சோதனைக்காலமும் இனிமையாய் முடிந்த வெளியீட்டு விழாவும்

ஓராண்டிற்கான காத்திருப்பிற்கு பிறகு நிகழவிருந்தது இரண்டாம் நாவலுக்கான வெளியீட்டு விழா. பொதுவாக என் இணையத்திலும் ஃபேஸ்புக் பக்கத்திலும், பலருக்கு தனிப்பட்ட அழைப்பின் மூலமும், குறுந்தகவல்கள் மூலமும் அழைப்பினை விடுத்திருந்தேன். ஆனாலும் என் மனதில் வரமாட்டார்கள் என்னும் எதிர்மறை எண்ணமே அதிகமாக இருந்தது. அதே நாளில் தமிழ்மகனின் நாவல் வெளியீட்டு விழாவும் இருக்கிறது. இந்த எல்லாமும் சேர்ந்து சேலத்திலிருந்து சென்னை வரையிலான பயணமே சந்தேகத்தின் பிடியில் என்னை சிக்க வைத்திருந்தது.

இயற்கையான சிக்கலாக மழையும் என் அலைபாயும் மனதிற்கு உறுதுணையாய் இருந்தது. மழைக்காரணமாக வராமல் இருப்பார்களோ என்று மிகுந்த வருத்தமடைந்தேன். சென்னைக்குள் நுழைந்தால் தான் அடுத்த இடையூறு காயப்படுத்த காத்திருந்தது. பேருந்துகளின் திடீர் நிறுத்தம். சென்னையின் பல இடங்களில் நண்பர்கள் இருக்கிறார்கள். அதில் பலர் பேருந்துகளை உபயோகிப்பவர்கள். அப்படியெனில் நிச்சயம் வரமாட்டார்கள் என்னும் நிலைக்கு அகத்தால் தள்ளப்பட்டேன். ஆறு மணிக்கு அரங்கில் ஒருவர் கூட இல்லை. முகம் சுண்டியது. பேசவிருப்பவர்கள் மட்டுமே வந்திருந்தனர். அதிலும் முருகேசபாண்டியன் வரவில்லை. கடைசி நேரத்தில் அவருடைய உறவினரின் உடல்நிலை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதால் வர இயலாது என்று கூறிவிட்டார். சாமான்யனான எனக்குள் ஏமாற்றப்பட்டதன் உணர்விருந்தாலும் அதை வெளியில் சொல்லவில்லை. அது மனிதாபிமானமாக இருக்காது.

கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் வேறு அடித்துக் கொண்டிருந்தது. மாலையில் மழை தூரிக் கொண்டிருந்த போது உடலும் நடுங்கத்துவங்கியது. உள்ளூர இருந்த ஏமாற்றங்களின் பலமும் அதிகரித்தது. கீழே சென்று தேவிபாரதியை பார்க்கும் போது அவர் இவ்வளவு செஞ்சிருக்கீங்க. வரலனா கவலையில்ல சுற்றி அமர்ந்து கலந்துரையாடலா முடிச்சிரலாம் என்று கூறினார். மனம் முழுதாக உடைந்தது.ஆறரை மணிக்கு மழையில் நனைந்ததன் ஆதாரத்தோடு வந்த வேடியப்பன் மதியம் பதிப்பகம் ஒன்றின் ஆரம்ப விழா நிகழ்ந்திருக்கிறது. அங்கிருந்து சிலர் இங்கு வருகிறார்கள் என்று கூறினார். மனம் வலிகளிலிருந்து அப்போதே மீள ஆரம்பித்தது. அங்கிருந்த சின்னதான இடமும் நேரம் ஆக ஆக நிரம்பியது. என்னால் வெகு சிலரைத்தான் அடையாளம் காண முடிந்தது - சாம் நாதன், உமா மகேஸ்வரன், வினோத் ராஜ், க.முத்துகிருஷ்ணன், லக்ஷ்மி சரவணகுமார், பிரபு ஶ்ரீநிவாஸ். மீதம் வந்தவர்கள் எல்லாம் டிஸ்கவரிக்கு தொடர்ச்சியாக வருபவர்கள் என எண்ணுகிறேன். எனினும் அவ்விழா சிறப்பாக நிகழ்ந்ததற்கு எல்லாரும் காரணம் என்பதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெயர் தெரியாத அத்துணை பேருக்கும் மனமாரந்த நன்றிகள்.

முதலாக நிகழ்ந்த வெளியீட்டின் புகைப்படம்
 முதலில் பேசிய தேவிபாரதியின் பேச்சு முழுக்க நவீன இலக்கியத்தின் மொழி அவர்கள் கைகொள்ளும் புனைவின் வடிவங்கள் சார்ந்தும் க்ளாசிக் இலக்கிய வடிவத்திலிருந்து நவீன இலக்கிய உலகம் மாறுபடுவதற்கான காரணங்கள் யாதாக இருக்கும் என்பதாகவும் இருந்தது. மேலும் இந்த மாற்றங்களுக்காக சில உலக இலக்கியங்களுக்கும் சென்று வரும் போது லேசாக புல்லரித்தது.


நூலின் முதல் பிரதியை வாங்கியவர் நாவலாசிரியர் அபிலாஷ். அவர் பேச ஆரம்பிக்கும் போதிலிருந்தே நாவல் சார்ந்த பரவலான அறிமுகமாக இருக்கும் என்றெண்ணினேன். வெளியீட்டு நிகழ்வை விமர்சன கூட்டமாக தன் பேச்சில் மாற்றிவிட்டார். நாவலை பிரித்து பல பக்கங்களினூடே கடந்து என் வாசிப்பும் அங்கிருந்து நான் எடுத்தாண்ட விஷயங்கள் என்று அவரின் பார்வையில் கடும் விமர்சனங்களை மென்மையான மொழியில் வைத்துச் சென்றார்.


அடுத்து நாவலாசிரியர் விநாயக முருகன் பேசவிருந்தார். அவர் ஏற்கனவே தன் ஃபேஸ்புக் பக்கத்தில் நாவலைப்பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகள் கூறியிருந்தார். கூட்டத்தில் மெடா ஃபிக்‌ஷனைப் பற்றி பேசவிருப்பதாகவும் கூறியிருந்தார். மெடாஃபிக்‌ஷனின் அங்கங்கள் என்ன என்பதையும் இந்நாவலில் எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பதையும் கூறி அவர் வாசித்த வேறு சில மெடா ஃபிக்‌ஷன் நூல்களிலிருந்து சில விஷயங்களை எடுத்தாண்டார். எம்.ஜி சுரேஷின் நாவலைப் போன்றே என் நாவலை நான் முடித்திருக்ககூடும் என கூறியிருந்தார். நானோ எம்.ஜி சுரேஷை வாசித்ததே இல்லை! பேச்சிலும் ரா.பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தை குறிப்பிட்டார். இந்நாவலோ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உருவானது என்பதை எனக்கான நேரத்தில் கூற மறந்துவிட்டேன்!


இயக்குனர் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான விஜயபத்மா எனக்கு அறிமுகம் இல்லாதவர். வேடியப்பன் மூலமே அவரின் அறிமுகம் கிடைத்தது. நாவலை சார்ந்து சற்று கடுமையான விமர்சனத்தை அவர் முன்வைத்திருந்தார். நாவலில் பெண்ணியத்தை நான் சாடியிருப்பதாகவும், மராஸ்மஸை வியாதி என்று கூறியிருப்பதாகவும் விமர்சித்து நிறைய கருத்துகளை பகிர்ந்திருந்தார். அவர் தன் பேச்சில் கேட்டிருந்த எல்லா கேள்விகளுக்குமான பதிலை நிச்சயம் பதிவு செய்வேன். இப்போதைக்கு அல்ல! நாவலில் சில பக்கங்களை வாசித்து நிறை குறை என சமபங்காக கூறியிருந்தார் விஜயபத்மா.


அடுத்து இணையப்புயல் அதிஷா. அவருடைய பேச்சின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை அரங்கம் முழுக்க சிரிப்பலைகளால் நிரம்பியிருந்தது. அவருடைய முக்கியமான வரியொன்று என்னை விட்டு நீங்காமல் இன்னமும் சுழன்று கொண்டே இருக்கிறது. இந்நாவல் - சாருவோட ஸீரோ டிகிரிய ஜெயமோகன் எழுதியிருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு. தனக்கு நாவல் சுத்தமாக புரியவில்லை என்பதையும், நாவலின் பக்கங்களில் அறிந்து கொண்டவற்றிலிருந்து கண்ட "தரிசனங்களையும்" மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார்.


கடைசியாக ஏற்புரையாற்ற அடியேன். என்னால் முடிந்தவரை மெடாஃபிக்‌ஷனைப் பற்றியும் க்ளாஸிக் எழுத்துகளிலிருந்து மாறுபட்ட சமகால சூழலையும் பேசினேன். எல்லோரும் என் எழுத்தில் சாரு நிவேதிதா நகுலன் ஆதவன் போன்றோரின் சாயல்கள் தெரிகிறது என்றனர். அதற்கான பதிலையும் பதிவு செய்தேன். எங்கு என் பேச்சு தொய்வு தருகிறதோ என்ற எண்ணம் எனக்குள் வந்ததால் முடிக்க தெரியாமல் முடித்துக் கொண்டேன்!


சில நாட்களில் எல்லோரின் பேச்சுகளையும் வீடியோக்களாக பதிவிடுகிறேன். நல்ல போட்டோக்கள் உமா மகேஸ்வரனிடமும் இன்னுமொரு பெயர் தெரியாத அன்பரிடமும் உள்ளது. அவர்கள் அளிப்பார்கள் என எண்ணுகிறேன். அளித்தால் அதையும் பகிர்கிறேன்.

போட்டோவிற்கும் அரங்கில் தேவைப்பட்ட சில உதவிகளுக்கும் உதவிய நண்பர்கள் அன்பரசன் மற்றும் கார்த்திகேயனுக்கும், நிகழ்ச்சியை சின்னதான பதற்றத்துடன் தொகுத்த நாகஹரி கிருஷ்ணனுக்கும் மனம் கனிந்த நன்றி. சிலர் ஃபேஸ்புக்கில் வராததற்கு மன்னிப்பினை எழுதியும் குறுந்தகவல்களாக அனுப்பியும் இருக்கின்றனர். மன்னிப்பிற்கு ஏற்றவாறு யாரும் பெரும் பிழைகளை செய்திருக்கவில்லை. சந்தோஷம் இருந்தாலும் சின்னதான ஏமாற்றத்தை இன்னமும் உணர்ந்து கொண்டுதானிருக்கிறேன். காலப்போக்கில் நிச்சயம் மறந்துவிடுவேன். எல்லோரும் மன்னிப்பு கேட்கும் போது அடுத்த விழாவில் நிச்சயம் கலந்து கொள்கிறேன் என்று அடிகோடிடுகிறார்கள். அதைத் தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை!!!

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

இந்தப் பகிர்வால் பலரையும் அறிய முடிந்தது...

Post a comment

கருத்திடுக