் என்று அவரவர்களின் அனுபவங்களுக்கேற்ப பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். வாசிப்பு ஆழமான நீளமான தேடலைக் கொண்டது. அந்த தேடலுக்கு உந்துதலாகவே இந்த விஷயம் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் பகிரவே இல்லாத புதிய நாவல்கள் எதுவாகவெல்லாம் இருக்கும் என்று தேடினேன். இரண்டு நாவல்கள் என் சிற்றறிவிற்கு எட்டியது. அதில் ஒன்றை தான் இப்போது சொல்லவிருக்கிறேன். இன்னொன்றை நிச்சயம் சொல்ல மாட்டேன்.

நற்றிணையில் மூன்று நாவல்கள் வெற்றி பெற்றன அடியேனுடையதையும் சேர்த்து. அதில் பரவலாக எல்லோர்க்கும் தெரிந்தது இரண்டாவது பரிசு பெற்ற லக்ஷ்மி சரவணக்குமாரின் கானகன் தான். முதலாவது பரிசு பெற்ற கடவுச்சீட்டை யாரும் பெரிதாக எழுதவில்லை என்பதையே இணையத்தில் தேடும்போது அறிந்தேன். மனம் மிகுந்த வருத்தமே அடைந்தது. ப.சிங்காரம் பெயரில் கொடுக்கப்பட்ட பரிசில் முதல் பரிசிற்கு மிகச் சரியான தேர்வு இந்த கடவுச்சீட்டு. ப.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் நாவல்களில் இருக்கும் அங்கதம் இதில் குறைவு. அதையும் இணைத்து விரிவாக எழுதியிருந்தால் எல்லோரின் பார்வைக்கும் பரவலான பேச்சிற்கும் சென்றிருக்கும். இந்நாவல் உருக்கமான கதையை அதுவும் காலத்தால் நீளமான கதையை மிக அழகாக பேசுகிறது.


நாவலின் முதல் அத்தியாயம் வாசிக்க மிக மெதுவாக செல்வது போல் தான் இருக்கும். ஆனால் சில வரிகள் கடந்த உடனேயே இலங்கைத் தமிழின் வசீகரத்துடன் இணைத்துக் கொண்டு பயணிக்க வைக்கிறார் ஆசிரியர். மை நேம் இஸ் கான் படத்தில் ஒரு வசனம் வரும். நாயகனைப் பார்த்து இத உன் வீடா நெனச்சுக்க என்பார் ஒரு அம்மணி. அதற்கு நாயகன் இது என் வீடா இல்லாதப்ப நான் எப்படி நெனைக்க முடியும் என்று கேள்வியை முன்வைப்பார். இதுதான் இந்நாவலின் அடிநாதம்.

தமக்கு சொந்தமான இடத்தை விட்டு வெளியூருக்கு செல்கிறோம். அப்போது நம் சொந்த இடத்தின் அடையாளங்கள் அழிந்து போயின் நாம் புற உலகத்தால் அகதிகள் என்று அழைக்கப்படுகிறோம். அது மட்டுமே அகதி என்னும் பதத்திற்கு போதுமானதா ? வீட்டுச்சாப்பாட்டை பண்பாட்டை பழக்கங்களை மறந்து மறக்கடிக்கப்பட்டு நமக்குள்ளேயே நிகழும் ஒரு அநியாயம் தான் இந்த அகதி என்னும் நிலை. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு போகும் போதே மனிதன் அகதியாக உணர்கிறான். அப்படியெனில் இலங்கையிலிருந்து அகதிகளாக வேற்று நாடுகளுக்கு சென்ற எண்ணிக்கையில்லா மனிதர்களின் நிலையை யோசிக்க முடிகிறதா ? வரலாற்று சம்மந்தமான இந்த நிலைக்கு தள்ளப்பட்ட மனிதர்களின் மனதை எந்த ஒரு உலகளாவிய நிறுவனமும் சமாதானம் செய்ய முடியாது. அவர்கள் மனத்தால் இலங்கையில் வாழ்பவர்கள். உடலை பேணவே வேறு இடங்களை நோக்கி செல்கிறார்கள்.

அப்படி செல்வது எதை பொருட்டு ? வெறும் வாழ்தல் மட்டும் தானா ? இந்த கேள்விக்கான பதில் மர்மமானதாக இருக்கிறது. ஏதோ ஒன்றை மனம் நிலைநாட்ட அலைவுறுகிறது. தன் ஊரிலிருந்து கடத்திவரப்பட்ட வாழ்வியலை எப்படியேனும் அந்நிய கலாச்சாரத்துடன் கலக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று அல்லலுறுகிறது. போராடுகிறது. தோல்விகளை சமாளிக்க முடியாமல் கலங்குகிறது.

சொந்த நாட்டின் மீது இருக்கும் நாஸ்டால்ஜிக் தன்மை தன் குழந்தைகளுக்கும் கொண்டுவர வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. ஆனால் அது சாத்தியமா ? அகதி என்பது அனுபவத்தாலும் உணர்வுகளாலும் எழும் அவல நிலை. இந்த நிலை அந்நிய நாட்டிலேயே பிறந்த தம் மக்களுக்கே புரிபட வாய்ப்பில்லை. வார்த்தைகள் அனுபவம் கொடுக்கக்கூடிய யாதொரு விஷயத்தையும் கொடுக்கவல்லது அல்ல. வெறும் செய்திகளாக மாறிப் போகலாம். அப்பா/அம்மாவின் கடந்தகாலமாக மாறிப் போகலாம். இந்த நிலையில் கொள்கைகள் தகர்கின்றன. அந்நிய கலாச்சாரம் எதிரியாகிறது. நாம் யாரிடம் அகதியாக இருக்கிறோம் என்னும் அடிப்படை விஷயத்தில் சந்தேகங்கள் எழும்புகின்றன. இவையெல்லாவற்றையும் தெளிவாக கதையாக மாற்றியிருக்கிறார் வி.ஜீவகுமாரன்.

இலங்கையிலிருந்து ஜெர்மனிக்கு செல்லும் குழுவினருடன் கதை ஆரம்பிக்கிறது. அதில் இருவர் பிரதான பாத்திரம் ஆகின்றனர். ஒருத்தி சுபா மற்றும் அவளுடைய காதலன் தமிழ். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த இருவரை வைத்து பொதுமையில் அகதிகள் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளையும் முன்வைக்கிறார். அவர்கள் செல்லும் பயணமும் டென்மார்க் வாசமுமாக நாவல் நகர்கிறது. 
அகதிகளை எப்படி பார்க்கிறார்கள் ? எந்நிலையில் அவர்களுக்கான குடியுரிமை கிடைக்கப்படலாம் ? இனத்தையும் நிறத்தையும் வைத்து எப்படி பிரிக்கப்படுகிறார்கள் ? இலங்கையில் நிகழும் போரை வைத்து அகதிகளிடையே எப்படி அரசியல் செய்கிறார்கள் ? மனதில் இருக்கும் இலங்கை கலாச்சாரமும் குழந்தைகளிடையே அதிகமாக அறியப்படும் டென்மார்க் கலாச்சாரமும் எப்படி மோதுகின்றன ? ஒரு அகதி முகாமிலிருந்து இன்னுமொரு அகதி முகாமிற்கு செல்லும் போது உயிருக்கு ஆபத்தாகும் விஷயங்கள் யாவை ? அவர்களிடையே இருக்கும் நம்பிக்கையும் கொண்டாட்டங்களும் யாவை என்று முழுமையான நாவலை அளித்திருக்கிறார்.

நாவலில் முரணாக இரண்டே விஷயங்கள் தான் எனக்கு பட்டன. ஒன்று கதைசொல்லியாக வரும் பத்திகள் வழக்கமாக எல்லோரும் எழுதுவதைப் போலவே இருந்தது. வசனங்களில் தான் அவரின் மொழி லாவகம் அழகாக பொருந்தியிருந்தது. இரண்டாவது நிறைய பத்திகளில் கடந்து செல்ல முடியாத காட்சிகளையும் வசனங்களையும் வைக்கிறார். ஆழமாக கலாச்சாரம் மோதலினையொத்த இடங்களை உருவாக்குகிறார். ஆனால் சட்டென அடுத்த அத்தியாயம் வந்துவிடுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஏதோ சில காரணங்களால் எனக்குள் அறுபட்டே நிற்கிறது. இது பக்கங்களை கடக்க கடக்க எனக்குள் உருவான எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்!!!

பி.கு :  நாவலின் விலை 130 தான். பகிர்ந்திருக்கும் அட்டைப்படத்தில் 150 என இருக்கிறது. இது தான் கிடைத்த அட்டைப்படம்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக