INTERSTELLAR - 2014

சினிமாவிற்கு கதையெழுதுவதென்பது எளிதினும் எளிது என்னும் திமிரில் இருந்தவன் நான். அப்படி இருந்த என்னை ஒரு திரைக்கதையை கண்டு பிரமிக்க வைத்தவர் கிறிஸ்தோபர் நோலன். சூப்பர் ஹீரோ கதையெனில் வில்லன், நாட்டை காக்கும் ஹீரோ, இருவருக்குமான சண்டை என்றே இருந்த க்ளீஷே கதையை மாற்றி எடுத்த dark knight rises படத்தைக் கண்டே நான் அவர் மீது பிரியம் கொண்டேன். அவரின் எல்லா படங்களையும் தேடித்தேடி இரண்டு மூன்று முறைக் கண்டேன். இன்னமும் நிறைய உள்ளார்ந்த விஷயங்களை நான் அறிந்திருக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான். எப்போதும் என்னை புதிரில் இயக்கும் நோலனை அதிகமாக விரும்பினேன். சென்ற ஆண்டு இண்டர்ஸ்டெல்லார் திரைப்படம் நவம்பர் ஏழு என்ற அறிவிப்பையும் டீஸரையும் பார்த்ததுமே ஓராண்டு காலம் மனதளவில் காத்திருந்தேன். இன்று திரையரங்கின் முதல் காட்சியில் படத்தை பார்த்து முடிக்கும் போது கிடைத்த சந்தோஷம் இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது. காத்திருந்து அடைவதும் ஒரு சுகம் தான். இப்போது படத்திற்கு செல்வோம்.

இப்படத்தை புரிந்து கொள்ள பெரிதும் உதவியாய் இருந்தது கருந்தேளின் இரு கட்டுரைகள். கீழே அதற்கான லிங்குகள் இருக்கின்றன. படம் பார்க்கும் முன் அந்த இரு கட்டுரைகளை பார்த்துவிட்டு செல்வது சாலச்சிறந்தது.
இந்த இரு கட்டுரைகளையும் அப்படத்தின் ஸ்க்ரிப்ட் லீக் ஆன போது எழுதியிருந்தார். அவர் செய்த நல்ல விஷயம் படத்தின் கதையை வெளிக்கூறாமல் அதிலிருக்கும் அறிவியல் விஷயங்களை எளிமையாக சொல்லியிருப்பது தான். இதை வாசிக்க வேண்டிய அவசியத்தை படம் பார்க்கும் போது கிஞ்சித்தும் உணரவில்லை. ஆனாலும் அவசியம் ஏற்படுகிறது. படத்தினூடே வசனங்களில் நிறைய அறிவியல் சார் விஷயங்களை தேற்றங்களை பேசுகிறார்கள். அவற்றில் இருக்கும் சில termகளை புரிந்து கொள்வதற்கு நிச்சயம் மேலே இருக்கும் இரண்டு கட்டுரைகளும் உதவும். இப்படத்தின் கதையை யார் சொன்னாலும் பின் பார்க்க பிடிக்காது. கதை ஆழமானதாக கட்டமைக்கப்பட்டிருந்தாலும் மிக மிக மெலிதானது. முதல் முறை பார்த்தபின் நம் உணர்வுகளினூடே நிகழும் வேதியியல் மாற்றத்தால் நிச்சயம் மறுமுறை பார்க்கத்தூண்டும். கதையை கேட்டுவிட்டாலோ அது நிச்சயம் நிகழாது!

உலகை தாண்டிய விஷயம் மனிதனை, மனித இனத்தை எப்போதுமே ஈர்த்து வைக்கிறது. இருப்பதைத்தாண்டிய தேடலை வைத்தே நாம் ஒவ்வொன்றாய் கண்டுபிடித்துக் கொண்டு வருகிறோம். இதே போல் தான் நாம் வியக்கும் விஷயம் அண்டவெளி. இதே போன்றதொரு அண்டவெளி வேறு எங்கினும் இருப்பின் எவ்வாறு இருக்கும் ? அங்கும் நாம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா ? கதைகளில் மட்டுமே அவ்விஷயங்கள் முடிவடைந்துவிடுமா என்று பல கேள்விகள் உலகம் முழுக்க பரவி இருக்கின்றன. இந்த எல்லா கேள்விகளும் ஆராய்ச்சியின் உருவத்தில் சிலர் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அந்த விஞ்ஞானிகளின் போராட்டம் தேற்றங்களுக்கும் செய்முறைகளுக்கும் இடையிலான விஷயங்களாக இருக்கின்றன. தேற்றங்களில் கொணர்ந்திருக்கும் அநேக விஷயங்களை நடைமுறையில் கொண்டுவர முடியுமா என்பது காலம் கடந்த சவாலாக அவர்களின் முன்னிருக்கிறது. இந்த சவாலுக்கான பதில் தனி மனிதன் சார்ந்ததாக அல்லாமல் மனித இனத்திற்கானதாய் அமைகிறது. அப்படிப்பட்ட சவால் தான் பூமியில் இருக்கும் எடையை குறைத்து மனிதர்களை பூமியைப் போன்றே இருக்கும் வேறொரு கிரஹத்திற்கு கொண்டு செல்வது. அந்த உலகம் எங்கிருக்கிறது ? எப்படி செல்வது ? மனிதர்களாலும் பல்லுயிர்களாலும் வாழமுடியுமா என்பதையே இந்தப்படமும் பேசுகிறது, சற்று வேறுவிதமாய்.

(படத்திற்கு செல்லும் போது லேசான பயம் என்னுள் இருந்தது. சப்டைட்டில் போடவில்லையெனில் நிச்சயம் இப்படம் புரியாதே என்று. யாரோ செய்த புண்ணியத்தில் சப்டைட்டில் இட்டனர். படத்தின் நாயகனை டீஸர் வந்தபோதிலிருந்தே எனக்கு பிடிக்கவில்லை. படத்தின் ஆரம்ப சில காட்சிகள் அந்த நினைவிலேயே பார்த்தேன். காட்சிகள் நகர நகர எல்லோருமே ஈர்க்கும் வண்ணமாயினர்.)கதைக்கு வருவோம். மேலே நான் கூறிய வாசகங்களை கடைபிடித்தே பின்வரும் முன்கதைசுருக்கத்தை எழுதுகிறேன். யாதொரு முடிச்சுகளையும் நான் இதில் கூறவில்லை. நாயகன் கூப்பர். ஏற்கனவே நிலவிற்கு சென்று ஒரு மோதலில் தரையிரங்கி பின் வீட்டுடன் விவசாயம் பார்த்துக் கொண்டிருப்பவன். அங்கே எப்போதும் மணற்புயல் ஏற்படுகிறது. மிகப்பெரிய மணற்புயல் ஏற்படும்போது மகள் மர்ஃபின் அறையில் மணல் இணைகோடுகளாய் கீழே விழுகின்றது. அதை பைனரி எழுத்துகளாக வைத்து டீகோட் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு க்ளூ கிடைக்கிறது. அங்கிருந்து ஏதோ ஆபத்து வருகிறது என்று ஓடும் போது அறிந்திராத கும்பலிடம் அப்பாவும் மகளும் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் நாஸா விஞ்ஞானிகள். மேலே சொன்ன வேற்றுகிரஹ விஷயத்தை சொல்லி அவர்களிடம் இருக்கும் பைலட்டுகளை விட நீயே சிறந்தவன் இந்த மிஷனிற்கு நீயே வர வேண்டும் என்று கேட்கிறார்கள். அவனுடைய மகள் மர்ஃபிற்கும் விஞ்ஞானத்தின் மீது ஈடுபாடு. அப்பாவின் மூலம் சில புத்தகங்களையும் அறிவையும் அவள் வாய்க்கப்பெற்றிருக்கிறாள். அவள் தான் இந்த கோடையே கண்டறிந்தது. அவள் செல்ல வேண்டாம் என்று தடுக்கிறாள்.

இவர்களை அனுப்புவதன் மூலக்காரணம் அண்டவெளியில் ஒரு wormhole கண்டறியப்பட்டிருக்கிறது என்பதால் தான். அதனுள் சென்றால் வேறொரு அணடவெளிக்கு செல்ல முடியும். இதில் பிரச்சினை யாதெனில் அங்கே காலம் பூமியை விட குறைவாகவே இருக்கும். மகளிடம் அவன் சொல்லும் விஷயம் நான் திரும்பி வரும் போது நீயும் நானும் ஒரே வயதானவர்களாய் இருப்போம் என. அவளுக்கு அவனை அனுப்ப மனமே இல்லை. கோபம் கொள்கிறாள். மகளின் கோபத்தை மீறி அவன் செல்கிறான். மகனிடமும் அவர்களின் தாத்தாவிடமும் எல்லா விஷயங்களையும் ஒப்புவித்துவிட்டு நாயகன் செல்கிறான். அவனின் பயணம் என்ன ஆகிறது என்பது தான் மீதக்கதை. இவ்வளவு நேரம் சொல்லியது படத்தின் முதல் அரைமணி நேரம் தான்!

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் மகளிற்கு பேய்கள் இருக்குமா என்னும் சந்தேகம் படத்தின் ஆரம்பத்திலிருந்து இருக்கிறது. அதற்கு அப்பாவின் அறிவியல் தர்க்கங்கள் நிறைய வருகின்றன. இங்கே குறிப்பிடுவதன் காரணமும் இந்த தர்க்கம் தான். படம் நெடுக தர்க்கங்கள் நிறைய இடம் பெறுகின்றன. உலகை விட்டு இன்னுமொரு உலகை தேடி செல்கிறோம் என்பதையே இருவகையாக பார்க்கலாம். ஒன்று இந்த உலகம் அழியவிருக்கிறது. தம் அன்பிற்கு நெருக்கமாக இருக்கிறவர்களின் எதிர்காலம் இனிமையாகவும் இயற்கையுடனும் இருக்க வேண்டுமெனில் இந்த உலகம் அதற்கு உகந்ததாய் இருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காகவேணும் வேறு ஒரு உலகத்தை கண்டறிய வேண்டும். இன்னுமொரு வாதம் இந்த ஓருலகத்தின் பன்முக எல்லைகளையே முழுமையாக அனுபவிக்காமல் அதன் எதிர்த்தன்மையை மட்டுமே கண்டு வேறொரு உலகத்திற்கு செல்வது கொஞ்சம் பயம் சார்ந்தது. வெறும் தேற்றங்களை நம்பி எப்படி செல்வது போன்று நீள்கின்றன. மேலும் நாட்டின் உலகின் பொருளாதாரமும் இந்த ஆராய்ச்சிகளுக்கு செலவாகும் பொருளாதாரமும் எப்படி அறிவியலால் பார்க்கப்படுகிறது என்றும் பேசுகிறார்.

அறிவியலும் அன்பும் எப்படி இணைகிறது எப்படி வேறுபடுகிறது என்பதையும் மனிதனும் இயந்திரமும் இருவரின் தன்மைகளையும் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பதையும் சில சில காட்சிகளினூடாக சொல்லிச் செல்கிறார். நுண்ணியமான விஷயங்களை அங்கங்கே தர்க்கங்களாக வசனங்களாக மாற்றி கூறிவிட்டு செல்கிறார். இருத்தலுக்காக செல்லும் நீண்டதொரு பயணம் இருத்தலுக்கே சவாலாக அமையும் போது உலகிற்காக போராடுகிறேன் பிற இருத்தல்களுக்காக போராடுகிறேன் என்று சவால் விடமுடியுமா ? மனிதன் எல்லா இடங்களிலும் சுயநலவாதியாகவே இருக்கிறானா  அல்லது சந்தர்ப்பவசத்தால் சுயநலவாதியாகிறானா என்ற தர்க்கங்களை மிக அழகாக கதையில் கையாண்டிருக்கிறார். விஞ்ஞானத்தின் வேலையில் மும்முரமாக இருக்கும் போது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பின் அங்கே நிலைமை எப்படி இருக்கும் என்பதை படம் நெடுக உணர்வுகளின் போராட்டமாக காட்டியிருக்கிறார்.

இந்தப்படத்தின் திரைக்கதை நோலனின் குழப்பமான அம்சத்தை அதிகமாக கொண்டிருக்கவில்லை. படம் ஆரம்பித்த ஒண்ணே முக்கால் மணி நேரத்திற்கு சராசரி ஹாலிவுட் படமாகத்தான் ஒடுகிறது. அதில் பயமுறுத்தும் விஷயம் அவர்கள் வசனங்களில் தெரியும் அறிவியல் விஷயம் தான். ஆழமான விஷயங்களை சாதாரணமாக சொல்லி செல்கிறார்கள். புரிந்து கொள்வது கடினம் தான். திரைமொழியில் எந்தவொரு குழப்பமும் இருக்காது. கடைசி முக்கால் மணி நேரத்தில் தான் நோலனின் அம்சங்கள் எல்லாமும் தெரியும். முன்பின் காட்சிகளை கோட்பாடுகளாக இணைத்தல். இதைக் கூறும் போது நோலன் கூறிய விஷயமொன்று நினைவிற்கு வருகிறது. நோலன் சார்ந்து நான் எழுதியிருந்த கட்டுரையொன்றில் அதை குறிப்பிட்டிருந்தேன். அதாவது,

“பார்வையாளன் முதல் முறை என் படத்தினை பார்க்கும் போது திரையில் ஒரு சுவாரஸ்யமும், படம் முடியும் போது மீண்டும் இப்படத்தினை பார்க்க வேண்டும் என்னும் ஆர்வமும் வர வேண்டும். அப்படி பார்ப்பதன் மூலமே முழுப் புரிதல் கொண்டு வர வேண்டும். அதற்கு இன்னமும் பல யுக்திகளை கையாள்வேன்” 

(மலைகள் இதழில் வெளிவந்த அந்த கட்டுரை - புதிர்தேசத்தின் மன்னன்)

இதை இப்படத்திலும் காணலாம். முதல் பாதியில் திரையின் மெதுவான நகர்தலில் கொடுக்கும் சலிப்பினை கடைசி முக்கால் மணிநேரத்தில் சரி செய்கிறார். நோலனின் திரைக்கதைகள் எப்போதுமே அவர் கையிலெடுக்கும் மையக்கருவினை பொருத்தே அமையும். உதாரணம் இன்செப்ஷன் படம். அப்படம் முழுக்க முழுக்க கனவுகளை சார்ந்தது. திரைப்படத்தை பார்க்கும் போது கூட எந்த காட்சி நிஜம் எந்த காட்சி கனவு என்பதை யூகித்தறிய முடியாது. மெமெண்டோ படத்திலும் இந்த யுக்தியை கையாண்டிருப்பார். பத்து நிமிடம் வரைக்கும் மட்டுமே காட்சிகள் நீளும். நாயகனுக்கும் அதுவே வியாதியாக இருக்கும். அதையே தான் இப்படத்திலும் கையாண்டிருக்கிறார். இங்கே கடைசி முக்காலோ ஒரு மணி நேரம் மட்டுமே மையக்கருவினையொத்த திரைக்கதையாக இருக்கும். படம் முழுக்க இல்லாமல் இருப்பது தான் நோலன் ரசிகனாக நான் அனுபவித்த குறை.

இதைத்தவிர இரண்டு விஷயங்கள் எனக்கு முரணாக பட்டன. ஒன்று பக்கத்து ஊருக்கு செல்வது போல நாயகன் சட்டென விண்கலம் ஏறி பயணிக்க ஆரம்பிப்பது. அடுத்து உலகம் மாசுபடுகிறது, இனி வரும் சந்ததியினருக்கு உலகம் பாதுகாப்பானது அல்ல என்கிறார். ஆனால் ஒரே இடத்தில் வரும் மணற்புயலை மட்டுமே காட்டுகிறார். மணற்புயல் வானவியல் சார்ந்த பிரச்சினை. எல்லா ஊர்களிலும் மணற்புயல் வர வாய்ப்பில்லை. ஆக வேறு ஊர்களில் எந்த மாதிரி பிரச்சினை வரும் என்று காட்சியில் காட்டியிருக்க வேண்டும். பேச்சிலாவது சொல்லியிருக்கலாம்!

Memento, Prestige, Inception, Following போன்ற படைப்புகளில் இருக்கும் திரைக்கதையின் வீரியம் இப்படத்தின் திரைக்கதையில் இல்லை. நோலனின் எல்லா படங்களையும் பார்த்தவர்களுக்கு எதிர்பார்ப்பாய் இருக்கும் விஷயம் காட்சியின் அமைப்பும் திரைக்கதையின் குழப்பமும். முதல் மட்டுமே முழுப்படத்திலும் நிறைவேறும். புதுப்புது உலகின் அமைப்பும், அண்டவெளியின் காட்சிகள், கருந்துளையினூடான பயணம் போன்றவற்றின் அமைப்புகளும், க்ளைமாக்ஸ் காட்சியின் அமைப்பும் கண்களை சிறைவைக்கும் அளவு தன்மையினை கொண்டவை. திரைக்கதையோ முன்பே சொன்னது போல படத்தின் கடைசி பகுதிகள் மட்டுமே நோலனின் திறனை ருசிக்க வந்தவர்களுக்கானதாய் இருக்கும்.

மேத்யூ மெக்கானகேவின் நடிப்பு நிறைய இடங்களில் கண்ணீரை வரவைக்கக்கூடியன. காலம் உறவுகளின் இடையே எவ்வளவு பெரிய விரிசலை உண்டாக்கக்கூடியது என்பதை மௌனத்தினூடே மிக அழகாக காட்டியிருக்கிறார். கதையின் ஆழம் அவ்விடங்களில் எல்லாம் நம் நெஞ்சை வருடியெ செல்கிறது. அவரைத்தவிர உடன் பயணிக்கும் ப்ராண்டாக நடித்திருக்கும் ஆன்னா ஹாதவேயின் நடிப்பும் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது. ஹான்ஸ் ஸிம்மரின் மென்மையான இசையும் அங்கங்கு நரம்புகளை தீண்டி செல்லும் அதிர வைக்கும் இசையும் திரையுடன் நம்மையும் பயணிக்க வைக்கிறது.

தேற்றங்களை தீர்ப்பதன் முக்கியத்துவமும் இவ்வளவு தேற்றங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன என்னும் பள்ளி/கல்லூரி மாணவர்களின் கேள்விக்கும் இப்படத்தில் பதில் இருக்கிறது. கதையை தனிப்பட்ட முறையில் கூறினால் நிச்சயம் நன்றாக இருக்காது என்று சொல்லிவிடலாம். ஆனாலும் அதை திரைமுறையில் காட்டியிருக்கும் கிறஸ்தோபர் நோலனுக்கு தனிப்பாராட்டுகள். 

எதிர்பார்ப்பை பூரித்தி செய்யவில்லையெனினும் ஏமாற்றவில்லை என்பதில் நோலனின் மீது திருப்தியே கொள்கிறேன். Love you Nolan. . .

பி கு 1 : ஜெருசலேமின் ஒரு இடத்தின் பெயர் பெத்தானி. அங்கே மேரி மற்றும் மார்த்தா என்பவர்களின் சகோதரன் லஸாரஸ். அதே நேரத்தில் ஜெருசலேம் முழுக்க யேசு நோயுற்றவர்களை காப்பாற்றுகிறார். லசாரஸிற்கு உடல் நிலை சரியில்லை என்றவுடன் செய்தி அவருக்கு செல்கிறது. தெரிந்தும் இரண்டு நாட்களுக்கு திரும்பவில்லை. நான்கு நாட்கள் பயணத்திற்கு பிறகு திரும்பி வரும் போது மரணித்து கிடக்கிறான் லசாரஸ். மார்த்தா தடுத்தும் அவனை புதைத்திருக்கும் குகையின் வாயிலை திறந்து அவனை அழைக்கிறார். அப்போது உயிர் பெற்று எழுந்து வருகிறான் லசாரஸ். தன்னை நம்பியவர்களை எப்போதும் நான் கைவிடமாட்டேன் என்கிறார். இந்த பெயர் குறியீடாக படத்தில் வருவதால் பகிர்கிறேன். இனி பார்க்கவிருக்கும் அன்பர்களுக்கு உதவலாம்.

பி.கு 2 : படத்தின் முதல் பாதிரியிலேயே தியேட்டரில் பாதி பேர் எழுந்து சென்றுவிட்டனர். சிலர் காட்சிகளை இப்படி வைத்திருந்தால் நன்றாக இருக்கும், அப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கருத்துகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டிருந்தனர். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது தான் சில விஷயங்கள் புலப்படுகின்றன. அறிவியல் புனைகதைகள் அல்லது விண்வெளி சார்ந்த படம் எனும் போது விண்கலங்களின் செயல்பாடுகள், விண்வெளியில் அதன் பயணம், விண்வெளி போன்றவற்றை பிரம்மாண்டமாக தனித்து காட்ட வேண்டும் என்று ஃபார்முலாக்கள் மக்கள் மனதில் பதிந்து இருக்கின்றன. இப்படம் வேறு கோணத்தில் எல்லாவற்றையும் காட்டுகிறது. கதையின் மையம் உணர்வுகளால் சூழப்பட்டுள்ளதால் காட்சியும் அதனை சுற்றியே அமைகிறது. காட்சியில் இருக்கும் பிரம்மாண்டத்தை விட நடிப்பில் இருக்கும் ஆழமே படத்தை கட்டமைக்கிறது. சராசரி விண்வெளி படத்தை இதிலும் எதிர்பார்ப்பவர்களிடம் இந்த படம் பாதிவரை தோற்றே போகும்! மீதி காத்திருந்தால் அசத்தலாக இருக்கும். சாட்சி - கடைசி முக்கால் மணி நேரம் தியேட்டரில் கேட்ட கைதட்டலும் விசில் சப்தங்களும்!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக