ஊமையாகும் ஓவியமொழி

கோவா சென்றிருந்த பொழுது புனித ஃப்ரான்சிஸ் சேவியரின் உடல் இருக்கும் தேவாலயத்திற்கு செல்ல நேர்ந்தது. புராதனமான தேவாலயம் அது. பெஸிலிகா ஆஃப் பாம் ஜீஸஸ் என்று அதை அழைக்கின்றனர். அக்கட்டடத்தின் அமைப்பிலியே பிர்ம்மாண்டத்தை எல்லோராலும் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். தேவாலயத்தின் வெளியே எவ்வளவு ஆச்சர்யத்தை அந்த கட்டடம் அளிக்கிறதோ அதைவிட பன்மடங்கு அதன் உட்புறத்தோற்றமும் அளிக்கும். எல்லா இடங்களயும் வேடிக்கை பார்க்கும் போது தான் அங்கே சில கேலரிக்கள் இருக்கின்றன என்பதை அறிந்தேன். ஓவியம் சிற்பம் சார்ந்த கேலரிக்கு முதலில் சென்றோம். ஏகப்பட்ட ஓவியங்களும் சில பாகங்கள் உடைந்த சிற்பங்களும் அங்கே காணக்கிடைத்தன. சேவியரின் சேவையை பேசும் ஓவியங்கள் கனிசமாக காணபட்டன. இவை எளிதில் புரியக்கூடியனவாகவும் இருந்தன. அதற்கு காரணம் அந்த கதையை கூறும் வகையில் இருந்த அடிக்குறிப்பு. ஆனால் சில ஓவியங்கள் எவ்வளவு பார்த்தும் புரியக்கூடியதாக இல்லை. ஒரு படத்தை கூறுகிறேன் யூகித்து பாருங்கள். அங்கு படம் பிடிக்கக்கூடாது என்று கூறியிருந்தனர். அதனால் தான் கூறுகிறேன் யூகித்து கொள்ளுங்கள் என்னும் நிலை. மூன்றடிக்கான ஓவியமது. ஓவியத்தின் மையத்தில் மனிதனின் தலை. மேலே சில இடைவெளிவிட்டு இரு மூலையிலும் அம்மனிதனின் இரண்டு கால்பாதங்களும் தெரிகின்றன. அதே போல் தலைக்கு கீழே சில இடைவெளிவிட்டு அவனின் இரண்டு உள்ளங்கைகளும் தெரிகின்றன. இந்த ஓவியத்தை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிகமாக ஈர்த்த ஓவியமாக இருப்பினும் சுத்தமாக புரியவில்லை.

அந்த ஓவியத்தின் கீழே சர்ரியலிஸ ஓவியம் என்று போட்டிருந்தனர். நடப்பு உலகையே தனக்குள் புதியதைப் போல சித்தரித்துக் கொண்டு அங்கே தன்னை வேற்று ஜீவனாக மாற்றிக் கொண்டு நடப்பில் இருக்கும் பிரச்சினைக்கு தீர்வினை காண்பதே சர்ரியலிஸம். இதை என்னால் கூற முடிகிறதே ஒழிய அந்த ஓவியத்தின் முன்னே என் புரிதல் திறன் யாவும் மட்டுப்போயின. அப்படியெனில் ஓவியத்தினுள்ளே என்ன இருக்கிறது ? ஏன் என்னை ஈர்க்கிறது ஆனால் புரிய மறுக்கிறது ? அது ஒரு மொழி என்பதை தான் அறிந்து கொள்ள முடிகிறது.

ஓவியம் சார்ந்த அதிகமான வெளி என்வசம் இல்லை. ஓவியத்தை ரசிக்க யாரேனும் ஒருவர் அருகில் இருக்க வேண்டுமோ என்னும் அபத்தமான எண்ணமும் எனக்குள் தோன்றியதுண்டு. சிற்பக்கலையும் ஓவியமும் தான் உலகை கலைவடிவத்தில் எளிதில் மக்களுக்கு கொண்டு செல்லக்கூடியனவாக இருந்தன. இப்போது இல்லாமைக்கு காரணம் சிற்பக்கலைகள் இலவசமாக காணக்கிடைக்கின்றன. கோயில்களை சுற்றியிருக்கும் எல்லா சிற்பங்களுமே அவ்வளவு அழகானவை. ஆனால் அந்த உருவங்களின் வளைவுகளில் தெரியும் பக்தர்(!)களின் மிச்ச விபூதி அதன் அழகியலை கெடுக்கிறது. மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது என்பதால் அதன் அழகு அவ்வளவு சீக்கிரம் எல்லோரையும் சென்றடைவதில்லை. சிற்பத்திற்கு இந்த நிலை எனில் ஓவியத்திற்கு ?

ஓவியம் கலையின் வெளிப்பாடாக இருப்பினும் அது dynamic ஆனது அல்ல என்னும் எண்ணம் எனக்குள் இருந்து வந்தது. நிகழ்ந்த ஒரு விஷயத்தையோ  இருக்கக்கூடிய இடத்தையோ அப்படியே கொடுக்கக்கூடிய தன்மை மட்டுமே அதற்கு இருக்கிறது. அதிலிருந்து வாய்மொழிக்கதைகள் நீள்கின்றனவே ஒழிய ஓவியங்கள் முழுக்கதைகளையும் சொல்வதில்லை. இந்த எண்ணம் கூட சில நேரங்களில் எனக்குள்ளேயே மாற்றம் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணனின் இணையதளத்தில் இருக்கும் ஓவியம் என்னும் லேபிலிற்கு சென்று பாருங்கள். எப்படி வரலாற்றின் மறுதலிக்கமுடியாத ஆவணமாக ஓவியங்கள் மாற்றம் கொண்டிருக்கின்றன என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

ஓவியம் சார்ந்து நான் அறிந்தது எல்லாமே சொற்ப நாவல்களின் மூலமாகத்தான். குறிப்பாக சி.மோகனின் விந்தை கலைஞனின் உருவச்சித்திரம், ஆ.மாதவனின் கிருஷ்ணப்பருந்து நாவலில் வரும் சின்ன கதாபாத்திரம் மற்றும் கள்ளம் நாவலில் வரும் வரைதல் சார்ந்ததொரு கலை. இந்நிலையில் தான் விட்டல்ராவ் இயற்றியிருக்கும் காலவெளி நாவலை வாசித்தேன்.ஓவியம் என்னும் கலையினுள் இருக்கும் அரசியலையும் அதனூடாக ஓவியனின் உணர்வுகளையும் எழுதியிருக்கிறார். ஓவியம் வரைபவனும் சாதாரணமானவன் தான். அவனுக்குள் இருக்கும் திறன் ஓவியம் வரைதல். வரையும் வரை தான் அவன் ஓவியன். அதன் பின் வியபாரியாக வேண்டும். மனதோரம் அந்த எண்ணம் எல்லோரையும் துரத்திக் கொண்டே இருக்கிறது. இல்லையெனில் அவனை நம்பி இருக்கும் வயிற்றிற்கு என்ன பதில் சொல்வது! அந்த இடத்தில் தான் சமூகம் ஓவியம் சார்ந்த எந்தவிதமான பார்வையை அளிக்கிறது என்பதை நாவல் பேசுகிறது. ஓவியங்களின் மூலஸ்தானமே ஆர்ட் கேலரி தான். மேலும் அவர்கள் வைக்கும் ஓவிய எக்ஸிபிஷன் தான். இதில் விற்றுப் போகுமா என்று ஒவ்வொரு ஓவியனும் எதிர்பார்க்கிறான்.

எத்தனை மக்கள் விருப்பம் கொண்டு ஓவியங்களை அணுகுகிறார்கள். கோவாவில் கூட ஒரு அடுக்கில் இருக்கும் ஓவியங்களை சென்று பார்க்கவில்லை. உடன் வந்த தோழி ஓவியங்கள் இன்ட்ரெஸ்டிங்காக இல்லை என்று கூறிவிட்டாள். தோழியே முக்கியம் என்பதால் ஓவியங்களை எளிதில் புறக்கணித்துவிட்டேன். பார்க்காமல் வருகிறோமே என்னும் ஆசை என்னுள் இருந்து கொண்டே வந்தது. இப்போதும் இன்னமும் கொஞ்ச நேரம் அன்று பார்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. இதே மனநிலை தான் எல்லாரிடமும் பரவி இருக்கிறது. ஓவியங்கள் சார்ந்து அநேக அநேக கேள்விகள் மட்டும் எல்லோரின் மனதிலும் நீக்கமர நிறைந்து இருக்கிறது. அந்த கேள்விகளுக்கெல்லாம் இந்த நாவலினூடாக பதில்கள் கிடைக்கின்றன.

ஓவியங்களின் அடிப்படை கேள்வியே நான் முன்னமே சொன்னது தான் ஓவியங்களில் சிலவற்றை புரிந்து கொள்ளமுடியவில்லையே என. மார்டர்ன் ஆர்ட் ஓவியங்களை புரிந்து கொள்வதில் சிரமங்கள் எப்போதும் இருக்கின்றன. அதே நான் மேலே குறிப்பிட்டிருக்கும் ஓவியமோ பல ஆண்டுகள் முந்தையது. இதே போல அப்ஸ்டிராக்ட் என்று சொல்லப்படும் வெறும் வண்ணங்களால் ஆன ஓவியங்களும் புரிதலுக்கு சவால் விடக்கூடியவை. அதை புரியவில்லை என்று ஒரு கதாபாத்திரம் கேட்கிறது அதற்கு நாயகர் குழுவிலிருக்கும் ஒருவன் சொல்லும் பதில்,

"உங்களுக்கு வண்டாடும் சோலைதனிலே புரியுது. சின்னஞ்சிறு கிளியேயும் பம்பரக்கண்ணாலேயும் புரியுது. ஆனா ராகா ஆலாபனை எப்படி புரியுது ? இல்லே, ராகா ஆலாபனை புரிஞ்சாகணுமா ? புரியல்லேன்னாலும் தலையை ஆட்டி, தொடையை தட்டத்தானே செய்யறீங்க ? ஒரு பாட்டுக்குண்டான அப்ஸ்டிராக்ட் இசைச்சாரம்னு சொல்லிக்கலாமா. அப்படித்தான் இந்த அப்ஸ்டிராக்ட் ஓவியமும் ஒரு இசையின் குறிப்பிட்ட அல்லது குறிப்பிடாத ஆலாபனை போல a composition a colour composition. . . "

ஓவியக்கல்லூரியின் மாணவர்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறார்கள். அவர்களின் நினைவோடை வழியாக கதை ஆரம்பிக்கிறது. ஒவ்வொருவரின் திறனும் அதனதன் பின்னிருக்கும் கடினங்களும் மெதுமெதுவாக விரிவாகிறது. அதில் நால்வர் இணைந்து FOUR என்றொரு ஓவிய அமைப்பை ஆரம்பிக்கிறார்கள்.அவர்களின் ஓவியங்களை எக்ஸிபிட் செய்ய அதை உபயோகம் செய்யலாம் என்னும் முடிவினை எடுக்கிறார்கள்.

ஓவியத்தின் திறன் வெளியில் செல்ல பத்திரிக்கையின் உதவி அத்தியாவசியமானதாக இருக்கிறது. அப்படி எழுதப்படும் விஷயமும் மக்களுக்கு சலிப்பை கொடுக்காமல் இருக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த விஷயம் செய்யும் போது முன்னமே இந்த ஆர்ட் கேலரியின் முன்னோடியாக இருப்பவர்கள் புதியவர்களை எப்படி நடத்துவார்கள் என்னவிதமான விமர்சனங்களும் மானசீகமான எதிர்ப்புகளும் வரும் என்பதையும் பதிவு செய்திருக்கிறார். அதே போல பொது இடமொன்றிற்கு சென்று அங்கு ஓவியத்தை வரைய முனையும் போது பொது மக்கள் எப்படி இவர்களை ஏற்கிறார்கள் என்பதையும் கூறியிருக்கிறார்.

பத்திரிக்கைகளினூடே இருக்கும் அரசியல், சொந்த இடத்தை விட்டு வேற்றொரு இடத்திற்கு செல்லும் கலைஞனின் மனம் எப்படியேல்லாம் மாறுபடக்கூடும், nostalgia எந்த அளவு கலையை பாதிக்கும் என்பதையும் வாதிக்கிறார். ஆங்கிலோ இந்தியப்பெண் நாவலில் வருவதால் அவளின் மூலம் அவர்களின் பழக்க வழக்கங்களையும் கூறுகிறார்.

ஓவியத்தைப் பற்றி வரும் பகுதிகள் தான் புதியதாய் சுவாரஸ்யம் நிரம்பியதாய் இருக்கிறது. ஒன்று சொல்கிறேன் பாருங்கள். புளிய மரத்தை காண்கிறான். அதை வரைய நினைக்கிறான். அதோடு கற்பனையில் அதன் கீழ் பிள்ளையாரை வைக்கிறான். ஓவியத்தில் புளியமரம் பின்தங்கி பிள்ளையார் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. ஓவியத்தில் இருக்கும் மேஜிக் என்று இதனை விரிவாக்குகிறார். இது போன்றதான படங்கள் எங்குவேண்டுமெனினும் நம்பகத்தன்மையை இழந்துவிடலாம். அதை செவ்வனே செய்வது தான் ஓவியனின் பணி என்பதையும் குறிப்பிடுகிறார்.

நாவலில் இருக்கும் குறை வீரியம் இல்லாமல் இருக்கும் அதன் மொழி தான். தட்டையாக கதை செல்கிறது. நிறைய விஷயங்களை புதிது புதிதாக சொல்கிறது முடிவை நோக்கி செல்ல மறுக்கிறது. ஓவியக்கலையில் இருக்கும் அரசியல் வரையும் போது வரும் அழகியல் என்று எல்லாவற்றையும் பேசும் நாவல் மிகப்பொறுமையாக செல்வதால் சலிப்பை எந்த இடத்திலும் ஏற்படுத்தக்கூடும் என்னும் நிலையிலேயே செல்கிறது. விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம் நாவலை விட இந்நாவலே ஓவியம் சார்ந்த அடர்த்தியை கொண்டிருக்கிறது. முன்னதில் இருக்கும் மொழியின் அழகு இதில் மிஸ்ஸிங்!!!

பி.கு : ஹிந்து தீபாவளி மலரில் வந்திருக்கும் ஓவியர் மனோகர் தேவதாஸின் அனுபவங்களும் ஓவியங்களும் அழகாக இருக்கின்றன. கடைசியாய் ரசித்த ஓவியமும் இது தான்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக