சொல்லாடும் கதையாடல்

இரா.முருகவேளுடன் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் பேச்சில் எங்களையறியாமலேயே இடம்பெறுபவர் தி.ஜானகிராமன். எத்தனையோ நவீன இலக்கியவாதிகளும் சமீபத்திய படைப்புகளும் அதிகமாக பெருகியிருந்தாலும் தி.ஜாவின் எழுத்தினூடே தெரியும் அழகிற்கு எதுவுமே ஈடாகாது என்பது என்னவோ மறுதலிக்கவியலாத உண்மையாக இருக்கிறது. தி ஹிந்து தீபாவளி மலரிலும் தி.ஜாவின் 'கடன் தீர்ந்தது' என்னும் கதை இடம்பெற்றிருக்கிறது. அக்கதையை இப்போது வாசிக்கையில் இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லையே என்பது போலவே தோன்றினாலும் காலத்தின் ஏதோ ஒரு கட்டத்தில் மனதோரம் நிறுத்தி வைக்கப்படும் அறத்துடன் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அக்கதை நினைவூட்டுகிறது.

அளவில் பெரியதாய் கடன் வாங்கி சென்றவன் திருப்பி தரவில்லை. நாயகனோ மன்னித்துவிடுகிறான். இதன் விவரிப்பிலும் ஆழத்திலும் கதை செல்கிறது. கதையை வாசித்து முடிக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை இருந்தும் இக்கதையில் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது. ஆற்றாமையும் கட்டுகளை தாண்டிய ஆசையும் தான் தி.ஜாவின் இடங்களாக அமைகின்றன. எல்லா மனிதர்களுக்குமே சில கட்டுகளை தாண்ட வேண்டுமென்றும் சில கட்டுகளை தாண்டக்கூடாதென்றும் எண்ணங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அதை தத்தம் நிலைக்கு ஏற்ப எல்லோரும் அறிந்தே வைத்திருக்கின்றனர். அடங்கியிருப்பதும் அடக்குமுறைய தாண்டி சென்று அதன் பின்னிருக்கும் விஷயத்தை சின்னதாய் அனுபவித்து வருவதும் சுகமாகத் தான் மனித இனத்திற்கு அமைந்திருக்கின்றது. கட்டு என்று நான் கொள்ளும் வார்த்தைப்பிரயோகம் தான் நிலவியலின் கலாச்சாரமாக அமைந்திருக்கிறது.

இந்த கலாச்சாரத்தின் ஒடுக்குமுறையினின்று விடுபட்டு இருக்கவே தி.ஜா முனைந்திருக்கிறார். இதை முருகவேளுடன் பேசும் போதெல்லாம்  தி.ஜா அவருக்குள்ளார இருக்குற ஒரு ஒலகத்துல வாழ்ந்திருக்காரு கிருஷ்ணமூர்த்தி என்பார். அம்மா வந்தாள் நாவலின் சில காட்சிகளும் மோகமுள்ளின் சில காட்சிகளும் மனதினுள்ளே நிழலாடிச் செல்லும். இவர் சொல்வதும் உண்மைதான் போலும் என்றும் எண்ணச்செய்யும் நிமிடங்கள் அவை. இப்போதும் அதே உணர்வை உணர்கிறேன். தி.ஜாவின் கொட்டு மேளம் என்னும் சிறுகதை தொகுதியை இப்போது தான் வாசித்தேன். அதில் இடம்பெற்றிருக்கும் பன்னிரு சிறுகதைகளும் மனித மனத்தின் இருண்மையை அழகியலோடு சிலாகிக்கின்றன.தி.ஜாவின் எழுத்துகள் எல்லாமே ஒப்புமையோடு இருக்கின்றனவோ என்னும் சந்தேகம் இத்தொகுப்பை வாசிக்கும் போது எழுகின்றது. பல்வேறு குணாதிசியங்கள் நிரம்பிய பாத்திரங்களை உருவாக்கி அக்குணாதிசியங்களை அவர் மோதவிடுகிறார். மோகமுள் நாவலை வாசித்திருந்தாள் ஜமுனா-தங்கம்மாள் என்னும் பாத்திரங்களை சேர்த்துப் பார்க்கலாம். இங்கே சிறுகதையில் எல்லா கதைகளிலும் இரண்டு எதிர்நிலையிலுள்ள அல்லது உவமையைப் போன்றுள்ள குணங்களை கதாபாத்திரக்களுக்கு அளிக்கிறார். அதனூடே சொல்ல விரும்பும் கதைகளை தர்க்கங்களாக்கி வெளிக்கொணர்கிறார்.

கதையின் அம்சத்தைக் கண்டாலும் அழகியலே முன்னே வந்து நிற்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவர் ஒவ்வொரு கதைக்கும் உபயோகிக்கும் மொழி. எல்லாமே வசனங்களாக இருக்கின்றன. அதனூடே எள்ளல்தன்மை அதிகமானதாகவும் இருக்கிறது. கதாபாத்திரத்தின் வர்ணனை, கதை நிகழும் இடத்தின் தன்மை, நாயகன் அல்லது நாயகியின் மனநிலை என்றெல்லாவற்றையும் பேச்சினூடேயே சொல்லிவிடுகிறார்.

மேலே ஒப்புமை என்று கூறியிருந்தேன் அல்லவா அது ஒன்று தம்மிடம் இல்லாதது சார்ந்து இருக்கிறது அல்லது இருப்பதை பெருமைப் படுத்துவதை சார்ந்து இருக்கிறது. இரண்டிலும் கதைகளை புனைகிறார். அதன் முடிவுகளோ பல்வேறு குணங்களை கொண்டனவாய் இருக்கின்றன. சில இடங்களில் ஏன் இந்த ஒப்புமையை மேற்கொண்டோம் என்னும் சோகத்துடனமும் சில இடங்களில் நாமே தேவலை என்னும் சுயபச்சாதபத்துடனும் முடிக்கிறார்.

மாறுதலையே காணமுடியவில்லையே என்னும் உணர்வு என்னுள் இருந்தது என்னவோ உண்மைதான். கதைகள் என்னுள்ளே அசைபோடும்போது தான் அவரின் ஆழங்கள் புரிபடுகின்றன. ஆசை என்பதன் அடியில் இருக்கும் பன்முகத்தன்மையை அவர் எப்படியெல்லாமோ கதையாக்க முயற்சி செய்கிறார். இந்த ஆசைக்காக மனிதன் எத்தனை தூரம் காத்திருக்கக்கூடும், வாழ்வின் எந்த எல்லைவரை செல்லக்கூடும், அதே ஆசை தன் எல்லாவித அடிபணிதலையும் ஏற்றுக்கொள்ளுமா என்று சகலத்தையும் புனைகிறார்.

மொத்தமாக சொல்ல வேண்டுமெனில் தி.ஜாவின் சிறுகதைகள் அமைப்பில் அழகில் கருவில் அதன் ஆழத்தில் குறைவில்லையெனினும் எனக்கு பிடிக்கவில்லை. நாவல்களில் இருக்கும் பெருங்களத்தில் தான் காட்ட நினைக்கும் உணர்வுப்பெருக்குகளை தெளிவாக அதே நேரத்தில் மெதுவாக சலிப்பினை எங்கும் கொடுக்காமல் சொல்லிவிடுகிறார். இங்கும் அதே விஷயம் நிகழ்கின்றன. களம் மிகச்சிறிது என்பதால் அவர் சொல்லவரும் விஷயங்களை உணர்வுகளை என்னால் முழுதுணரமுடிவதில்லை. இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதைகளையும் குறுநாவல்களாகக் கூட மாற்றலாம். 
 
எல்லா கதைகளிலும் வேகம் இருக்க வேண்டும் என்று விரும்பும் நான் இவரின் இத்தொகுப்பில் காணப்படும் வேகம் இல்லாமல் இருந்திருப்பின் நன்றாக இருக்குமே என்று தான் விரும்பினேன்!!! விரும்புகிறேன்!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக