வினோத் ராஜின் நாவல் அனுபவம்

வினோத் ராஜை ஃபேஸ்புக் மூலமாகவே தெரியும். வாசிக்கும் நூல்களைப் பற்றிய தன் பார்வையை தொடர்ந்து பகிர்ந்து வருபவர். சமகாலத்தில் இந்த தேவையும் இலக்கியத்தில் அதிகமாக இருக்கிறது. அவர் கல்லூரி மாணவர். செங்கல்பட்டு தூரம் என்பதை தெரிந்திருந்தும் அவரை நாவல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருந்தேன். பேருந்தின் பிரச்சினைகளுக்கிடையிலும் வந்திருந்தது எனக்கு முதலில் அதிர்ச்சியையே அளித்தது. தன்னுடன் சில நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார். இவரின் எழுத்துகளையும் ரசிப்பவன் நான். வார்த்தைக் கோவைகளை மிக அழகாக இணைத்து வாசித்த நாவலை சார்ந்து எழுதி பிறரையும் வாசிக்க வைக்கும் தன்மை கொண்டது இவரது எழுத்து. காகங்கள் என்னும் பிளாக்கில் எழுதி வருகிறார்.

நாவல் வெளியான இரண்டு தினங்களுக்கு பின் நாவல் சார்ந்த அவரது பார்வையை பகிர்ந்து மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அது விமர்சனம் அல்ல. மாறாக ஒவ்வொரு பக்கத்தை கடந்து செல்லும் போதும் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தையே பகிர்ந்திருக்கிறார். அதை அவரே கூட எழுத்தில் கூறியிருக்கிறார். பின்வருவன அவருடைய பார்வை. . .

//

கிருஷ்ணமூர்த்தியின் ‘அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்’

 
 
எந்தக் கதையா இருந்தாலும் வாசிக்கிற வரைக்கும் எழுத்தாளன் யாரோ, எழுத்து ஏதோன்னுதான் வாசிக்கனும் (அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள் நாவலில் -  ஓர் அத்தியாயத்தில் - இடம்பெறும்  உரையாடலிலிருந்து…)

நாவலில் இடம் பெற்றிருக்கும் மேற்காணும் வாக்கியங்களை மேற்கோளாக்கிக்கொண்டு என் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்கிறேன். எவ்வித பொய்யான கூற்றுகளுக்கும் உட்படாமல் நாவலை வாசிக்கும்போது எத்தகைய எண்ணங்கள் என்னுள் தோன்றியதோ அவற்றை அப்படியே பதிவு செய்யவே விரும்புகிறேன். ஏனெனில் அதுவே பிரதிக்கும் அதை எழுதியவனுக்கும் வாசகனாக நான் செய்யக்கூடிய நியாயமென்றும் கருதுகிறேன். அந்த வகையிலேயே ‘அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்’ நாவலை அணுகவிரும்புகிறேன்.

எந்தவொரு படைப்பாளிக்கும் அவனுடைய முதல் படைப்பைக் காட்டிலும் அவனுடைய இரண்டாம் படைப்பு என்பது எல்லாவகையிலும்  மிக முக்கியமானது. காரணம், அவன் தனது முதல் படைப்பில் தனக்கான மொழியையும் நடையையும் உருவாக்கிக்கொள்ளும் எத்தனிப்பில் முழுமூச்சாக இயங்கி முயன்றிருப்பான். அதேசமயம் தன்னுடைய முயற்சி எந்தளவுக்கு வாசகர்களிடம் போய்ச் சேர்ந்தது என்பதை அதன் மூலம் அறிந்து வைத்திருப்பான். இந்தவகையில் அவனது இரண்டாம் படைப்பில் அவன் எந்தளவிற்குத் தன் மொழியையும் நடையையும் மேலும் சிறப்பாக உருவாக்கிக்கொண்டிருப்பான்? எந்தளவுக்கு முன் நகர்ந்திருப்பான்? என்பது குறித்த எண்ணங்கள் அவனது முதல் படைப்பை வாசித்து அவனது இரண்டாம் படைப்பை வாசிக்கும் வாசகர்களுக்கு ஏற்படுவது இயல்புதான். அந்தவகையில் அத்தகைய எதிர்பார்ப்புகள் என்னுள் நிரம்பிவழிந்துகொண்டிருந்தன என்றே சொல்லவேண்டும். நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் முதல் படைப்பான ‘பிருஹன்னளை’ வாசித்திருந்த எனக்கு அவரது இரண்டாம் படைப்பு குறித்த எண்ணங்கள் மேற்காணும் வகையிலேயே அமைந்திருந்தது. நிச்சயமாக நண்பர் கிருஷ்ணமூர்த்தி என் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்திருக்கிறாரென்றே நம்புகிறேன். அவரது முதல் நாவலான ‘பிருஹன்னளை’ நாவலையும் இந்நாவலையும் ஒப்புநோக்க கிருஷ்ணமூர்த்தி நிச்சயமாகத் தன்னுடைய மொழி நடையிலும் உத்திகளிலும் சற்றேனும் முன்னகர்ந்திருக்கிறார்.

மரபான எழுத்துக்களிலிருந்து தப்பிப் பரிசோதனை முயற்சிகளைச் செய்யத் துணிய வேண்டும் என்ற உத்வேகம் படைப்புகளைத் தீவிர விமர்சனப் போக்குடன் அணுகும் எந்தவொரு படைப்பாளிக்கும் இருக்கக்கூடியதே. புதிய வடிவத்தின் சாதகமான அம்சம் அது உடனடியாக நம் கவனத்தை ஈர்த்து நம்மை வாசிக்கத் தூண்டுமென்பதே. அந்த வகையில் இந்நாவல் நம் கவனத்தை ஈர்த்து நம்மைத் தொடர்ந்து வாசிக்க வைக்கிறது.
சீரான அடுக்குள்ள கதை போக்கிலிருந்த விலகி சிக்கலான கதை கூறல் முறையைத் தேர்ந்தெடுத்து சிறப்பாக அதற்கு வடிவம் கொடுத்து அதைக் கையாண்டிருக்கும் விதத்தில் நிச்சயமாகக் கிருஷ்ணமூர்த்தியைப் பாராட்டலாம். இத்தகைய வடிவத் துணிச்சல் இளம் எழுத்தாளராக அவருக்கிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

நூல் வெளியீட்டில் சிலர் குறிப்பிட்டதைப் போலவே இந்நாவலில் சில எழுத்தாளர்களின் எழுத்து நடையும் நாவல்களின் சாயலும் தெரிகிறது. நகுலன், சாரு, ஆதவன் என்றெல்லாம் வெளியீட்டில் குறிப்பிட்டார்கள். அதில் ஓரளவு உண்மை இருக்கவேசெய்கிறது. மிக முக்கியமாகச் சாருவின் எளிமையான நடையைப் பிரதிக் கொண்டிருக்கிறது. யாவர்க்கும் புரியும்படியான எளிதாகத் தொடர்ந்து வாசிக்கக்கூடிய வகையிலமைந்த எழுத்து நடை. புதியதாக எழுத ஆரம்பிக்கும் யாவருடைய எழுத்திலும் அவன் அதிகம் விரும்பி வாசித்த எழுத்தாளரின் நடை இருப்பதை இயல்பாகவே உணரமுடியும். அது அந்த எழுத்தாளனுக்கும் தெரிந்தது தான்.  இதுக்குறித்து நாவலிலேயே ஒரு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டிருக்கிறார்.

‘ஒரு சாரார் இன்னமும் பிச்சுவின் எழுத்துக்களைக் கண்டு அவர் சாயல் தெரிகிறது, இவர் சாயல் தெரிகிரது என்று கூக்குரல் இடுகிறார்கள். அவனுக்காக யாரிடம் சென்று நான் மல்லுகட்ட?’  (பக்.96)

நாவல் முழுவதும் ஒற்றை விவரிப்பு இல்லை. நாவலைப் பலர் உருவாக்கிகொண்டு செல்கிறார்கள். மிஸ்டர்.இன்விசிபிள், பிச்சமூர்த்தி, நான், கல்பனா, அபர்ணா, ஜென்னி, பார்வையாளன், ANONYMOUS, கிருஷ்ணமூர்த்தி, வாசகன்/வாசகிய நாம்… இப்படியாக ஒவ்வொருவரும் கதையை முன்நகர்த்திசெல்கிறார்கள் அல்லது செல்கிறோம். இது கொஞ்சம் குழப்பும்படியாகவே உள்ளது. (என் வாசிப்பின் குறைப்பாடாகவும் இருக்கலாம்)

எந்தவொரு நாவலையும் வாசித்து முடித்தவுடன் அந்நாவலை மனதுக்குள் ஒரு முறை தொகுத்துப் பார்த்துக்கொள்வது என் இயல்பு. ஆனால் இந்நாவலின் வடிவ உத்தியின் காரணமாக, இந்நாவலை வாசித்து முடித்தவுடன் என்னால் தொகுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஒரே அமர்வில் தொடர்ந்து என்னை வாசிக்க வைத்தது இப்பிரதி. அந்தவகையில் இப்பிரதி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதுவே இப்பிரதி கொள்ளும் வெற்றியுங்கூட.

பின்குறிப்பு: நாவலை வாசித்த அனுபவமாக இச்சிறு குறிப்புகளை எழுதியுள்ளேன். மீண்டுமொரு முறை இந்நாவலை வாசிக்கும்போது இந்நாவலை விமர்சன ரீதியாக அணுகுவேன். :-P//

Courtesy : http://kaakangal.blogspot.in/2014/12/blog-post_30.html

அவர் இப்போது "மம்மு" என்னும் குறுநாவலை தன் இணையத்திலேயே எழுத ஆரம்பித்து இருக்கிறார். இந்த முயற்சி வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக