சரமாகோவின் சிலுவை

ஜோஸே சரமாகோ போர்ச்சுகீஸிய எழுத்தாளர். அவரின் புனைவெழுத்துகள் எல்லாமே லத்தின் அமேரிக்க எழுத்துகளில் தனித்து தெரிபவை. அதற்கு அவர் தனிப்பட்ட யுக்தியை கையாள்கிறார். நீளமான வரிகளையும், கமா முற்றுப்புள்ளியைத் தவிர யாதொரு நிறுத்தற்குறியீட்டினையும் இடாமல் அதே நேரம் வசனங்களை தனித்தனியே கொடுக்காமல் யார் பேசுகிறார் என்னும் குறிப்பையும் கொடுக்காமல் பேசுவதை எழுதிக் கொண்டே செல்வது போன்ற பத்திகள். பத்திகளும் அதிகமாக பிரிக்கப்பட்டிருக்காது. இருபது பக்கங்களுக்கு நீளும் அத்தியாயம் ஒரே பத்தியாய் இருக்கும்.

இது எல்லமே சரமாகோவிற்கென இருக்கும் எழுத்துப்பாணி. இதை வாசிக்கும் போது நிச்சயம் புரியாது என்ற முடிவிற்கே எல்லோரும் வந்து சேர்வார்கள். கதையில் இருக்கும் ஆழமும் வாக்கிய அமைப்பில் அவர் கொடுக்கும் எளிமையும் சிரமம் கொடுக்காமல் வசனங்களை பிரிக்க உதவுகின்றன. கமாக்களை வைத்து அவர் வசனங்களை நகர்த்தினாலும் ஏதேனும் சின்னதான குறிப்பை வசனத்தின் ஆரம்பத்திலோ இறுதியிலோ எந்த கதாபாத்திரம் பேசுவது என்று வைத்துவிடுகிறார். லத்தின் அமேரிக்க எழுத்தாளர்களை மிகக்குறைந்த அளவே வாசித்திருக்கிறேன். அவற்றில் பிடித்தமானவராய் சரமாகோவே மனதுள் நின்று கொண்டிருக்கிறார். லோசாவும் மார்க்வேஸும் கதைகளை கொட்டிக் கொடுத்தாலும் சரமாகோ கொடுக்கும் முழுமையை அவர்கள் கொடுப்பதில்லை.(வாசித்ததில் இவருக்கு அடுத்து பிடித்தமானவராய் மிலன் குந்தேராவையே கூறுவேன்) நான் எதிர்ப்பார்க்கும் புதிர்கள் கதைகள் வாக்கியத்தின் அழகியல் எல்லாமே இவருடைய எழுத்தில் காணமுடிகிறது. தமிழில் இவருடைய குறுநாவல் ஒன்று மட்டும் "அறியப்படாத தீவின் கதை" என்னும் பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதில் இருக்கும் மொழியை விட ஆங்கிலத்தில் இப்போது எழுதவிருக்கும் நாவலின் மொழியமைப்பு தான் எனக்கு பிடித்தமானதாய் இருந்தது. 

மொழியிலும் கதைசொல்லல் முறையிலும் எப்படி தனித்துவம் வாய்ந்தவராய் இருக்கிறாரோ அதே போல நாவலினால் கலகத்தை உண்டுசெய்பவராகவும் இருக்கிறார். இவருடைய குறிப்பிட்ட நாவல் வெளிவந்தவுடன் கிறித்துவ மதபோதகர்களிடையே கொந்தளிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. ஐரோப்பிய யூனியன் அளிக்கும் அரியோஸ்டோ விருது வாங்கவிருந்த நாவலை போட்டியிலிருந்தே ரத்து செய்தனர். இது குறிப்பாக வாடிகன் நகரிலிருந்து கொடுக்கப்பட்ட அதீதமான அழுத்தத்தினால் போர்ச்சுகீஸிலிருக்கும் மதபோதகர்கள் செய்த நடவடிக்கை. இது மட்டுமின்றி இஸ்ரேலின் எந்த ஒரு கடையிலும் நூலகங்களிலும் இந்நூல் இருக்கக் கூடாது என்று வெளியேற்றிவிட்டனர். அந்த நூல் தான் "THE GOSPEL ACCORDING TO JESUS CHRIST"


முதலில் காஸ்பல் என்றால் என்ன என்று பார்ப்போம். பின் மேலே இருக்கும் கலகத்திற்கான காரணத்தைக் காண்போம். காஸ்பல் என்பதை இயேசுவின் வாழ்க்கையின் முழுமையை அப்படியே கூறுவது என்கின்றனர். இது பிறப்பிலிருந்து மூன்றாம் நாள் உயிர்ப்பித்து வந்தது வரை அடங்கும். பலர் இந்த காஸ்பல்களை எழுதியிருந்தாலும் நால்வர் எழுதியிருப்பது தான் பிரபலமானவை. அவர்கள் - ஜான், லூக், மத்தேயு, மார்க். இந்நாவலில் சரமாகோ எழுதியிருப்பது ஜீஸஸின் வாழ்க்கையை அவரே எழுதுவதாக இருப்பது தான். இங்கு தான் மேலே சொல்லப்பட்டிருக்கும் பிரச்சினையே வருகிறது.

ஜீஸஸின் வாழ்க்கையை கூறும் இந்த நாவலின் கதாபாத்திரம் அடிப்படை மனிதனுக்கே ஆன அநேக குணாதிசியங்களை தூக்கி பிடித்து நிற்கிறது. கடவுளின் தன்மையை புறக்கணித்து சாமான்ய மனிதனின் வாழ்க்கையை தேடும் பரிதாபகரமான போக்கை சித்தரித்திருக்கிறார். நான் வேதாகமத்தை வாசித்ததில்லை. ஜீஸஸின் வாழ்க்கையெல்லாம் தோழியின் வாய்மொழிதான். அதைத்தாண்டி எங்கேனும் வாசிக்க நேர்ந்தால் அறிந்து கொள்வேன். சின்ன வயதில் சினிமாக்களில் பார்த்திருக்கிறேன். அதுவும் அதிகமாக நினைவில் இல்லை. இந்த எண்ணங்களெல்லாம் தூக்கி நிற்க நாவலை வாசிக்க ஆரம்பித்தேன்.

முதல் அத்தியாயமே புதியதான இலக்கிய முறையை மிக அழகாக அறிமுகம் செய்கிறது. ஜீஸஸை சிலுவையில் அறைந்திருக்கும் ஓவியமொன்று இருக்கிறது. அருகே இரண்டு திருடர்களின் உருவமும் கீழே விம்மிக் கொண்டிருக்கும் மக்களும் அவர்களுக்கு பின்னே இருக்க கூடிய காட்சிகளும் இருக்கின்றன. அதற்கு அடுத்த பக்கத்தில் நாவல் ஆரம்பிக்கிறது. முன்பக்கத்தில் இருக்கும் விஷயங்களை விரிவாக விளக்குகின்றது. அதிலுள்ள நுண்மைகளையும் சமகால விஷயங்களையும் இணைத்து மிகப்பெரிய பகடியாக நாவலை ஆரம்பிக்கிறார். எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்துவிட்டு கடைசியாக நாயகனுக்கு வருகிறார். இந்த முழு வர்ணனையும் தான் பரோக் பாணி என்கின்றனர். அழகியலை முழுதாக தூக்கி பிடிக்கும் விஷயம் முதல் அத்தியாயத்தில் மட்டும் இல்லாமல் நாவலினூடே வரும் வீடுகள் தேவாலயங்கள் என எல்லாவற்றிலும் இத்தன்மையை வெளிக்காட்டுகிறார். விவரணையில் முழுமையை முடித்துவிட்டு பின் தன் பகடிக்குள் செல்கிறார்.

முதல் அத்தியாயம் தான் நாவலின் க்ளைமாக்ஸ். பின் முதலிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. ஜீஸஸின் வாழ்க்கையை புதிர் நிறைந்த வாழ்க்கையாக சித்தரித்திருக்கிறார். எண்ணற்ற முடிச்சுகளை நாவலில் வைத்துக் கொண்டே செல்கிறார். சில எங்கேனும் நிச்சயம் விடுபடும் என்று தெரிந்துவிடுகின்றன. சில விடும்படும் போது தான் அது புதிரா என்று ஆச்சர்யத்தை அளிக்கின்றன. 
நாஸ்ரேத் என்னும் ஊரில் ஜோசப் மற்றும் மேரி என்ற தம்பதியினர் வாழ்கின்றனர். அவன் தச்சன். அவள் கர்ப்பமாக இருக்கும் போது வீட்டிற்கு வரும் பிச்சைக்காரன் சாப்பிட்டுவிட்டு ஒளிதரும் மணலை அவளுக்கு கொடுத்துவிட்டு செல்கிறான். அவன் வந்ததையும் மணலின் ஜாலவித்தையையும் ஜோசப் நம்ப மறுக்கிறான். அவர்கள் யூத மதத்தவர்கள் என்பதால் சினகாக்(யூத மதக்கோயில்)இற்கு சென்று அங்கிருப்பவர்களிடம் முறையிடுகிறார்கள். இது இரு விஷயங்களின் ஆரம்பமாக இருக்கலாம். ஒன்று நன்மையின் அல்லது தீமையின் என்பதால் அம்மணலை புதைக்கின்றனர். அங்கே மரமொன்று வர ஆரம்பிக்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நிகழும் தருணத்தில் தத்தமது நாட்டிற்கு சென்று பதிய வேண்டும் என்கின்றனர். கர்ப்பிணியாக இருப்பதையும் பொருத்துக் கொண்டு இருவரும் கிளம்புகின்றனர். பெத்லஹேமில் அவளிற்கு வலி ஏற்பட்டு குழந்தை பிறக்கிறது. அவன் தான் ஜீஸஸ். அப்போது கணவன் அருகிலிருக்கும் ஜெருசலேத்தில் கோயில் கட்டுமான வேலையில் பணிபுரிகிறான். மூன்று வயதிற்குள் இருக்கும் குழந்தைகளை கொல்ல சொல்கிறான் என்று சில வீரர்கள் பேசுவது அவன் காதில் விழுகிறது. அது அரசன் ஹெரோடின் கனவில் வந்த அசரீரி. காரணம் தெரியவில்லையெனினும் தன் மகன் ஜீஸஸின் மீது பாசம் கொண்டு ஓடிவந்து அவனை காக்கிறான். மேரியிடம் முன்பு பிச்சைக்காரனாக வந்தவன் ஜீஸஸ் பிறந்த குகையினுக்கும் வருகிறான். அவன் தேவதூதன். அங்கே சொல்லும் விஷயம் உன் கணவன் தண்டனைக்குரியவன். ஏன் எனில் அவன் மகனை காப்பாற்ற வரும் வழியெல்லாம் எண்ணற்ற குழந்தைகள் இருந்தனர். அவன் மனது வைத்திருந்தால் எல்லோரையும் எச்சரித்து இஸ்ரேலிற்கோ எகிப்திற்கோ தப்பிக்க வைத்திருக்கலாம். இப்போது அத்தனை குழந்தைகளையும் கொன்ற பாவியாகிறான். அதனால் தண்டனையை அனுபவித்தே தீருவான்.

அதே நேரம் ஜோசப்பின் கனவினில் பல காவலாளியுடன் வந்து ஜீஸஸை அவனே கொல்வது போன்று வருகிறது. அச்சமுறுகிறான். மீண்டும் நாஸரேத்திற்கே செல்கின்றனர். வீட்டில் ஜீஸஸிற்கு பிறகு ஆறு பேர் பிறக்கின்றனர். நாட்டில் பெரியதொரு போர் மூள்கிறது. அதில் பக்கத்து வீட்டுக்காரன் வாழ்க்கையின் மீதுள்ள வெறுப்பை மாற்றுவதற்கும் மறப்பதற்கும் கலந்து கொள்கிறான். அவனின் நிலை தெரியாததால் அறிய ஜோசப் அவனை தேடி போர் நடக்கும் இடத்திற்கு செல்கிறான். அங்கே ரோம் நாட்டவர்களால் குருசில் அறையப்படுகிறான் ஜோசப். காரணமில்லாமலேயே மரணமடைகிறான். அப்பா இறந்ததனால் ஜீஸஸ் மூத்தவனாகிறான். வீட்டின் விஷயங்களை தலையெடுக்கிறான். அவனுக்கு ஒரு கனவு துன்புறுத்த ஆரம்பிக்கிறது. அது பல படை வீரர்களுடன் அவனது அப்பாவே அவனை கொலை செய்ய வருகிறார்.  இறந்த அப்பா ஏன் வர வேண்டும் ?

இக்குழப்பத்திற்கான விடையையும் தன் பிறப்பின் பின்னே இருக்கும் ரகசியமான விஷயங்களையும் அறிய செல்கிறேன் என்று கிளம்புகிறான். இந்த ரகசியம் அவனாக கற்பிதம் செய்து கொண்டது. இது தான் நாவலின் ஆரம்பம். இதன்பின்னே இவன் செல்லும் பயணங்களும் அங்கங்கே அவன் சந்திக்கும் விஷயங்களும் அதிசயங்களும் தான் நாவலை நகர்த்துகின்றது.

இம்மையில் செய்த பாவங்களுக்கு மறுமையில் அனுபவிப்பர் என்பது எல்லா மதமும் சொல்லும் விஷயம். அதே போல அப்பாவங்கள் தன் ரத்தங்களுக்கும் செல்லும் என்றும் சொல்லப்படுகிறது. அப்பாவினால் இறந்த கணக்கறியாத குழந்தைகளுக்கான பாவத்தை நானும் சுமக்கிறேன். குற்றவுணர்ச்சியடைகிறேன். தர்க்க ரீதியாக இவ்வுணர்வு சரியா என்றறிய கிளம்புகிறான். தர்க்கங்கள் நீண்டுகொண்டே நாவலில் செல்கின்றன. இந்த இம்மை மறுமை என்னும் காலத்தை ஆசிரியர் சொல்லும் விதம் பாருங்கள்,

"one hypothesis is as good as the other because to speak of yesterday, today and tomorrow is simply to give different names to the same illusion"

நாவலின் மைய விஷயம் சாத்தானுக்கும் கடவுளுக்குமான போட்டியாக இருக்கிறது. இடையில் சிக்கப்படும் பகடைக்காயாக மட்டுமே ஜீஸஸ் கதாபாத்திரம் அமைகிறது. பிறப்பினால் யூதனான ஜீஸஸ் எல்லா நேரமும் செய்யும் எல்லா காரியங்களுக்கும் வழிப்பாட்டினை நிகழ்த்துகிறான். அவனுடன் மேய்யபனாக வரும் அல்லது அவனை மேய்ப்பனாக்கும் பாஸ்டர் என்பவன் பகுத்தறிவாதியாக இருக்கிறான். ஜீஸஸிற்கு கிடைக்கும் ஞானம் எல்லாம் பாஸ்டரிடம் அவன் நிகழ்த்தும் தர்க்க போர்களால் தான் அமைகிறது. அவனின் கடவுளை பாஸ்டர் உதாசீனம் செய்கிறான். இருத்தலை மட்டுமே நினைத்துக் கொள். எதிர்காலமும் கடந்த காலமும் நிலையானதல்ல என்று விதவிதமாக சொல்கிறான். வாதிடுகிறான். இவ்விருவரின் பக்கங்களை கடக்கும் போதெல்லாம் ஸோர்பாவின் ஞாபகமே மேலோங்கி நின்றது. கட்டற்ற சுதந்திரமானவனாக பாஸ்டர் நாவல் முழுக்க வருகிறான். பாஸ்டர் பாத்திரம் எல்லோருக்கும் நாவலில் பிடிக்கும். அவன் ஒரு புதிர். அது நாவலில் அவிழும் போது நம்மையே நாம் சுயமதிப்பீடு செய்து கொள்ளலாம். ஜீஸஸ் எதிர்காலத்தை அதிகமாக யூகிக்கிறான். இதை சரமாகோ இரண்டு இடங்களில் பகடி செய்கிறார். ஒன்றை பின்னர் சொல்கிறேன். மற்றொன்றை பாருங்கள். இது பாஸ்டருடன் இருக்கும் இடங்களில் வருகின்றது.

"often what is foreseeable, simply because it is the most feasible outcome of the sequence of events, or because predetermined for some inexplicable reason, finally turns up in the most unlikely place and circumstances"

கடவுளின் எதிர் திசை சார்ந்த ஆழமான தர்க்கங்கள் ஊடுருவும் போது தான் கடவுளுடனான சம்பாஷணைகள் வருகின்றன. கடவுளின் சம்பாஷனை எனும் போது தான் நினைவில் வருகிறது. இந்நாவலிலிருந்து எண்ணற்ற வாக்கியங்களை பகிர நினைக்கிறேன். நாவலின் கடைசிக்கருகில் ஜீஸஸ் சாத்தான் மற்றும் கடவுள் மூவரும் படகொன்றில் பேசுகின்றனர். அந்த பேச்சு முழுக்கவே என்றென்றைக்கும் மறக்கவியலாத வார்த்தைப் பொக்கிஷங்கள். ஒவ்வொரு வரியும் ஆழமானதும் வாசிப்பவரின் மனதில் வன்மத்தின் சாயலை படரவைப்பதுமாகும். அந்த இருபது பக்கங்களுக்காகவே இந்நாவலை நிச்சயம் வாசிக்க வேண்டும். முன்னரே சொல்லியிருந்தேன் தீமைக்கும் நன்மைக்கும் இடையே நிகழும் பகடையாட்டத்தில் சிக்கிய அப்பாவியான ஜீவன் தான் ஜீஸஸ் என. பகடையாட்டத்தின் முடிவுகளை மூவரும் பேசுகின்றனர். ஜீஸஸ் அஞ்சுகிறான். அப்போது தீமையின் வார்த்தைகளை பாருங்கள்,

"one has to be god to enjoy so much bloodshed"

நன்மையும் தீமையும் ஒரே இடத்தில் இருக்கின்றனவே அப்போது அங்கேயே தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிவிடலாமல்லவா என்னும் கேள்விகள் தோன்றும். நன்மைக்கும் தீமைக்கும் அதனூடே ஊடாடும் அறத்திற்குமான விளக்கத்தை மிகச்சிறந்த தர்க்கமாய் நாவலில் வைத்திருக்கிறார். அறம் பலகீனமானது. அதை நிலைநாட்ட தீமையின் தேவை அவசியமானதாய் அமைகிறது.

ஜீஸஸின் பாத்திரப்படைப்பு வெகுளியானதாய் தேடல் நிரம்பியதாய் குழம்பியதாய் நாவல் முழுக்க வருகிறது. ஒவ்வொரு இடங்களிலும் கிடைக்கும் ஒவ்வொரு காரணங்களை பாவங்களாய் சுமந்து கொண்டே செல்கிறான். எல்லாமே நாவலின் முடிச்சுகள். அப்போது அவன் காணும் எண்ணற்ற மனிதர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்கிறான். அப்படி அவன் காணும் ஒருத்தி தான் விபச்சாரியாக இருக்கும் மேரி மேக்டலீன். அவளுடன் அவன் கொள்ளும் காதலும் உறவும் மிக அழகாக கவித்துவமாக காமத்திற்கே உரிய புதிருடன் சொல்லப்பட்டிருக்கிறது. அவனை உறவு கொள்ளும் காட்சியை இப்படி விவரிக்கிறார்,

"Now Mary Magdalene had instructed him, Discover my body, and she said it again, but in another way changing one word, Discover your body, and there it was, tensed, taut, roused and Mary Magdalene, naked and magnificent, was on top of him and saying, Relax, there is nothing to worry about, don't move, leave this to me"

ஜீஸஸின் வாழ்க்கையில் எண்ணற்ற அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எல்லாமே கேட்கும்தோறும் கற்பனைக் கதையோ என்று எண்ணவைக்கும். இங்கோ அவற்றை நம்பும் அளவு கற்பனையின் வீரியத்தையும் மொழியின் அம்சத்தையும் மெருகேற்றியிருக்கிறார். மொழியியல் சார்ந்தும் கூற வேண்டும். இந்த காஸ்பல் மனிதன் ஜீஸஸின் வாழ்க்கையை கூறுவதாக இருக்கிறது. ஏன் எனில் ஜீஸஸின் கதையை எல்லோரும் அறிந்திருப்பார்கள். ஆக அதில் முடிவுகள் தெரிந்தே இந்த நாவலை எடுக்கிறார்கள். அப்படி எனும் போது கதைசொல்லி உள்ளே நுழைந்து சம்பவங்களை அதற்கேற்றாற் போல புலனாய்வு செய்கிறான். ஓரிடத்தில் இத்திறமையை எப்படி கையாள்கிறார் பாருங்கள் ,(இதுதான் மேலே எதிர்காலம் சார்ந்து சரமாகோ செய்யும் பகடி என்று குறிப்பிட்ட இரண்டில் ஒன்று)

"Four years hence, Jesus will meet God. This unexpected revelation which is probably premature according to the rules of effective narration mentioned earlier, is simply intended to prepare the reader for some everyday scenes from pastoral life which will add little of substance to the main thread of our story, thus excusing any reader who might be tempted to jump ahead"

இப்படி நாவலில் நிறைய ஊடுபாவல்கள் இருக்கின்றன. நாவல் முழுக்க பத்திகளின்றி இருப்பதாலும் பொடி எழுத்துகளாக இருப்பதாலும் வாசித்து முடிக்க நிச்சயம் நேரம் பிடிக்கும். ஆனால் ஒரு பக்கத்திலும் சலிப்போ எப்போது முடியும் என்னும் எண்ணமோ நிச்சயம் தோன்றாது. அப்படி ஒரு கதைசொல்லல் திறமையை இதில் அனுபவிக்கலாம். நாவலை வாசித்து முடித்தவுடன் நான் செய்த முதல் விஷயம் நாவலின் முன்னட்டை படத்தில் இருக்கும் சிலுவையை முத்தமிட்டேன். Alchemy of desire நாவலுக்கு பின் இப்படியானதொரு வேகமான வாசிப்பையும் அதற்கான மொழியையும் இப்போதே அனுபவிக்கிறேன்.

Loving you both like anything dear Jesus and the creator Saramago!!!!

பி.கு : இந்நாவலுக்கான அறிமுகம் எஸ்.ராமகிருஷ்ணனிடமிருந்து தான் கிடைத்தது. நிறைய நாவல்களுக்கு எவ்வளவு சொன்னாலும் முழுமையாக அனுபவித்த உணர்வை கட்டுரையில் கொடுக்கமுடியவில்லையே என்று வருத்தம் என்னுள் மேலோங்கி நிற்கும். அந்த வருத்தம் என்னுள் இப்போது பெருக்கெடுத்து ஓடுகிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக