இதிகாசத்தின் SATYRIASIS

SATYRIASIS  என்றால் என்ன என்று சற்று பார்ப்போம். இது ஒரு பிறழ்வு நிலை. சற்றுமுன்புதான் இணையத்தில் அறிந்து கொண்டேன். காமம் உச்சம் அடையும் போது யாருடானேனும் உறவு கொண்டு அதன் தாகத்தை தணித்துவிட வேண்டும் என்னும் ஆசை எழும். இது பால் பேதமற்றது. இதை ஹைப்பர் செக்ஸ்வாலிடி என்கின்றனர். இந்த பாலியல் பிறழ்வு அல்லது அதீத தன்மை ஆணுக்கு இருப்பின் அது தான் சடிரியாஸிஸ். பெண்ணுக்கு இருந்தால் நிம்ஃபோமேனியா. இதற்கான காரணங்கள் யூகங்களாலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுதான் காரணி என்பதை சொல்ல முடியவில்லை. இந்த பிறழ்விற்கு உள்ளாகிறவர்களில் முக்கால்வாசி பேர் போதைக்கும் அடிமையாக இருக்கின்றனர்.

யூகத்தின் அடிப்படையில் சில காரணங்களை வகுத்திருக்கின்றனர். அவற்றில் எனக்கும் இப்பதிவிற்கும் தேவையானதை மட்டும் கூறலாம் என்றிருக்கிறேன். சிறு வயதிலிருந்து வீட்டில் பாதுகாப்பற்ற தன்மையோ அல்லது தம்மிடமிருந்து ஏதோ ஒன்றை மறைக்கிறார்கள் என்னும் உணர்வோ அல்லது முழுச் சுதந்திரத்தை உணராமலும், முழுச் சுதந்திரம் இருந்தும் அதை அனுபவிக்க இயலாமல் இருக்கும் நிலையோ வாய்த்திருந்தால் குறிப்பிட்ட ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கும் போது இந்த பிறழ்வு ஏற்படலாம். அல்லது ஹார்மோன்கள் உடலினுள் சுரக்க ஆரம்பிக்கும் தருணங்களிலோ அதற்கு முன்னரோ எதிர்பாலினம் சார்ந்த ஈர்ப்பு அதீதமாக இருப்பினும் கூட இந்த பிறழ்வு நேர வாய்ப்புகள் உண்டு. கட்டற்ற ஆசையினால் செய்யப்படும் மைதுனங்களும் இதன் காரணி என்கின்றனர்.

இதனால் விளையும் விஷயங்கள் எண்ணற்ற பெண்களை மோகித்தாலும் அவர்களுள் இருக்கும் இச்சை தணியாது. எல்லா கலவிகளுமே உச்சம் என்னும் நிலையை எட்டும் போது தான் ஆத்ம திருப்தி என்பது ஏற்படுகிறது. அந்த நிலையை யாதொரு கலவியிலும் அனுபவிக்க இயலாமல் அடுத்தடுத்து தேடி செல்லும் குணம் தான் இந்த பிறழ்வினால் ஏற்படக்கூடியது.

இதை என்னால் மனநோய் என்றோ பிறழ்வு என்றோ கணக்கிட முடியவில்லை. எல்லோரினுள்ளும் ஹைபர் செக்ஸ்வாலிட்டி குணம் இருந்து கொண்டுதானிருக்கிறது. புலனடக்கம் போல அதை குறிப்பிட்ட ஒருவர் மீது செலுத்துவது நம் கலாச்சாரத்தில் ஒன்றாக மாறிவிட்டது. வாழ்க்கை முழுக்க பெண்களை மோகிக்கவும் மதுவினை ருசிக்கவும் ஆசைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அதை மறைப்பதாய் சொல்லப்படுவனவெல்லாம் வெளித்தோற்றங்கள். மாயைகள்.

ஒரு குணம் சமூகத்தில் இப்படியொரு நிலையை கொண்டிருக்கிறதெனில் கலாச்சாரம் அடிப்படையாய் கொண்டிருக்கும் இதிகாசங்களிலும் காவியங்களிலும் அதற்கேற்ற பாத்திரம் இருக்கவேண்டுமல்லவா ? சிறுவயதிலிருந்து அம்மா எனக்கு சொன்ன மகாபாரதத்தில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் வந்திருக்கின்றனர். அதில் எனக்கு நிறைய பாத்திரங்கள் பிடிக்கும். தனிமையான நேரத்தில் அக்கதைகளை எனக்குள்ளே அசைபோடுவேன். அப்போது இந்த ஹைபர் செக்ஸ்வாலிட்டி போன்ற பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் எனக்கு தெரியாது! அம்மா இரண்டொரு வரிகளில் கூறிய அவற்றுள் எனக்கு பிடித்த பாத்திரம் ஒன்றின் வாழ்க்கையை மராத்திய நாவலாசிரியன் அறநூறு பக்கங்களுக்கு நாவலாக்கியிருக்கிறான். அந்த நாவல் தான் "யயாதி(இரண்டு பாகங்கள்)".


துறவிகள் சார்ந்தும் யோகிகள் சார்ந்தும் எப்போது ஏதேனும் விஷயங்களை அறிய நேர்ந்தாலும் அவர்கள் அறிய முனையும் பிரம்மஞானத்திற்கு எதிராய் இருக்கும் விஷயம் காமமாய் இருக்கிறது. இதனுடன் காதலும் ஒன்று சேர்ந்திருக்கிறது. இந்தத் தன்மையை வெகுநாட்களுக்கு புரிந்து கொள்ளமுடியவில்லை. பற்று அற்று இருப்பது தான் துறவு என்பது கேட்க எளிதானதாய் அமைந்தாலும் புரிதலில் எனக்கு எப்போதுமே சிக்கல் தான். இந்த நாவலில் கூட யதி என்னும் பாத்திரம் கூறுகின்றது நான் இந்த குகையிலே வெகு நாட்களுக்கு இருக்க மாட்டேன். எதிரே இருக்கும் யயாதியோ ஏன் என வினவுகிறான். ஒரே இடத்தில் இருக்க நேர்ந்தால் நான் இந்த இடத்துடன் பற்று கொண்டுவிடுவேன். எதிலுமே பற்று இருக்கக் கூடாது என்று தான் அலைந்து கொண்டிருக்கிறேன் என. இங்கு தான் எனக்குள் தர்க்கங்கள் ஆரம்பிக்கின்றன. இக்கதாபாத்திரம் பேசும் தன்மை எதையோ எதிர்த்து அல்லது எதற்கோ பயந்து ஓடுவது போலவே தான் தோன்றுகின்றது. மனத்தை அடக்கி ஆளத் தெரிந்தவன் யோகி, துறவியாக இருப்பின் ஏன் இந்த பற்றாகிவிடுமோ என்னும் பயம் ? மனதை அடக்குதலே துறவு எனில் உடல் தானாக அடங்கிவிடப்போகிறதே ?

இச்சிறுவனின் தர்க்கம் தான் மேலே குறிப்பிட்டிருப்பது. யயாதி நாவலில் மிகப்பெரிய தர்க்கம் பக்கங்கள் முழுக்க நீள்கிறது. அந்த தர்க்கம் முடிவை அடையா தன்மையை கொண்டிருக்கிறது. எல்லாமே காமத்திற்கும் துறவிற்குமானதாய் அமைகிறது.  தர்க்கங்கள் முடிவுகளை எப்போதும் கொண்டிருத்தல் கூடாது. அப்படி முடிவுகள் இருப்பின் தர்க்கம் அதுவரை கொண்டிருந்த சாராம்சத்தையும் அது சென்ற தடங்களையும் நுகரவர்கள் மறக்க நேரிடும். அதை இந்நாவல் செவ்வனே செய்கிறது.

இந்நாவலை வாங்கும் போதே அம்மா சொன்ன யயாதி தான் என்னுள் நிறைந்திருந்தான். நகுஷனுக்கு பிறந்த யயாதி அஸ்தினாபுரத்தை ஆள்கிறான். அவனுக்கு சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானியுடன் திருமணம் நிகழ்கிறது. இது தற்செயலாக சந்திப்பதும் அதனால் ஏற்படும் காதலால் நிகழும் திருமணம். அவனுக்கு பெண் சுகம் அதிகமாக தேவைப்பட்டது. தேவயானி மட்டுமல்லாமல் எண்ணற்ற பெண்களை சுகிக்க ஆரம்பிக்கிறான். அவன் ஆசை தீரவில்லை. இவ்விஷயம் தெரிந்ததும் சுக்ராச்சாரியார் அவனின் இளமையை முதுமையாக்கிட சாபம் அளிக்கிறார். உள்ளே தகிக்கும் ஆசை இளமையை நாடுகிறது என்பதால் விமோசனம் கேட்கிறான். அவரோ உன் இளமையை உன் ரத்தமே விரும்பி வாங்கிக் கொள்கிறது என்றால் மட்டுமே உனக்கு இளமை மீண்டு வரும் அதே நேரம் கொடுப்பவன் முதுமையடைவான் என்கிறார். அவனின் பிள்ளைகள் எல்லோருமே தர மாட்டேன் என்று பின்செல்கின்றனர். புரு என்பவன் மட்டும் தந்தையின் மீதுள்ள பாசத்தில் தர ஒப்புக் கொள்கிறான். புரு முதுமையாகிறான். யயாதி இளமையை மீண்டும் பெற்று காமத்தில் திளைக்கிறான். அது புளிக்கும் ஒரு நாள் தன் மகனிடம் இளமையை கொடுத்து நீ உன் சுகங்களை அனுபவி நான் அனுபவித்துவிட்டேன் என்கிறார். அதற்கு மகனோ உங்களின் முதுமையில் நான் எல்லா பலன்களையும் அனுபவம் கொண்டேன் என்று மட்டும் பதிலளிக்கிறான்.

அம்மா சொன்ன இந்த கதையே யயாதியை ஈர்க்க எனக்கு காரணமாக அமைந்தது. இதிகாசத்தினிருக்கும் இப்பாத்திரத்தை மட்டும் நாவலாக்கியிருக்கிறார் எனும் போது பின்னிருக்கும் சுகங்களை, அஃதாவது மகனிடம் இளமையை பெற்ற பிறகு அனுபவிக்கும் சுகங்களையும் அதற்கு பின் அடையும் ஞானத்தையும் விவரித்திருப்பார் என்றே வாங்கினேன். நாவலிலோ என் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக அதே நேரம் எடுத்த விஷயத்தில் ஆழமாக எழுதியிருக்கிறார் கண்டேகர்.

அம்மா சொன்ன கதையிலே கூட நிறைய ஊடுபாவல்கள் இருக்கின்றன. அந்த ஊடுபாவல்களுடன் தன் கற்பனையையும் கலந்து எது கற்பனை என்று எளிதில் அறிந்து கொள்ளமுடியாதபடி புனைந்திருக்கிறார். நாவலின் பின்னிணைப்பாக வரும் அவரின் கட்டுரையில் இந்த பிரித்தறிதலை நாம் உணரலாம். நாவலின் ஓட்டத்திலோ அதை காண்பதறிது.

நாவலில் யயாதியின் ஆரம்பகால வாழ்க்கை சில மர்மங்களால் நிறைந்திருக்கிறது. அம்மா தன்னிடமிருந்து மறைக்கும் சில ரகசியங்கள், தன் வீரத்தைக் கண்டு பயம் கொள்ளும் இயல்பான தாயின் குணம், வீரத்தழும்புகளை பெறும் தருணத்தில் அவனுக்கு உதவும் அலகா என்னும் பெண்ணினிடம் முதன்முறையாய் அறியும் விசேஷ உணர்வெழுச்சிகள், முகுலிகையின் மூலம் அடையும் அதே உணர்வெழுச்சிகளின் நீட்சி என்று இளமைக்காலம் நீள்கிறது. அதே நேரத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூள்கிறது. அசுரர்களின் பக்கம் சுக்ராச்சாரியார் இறந்தவர்களை மீட்கும் சக்தியை வைத்துக் கொண்டு போரிடுகிறார். அசுரர்கள் தலைவனின் மகள் சர்மிஷ்டை. அவளின் தோழி சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி. தேவயானிக்கு தான் பட்டத்து இளவரசியாக இல்லையே, செல்வம் இல்லையே என்று பொறாமை. சர்மிஷ்டையின் மீது எப்போதும் கோபம் துவேஷம். சேலை சார்ந்து நிகழும் சின்னதான சண்டை பெரிதாகிறது. அப்போது கிணற்றினுள் தேவயானி விழுகிறாள். அதற்கு சர்மிஷ்டை காரணமாகிறாள். அவளை காப்பாற்றுகிறான் யயாதி. யயாதியினையே மணந்து கொள்வேன் என்று மணக்கிறாள். இச்சிறுமிகளின் சண்டை இரண்டு இனத்தவர்களின் கௌரவ பிரச்சினையாக மாறுகிறது. சுக்ராச்சாரியாருக்கும் அசுரர் குலத்தலைவனுக்குமான சண்டையாய். அதை தடுக்க சர்மிஷ்டை ஆயுள் முழுக்க தன் பணிப்பெண்ணாக மாற வேண்டும் என்கிறாள் தேவயானி.

இப்போது சில புதிர்களை நாவலிலிருந்து சொல்கிறேன்.
1. நகுஷனுக்கு ஒரு சாபம் நீண்டு கொண்டே ஆயுள் முடியும் வரை வந்திருக்கிறது. அது அவனுக்கு மட்டுமல்ல அவனுக்கு பின்வரும் எல்லா சந்ததியினருக்கும் தொடரும் என்பதே. அந்த சாபம் யாதெனில் எத்தனை போகங்கள் கிடைத்தாலும் சந்தோஷமாக இருக்க முடியாது.
2. ஒரு ஜோஸ்யன் வருகிறான். தேவயானி மற்றும் சர்மிஷ்டையின் கைகளை காண்கிறான். பணிப்பெண்ணாக இருக்கும் சர்மிஷ்டையின் மகன் சக்ரவர்த்தி ஆவான் என்கிறான்.
3. அம்மா தன்னிடம் மறைத்து வைத்திருக்கும் ரகசியம் என்ன என்று அறியவும் யயாதி நாட்டம் கொள்கிறான்.
இம்மூன்றின் எதிர்மறைத்தன்மையிலேயே நாவல் ஆரம்பத்தை கொண்டிருக்கிறது. எல்லாமாக சேர்ந்து நாவலை கட்டமைக்கிறது. மேலே அம்மா சொன்னதாக கதையினை சொல்லியிருந்தாலும் நாவலில் இருக்கும் தர்க்கங்களும் கதையின் போக்கும் யூகிக்க முடியாவண்ணம் செய்யப்பட்டிருக்கிறது.

யயாதியின் சிறுவயது முதல் தொடர்ந்து வரும் பயமாய் மரணமே இருக்கிறது. இந்த மரணத்திடமிருந்து தான் தர்க்கம் ஆன்மா மரணம் உடலின்பம் என்று நகர்கிறது. உடல் ஆன்மாவிற்கு சட்டை என்பதை பலர் சொல்லியிருக்கின்றனர். அதை பலவாறாக நாவலில் தர்க்கம் செய்ய ஆரம்பிக்கிறார். கசன் என்னும் கதாபாத்திரம் நாவலில் வருகிறது. அவன் செய்யும் தர்க்கம் தான் வாசிக்க வாசிக்க சிந்தனையை தூண்டுகிறது. கசனின் வார்த்தைகளை கூறுகிறேன் பாருங்கள்,

ஒரு இடத்தில் "மனித வாழ்வில் ஆத்மா என்பவன் தேருக்குரியவன். உடல் என்பது தேர்; புத்தி என்பது பாகன்; மனம் என்பது கடிவாளம்; பலவகைப் பொறிகளே குதிரைகள்; போகப் பொருள்களே அந்த குதிரைகள் செல்லும் வழி; பொறிகளையும் மனத்தையும் கொண்ட ஆத்மா இத்தனையையும் அனுபவிப்பவன்"

இதே கசன் இன்னுமொரு இடத்தில் யயாதியிடம், "மதுவெறியில் மயங்கியிருக்கும் தேர்ப்பாகனின் கையிலிருந்து சாட்டைகள் நெகிழ்ந்துவிடும்; குதிரைகள் மனம் போனபடி பாயும்; தேர் ஆழமான பள்ளத்தில்  விழுந்து நொறுங்கிவிடும்; உள்ளே வில்லுடன் அமர்ந்திருக்கும் வீரன் வீணாக உயிர் இழப்பான்"

யயாதி எப்போதும் நிகழ்கால சுகத்தில் வாழ்பவன். அவனுக்கு இம்மை மறுமைகளை யோசிக்க வேண்டும் என்னும் பிரக்ஞை இல்லை. கிடைக்கும் சுகம் முழுமையை அடையாத போது நான் ஏன் எதிர்காலத்தை யோசிக்க வேண்டும் என நினைப்பவன். அதே போல அறம் ஷத்ரியனுக்கு வேறு அந்தணனுக்கு வேறு. இருவருக்கும் பொதுவாய் ஒன்று இருக்கிறது. அங்கே ஆசை குறுக்கே வர நேர்கிறது எனும் போது எதை தேர்ந்தெடுப்பது என்பது தான் கசனுக்கும் யயாதிக்கும் இடையே நிகழும் பெருவாரியான வாதமாக இருக்கிறது. யயாதியின் வார்த்தையோ,

"மலர் நாலு நாளில் வாடி உதிரப்போகிறது. எனவே இன்றே நான் அதை பறித்து நுகர்ந்தாலோ, கசக்கி எறிந்தாலோ, அதனால் என்ன கெட்டுவிடப்போகிறது ? யாருக்கு என்ன நஷ்டம் வரப்போகிறது ? ஒரு கணமாவது நறுமணத்தின் மிதப்பிலே நான் இன்புற முடியுமல்ல்வா ?"

தர்க்கங்களை இப்படி எடுத்து செல்லும் கண்டேகர் மந்தாரன் என்னும் கதாபாத்திரத்தை உள் நுழைத்து வாழ்க்கையில் உடல் ஆன்மா அதில் உடலை வெறுப்பது எல்லாம் மாயை என்று அவன்மூலம் சொல்கிறார். உடல் இல்லையெனில் ஆன்மாவால் உலகை அடையாளம் காணவேமுடியாது என்கிறார். இன்பம் துன்பம் என்பது மட்டுமே நிதர்சனம் என்று அவன் மூலம் அடுத்ததொரு தர்க்கத்தை நிறுவுகிறார்.

கதாபாத்திரங்களின் பேச்சினூடே தர்க்கங்கள் நிகழ்ந்தாலும் கதையின் நிகழ்தல் எண்ணற்ற தத்துவங்களை கூறுகின்றன. தேவயானியின் பாத்திரம் முழுக்க அன்பற்ற பாத்திரமாகவே திகழ்கிறது. அவளிடம் தான் யயாதி அதீத அன்பினை எதிர்பார்க்கிறான். அரசனுக்குள் இருக்கும் சாமான்யன் புறக்கணிப்பினால் சாகிறான். அவன் எதிர்பார்ப்பதை விவரிக்கும் பக்கங்கள் எல்லாமே காதல் ரசம் சொட்டும் பக்கங்கள். அவளிடம் கிடைக்காத அன்பைக் காரணமாக தனக்குள்ளே வரித்துக் கொள்கிறான். அதையே வைத்து பிற பெண்களிடம் சுகம் காண வேகம் கொள்கிறான். சர்மிஷ்டையிடம் கொண்டதோ இருபக்கமும் நிறைந்திருந்த காதல். இந்த இடத்தில் கண்டேகர் காதலின் தன்மையை அவளிடமே அதிகமாக வைத்திருக்கிறார். அவளின் காதல், தேவயானி மூலம் கிடைக்கும் அவமானங்கள், புருவிற்காக அவள் செல்லும் அபாயகரமான பயணங்கள் எல்லாமே வசீகரிக்கும் வண்ணம் இருக்கின்றன. இருவருக்குமே பால்யகால ஆசைகளும் காதலும் இருக்கின்றன. அவையும் மனித உணர்வுகளின் வலைபின்னலாக கதையினூடே வந்து செல்கிறது.

யயாதியின் காமம் தான் நாவலில் தனித்து தெரியும் விஷயம். அவன் காமுறும் நிகழ்வுகள் எல்லாமே விளிம்பு நிலைத்தன்மையை கொண்டிருக்கின்றன. மனிதனின் அடிப்படை உணர்ச்சிகளை இடித்து தள்ளி எதிர்மறையான உறவுகளை அவன் மேற்கொள்கிறான். கால இடம் தாண்டிய அவனின் வேட்கை காரணமற்று இருக்கிறது. இந்த தன்மைக்கு உதாரணம் எனில் நகுஷன் நோய்வாய்ப்பட்டு கிடக்கிறான். தாயோ மகன் எக்காரணத்திலும் சந்தோஷமின்றி இருக்கக்கூடாது என அசோகவனத்தில் பணிப்பெண்களை வைத்து இசை கதை என்று கேட்டு இளைப்பாற ஏற்பாடு செய்கிறாள். அங்கே பணிப்பெண்ணாக இருப்பவள் முகுலிகை. அப்பாவின் மரணப்படுக்கையையும் மறந்து அவன் அங்கே அவளை காமுறுகிறான்.

அவனுள்ளேயும் செய்தது தவறோ என்னும் துவந்துவம் நிகழ ஆரம்பிக்கிறது. இருந்தும் அவனால் மீள முடியவில்லை. தணியா வேட்கை அவனை இழுத்து செல்லும் இடங்கள் நாவலின் கடைசி நூறு பக்கங்களாக விரிகிறது. எல்லாமே சகிக்க முடியாத பக்கங்கள் என்று சொன்னாலும் தகும். கண்டேகர் எவ்வளவுக்கெவ்வளவு அதீத காமத்தின் விளைவுகளை கூறியிருக்கிறாரோ அதே அளவு அதீத துறவையும் கடவுளை தேடிய பயணத்தையும் இணைத்து கூறியிருக்கிறார். எல்லாம் ஒரே அளவீட்டில் இருப்பது கண்டேகரும் இரட்டை தன்மைகளுக்குள் சிக்கிவிடுகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

கண்டேகரின் எழுத்து முறையைப் பற்றியும் கூற வேண்டும். டைரி எழுதுவது போலவே நாவல் ஆரம்பிக்கிறது. யயாதி, தேவயானி, சர்மிஷ்டை என்று நாவலின் பக்கங்கள் எழுதப்படுகின்றன. ஏதேனும் முடிச்சு நிரம்பிய இடத்தில் ஒருவரின் மூலம் கதைசொல்லுவதை நிறுத்துகிறார். பின் அதே முடிச்சியுடன் தொடர்பிருக்கும் இன்னுமொரு கதாபாத்திரத்தின் மூலம் சில பிண்ணனிகளை சொல்லி முடிச்சுகளை கட்டவிழ்க்கிறார். வாசிக்க இன்பமாய் இருந்தது. பக்கக்களுக்கு இருபதுக்கும் மிகாமல் உவமைகளை கையாள்கிறார். தர்க்கப்பேச்சுகளின் போது இவை முரணாக தெரிவதில்லை. அதே வர்ணனைகளின் போது சலிப்பினை ஏற்படுத்துகின்றது.

அப்பலோனியன் டையனைசியன் என்று இரு பதங்கள் இருக்கின்றன. இரண்டாவது யாதெனில் அர்த்தம் பிண்ணனி என்று எதையும் அறியாமல் கலையை வாழ்க்கையை அனுபவிப்பது. முதலாவதோ எல்லாவற்றையும் அறிந்து பின் அனுபவிப்பது. முதலாவதில் நிறைய சுகம் கிடைக்க வாய்ப்பில்லை. யயாதியும் சாடிரியாஸிஸ் வியாதியும் அப்பலோனிய வாழ்க்கை முறையோ என்று தோன்றுகிறது. முத்தங்களுக்காகவும் ஸ்பரிசங்களுக்காகவும் ஏங்குகிறான் யயாதி. கிடைக்கப்படும் போகங்களை ஏற்கனவே அனுபவித்ததுடன் இணைத்து பார்க்கிறான். கடந்த காலமும் எதிர்காலமும் சமனிலை அடைய எண்ணுகிறானே தவிர நிகழ்காலத்தை கவனிக்க மறுக்கிறான். அதிசயிக்கத்தக்க விஷயம் யாதெனில் எதை யயாதி அனுபவிக்க மறுக்கிறானோ அதையே தான் தர்க்கமாக வியாக்கியானமாக எல்லோரிடமும் வாதிக்கிறான்!

மொத்தத்தில் யயாதி an apollonian satyriasis!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக