சுந்தாப்பாட்டியும் இன்னபிற கதைகளும்

க.நா.சுவின் இலக்கிய ஆளுமையை அறிய ஆரம்பித்த நாட்களிலிருந்து அவர் வாழ்ந்த காலத்தை நினைத்துக் கொண்டே இருக்கிறேன். எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கும் அவரின் இயல்பு வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் ? அவரின் நண்பர்களுடனான வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருந்திருக்கும் ? இந்த கேள்விகளுக்கு கற்பனையிலும் எனக்கு பதில் கிடைக்கவில்லை. பின்வரும் லிங்கை வாசித்தவுடன் இதற்கான பதில் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற முடிவிற்கே என்னால் வரமுடிந்தது. சமீபமாக அசோகமித்திரன் ஜெயமோகனின் வெண்முரசு நூல்களின் வெளியீட்டு விழாவில் தொழில்நுட்ப வழளர்ச்சி இல்லையெனில் இத்தனை பக்கங்களை எழுதுவது சாத்தியமில்லை என்று கூறியிருந்ததை வாசித்தேன். க.நா.சுவால் எப்படி முடிந்தது ? முடிவுறா பட்டியலைத் தான் அவர் எழுத்தின் சேகரமாக விட்டு சென்றிருக்கிறார். நான் பிரமிப்புற்ற அந்த லிங்க் காலச்சுவடில் வந்திருக்கும் க.நா.சு சார்ந்த கட்டுரை. வாசித்து பாருங்கள் நீங்களும் பிரமிப்பீர்கள்.

(க்ளிக்கி வாசிக்கவும்)

சமீபமாக அவரின் மொழிபெயர்ப்புகளையே வாசித்தேன். அவரைப் பரவலாக மொழிபெயர்ப்புக்காகவே அநேகம் பேர் அறிந்திருக்கின்றனர். அவரின் தனிப்பட்ட எழுத்துகள் நிறைய பேருக்கு வேகம் குறைந்ததாய் மெதுவாக செல்வதாய் இருக்கின்றது. அவருடைய இலக்கிய படைப்புகளில் அவர் காணநினைக்கும் ஆழமும் அதை சொல்லும் விதமும் பிரத்யேகமானவை. அவர் பல சோதனை முயற்சிகளை செய்திருக்கிறார் என்று மேற்கண்ட கட்டுரையில் அதன் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். வாஸ்தவமான விஷயம் தான். அவருடைய அவரவர் பாடு என்னும் நூலின் பின்னட்டையில் அவர் எழுதியிருக்கும் விஷயத்தை வாசித்தாலேயே அவரின் ஆசையை புரிந்து கொள்ளமுடியும். அதில் இருப்பதாவது,

"எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பதுபோல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமினான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது"
எண்ணத்தின் விளைவாய் அவரவர்பாடு நாவல் வெளிவந்திருக்கிறது.

க.நா.சுவின் மொழிபெயர்ப்புகளை விட அவரின் சுய இலக்கியங்களில் கட்டற்ற தன்மையை எளிதில் உணர்ந்து கொள்ள முடிகிறது. அவரின் கதாபாத்திரங்கள் கதையென்னும் வெளியுள் அடைபட்டு புனைபவனின் கட்டுக்கோப்புடன் செல்லாமல் கதை என்னும் பெருவெளியில் நடைபயணம் மேற்கொள்கிறார்கள். இவ்விஷயத்தை கதை செல்லும் தன்மையிலேயே எல்லோராலும் எளிதில் உனர்ந்து கொள்ளமுடியும். பல மாதங்களுக்கு முன் அவரின் நாவல்களை தொடர்ந்து வாசித்தபோதுகூட எனக்கு இந்த விஷயம் தெளிவாக தெரியவில்லை. சமீபமாக வாசித்த அவரின் மொழிபெயர்ப்பும் இப்போது வாசித்த அவரின் சிறுகதை தொகுதியும் அவரின் ஆக்கங்களை பிரித்தறிந்து புரிதல் கொள்ள பெருவாரியாக உதவியது.

காவ்யா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கும் க.நா.சு சிறுகதைகள் மிக முக்கியமான நூலாக கருதுகிறேன். காவ்யா சண்முகசுந்தரம் தொகுத்திருக்கிறார். 1941 இலிருந்து 1986 வரை அவர் எழுதியிருக்கும் கதைகளை இதில் தொகுத்திருக்கிறார். தெய்வஜனனம், அழகி, ஆடரங்கு, மணிக்கூண்டு, கருகாத மொட்டு போன்ற தொகுதிகளிலிருந்தும் அதிலிருந்து விடுபட்டு பத்திரிக்கைகளில் வெளிவந்திருந்த சிறுகதைகளையும் இதில் சேர்த்து தொகுத்திருக்கிறார். மொத்தம் 67 சிறுகதைகள். அதிலும் கால்வாசிக் கதைகள் தான் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. ஆச்சர்யகரமான விஷயம் யாதெனில் பத்திரிக்கைகளில் வெளிவந்தது என்று குறிப்பிட்டிருக்கும் கதைகளை தவிர்த்து இருக்கும் கதைகளில் தான் நிறைய எனக்கு பிடித்திருந்தன. சற்று விரிவாக பார்ப்போம்.க.நா.சுவின் எழுத்துகளை எளிதாக வகைப்படுத்திவிடமுடிகிறது. வடிகாலிடாத எண்ண ஓட்டங்களையெல்லாம் கதையாக்க முனைந்திருக்கிறார். சிறந்த உதாரணம் இந்த தொகுப்பில் கடைசி பகுதியாக வரும் பல கதைகள். அவை எல்லாமே இரயில் பயணங்களில் வரும் சம்பாஷணைகளாகவே இருக்கின்றன. அது சின்ன சின்ன விஷயங்களை மையமாக கொண்டு அதில் பல கதாபாத்திரங்கள் செய்யும் தர்க்கங்களாக கருவின் ஆழம் நோக்கி செல்கின்றது. எதுவுமே ஒரு முடிவுக்கு வரமாட்டேன் என்கிறது. இது தான் க.நா.சுவின் ஸ்டைல் என்று சொல்லத்தோன்றுகிறது. எல்லா கதைகளிலுமே தர்க்கமொன்றை நிறுவுகிறார். அதே நேரம் அதன் முடிவை ஆழம் கொடுக்க வேண்டிய விஷயத்தை கொடுக்காமல் கதையை செவ்வனே முடித்து வெளியேறிவிடுகிறார். கதை முடிந்த திருப்தி நம்மிடம் ஏற்பட்டாலும் முடிவு காணா தர்க்கம் நம்மை வாட்டிக் கொண்டே செல்கிறது. இது எல்லோரிடமும் நிகழ்வது அன்று. கருவினை அசைபோடும் ஆசாமிகளிடம் மட்டும் தான் நிறைவேறும்.

நூலின் கடைசிப் பகுதி இப்படியெனில் நூலின் ஆரம்பத்தில் சுந்தாப்பட்டி. இதை தன் முன்னுரையிலேயே கூறிவிடுகிறார். சிறந்த கதைசொல்லிகள் பாட்டிகள் தாம் என்று. அப்படி சுந்தாப்பாட்டி சொன்ன கதைகளின் சின்னதான தொகுப்பு ஆரம்பித்திலும் தொகுதியின் இடையிடையிலும் எட்டிப் பார்க்கின்றன. சுந்தாப்பாட்டியின் கதைகள் எல்லாமே பழைய காலத்தையும் கதை எழுதப்படும் காலத்தையும் இணைப்பதாய் இருக்கிறது. பேய் பூதம் பெண்களின் ஒழுக்கம் காதல் கல்யாணம் அதனூடே இருக்க வேண்டிய ஒழுக்கங்கள் என்பவற்றையெல்லாம் இணைத்து பார்க்கின்றன அந்தக்கதைகள். அதே நேரம் சுந்தாப்பட்டியின் கதைகள் தனக்கென ஒரு கட்டமைப்பையும் பெற்றிருக்கின்றன. கதையின் ஆரம்பத்திலேயே இந்தக்கதை சொல்ல வேண்டிய நீதி அல்லது அறம் அல்லது மையப்பொருள் இதுதான் என்று சொல்லிவிடுகிறாள். பின் அந்த மையத்தை வைத்து கதைகளை கூற ஆரம்பிக்கிறாள். நிறையக்கதைகளை தன் சொந்த வாழ்வில் அனுபவித்தவை என்றே ஆரம்பிக்கிறாள். இது நல்லதான கதை யுக்தி. சிறுகதைக்கு தேவைப்படும் அடிநாதமான விஷயம் நம்பகத்தன்மை. இதை சுந்தாப்பாட்டியின் கதைகளில் அதிகமாகவே காணமுடியும். அதே போல் கதையின் கடைசி சட்டென முடிந்துவிடுகின்றன. சின்னதான அதிருப்தி ஏற்பட்டாலும் முன்னே சொன்ன நம்பகத்தன்மையை இந்த அம்சம் எல்லா கதைகளிலும் ஊர்ஜிதம் செய்கின்றது, அதிகமாக்குகின்றது.

ஒரு கதையைப் பார்ப்போம். நாயகன்(நான் என்றே வருகின்றது) இரவு பத்து மணி போல வீட்டிற்கு வருகிறான். இந்த நேரங்களில் வராதே காத்து கறுப்பு அண்டும் என்று பாட்டி அனுதாபத்துடன் கூறுகிறாள். அவன் நவநாகரிக மனிதனானதால் அதை ஏற்க மறுக்கிறான். பாட்டி அதை ஆற்றாமையாக மாற்றிக் கொண்டு தன் கடந்த கால கதையொன்றை கூற ஆரம்பிக்கிறாள். அப்படி கூறும் முன்னரே நான் சொன்னால் உன்போன்ற நவநாகரிக மனிதர்களாலெல்லாம் நம்ப முடியாது என்றே பீடிகை போடுகிறாள். அவன் பரவாயில்லை என்று கேட்க ஆரம்பிக்கிறான். பில்லி சூனியம் தெரிந்த ஒருவன் ஊரொன்றில் இருக்கிறான். அவனுக்கும் அண்ணனுக்கும் எப்போதும் பிரச்சினை. அண்ணன் மகளுக்கு திருமணம். அங்கு மணம் முடிந்தபின் எல்லோரும் வெற்றிலை பாக்கினை போடும் போது பாக்குகளெல்லாம் தேள்களாக உருமாறிவிடுகின்றன. இது செய்வது சித்தப்பா தான் என்று பெண் உணர்ந்து கொண்டு அவரிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு தடுக்கப்பார்க்கிறாள். அவனும் ஆசீர்வாதம் செய்துவிட்டு அங்கிருந்து விலகுகிறான். தேள்கள் மாயமாகின்றன என்று கதையை முடிக்கிறாள். நாயகனுக்கோ பேய்க்கதை எனக்கூறிவிட்டு ஏன் தேள் கதையை கூறினாள் என உணர்ச்சிப்பெருக்கு. உடனே அவள் சொல்கிறாள் இதில் ஆச்சர்யமான விஷயம் அங்கிருந்த அத்தனை தேள்களில் ஒன்று கூட யாரையும் கடிக்கவில்லை என்று. அவன் ஆச்சர்யமுறும் போது பின்னே ஒரு தேள் இருப்பதை அறிகிறான். அதை அடிக்க முனையும் போது பாட்டி தடுத்து நான் சொன்ன கதைக்கான சாட்சி அது. யாரையும் கடிக்காது என்று க.நா.சு கதையை முடிக்கிறார்.(தேள்)

சுந்தாப்பட்டி மூலம் கூறப்படும் எல்லா கதைகளுமே தனக்குள்ளே ஒரு கதைசொல்லியை வைத்திருக்கின்றது. அது தான் சுந்தாப்பட்டி. அதனூடே வாசகனையும் வைத்திருக்கின்றது. அது நாயகனாக இருக்கலாம் அல்லது வேறு கதாபாத்திரங்களாக இருக்கலாம். இந்த இருவரும் ஒரு கட்டத்தில் அதிருப்தியுடன் முடியும் போது க.நா.சு கதையை முடிக்கிறார்.

க.நா.சுவின் கதைகளில் இருக்கும் கோட்பாடுகள் இரண்டாக மாறுகின்றன. ஒன்று சோஷலிஸத்தை மையமாக வைக்க முயற்சிக்கிறார். அதில் அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. அதே நேரம் கடவுளை பாத்திரமாக்க முனையும் எல்லா கதைகளிலுமே ஒரு கொண்டாட்டத்தை கொண்டுவருகிறார். பிரம்மன் சிருஷ்டியின் வேலைக்கு ஆள் தேடுவதை கதையாக்கி அதில் பல்வேறு தர்க்கங்களை முன்வைக்கிறார். அத்தர்க்கங்களின் எல்லா சாரங்களும் அதீத பகடியை கொண்டிருக்கின்றன(பிரம்மாவுக்கு உதவி, கிறுக்கெழுத்து). அதே நேரம் சில கதைகளில் தெய்வத்தன்மையை ஒரு பக்தியுடன் அணுகுகிறார். அங்கு அவர் முன்வைக்கும் அழகியல் அல்லது ஆன்மநிலை வாசிப்பில் ஓர் துய்ப்பை தந்தே செல்கின்றது.

இந்த ஆன்ம நிலையை சில கதையில் நேரடியாக தருகிறார். கண்ணன் என் தோழன் என்னும் கதையில் மர்மமாக தெய்வத்திற்கு உருவம் கொடுக்கிறார். அதே தெய்வ ஜனனம் என்னும் கதையில் கலையின் உருவத்தில் தெய்வத்தை காட்டுகிறார். அவர் சொல்லும் விஷயம் சிருஷ்டிகர்த்தா ஒவ்வொரு சிருஷ்டியையும் உருவாக்கும் போது ஒரு நிலைக்கு சென்று அதிலிருந்து ஒருமுறை மட்டுமே நிகழ்க்கூடிய alchemy(சிருஷ்டி)ஐ நிகழ்த்துகிறான். அதை நுகர்பவன்(அவன் வாசகன் சிற்பத்தை ஓவியத்தை காண்பவன் இசையை கேட்பவன் யாராக வேண்டுமெனினும் இருக்கலாம்) அந்த நிலைக்கு அருகில் செல்லக்கூடிய மனநிலையை கொண்டிருத்தல் வேண்டும் என்கிறார். ஒரு பருப்பொருளின் இருவேறுத்தன்மைகளை வெவ்வேறு கதைகளில் க.நா.சு கையாள்கிறார்.

இலக்கியாசிரியன் என்பது தான் அடுத்து சொல்ல வேண்டியது. இலக்கியாசிரியனாக இருந்து கொண்டே யதார்த்த வாழ்க்கையையும் வாழும் போது அநேக முரண்பாடுகள் ஏற்படும். அந்த முரண்பாடுகளுடன் வாழ்க்கை நடத்துவது சிரமமான காரியம் தான். ஊருக்கே எழுத்தாளனாக சிருஷ்டிகர்த்தாவாக இருப்பினும் அதே அங்கீகாரம் வீட்டில் கிடைக்காதபோது இருக்கும் ஆற்றாமையை இலக்கியாசிரியனாக நாயகன் வரும் எல்லா கதைகளிலும் காணமுடிகிறது. எல்லா இலக்கியவாதிகளின் எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கையை கிளரினாலும் இப்படிப்பட்ட சோகம் நிரம்பிய நிறைய கதைகள் கிடைக்கக்கூடும். அதை க.நா.சு சில இடங்களில் சோகமாகவும் சில இடங்களில் பொதுப்படையான பகடியாகவும்  வேறு சில இடங்களில் குறுகிய வட்டத்தினுள் மனிதன் அவமானப்படும் தோல்வியாகவும் மாற்றுகிறார்.

தொகுப்பில் எனக்கு பிடித்த ஆகச் சிறந்த சிறுகதைகள் சீதாராமன், சாம்பமூர்த்தி, தேள், ஒரு கடிதம், கொலைபாதகன், பிரம்மாவுக்கு உதவி, கிறுக்கெழுத்து, நீங்க தூங்கறச்சதான், அழகி, கண்ணன் என் தோழன், மணிக்கூண்டு, சிரஞ்சீவி, உலகத்தின் முடிவு, விதியும் மதியும், யுகசந்தி ஆகியவை தான்.

இதில் சில கதைகள் உலகச் சிறுகதைகளாக இருக்கின்றன. குறிப்பாக சீதாராமன் அழகி போன்ற கதைகள் மனித மனத்தை தெளிவாக அலசுகின்றன. க.நா.சுவின் கதைகள் முக்கால்வாசிக்கும் மேல் நிகழ்காலத்தில் நடப்பதில்லை. நினைவோடையாய் கடந்தகாலத்திலோ எதிர்பார்க்கும் அல்லது யூகிக்கும் எதிர்காலத்திலோ தான் அமைந்திருக்கிறது. எல்லா கதைகளிலும் ஒவ்வொருவரும் தனக்குத்தானே தர்க்கம் செய்து கொள்கிறார்கள். எல்லா தர்க்கங்களும் ஒரு முடிவை எடுப்பதற்காகவே அமைகின்றது. முடிவுகள் சரியானதா என்பதை மட்டும் எந்த கதாபாத்திரமும் விரும்புவதில்லை. மனித மனம் இந்த தர்க்கத்தையே விரும்புகின்றது.

எல்லா கதைகளையும் ஒன்றைப் போலவே கொண்டு செல்கிறார். இடம் சார்ந்த வர்ணனை அல்லது சொல்லாடல்களின் மூலம் கதைகளினை ஆரம்பிக்கிறார். சில பத்திகள் தாண்டியவுடன் எதிர்பாராதவிதமாய் கதாபாத்திரம் நுழைகின்றது. அப்படி நுழையும் பாத்திரம் தான் கதையை வழிநடத்தி செல்கின்றது. இதனூடே தான் சொல்ல விரும்பிய கதைகளை நுழைத்திருக்கிறார்.

மணிக்கூண்டு, விதியும் மதியும் ஆகிய கதைகள் எனக்கு INTERSTELLAR மற்றும் FINAL DESTINATION ஆகிய படங்களையே நினைவுருத்தியது. அப்படங்களின் சாரத்தை வேறு விதமாக தத்தம் கதைகளில் உருமாற்றியிருக்கிறார் க.நா.சு. காலப்பயணத்தை அவர் கூறும் விதம் பாருங்கள்,

"எருமை மாடு சாணியையும் போட்டு அதன் மேலேயே படுத்துவிடுகிற மாதிரி, மனிதன் காலத்தையும் காலத்தின் ஓட்டத்தையும், கடிகாரத்தையும், காலண்டரையும் சிருஷ்டித்துவிட்டு, தப்பமுடியாது என்று அதற்குள்ளேயே வளைய வருகிறான்"

அதே போல விதியும் மதியும் சிறுகதையும் அப்படத்தில் வருவது போலவே கதையம்சத்தை கொண்டிருக்கிறது. ஆனால் தர்க்கங்கள் விதிக்கும் மதிக்கும் இடையே முழுவதுமாய் நிகழ்கின்றது. இவரது கதைகளில் கதைசொல்லியே பிரதானமாகிறான். கதைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.

க.நா.சுவின் பாணி இப்போது வாசிக்கையில் படிப்பினையாக இருக்கின்றது, சில கதைகளை தவிர. லத்தின் அமேரிக்க நாடுகளில் லோசாவை எப்படி கதைசொல்லிகளின் உச்சம் என்கிறார்களோ அதைவிட மேலான கதைசொல்லி நம்மிடையே வாழ்ந்திருக்கிறார் என்பதை வாசிக்கும் போதும் மேலே கொடுக்கப்பட்ட லிங்கினை வாசிக்கும் போதும் அழகாக உணர்ந்து கொள்ளமுடிகிறது. கதை என்னும் அம்சம் வாசகன் என்னும் முகம் தெரியாத நபரிடம் செல்லும் போது என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு கதையிலும் தெளிவாக்குகிறார். பெரிய பெரிய விஷயங்களை கையாளாமல் எளிமையில் இருக்கும் ஆழத்தையே அவரது கதைகள் அறியமுயல்கின்றன. இந்த ஆழத்தை அறியமுடிகிறதா என்பது கேள்விக்குறியோடு நின்றுவிடுகின்றது.

ஒருவேளை இந்த கேள்விக்காகவே தான் யுகசந்தி என்னும் கதையை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். அது கதையா கட்டுரையா என்றே பிரித்தறியமுடியாது. வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் அல்லது இலக்கியகர்த்தாக்கும் இடையே இருக்கக்கூடிய உறவை அவர் தர்க்கம் செய்கிறார், ஒரு எழுத்தாளனாகவே. அதில் வரிகள் பின்வருமாறு வருகின்றன,

"நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விட சிறந்தவனாக இருக்கலாம் - ஆனால் இலக்கியத் தரத்தால் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால, வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயல்கின்றனர், அந்தத் தரம் ஒரு சரடு - அதைக் கண்டுகொள்ளத்தான் நம் பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்த தரத்தை வாசகர்கள் தேடிக் கண்டுகொள்ள வேண்டும்"

இந்த வரிகளை அவர் 1970இல் எழுதியிருக்கிறார். ஆழம் சார்ந்த கேள்விக்கும் இலக்கியத்தில் இருக்கும் புதிர்களுக்குமான பொதுப்படையான பதிலாக இதுவே அமையக்கூடும்.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Unknown said...

அற்புதமான கட்டுரை. க.நா.சு. வின் சிறுகதை இவ்வளவு சிலாகித்து எழுதியவர் சிலர்தான் என்றுகூட சொல்லவியலாது. க.நா.சு.வின் கதைகளை இன்னும் ஆழமாகக் கூட காணலாம். எடுத்துகாட்டாக; தெய்வ ஜனனத்தில் மயன் உங்களுக்கு 'பொன்னியின் செல்வன்' வந்தியதேவனை நினைவுபடுத்தவில்லையா? தெய்வ ஜனனம் அதற்கு முன்னமே எழுதப்பட்டது. தமிழ் சமூகத்தின் முதல் உருவ தெய்வம் எது என்ற கேள்வியை முதலில் கேட்பது இந்த கதைதான். அசுர சிற்பி கடவுளை படைத்ததும் இந்த கதையில்தான். கலைஞன் மதிகாத ஊர் அழிந்துபோய் விடும் என்பது அவரையே பிரதிபலிக்கும் இன்னும் இந்தக் கதையில் மட்டும் சொல்வதற்கு ஏராளமான விடயங்கள் உண்டு. உண்மையில் க.நா.சு.வின் சிறுகதைகள் ஒரு புள்ளியில் இருந்து உருவாகும் பலநூறு கோடுகளாக விரியும் தன்மையுடையன. அதை அழகாக உங்கள் கட்டுரை சொல்கிறது.

Post a comment

கருத்திடுக