அனல் தணியா முத்தங்கள்

சென்ற பதிவில் எழுதியது போலவே இப்பதிவும் காமம் சார்ந்த நாவலைப் பற்றிய பதிவு தான். காமம் இன்பத்துடன் எவ்வளவு தொடர்புகளை கொண்டிருக்கிறதோ அதே அளவு குற்றவுணர்ச்சியுடனும் மரணத்துடனும் தொடர்பு கொண்டிருக்கிறது. சின்னதான மரணம் என்று கூட காமத்தை விளிக்கிறார்கள். காமம் குற்றமாகுமா ? கலாச்சாரம் காமத்தை அளவீட்டினுள் அடக்கி வைத்திருக்கிறது. அதைத் தாண்டக்கூடிய தைரியத்தை அளிக்கவில்லை. அப்படி அக்குணத்தை எடுக்கும் பட்சத்தில் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்படுகிறான்(ள்). கலாச்சாரத்தின் வைரி ஆகிறான்(ள்).

ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்றொரு மனநோய் இருக்கிறது. ஆசிரியர் நாவலில் கூட ஓரிடத்தில் இதை குறிப்பிடுகிறார். கிரேக்க வீரன் ஈடிபஸ். பிறக்கும் போதே தந்தையைக் கொன்று தாயை மணப்பான் என்னும் சாபத்துடன் பிறக்கிறான். பயத்தில் அவனை மலையிலிருந்து தள்ளிவிடுகின்றனர். பழங்குடியின மக்களிடம் வளரும் அவன் இந்த ரகசியத்தை அறிந்து நாடு நோக்கி செல்கிறான். வழியில் வழிப்போக்கனிடம் யார் வழிவிடுவது என்று சண்டை மூள்கிறது. சண்டை பெரிதாக வழிப்போக்கனை கொன்றுவிடுகிறான். வழிப்போக்கனாக வந்தவன் நாயகன் சென்றுகொண்டிருக்கும் நாட்டின் அரசன். அரசனற்ற நாட்டிற்கு பதவியேற்க சில மாயப்புதிர்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். அதை விடுவித்து விதவையான ராணியை மணக்கிறான். அவர்களுக்கு குழந்தைகளும் பிறக்கின்றன. வெகு நாட்களுக்கு பின்னரே வழிப்போக்கன் தான் தன் தந்தை எனவும் ராணிதான் தன் தாய் எனவும் அறிகிறான். அவள் சாபம் பலித்ததையறிந்து தற்கொலை செய்து கொள்கிறாள். இதைத் தான் ஃப்ராய்டு காம்ப்ளக்ஸாக மாற்றுகிறார். தாயின் மீது மகனுக்கும் தந்தையின் மீது மகளுக்கும் காமம் சார்ந்த ஈர்ப்பு இருந்தே வருகிறது. இது தவறில்லையா என்னும் குற்றவுணர்ச்சி எங்கு தோன்றுகிறதோ அங்கு தான் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் ஆரம்பத்தினை கொள்கிறது.

தொன்றுதொட்டு இந்த உணர்வுகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இது தாய் தந்தை என்று மட்டும் நில்லாமல் உறவு கொள்ளும் இடங்களிலெல்லாம் தர்க்கங்களாக முளைக்கின்றன. மனைவியிடம் வேறு விதமான தர்க்கம், பார்க்கும் பெண்களின் மீது காமம் கிளைத்தெழுந்தால் அங்கே தனக்குள்ளேயே உருவாகும் தர்க்கரூபம். இப்படி காமம் மனிதனை நிம்மதியறச் செய்கிறது. இதற்கு அவன் இயங்கும் சூழலும் காரணமாகிறது. எப்படி வளர்க்கப்படுகிறான் எப்படி காமம் சார்ந்த தூண்டுதல்களும் புரிதல்களும் அமைந்திருக்கின்றன என்று நீளமான கேள்விகள் புரிதலுக்கு சவாலாய் காத்திருக்கின்றன. இந்த கேள்விகளையும் காமம் சார்ந்த புரிதலையும் தர்க்கம் செய்து தெளிவாக்க நினைக்கும் கதாபாத்திரத்தை ஜெயமோகன் தன் நாவலில் சித்தரித்திருக்கிறார். அந்நாவல் தான் "அனல் காற்று"


பாலுமகேந்திரா படமாக எடுக்க எழுதப்பட்ட கதை தான் இது என்று நூலின் முன்பே சொல்லிவிடுகிறார். அது சில காரணங்களால் நின்றுவிடவே நாவலின் வடிவில் வெளியாகியிருக்கிறது. காமம் காதல் மரணம் என்னும் முப்பரிமாணத்தை வெவ்வேறு முறையில் அணுகியிருக்கிறது. அதே சமயம் ஆணினுள் இருக்கும் ஆசைகள் எப்படியெல்லாம் பிரிந்துபட்டு நிற்கிறது என்பதையும் இந்நாவல் சற்று ஆராய்கிறது.

அருண் என்பவன் நாயகன். டிராவல் ஏஜென்ஸியில் பணிபுரிகிறான். அவனுடைய அத்தை மகள் சுசி. சுசியைப் பிரிவதினால் ஏற்படும் தனிமையில் தான் நாவல் ஆரம்பிக்கிறது. கடந்த காலத்தை சொல்வது போல் சுசியை சந்தித்தது முதல் நாவல் நகர்கிறது. சுசி வெளிநாட்டிலேயே வளர்ந்தவள். அவளுக்கு சென்னையில் இருக்கும் நெரிசல்களும் கலாச்சாரமும் பிடித்திருக்கிறது. இங்கேயே உழன்ற அருணுக்கு எதுவுமே வேடிக்கையாக தெரியவில்லை. பெண்ணுடன் செல்லும் போது ஏற்படும் கலாச்சாரபயம் அவனை துரத்துகிறது. அவள் சகஜமாக அவனின் குற்றவுணர்வுகளை தூண்டுகிறாள். அவளது முலைகளை அவன் பார்க்கிறான். அதை அவளே சுட்டிக்காட்டும் போது தோல்வியை தாங்கிக் கொள்ளமுடியாதவாறு சரணடைகிறான். நிறையமுறை தோல்வியை சந்திக்கிறான். இருந்தாலும் தான் ஒரு ஆண்மகன் என்பதை ஒரு இடத்திலும் மறப்பதில்லை. அதற்கே உரிய குணங்களுடன் அவளை அதட்டுகிறான். அவளின் சுதந்திரத்தைக் கண்டு பொறாமை கொள்கிறான். அவளோ அதை ரசிக்கிறாள். மனதால் முழுதும் சரணடைந்தாலும் சில குணங்கள் அதை வெளிக்காட்டாமல் தடுக்கிறது.

சந்திரா. புதிரான பாத்திரம் என்று தான் சொல்ல வேண்டும். மணமாகி கணவன் குமார் இறந்து போகிறான். அதன்பின் அவளுக்கு அருணிடமிருந்து கிடைக்கும் அளவற்ற ஆறுதல்கள் மனதை சமனிலைக்கு கொண்டுவருகிறது. அப்போது அருண் இளமை பருவத்தின் மாற்றங்களுக்குள் இருப்பவனாய் இருந்தான். அவனின் போக்குகள் எல்லாம் தன் உடல் சார்ந்தே இருக்கிறதோ என்று ஐயமுறுகிறாள். சில இடங்களில் அவனே அடக்க முடியாமல் சொல்லியும் விடுகிறான். சந்திரா அருண் அம்மாவின் தோழி. அருணின் வாத்தியார். முப்பத்தி ஒன்பது வயது. அவளின் அழகில் மயங்கி எப்படியெல்லாமோ வழி செய்து அவளை சுகிக்க ஆரம்பிக்கிறான். இதுவும் ஒரு காதலாக மாறுகிறது. வீட்டிற்கு தெரியாமல் நிகழும் களியாட்டங்களில் உடற்கூட்டின் அநேக புதிர்களை அறிந்து கொள்கிறான். எந்த ஓங்குதலும் இன்றி தன்னை முழுதுமாக சந்திராவிடம் கொடுத்துவிடுகிறான்.

அம்மா-அப்பா. அப்பாவிற்கு வேலைக்காரியுடன் இருந்த தொடர்பினால் அம்மா அவரை விரட்டி விடுகிறாள். அதன்பின் பதினெட்டு வருடங்கள் அவருடன் பேசவேயில்லை. தனியே சம்பாதித்து அருணை வளர்க்கிறாள். அவர் வேறு ஒரு பெண்ணுடன் கூவம் போன்ற இடமொன்றில் வாழ்க்கை நடத்தி வருகிறார். அம்மாவிற்கோ அருணின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் தன்னால் உருவாக்கப்பட்டது என்னும் கர்வம். தந்தையின் குணம் அவனுள் வந்துவிடக்கூடாது என்னும் பயம். அப்பா தோல்வியை முழுதும் ஒப்புக்கொள்ள தயாராய் இருக்கும் மனிதராக வருகிறார். இருந்தாலும் கடந்த காலத்தின் கசப்புகள் நினைவுகளில் மீண்டிருப்பதால் அவருள் இருக்கும் உண்மை நிர்வாணம் அடைய கூச்சம் பெறுகிறது. இந்த குணத்தை அக்கதாபாத்திரம் நாவல் நெடுக கொணர்ந்து வருகிறது.

இதில் கதை என்று சொல்ல வேண்டுமெனில் அருணின் குணம் சுசி சந்திரா என்னும் துவந்துவத்தினூடே ஊசலாடுகிறது. இரண்டு பேரையும் வேண்டும் என்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம் சுசியிடம் நான் ஆண்மகனாய் இருக்கிறேன். அதிகாரம் செலுத்துகிறேன். சந்திராவிடம் நான் குழந்தையைப் போல என்னையே இழக்கிறேன் என. இந்த இரண்டில் அவனைச் சேரும் பெண் யார் ? இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியும் அப்படியிருக்கும் போது மோதல்கள் நிகழ வாய்ப்புகள் உண்டு. ஜெயமோகன் மோதலை நேரடியாக வைக்காமல் நாயகனுடன் உறவினில் இருக்கும் சிக்கல் சார்ந்த விஷயங்களை வாதிப்பதாக தனித்தனியே வைக்கிறார். விட்டுக்கொடுப்பதும் எதிர்த்து நிற்பதும் சகித்துக்கொள்வதும் நாயகனின் வாய்ப்பில் விடப்படுகிறது.

இந்த இரண்டு பேரின் உறவை ஒரே வாரியில் மிக அழகாக பின்வருமாறு வசனமொன்றில் கூறியிருக்கிறார்.

"புறநானூற்றில் ஒரு உவமை வருது,  வில்லிலேருந்து அம்பு போறப்ப அதன் நிழலும் கூடவே போகும்னு. ஆனா அம்பு நேரா போகும், நிழல் காடுமேடு குப்பைக்கூளம்லாம் விழுந்து பொரண்டு போகும். ரெண்டுமே போய் தைக்கிற இடம் ஒண்ணுதான்"

அம்புதான் சுசி. நிழல் தான் சந்திரா. இருவரிடையே அடையும் காமத்திலும் எண்ணற்ற கேள்விகள் அவனுள் எழுகின்றன. அந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்ததா என்பதை நாவலில் செயலாக்கியிருக்கிறார் ஜெயமோகன். காமம் அருணிற்கு எப்படி அமைகிறது எனில்

"காமம் ஒரு முடிவிலாத போர். அங்கு வெல்வது ஒன்றே இலக்கு என இரு உடல்கள் போராடுகின்றன"
"காமத்தின் உச்சத்தில் நம் அகங்காரம் மட்டுமே மலைச்சிகரநுனி மீது தன்னந்தனிமையில் நிற்க காண்கிறோம்"

சுசி மற்றும் சந்திராவின் எண்ணற்ற முத்தங்களினாலும் ஸ்பரிசத்தினாலும் சத்தமற்ற பேச்சுகளினாலும் பக்கங்கள் வேகமாக நகர்கின்றன. இருந்தும் நாயகன் இருவரிடமுமே தோற்றுத்தான் போகிறான். அவன் எதை தோல்வி என்று கருதுகிறான் என்பது தான் அறுபடாத புதிராக இருக்கிறது.

நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவர் சொன்ன விஷயம் ஜெயமோகனின் நாவலில் முடிவுகள் எப்போதும் சினிமாத்தனமானதாக இருக்கும் என்பது. இந்நாவலும் எனக்கு அப்படியே தோன்றியது. நாவலின் எழுத்து பிடித்தமானதாய் இருந்தது. நாவல் வசனங்களில் நிகழ்வதாய் இருப்பினும் அதனைத் தொடர்ந்து கதாபாத்திரத்தின் ஆழ்ம்னதில் ஓடும் தர்க்கத்தையும் இணைகோடாய் எழுதியிருக்கிறார். அதே போல் நாவலில் அதிக இடங்களில் தெரியும் மௌனம் கணம் நிரம்பியதாய் இருக்கிறது. டக்கென கடந்து செல்லும் சம்பவங்கள் ஆழமான உணர்வெழுச்சிகளை கொடுத்தே கடந்து செல்கின்றன. சொல்லவரும் விஷயத்தை நேர்கோட்டிலேயே சொல்லிச் செல்லும் நாவல் இடையில் தடத்தை மாற்றுகிறது குறிப்பாக அப்பா கதாபாத்திரத்தின் பக்கங்கள் வரும்போதெல்லாம். அதிலிருந்து மீண்டும் மையக்கதைக்கு கொண்டு சென்ற விதத்தை அதிகமாக ரசித்தேன்.

அனல்காற்று நாவல் சார்ந்த பதிவு சென்ற பத்தியுடன் முடிந்துவிட்டது. இப்போது இருப்பது இரண்டு விஷயங்கள் தான்.

1. காடு இரவு முதற்கனல் பின் அனல்காற்று தான் ஜெயமோகனின் எழுத்தில் நான் வாசித்தவை. காடு இரவு மற்றும் இந்நாவலில் காமத்தை எதிர்த்தன்மையிலேயே அணுகியிருப்பதன் காரணம் யாதாக இருக்கும் என்பது எனக்கு புரியவில்லை. நீலி, நீலிமா, சுசி, சந்திரா, எல்லாமே ஒரே கோட்டின் பல கிளைகளாக தெரிகின்றனர். ஜெயமோகனின் obsession ஆக இருக்கக்கூடுமோ ? (அவர் தான் விடை சொல்ல வேண்டும்!!)

2. நூலின் ஆரம்பத்தில் குறுநாவல் என்று போட்டிருந்தார். பொடி எழுத்துகளிலேயே 168 பக்கத்தை தொட்டுவிட்டதே!!!! இதுதான் குறுநாவலோ!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக