சொல் ஒரு அடையாளம்

எல்லோருக்கும் வாழ்வில் பலதரப்பட்ட குருக்கள் இருப்பது வழக்கம். அதில் ஒருவரேனும் செயலில் மட்டுமே பிரக்ஞைப்பூர்வமாய் இருப்பர். சொல்லிக்கொடுக்க மாட்டார். உதாரணம் ஜென்குரு போன்று என எடுத்துக் கொள்ளலாம். அவர்களின் அமைதியும் அநேக விஷயங்களை கற்றுக்கொடுக்கும். எனக்கு அப்படியொரு இலக்கிய ஆசான் தான் நகுலன். நகுலன் தன் எழுத்தினுள் பேரலைகளை எழுப்புகிறார். தூரத்திலிருந்து பார்க்கும் போது கடல் அமைதியாகத்தான் இருக்கிறது. இந்த இருவேறு ரூபங்கள் தான் நகுலன் பக்கம் என்னை பரிகொடுத்ததற்கான காரணம்.

நகுலனின் நாவல்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். அதிலும் நினைவுப்பாதை போன்ற நாவல்களில் கவிதைகள் இடம்பெறுகின்றன. அவற்றிலும் அவரின் நாவல் மொழியிலும் அதிக வித்தியாசங்களை கண்டறிய முடியாது. முடியவில்லை. இதைக் குறிப்பிடுவதன் காரணம் அவருடைய தேர்ந்தெடுத்த கவிதைகள் நூலினை இப்போது தான் வாசித்தேன். அதிலும் இதே விஷயத்தை தான் உணர்ந்து கொண்டேன். கவிதையினூடே இயங்கும் மொழி உரைநடைக்கு ஒப்பானதாயும் இருக்கிறது அதே நேரம் தனித்துவமாகவும் இருக்கிறது. ஆனால் கவிதைக்கு தான் இம்மொழி என்று நகுலனின் எழுத்துகளில் எதையும் பிரிக்க முடிவதில்லை.இந்நூலை தொகுத்திருக்கும் யுவன் சந்திரசேகரின் நேர்மையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்நூல் எல்லா கவிதைகளையோ அல்லது தொகுத்தவரின் பிடித்தமைக்கு உரிய கவிதைகளையோ சுமந்து வரவில்லை. மாறாக அவரின் எழுத்திலக்கியம் கொண்டுள்ள பன்முக உருவங்களை விவாதிக்கும் நோக்கில் இப்புத்தகம் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதை தன் முன்னுரையிலேயே மிகத்தெளிவாக கூறிவிடுகிறார். 

பின் எதற்காக இந்நூல் ? இது சற்று நியாயமான கேள்வியாக இருக்கிறது. நகுலனின் மொத்த கவிதைகளும் தனியே கிடைக்கும் போது இத்தொகுப்பை தனியாக வெளியிட காரணம் என்ன ? இக்கேள்விக்கான பதில் நூலின் கடைசியில் கிடைக்கிறது. நூலின் கடைசி இருபது பக்கங்கள் சுகுமாரனுக்கும் யுவன் சந்திரசேகருக்கும் இடையே நிகழும் நகுலன் சார்ந்த உரையாடல். நகுலனின் கவிதை உலகத்திற்குள் நுழைந்து வெளிவரும் வாசகனுக்கு ஒரு நிலையில் இந்த உரையாடல் அவரின் உலகை அறிய பேருதவியாய் இருக்கும். கூர்ந்து பார்த்தால் சங்க இலக்கியம் போலத்தான். முதலில் பாடலைக் கூறி பின் அதன் பொருளை விளக்குவது. இங்கோ பொருள் விளக்கம் இல்லை. நகுலனின் மையப்பொருட்கள் எதில் இயங்குகின்றன என்னும் ஓர் ஆய்வு.

வாசகனுக்கு நகுலனுடன் இருக்கும் பெரிய பிரச்சினை புரியாமல் போகக்கூடிய மொழி தான். அது மொழியா அல்லது சொல்லப்படும் பொருளா என்பதே பல வாசகர்களுக்கு சந்தேகமாய் இருக்கிறது. இங்கே உரையாடலில் மிக அற்புதமான வாதத்தை இருவரும் மேற்கொண்டிருக்கின்றனர். நகுலனின் மொழி உண்மையிலேயே எளிமையானது தான். எல்லா வரிகளையும் எளிதில் புரிதல் கொண்டுவிட முடியும். அதே அவர் அதில் பொதித்து கூறும் விஷயங்கள் தான் மிகக் கணமானதாக, மௌனம் நிரம்பியதாக இருக்கிறது. ஒரு விஷயத்தை எடுத்து அதை கவிதையின் மூலம் சொல்வதற்கு பதில் அதனூடே இருக்கக்கூடிய உணர்வுகளை மட்டுமே அவர் கவிதையாக்குகிறார். இதை வாசகர்களுக்கு எளிமையாக கூற  கவிதையொன்றை சொல்லலாம் என நினைக்கிறேன்.

இவருடைய கோட் ஸ்டாண்ட் கவிதைகள் மிக முக்கியமானவை எனக் கருதுகிறேன். உள்ளிருக்கும் பொருள் நிறைந்த பாரத்தை கழற்றி உதறும் போது நம்மிடம் நாம் மட்டுமே மீதமாய் இருக்கிறோம். இந்த மீதம் எப்படி இருக்கக் கூடும் ? அது போதம் தரக்கூடியதா என்பதையெல்லாம் அக்கவிதைகள் கூறுகின்றன. அது நீளமான கவிதை அதில் வரும் ஒரு வரியைப் பாருங்கள்,

"மறுபடியும் அறைக்குள் செல்கிறான்
இப்பொழுது இங்கு

யாருமில்லை

அவள் கூட
அவள்

யார் என்று கேட்காதீர்கள்
உங்கள் துருவிப் பார்க்கும்
கண்களுக்கு சற்று ஓய்வு
கொடுங்கள்"

பின்னால் இருக்கும் வாதத்தில் இவரை பித்தனிலை கவிஞர் என்று கூறுவதை இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் நகுலன் தனக்கான பொருளையே மையமாக்கி எழுதுகிறார். அவருடைய அந்தகார தனிமையும் மௌனமும் பெருக்கெடுத்து மட்டுமே ஓடுகின்றன. அவர் யாதொரு மெருகினையும் எந்த ஒரு பொருளுக்கும் ஏற்றாமல் அதனூடே இருக்கும் இருண்மையையும் உணர்வையும் எழுதுகிறார். இதுவும் ஒரு பித்தனிலை தான் என்பது என் வாதம். அவர் தனக்குள்ளேயே சென்று தான் யார் என்பதை கேட்க நினைக்கிறார். இந்த கேட்கும் தன்மை அசேதனங்களுடனும் நிகழ்கின்றன. இதை அவரின் நாவல்களில் அதிகமாக காண முடியும். ஆக தான் யார் என்பது தான் அவர் பித்தனிலையின் மூலஸ்தானமாய் அமைகிறது. அங்கிருந்து தனக்குள்ளான தர்க்கத்தை கவிதையாகவோ நாவலாகவோ மாற்றுகிறார்.

பின்வரும் கவிதையை பாருங்கள். மையத்தை நோக்கி எல்லா வார்த்தைகளையும் எழுதி செல்கிறார். ஆனால் மையமின்றி இருண்மை மட்டுமே மிஞ்சுகிறது. இது தான் மேலே சொன்ன பித்தனிலை. அதே போல கடைசி வரி தான் அசேதனுத்திற்கும் நகுலனின் மனதிற்குமான தொடர்பு.

"அது

காதலுக்கு பின்
தொழிலின் இறுதியில்
உலகைவிட்டுப் பிரிகையில்
சாவுக்கு அப்பால்
முதலுக்கும் முடிவுக்கும்
முன்னும் பின்னும்
முழுவதுமாகப்
பின்னிப் பிணைந்து
நில்லாமல் நிற்பது
இல்லாமல் இருப்பது
தெரியாமல் தெரிவது
சொல்லாமல் சொல்லிக் கொள்வது
எல்லோரும் நினைப்பது
யாவரையும் கடந்தது
புலனுக்கு புரியாதது
பொருளுக்கு சிக்காதது
என்றுமே கேள்வியாக
எஞ்சி நிற்பது
அது அதுவே"

முதல் சில கவிதைகளிலேயே அசேதனங்களுடன் நகுலனுக்கு இருக்கும் தொடர்பை மிக அழகாக கண்டறிந்துவிடலாம். சிலைக்கு முன் நிற்கிறோம். அதன் அழகை கண்டு வியக்கிறோம். சிலை எதுவுமே நம்மிடம் பேசவில்லை. ஆனாலும் நமக்குள்ளே ஆயிரமாயிரம் வார்த்தைகள் சிலையின் அழகியலுள் இயங்குகின்றது. அப்படியெனில் அந்த சம்பாஷனை எங்கு நடக்கிறது ? என்னவாக பேசப்படுகின்றன என்பது தெரியாத விஷயம். இதை இரண்டு கவிதைகளில் எழுதியிருக்கிறார். வர்ணபேதம் என்னும் கவிதையில் இந்த பேச்சுடன் ஞானத்தை பின்வருமாறு இணைக்கிறார்,

"சிலை பேசும்;
மோனம் ஞான வரம்பு;
சிலை பேசும்
வாய் குவிய
வாக்கு அகல
ஒளி மூளை
உள்ளம் பேசும்;
சிலை பேசும். சிவம்,
சதாசிவம்
பேசும்,
சிலை பேசும்.
நல்லவர்க்கு ஒரு சொல்
அவரினும் மிக்காருக்கு
அதுவும் மிகை.
மோனம் ஞானவரம்பு
சிலைபேசும்"

இக்கவிதையில் முதல் இருவரிகளும் கடைசி இரு வரிகளும் முன்னும் பின்னும் இடம் மாறி வந்திருக்கின்றன என்பதை காணலாம். அதே போல வார்த்தைகளுக்குள்ளே இருக்கும் இடைவெளியை பாருங்கள். முன்னதில் சிலை பிரதானமாகிறது. பின்னதில் மோனமும் ஞானமும் பிரதானமாகிறது. முதலில் சொல்லப்பட்டது படிப்பினை. இரண்டாவதாக வருவது அனுபவம். அங்கே வார்த்தைகள் அர்த்தங்களை சுமந்து வருவதில்லை. மாறாக உணர்ச்சிகளையும் தரிசனங்களையும் தாங்கி நிற்கின்றன.

அசேதனங்களினுள்ளே இருக்கும் உணர்வுகளை எவ்வளவு தூரம் கூறுகிறாரோ அதே அளவு மனிதர்களினுள் இருக்கும் உள்ளார்ந்த தேடலையும் சொல்கிறார். இக்கவிதையை சொல்வதற்கு முன், ஒரு மனிதனுடன் நட்பாகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு தன்னைப்பற்றிய மதிப்பீடொன்று இருக்கும். அவனுடைய அம்மாவிற்கு அவனைப் பற்றிய மதிப்பீடு இருக்கும். இதே போல அவனுடன் தொடர்பில் இருக்கும் பலருக்கும் பலவிதமான மதிப்பீடுகள் இருக்கும். இந்த எல்லாமுமே அந்த நான் என்னும் ஒரு பதத்தின் பன்முகங்கள். அப்படியெனில் உண்மை என்னவாக இருக்கும்  ? இதை நாவல்களின் பல இடங்களில் சாசுவதம் என்கிறார் நகுலன். அசேதனங்களுடன் தன்னைப் பொருத்திப் பார்ப்பதும் உயிருடன் இருக்கும் மனிதர்களின் பேச்சுகளை தனக்குள்ளேயே தர்க்கம் செய்து கொள்வதும் இந்த சாசுவதத்தை அறிவதற்குத்தானோ என்று தோன்றுகிறது. அவர் கூறும் சாசுவதம் ஒவ்வொரு மனிதரைப் பொருத்தும் மாறுபடுகிறது. அப்படியொன்று தான் பின்வரும் கவிதை,

"அம்மாவுக்கு 
எண்பது வயதாகிவிட்டது

கண் சரியாகத் தெரிவதில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்

அருகில் சென்று உட்கார்கிறான்
அவன் முகத்தை கையை
கழுத்தைத் தடவித்

தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக் குரல்
ஒலிக்கிறது

"நண்பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தை
தேடுகிறாள் ?""

தன்னையே தேடுவது நகுலனின் எழுத்துகளுள் இருக்கும் பிரதான விஷயம். இதை அவரே கண்ணாடி என்ற நீண்ட கவிதையில் பிரதிநிதித்துவபடுத்துகிறார். தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறார். பிம்பம் வரவில்லை. ஏன் எனும் போது ஏற்படும் உணர்வை கவிதையாக்கியிருக்கிறார். எல்லோரும் இருக்கும் விஷயங்களைப் பற்றி பேசும் போது இவர் மட்டும் இல்லாததைப் பற்றி பேசுகிறாரோ என்று கூறியிருந்தார் யுவன். அதற்கு நகுலனே தீர்வு சொல்கிறார்,

"ஒன்று இருந்த இடத்தில்
அது இல்லாமல் இருந்ததைத்
தான் நான் ஒன்றுமே
இல்லை என்கிறேனோ;"

செகாவ் வெகு நேரம் ஒன்றுமே இல்லாத சுவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பாராம். பின் தன்னையே நொந்து கொள்வாராம் எதுவுமே இல்லை என்று கண்டுபிடிக்க இவ்வளவு நேரம் ஆயிற்றே என்று. இப்படிப்பட்ட இன்மையை தான் கவித்துவமாக்குகிறார். இந்த இன்மையின் ஓருருவம் தான் சுசீலாவோ என்று கூட தோன்றுகிறது.

இன்மையும் இருண்மையும் அழகியலாக மாறும் எழுத்திலக்கியத்தை புரிந்து கொள்ள நிச்சயம் இந்த நூல் உதவும். பின்னாலிருக்கும் உரையாடலும் இருபகுதியாய் பிரிந்திருக்கிறது. ஒன்று யுவனிற்கானதாயும் மற்றொன்று சுகுமாரனுக்கானதாயும். இரண்டும் ஒரே தொனியில் நகுலனைப் பற்றி பேசுவதால் பெரிதான வித்தியாசத்தை அறிய முடியவில்லை. இருவரின் பேச்சும் நகுலனின் இலக்கியத்தடம், அவரின் வாசிப்புகள், அவர் சார்ந்த எழுத்துகளில் நகுலனை தவிர்த்து அவரின் எழுத்துகளை மட்டும் பேசிய விஷயங்கள் என்று மிகத் தெளிவாக நீள்கிறது.

நகுலனின் தனிப்பட்ட வாழ்க்கையும் இலக்கியமும், அவரது வாசிப்பும் எழுத்தும் எப்படி தொடர்பிலிருக்கின்றன, பிரக்ஞைப்பூர்வமாகவே எழுதியிருக்கிறாரா, உண்மையிலேயே பித்தனிலை எழுத்துகள் தானா ? எப்பகுதிகள் எப்படி புரிபடக்கூடியன, ஏன் அப்படி அமையபெற்றிருக்கின்றன, நகுலன் அவரது கவிதைகளையே வாசிக்கும் போது எப்படி பொருள் கொடுத்தன, இயல்பு வாழ்க்கையில் இலக்கியம் எப்பேற்பட்ட பாதிப்பினை கொடுத்தது, அதே போல இயல்பு வாழ்க்கையை இலக்கியத்தில் எப்படி புகுத்திருக்கிறார் என்று பலதரப்பட்ட கேள்விகளை அந்த உரையாடல் பதில்களால் விளக்குகிறது. நகுலனின் கவிதையை எளிமையில் புரிந்து கொள்ள அவரே ஒரு எச்சரிக்கையை கவிதையில் வைத்திருக்கிறார். அத்துடன் கட்டுரையை முடிக்கிறேன். மேலே பேசப்பட்ட எல்லா விஷயங்களும் இந்நான்கு வரிகளில் அடங்கும்.

"சொல் ஒரு அடையாளம்
அடையாளத்துக்கு
அடிமைப் படாதே
ஏமாந்து போவாய்"

பின் குறிப்பு : நகுலன் சார்ந்து இத்தளத்தில் இருக்கும் பிற கட்டுரைகளை வாசிக்க பின்வரும் லிங்குகளை க்ளிக்கவும். . .

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யத்துடன் சிந்திக்கவும் வைத்தது...

இணைப்புகளுக்கும் நன்றி...

Post a comment

கருத்திடுக