GONE GIRL - 2014

ஊருக்கு செல்லும் போது நண்பர்களுடன் தியேட்டர் செல்வது வழக்கம். அதைத்தவிர என் ஹார்ட்டிஸ்கில் இருக்கும் திரைப்படங்களை அவ்வப்போது காண்பது. எனக்குள் இருக்கும் ஆசையோ நான் ரசித்த இயக்குனர்களின் படைப்பை திரையரங்கில் காணவேண்டும் என்பதே. அதில் ஒருவர் தான் DAVID FINCHER. இவருடைய நான்கு திரைப்படங்களை கண்டிருக்கிறேன். The girl with a dragon tattoo, The social network, Se7en, Fight club. இதில் செவெனே என்னை அதிகமாக ஈர்த்த படம். பல்வேறு வகையான கதைகளையே இவர் கையாண்டிருக்கிறார். தொடர்ச்சியை இவரின் படங்களில் பார்ப்பது அரிது.

GONE GIRL படம் வரவிருக்கிறது அதுவும் இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது எனும் போதே எப்படியும் சென்று பார்க்க வேண்டும் என்றிருந்தேன். இப்படம் வெளியானது தீபாவளி நேரத்தில் என்பதால் கோவையில் வெளியாகவில்லை. தீபாவளியின் வாரம் முடிந்த அடுத்த வாரமே வெளியிட்டார்கள். செல்ல வேண்டும் என்னும் ஆர்வத்தில் இப்படம் சார்ந்து ஏரல் அருணுடன் பேசியிருக்கிறேன். அப்போது நாவலில் இருக்கும் முக்கியமான நுட்பம் திரையில் கையாளப்படமுடியாமல் விடப்பட்டிருக்கிறது என்று கூறினான். ஒரே விஷயம் முன்பாதியில் சொல்லப்பட்டது அப்படியே மாற்றி இரண்டாவது பாதியில் சொல்லப்படும் என்றும் சொன்னான். படத்தில் வேறு ஒரு நுட்பத்தை கையாண்டிருக்கின்றனர். படம் பார்க்கும் போதே தெரிந்தது முழுக்கவே கடினமான திரைக்கதையை இப்படம் கொண்டிருக்கிறது என்று.


குழந்தைகளுக்கான தொடர் ஒன்றை எழுதுகிற ஆசிரியரின் மகள் ஏமி. தன் பெண்ணை முன்மாதிரியாக வைத்தே அந்த தொடரை அவர் எழுதியிருந்தார். அவளை காதலித்து மணம் முடிக்கிறான் நாயகன் நிக். இருவருக்குமான காதல் வாழ்க்கை இன்பமயமாகவும் பின் மணவாழ்க்கை சண்டை சச்சரவுகளில் உழன்று பிரச்சினையில் சென்றுமுடிகிறது. சாதாரணமாக ஒரு நாள் காலை வேளையில் வீட்டினுள் நுழையும் போது அங்கங்கு சில பொருட்கள் உடைந்து இருக்கின்றன. ஏமியை காணவில்லை. இங்கிருந்து தான் படத்தின் முதல் காட்சியே ஆரம்பிக்கிறது. ஏமி என்ன ஆனாள் ? ஏதேனும் ஆகியிருப்பின் அதற்கான காரணம் யாதாக இருக்கும் என்று திரைக்கதை மெதுமெதுவாக கட்டவிழ்கிறது.

திரைக்கதையை குழப்பமான திரைக்கதை என்று சொல்லியிருந்தேன். ஏன் என்று நான் கண்ட சில விஷயங்களை கூறுகிறேன். திரைக்கதையை காட்சியாக்கும் போது அதுவே கதையை தன் மையம் நோக்கி நம்மை அழைத்து செல்லும். இங்கும் அதுவே நிகழ்கிறது. மனைவியை காணவில்லை என்பதுடன் கதை நகரத்துவங்குகிறது. ஒவ்வொரு பகுதிகளாக புலனாய்வுகளை நிகழ்த்துகிறார் போலீஸ். எல்லா புலனாய்வுமே நாயகன் நிக் மூலமாகவே நிகழ்கிறது. அவனுடன் மட்டுமே அவள் இருந்திருந்தாள் என்பதற்காக.

இதன் இணைகோடாக அவனுடைய மனைவி ஏமி எழுதி வைத்திருக்கும் டைரிக்குறிப்புகள் மூலமாக கதை பின்னோக்கி அவர்களின் வாழ்க்கையை பேசுகிறது. இந்த காதல் வாழ்க்கை கூட நிகழ்வதாக இருப்பினும் அதில் தன் விருப்பு வெறுப்புகளை நாயகி இடையிடையே கூறுவதாகவும் அமைகிறது. இந்த டைரிக்குறிப்பு தன்னுள்ளேயே பல முடிச்சுகளை கொண்டிருக்கின்றன. இந்த முடிச்சுகளால் எதை நோக்கி திரைக்கதை நகர்கிறதோ அந்த தடம் இடம் மாறுகிறது.

நாயகனே தன் மனைவிக்கு என்ன ஆகியிருக்கிறது என்று தேடத்துவங்கும் போது கதை வேறொரு தளத்தில் செல்ல ஆரம்பிக்கிறது. கதை என்னவாக இருக்கக்கூடும் என்பதை சிறிதும் யூகிக்க முடியாத வண்ணம் திரைக்கதையை அமைத்திருக்கின்றனர். படம் முழுதாக முடியும் போது மட்டுமே நம்மால் கதையை கட்டமைத்துக் கொள்ளமுடியும். இதுதான் என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயம். தொடர்ச்சியான காட்சிகளுடன் சென்ற திரைப்படம் கதையை மட்டும் முழுக்கவே மறைமுகமாக வைத்திருக்கிறது.

கதை எழுதுபவர்களிடம் நன்கு கவனித்தால் ஒரு உணர்வு மிச்சமிருப்பதை காணலாம். எழுத ஆரம்பிக்கும் முன் தன்னுள் இப்படித்தான் வர வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுத்தின் வேகத்தில் எழுதுவார்கள். முடிவில் வேறொன்றாக வந்து நிற்கும். வந்து நின்றதை ரசித்து மெருகேற்ற முயற்சிப்பார்கள். கதை முக்கியமாக செய்ய வேண்டிய விஷயம் நம்பவைப்பது. எந்த கட்டத்தில் அது நிகழ்கிறதோ அப்போது கதை முழுமையடைகிறது. இது தான் gone girl படத்தின் கதையும் கூட!

Ben affleck எனக்கு சுத்தமாக பிடிக்காது. அவர் நடிப்பில் இரண்டே படங்கள் தான் பார்த்திருக்கிறேன். ஒன்று அர்கோ. மற்றொன்று ஸ்டேட் ஆஃப் ப்ளே. இரண்டிலும் எனக்கு பிடிக்கவில்லை. கதையும் சரி பென்னின் நடிப்பும் சரி. இந்தப்படத்தின் முதல் காட்சியில் சாலையில் நின்று கொண்டிருக்கிறான். வீட்டினுள் நுழைகிறான். அதில் அவனுடைய உடற்கட்டே நாயகனுக்குரியதாய் அழகாக இருந்தது. மீத இரண்டு படங்களிலுமே எனக்கு நாயகன் என்ற உணர்வே பென்னை பார்க்கும் போது ஏற்படவில்லை. உடலிற்கு உகந்தாற்போல பேசும் வசனங்கள். சோம்பேறியின் குணம் நிரம்பிய பாத்திரம் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் மிக அழகாக நடிப்பில் காட்டியிருக்கிறார். பென் அஃப்லெக்கை படம் நெடுக பிடித்திருந்தது.

Rosamund pike படத்தின் மிக முக்கிய பாத்திரம் ஏமியாக நடித்திருக்கிறார். முத்தம் காமம் ஏக்கம் பயம் ஆசை கோபம் வன்மம் வெறி என்று எல்லா குணங்களிலும் தன் நடிப்பை பகிர்ந்தளித்து கொடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து முடியும் வரை கதாபாத்திரத்தின் கணத்திலும் நடிப்பின் அழகிலும் காட்சியினுள்ளேயே கட்டி போட வைக்கிறார். படம் முடிந்த பிறகும் அவளின் நடிப்பே நம்முடன் மிச்சமாய் இருப்பது போன்றதொரு பாத்திர அமைப்பு ஏமியினுடையது. இரண்டாவதாய் ஒரு கதாநாயகி படத்தில் வருகிறாள். சில நேரம் மட்டுமே வந்தாலும் முக்கிய பங்கை, ஏமி பாத்திரத்தின் கணம் அளவிற்கு சமமாய் அப்பாத்திரம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது அதில் இருவரின் அழகையும் நிச்சயம் பார்த்திருக்க வேண்டும். பைக்கின் முன் இரண்டாவது நாயகி அழகில் நெருங்க கூட முடியாது. இது மட்டும் தான் படத்தில் அடியேனுக்கு நெருடலாக இருந்த ஒரே விஷயம்.

டேவிட் ஃபிஞ்சரும் படத்தில் வரும் இசையும் எல்லா காட்சிகளிலுமே ஆச்சர்யம் தான். சில இடங்களில் இசையமைப்பது ஹான்ஸ் ஸிம்மரோ என்று எண்ணவைக்கிறார். இசையிலும் மென்மையையும் வன்மையையும் சரிவர கலந்திருக்கிறார். எந்த ஒரு காட்சியையும் கதாபாத்திரத்தையும் தேவையற்றது என்று சொல்லிவிடமுடியாத அளவிலான திரைக்கதை. படத்தை முதல் காட்சியிலிருந்து ரசித்தாலும் பார்த்த ஐந்து படங்களில் இது ஃபிஞ்சரின் பெஸ்ட் என்று சொல்ல மனம் வர மறுக்கிறது!!!

எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய கடினமான அழகான திரைக்கதை GONE GIRL. . ..

பி.கு : கருந்தேளின் விமர்சனம் பின்வரும் லிங்கில் உள்ளது. இதில் சில நல்ல தகவல்கள் இப்படம் சார்ந்து இருக்கின்றன.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக