சிக்கிய பொக்கிஷம்

எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல் முகாமில் முருகேசபாண்டியன் மொழிபெயர்ப்புகள் என்றாலே அதில் ஒரு அந்நியத்தன்மை இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால் தான் அங்கே ஏதோ கோளாறு நிகந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது என்றார். அப்படியெனில் மனதை ஈர்க்கும் மொழிபெயர்ப்புகள் எந்த எந்த காரணங்களால் உருவாகின்றன என்று யோசித்து பார்த்தேன். சொல்லப்படும் விஷயம் சலிக்காமல் இருந்தாலொழிய மனம் அதில் லயிக்க போவதில்லை. ஆக வேகமான தடையற்ற கதைசொல்லல் முறையும் ஆழமான சந்தேகமற்ற கருவும் தான் ஈர்க்கப்போகின்றன. மொழிபெயர்க்கும் போது இவை இரண்டும் தான் தடையாக இருக்கக்கூடும். அந்த மொழியில் எளிமையாக கொடுக்கப்பட்ட ஆழம், மொழியினை மாற்றும் போது உகந்த வார்த்தைகளை இடாமல் போனால் மாறிவிடக்கூடும். அதே நேரம் வெறும் கருவை மனத்தின்கண் கொண்டு மொழிபெயர்த்தால் மொழியில் பிடியின்றி வாசிப்பில் சலிப்பை ஏற்படுத்தும். அந்நியத்தன்மை ஏற்றுக் கொண்டு தான் மனம் இவை இரண்டையும் தேடுகின்றது. இதை மிக அழகாக க.நா.சுப்ரமண்யம் செய்திருக்கிறார்.

அவரின் மொழிபெயர்ப்புகளை நான் வாசித்ததில்லை. அவரின் பைத்தியம் பிடித்த வாசிப்பின் வேகமும் அதனடுத்து மொழிபெயர்த்த விஷயங்களின் எண்ணிக்கையும் இப்போதும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியவை. தனக்கான மொழிக்கும் மொழிபெயர்ப்பின் போது தேவைப்படும் மொழிக்கும் நிறைய வித்தியாசங்களை அழகில் வைக்கிறார். வாசிக்கும் போது க.நா.சுவினுடைய படைப்பில் இருக்கும் இலகுத்தன்மை இன்றி தென்படும். ஆனாலும் மொழிபெயர்ப்பில் கையாளும் எளிமையான மொழி நம்முடன் சிறந்ததொரு கதைசொல்லியாக உருமாறுகிறது. நான் வாசித்த அவரின் முதல் மொழிபெயர்ப்பு நூல் "கடல் முத்து" வ.உ.சி நூலகம் பதிப்பில் கிடைக்கிறது. யதேச்சையாக கண்ணில் பட்டதனால் சிக்கிய பொக்கிஷம் இந்த நூல்.நான்கே சிறுகதைகள் தான் இடம்பெற்றிருக்கின்றன. முதல் கதை கடல் முத்து. எழுதியவர் அண்டோனியோ பாகஸாரோ. இத்தாலிய எழுத்தாளர். இந்நூலில் இடம்பெற்றுள்ள நால்வரைப் பற்றியும் இணையத்தில் தேடிப்பார்த்தேன். எனக்கு தேடத் தெரியவில்லையோ என்னவோ ஒரு தகவலும் சிக்கவில்லை. முதல் கதையே மிக சுவாரஸ்யமானது.

கவிஞன் அரசனாக இருக்கிறான். ஒரு நாள் கடற்கரையில் கீதமொன்றை இசைக்கும் போது உணர்ச்சி பிறழ்வுற்று கண்ணீர் சிந்துகிறான். அது கடலில் வீழ்ந்து முத்தாகிறது. அது பல ஆண்டுகளுக்கு பின் காண்டாரினா காண்டாரிணி என்னும் ராணிக்கு செல்கிறது. அவளுக்கு குழந்தைகளே இல்லை. ஒரு நாள் முத்து காணாமல் போய்விடுகிறது. அங்கே ஒரு குழந்தை கிடக்கிறது. அவள் தான் மல்காரி. அசரீரியின் குரல் ராணிக்கு கேட்கிறது. மல்காரி இசையையும் கவிதையையும் எக்காரணம் கொண்டும் கேட்கக்கூடாது என்று. அவர்கள் இருப்பதோ வெனீஸ் நகரத்தில். இசையும் கவிதையும் கலையும் கூத்தாடும் அந்நகரத்தில் எப்படி தன் பிள்ளையை இசையையும் கவிதையையும் கேட்காமல் வளர்ப்பது என்று சிந்திக்க துவங்குகிறாள். எப்படி அதை செய்கிறாள் ? மல்காரிக்கு தன்னைப் பற்றிய விபரங்கள் தெரியுமா ? என்பதையெல்லாம் வெகு அழகாக கதையாக்கியிருக்கிறார். மொழிபெயர்ப்பில் இருக்கும் வேகம் நம்மை கவிதை இசை கடல் மல்காரி என்று இழுத்து சென்றுவிடுகிறது.

அடுத்த கதை அதிசயம். இதை இயற்றியவர் பிரான்ஸ்வா காப்பி. பிரெஞ்சு தேசத்து எழுத்தாளர். இந்தக்கதை இருவேறாக மாறுகிறது. கடைசியில் கதை கொண்ட மாற்றம் வாழ்வியலாக உருமாறுகிறது. மிகப்பெரும் கோடீஸ்வரனை சித்தரிப்பதில் துவங்குகிறார் ஆசிரியர். அந்த கோடீஸ்வரனின் அன்றாட வேலை, குடும்பம், பணம் சம்பாதிக்கும் எண்ணம், அதன் மீதே வெறி கொண்டு யாவற்றையும் மறந்து பணத்தின் பின்னே ஓடுவது என்று கூறிச் செல்கிறார். அப்போது அவருடைய மகன் ராவுலை அறிமுகம் செய்கிறார். ஒரு நாளில் கால் மணி நேரம் மட்டும் மகனுடன் இருக்கிறார். மகன் படிக்க வேண்டிய வயதை அடைந்து கொண்டிருந்தான். ராவுலை வளர்க்கும் வளர்ப்புபெண்மணி அன்று அவனை மொன்கோ தோட்டத்திற்கு அழைத்து செல்வதாக கூறிச் சென்றாள். சென்றபின் மனம் பல மாற்றங்களை விரும்பியது. வளர்க்கும் பெண்மணியை மாற்ற வேண்டும். கலாச்சார ரீதியான கல்வியை ராவுலுக்கு அளிக்க வேண்டும் என்னும் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார். அன்று வேலைகளை முடித்துவிட்டு மகனுக்காக நிறைய விளையாட்டுப் பொருட்களை வாங்குகிறார். வீட்டிற்கு சென்றால் அவருக்கு அதிர்ச்சி. ராவுலைக் காணவில்லை.

அவனை கண்டறிவது தான் கதையின் மீத முக்கால் பகுதி. இதுவரை ஒரு போக்கில் சென்று கொண்டிருக்கும் கதை இதன்பின் அப்படியே உருமாற்றம் கொள்ளத்துவங்குகிறது. இக்கதையில் இருக்கும் அமைப்பு சுவாரஸ்யமானது. நிறைய இடங்களில் ஆசிரியர் உள்ளே புகுந்து நாயகனின் குணம் சார்ந்து வாசகர்களிடம் கேள்வி கேட்கிறார். அதே போல கதை தடம் மாறும் இடமும் மிக மெலிதாய் செய்திருந்தாலும் கச்சிதமாக அழகாக இருக்கிறது.

அடுத்து நார்வீஜிய எழுத்தாளர்  யோஹன் போயர் எழுதிய சுவர்க்கத்தில் காரி ஆஸென். பீட்டர் ஆஸென் மற்றும் காரி ஆஸென் இரண்டு பேரும் தம்பதியர். அவர்களுக்கு இரு மகன்கள். காரி ஆஸென் இறந்து போகிறாள். வாழ்நாளின் ஆசைப்படியே சுவர்க்கம் செல்கிறாள். அங்கு வேண்டும் இடங்களை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். காரி ஆஸேனுக்கு குடும்பம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்பமே நிறைந்த சுவர்க்கத்தின் அவளுக்கான இன்பங்கள் இல்லை என்பதால் அவள் சொர்க்கதேவனிடம் சில கேள்விகளை கேட்டு தனக்கான இடத்தை கேட்கிறாள். அதன் மூலமாக கணவன் மீது கொண்டிருந்த பாசம், அந்த இடத்திற்கு சென்றபிறகு நிகழும் விஷயம் என்று கதை விரிகிறது. நினைவோடையாக யாவுமே பேசப்படுகிறது.

அடுத்து தான் முக்கியமான கதை அடிமைப்பெண். யாரெழுதியது என்று தெரியவில்லை. ஸ்வீடிஷ் தேசத்து புண்ணியவான் என்று மட்டும் தெரிகிறது. இந்தக்கதை உப தலைப்புகளில் கோர்வையை கொண்டிருக்கிறது. முதல் தலைப்பிலேயே மையக்கதையினை சொல்லிவிடுகிறார். ஆனால் அதை நீட்டுவதில் வைத்திருக்கும் ஒவ்வொரு முடிச்சுகளும் அதிசுவாரஸ்யமானவையாக இருக்கிறது. கொஞ்சமும் மாற்றாமல் இச்சிறுகதையை அப்படியே படமாக எடுக்கலாம்.

ஸ்வீடிஷ் தேசத்து ராஜகுமாரி இஞ்சேகார்ட். அவளுடைய கன்னிமாடத்தில் இருக்கும் தாதி ஆஸ்ட்ரிடா. இருவருக்கும் நார்வே தேசத்திலிருந்து வந்திருக்கும் கிழக்கவி ஹியால்டே அந்நாட்டு இளவரசன் ஒலாவைப் பற்றி நிறைய சொல்கிறான். இருவரினுள்ளேயும் சொல்லப்படும் கதையால் உருவம் கொள்கிறான் ஓலா. கதையை ஒருநாள் முடிக்கிறான். முடித்தவுடன் இளவரசியிடம் ஓலாவைப் பற்றி கேட்கிறான். எப்படி கேட்டும் இஞ்செகார்டிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. நேரடியாகவே மணமுடிக்க சம்மதமா எனக் கேட்கிறான். அவள் சம்மதம் என்கிறாள். அடுத்த கணம் முகம் மாறி ஆனால் அது நிகழாது என்று ஸ்வீடனுக்கும் நார்வேக்கும் இடையே இருக்கும் துவேஷத்தை முன்வைக்கிறாள். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறான் ஹியால்டே. அவன் ஸ்வீடனுக்கு திரும்பி செல்லும் போது பின்னேயே சென்று ஆஸ்ட்ரிடா தானும் அவளுடன் தானே கதையைக் கேட்டேன் என்னிடம் ஏன் மணம்முடிக்க சம்மதமா என்று கேட்கவிலை என்று பிதற்றுகிறாள். அவனோ கண்டுகொள்ளாமல் செல்கிறான். ஆஸ்ட்ரிடா இஞ்சேகார்டைப் போலவே கதையால் கவரப்பட்டு காதல் கொண்டவள். ஆஸ்ட்ரிடாவின் காதல் என்ன ஆகிறது ? இஞ்சேகார்டு மற்றும் ஒலாவின் திருமணம் எப்படி நிகழ்கிறது ? இருநாட்டிற்குமிடையேயான போர் முடிவிற்கு வருகிறதா என்று கதை தன் முடிவிற்கு செல்கிறது.

காதலை அதன் உணர்வை மட்டுமே வைத்து கதையை ஆசிரியர் நகர்த்தியிருக்கிறார். அதைக்கூற கதை முழுக்க கூற வேண்டியதாய் இருக்கும். அதை நான் செய்ய மாட்டேன். இத்தொகுப்பின் பிடித்த சிறுகதை அடிமைப்பெண்ணும் கடல் முத்துவும் தான். இரண்டுமே நீளமான கதைகள். மீத இரண்டும் ஆழமான கதைகள். அதனதன் வேர்களை வெவ்வேறு விதமாக ஆசிரியர்கள் கையாண்டு கொண்டு சென்றிருக்கின்றனர். அதே போல இரண்டு வரலாற்றுக் கதையினிலுமே கதைசொல்லல் திறமை அதிகமாக இருக்கிறது. மீத இரண்டு கதைகளிலும் தனக்கு தானே பேசும் தன்மை அதிகமாக இருக்கிறது. இரண்டு வரலாற்று கதைகளும் மௌனமாக தர்க்கங்களை செய்கின்றன. கதைகள் இன்னமும் என்னுள் அசைபோட்ட வண்ணமே இருக்கின்றன. அதே நேரம் மீத இரண்டு கதைகள் வெளிப்படையாக தர்க்கங்களை நிகழ்த்துகின்றன.

இன்னமும் அசைகள் நின்றபாடில்லை. உண்மையிலேயே சிக்கிய பொக்கிஷம் தான் இந்த கடல் முத்து. க.நா.சுவின் மீத மொழிபெயர்ப்புகளையும் வாசிக்க வேண்டும் என்று ஆசை கிளம்பியிருக்கிறது.

பி.கு : இதில் நான் கூறியிருக்கும் கதையின் சாரமெல்லாம் சிறுகதையின் பத்து சதவிகிதமே. பக்க அளவில் கூறவேண்டுமாயின் இரண்டு பக்கங்கள் வரலாம். அவ்வளவே!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக