யுத்தத்தினூடே யுரானித்தா. . .

கரீபிய தீவுகளை சுற்றி இருக்கும் பல நாடுகளில் ஒன்று தான் டொமீனிய குடியரசு. இந்நாடு தனக்கென பல்வேறு ஆக்ரமிப்புகளையும் பூர்வக்குடிகலாச்சாரத்தையும் பிரத்யேகமாக கொண்டிருக்கிறது. பிற நாட்டு படையெடுப்புகளும் மத ஆக்ரமிப்புகளும் நிகழாமல் இருக்க வேண்டி அநேக முயற்சிகளும் இங்கே அரங்கேறியிருக்கிறது. எல்லாவற்றிற்குமான வரலாற்று ஆவணங்களும் அங்கே இருக்கின்றன.

அந்நாட்டில் உள்ள ஒரு இடம் தான் சான் டொமிங்கோ. அங்கே பிறந்தவன் தான் ட்ருஜில்லோ. பள்ளிப்பருவம் மற்றும் படிப்புகளை அங்கேயே முடித்துக் கொண்டான். பின் கொள்ளை, சின்ன சின்ன திருட்டுகள் என்று சிறைவாசம் அடைந்தான். அப்போது தான் அடுத்தவர் மீது அதிகாரத்தை செலுத்த வேண்டிய நிர்பந்தம் சமூகத்தில் எப்படி நிலவுகிறது என்பதை அறிந்து கொண்டான். அங்கிருந்து வெளிவரும் போது ராணுவத்திற்கான தேர்வுகள் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருந்தன. அதில் கலந்து ராணுவத்தில் சேர்ந்தான். ராணுவத்தில் சேர்ந்த ஒன்பதாவது வருடத்திலேயே உயர் பதவி அடைந்தான். இந்த நேரத்தில்தான் குடியரசுத்தலைவரை எதிர்த்த புரட்சி நாட்டில் வெடித்திருந்தது. அதற்கு உதவுவதாக ட்ருஜில்லோ அரசியலுக்குள் நுழைந்தான். புரட்சியை தலைமை தாங்கிய எர்ஸ்டெல்லோ வெற்றி பெற அவரே நடப்பு குடியரசுத்தலைவரானார். அதற்கு அடுத்து நிகழ்ந்த தேர்தலிலேயே குடியரசுத்தலைவர் பதவிக்கு நின்று அதிகமான ஓட்டுகளுடன் வெற்றி பெற்று டொமினீயக் குடியரசிற்கு தலைவரனானான் ட்ருஜெல்லோ. அன்றிலிருந்து அடுத்த முப்பத்தியோரு ஆண்டுகள் அந்நாட்டின் சர்வாதிகார ஆட்சி ஆரம்பித்தது. அந்நாட்டு மக்களே அதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அரசு சார்ந்து இருந்த எல்லாவற்றையுமே தனியார் மையமாக மாற்றத்துவங்கினான். தெருக்களுக்கும் ஊர்களுக்கும் இருந்த பெயர்களை மாற்றி தனது பெயரையும் சொந்தக்காரர்களின் பெயரையும் வைக்கத்துவங்கினான். எதிர்க்கும் எல்லா மனிதர்களையும் பாரபட்சமின்றி கொன்றான். அண்டை நாடானா ஹைத்தியுடன் எப்போதும் பிரச்சினை நிலவி வந்தது. அதனுடன் சமாதான பேச்சுவார்த்தை நிகழ்த்தி ஒன்றானபோதும் அங்கிருக்கும் மக்கள் நிபந்தனையை மீறி நாட்டிற்குள் நுழைந்ததால் எண்ணற்ற மனிதர்களை பாகுபாடின்றி கொன்றான். மக்களுக்கு தேவையானதாக அவன் கருதிய யாவற்றையும் செய்தான். இரண்டு மகன்கள் இருந்தாலும் இரண்டு பேருக்கும் அரசியல் நாட்டமின்றி போயிற்று.

ஹைத்தியுடனான அரசியல் பிரச்சினை மட்டுமின்றி தேவாலயங்களில் இருக்கும் பாதிரியார்களுடனான பிரச்சினை, இரண்டாம் உலகப்போரின் சமயம் என்பதால் அமேரிக்காவுடனும், அதற்கு எதிர்மாறாக க்யூபாவின் ஃபிடல் கேஸ்ட்ரோவுடனுமான பிரச்சினைகளும் நிலவி வந்தது. கொலை கொள்ளை, ஊர்ச்சொத்து என்று அனுபவித்து வந்த ட்ருஜில்லோ 1960 இல் சுட்டுக் கொல்லப்பட்டான். சுட்டுக் கொன்றவர்களை கண்டறிந்து அவர்களை சித்ரவதை செய்து கொலை செய்ததும் அந்நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத விஷயமாக போயிற்று. அதிலும் அவர்களுக்கு உதவி செய்தவர்கள் சொந்தக்காரர்கள் என்று ட்ருஜில்லோவின் பெயரில் அவனின் மரணத்திற்கு பின்னும் ரத்தம் சிந்தப்பட்டுக் கொண்டே இருந்தது. அந்த கொலையை செய்தவர்களில் முக்கியமானவர்கள் ஜெனரல் ஜோன் தொமாஸ் டியாஸ், அண்டோனியோ டி லா மாஸா, அமேடியோ கார்ஸியா க்வெரேரோ, அண்டோனியோ இம்பர்ட் பரேரா. இவர்கள் நால்வருமே ஏதோ ஒருவகையில் ட்ருஜில்லோவிற்கு நெருக்கமாக இருந்தவர்கள். தனிப்பட்ட குரோதத்தால், அவர்களுக்கு ட்ருஜில்லோவால் நேரடியாக நிகழ்த்தப்பட்ட துவேஷத்தால் ட்ருஜில்லோவைக் கொன்றனர். இவர்கள் அல்லாது இந்த திட்டத்தின் பின்னிருந்தவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களில் கடைசியாக தப்பித்தவர்கள் இருவரே.

ட்ருஜில்லோவை எதிர்ப்பவர்களில் மக்களின் பங்களிப்பும் அதிகமாகவே இருந்தது. முதல் முறை மட்டுமே ட்ருஜில்லோ அரசியலில் நேரடியாக வெற்றி பெற்றான். அடுத்தடுத்த முறையில் தேர்தலை மறுத்து தன்னையே குடியரசுத்தலைவர் என கூறிக்கொண்டான். இந்த ஆட்சிமுறையை முழுதுமாக நீக்கிவிட்டு ஜனநாயக ஆட்சிமுறையை வெளிக்கொணர வேண்டும் என்பது பல அரசியல் பிரக்ஞை இருந்தவர்களுக்கு எண்ணமாக இருந்தது. அதையே கொலையாளிகளும் தங்களின் எண்ணமாக கொண்டிருந்தனர். அதற்கு தகுந்த கொலைக்கான திட்டத்தையே அவர்களும் வகுத்திருந்தனர். ஆனால் அதை நிகழ்த்தும் போது ஒருவர் செய்த பிழையால் எல்லாமே தலைகீழானது. படுகொலைகளை தடுக்க நினைத்த கும்பலில் ஒருவன் செய்த பிழையால் இறந்தும் ட்ருஜில்லோவின் பெயரில் அநேக படுகொலைகள் அந்நாட்டில் நிகழ்ந்து கொண்டே இருந்தன.

அந்த ஒருவன் செய்த காரணமும் வரலாற்றில் இருக்கக்கூடிய விஷயம் தான். இருந்தும் இங்கு சொல்லாமல் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த படுகொலையையும், அரசியல் பிண்ணனியையும், ட்ருஜில்லோ இறந்த பின் நிகழ்ந்த எல்லா சமூக மாற்றங்களையும் நாவலாக்கியிருக்கிறார் பெரூ தேசத்து எழுத்தாளர் மரியா வர்கஸ் லோசா. இணையத்தில் டோமீனிய குடியரசு சார்ந்த வரலாற்றையோ ட்ருஜில்லோவின் வாழ்கையையோ தேடினாலே இந்நாவலின் மொத்த கதையையும் அறிந்து கொள்ளலாம். இருந்தாலும் நாவலில் ஒரு சுவாரஸ்யம் நீண்டு கொண்டே பக்கங்களை கடந்து வருகிறது. இதன் காரணமாகத்தான் நான் அந்த ஒரு விஷயத்தை கூறாமல் இருக்கிறேன். சொல்லப்படாத விஷயத்தில் மட்டுமல்லாமல் சொல்லிய விஷயத்திலும் சுவாரஸ்யத்தை அதிகமாக வைத்திருக்கிறார். அந்த நாவலின் பெயர் தான் THE FEAST OF THE GOAT.லோசாவின் எழுத்துகளில் பெரு அல்லாது நாடுகள் பங்கேற்கும் நாவல்களில் ஒன்று இந்நாவல். மேலே சொன்ன வரலாற்றில் எந்த பிசகும் இல்லாமல் அப்படியே நாவலாக்கியிருக்கிறார். முதலில் நாவலை வாசித்து அந்நாட்டின் வரலாற்றை வாசிக்கலாம் என்று இணையத்திற்கு வந்தால் நாவலின் சுருக்கப்பட்ட வடிவத்தை படிக்கும் உணர்வே மேலெழும்பியது. இருந்தாலும் நாவலில் இருக்கும் விசேஷத்தன்மை அதன் வேகமும் எளிமையான எழுத்தும். நாவலின் யாதொரு பக்கமும் சுவாரஸ்யமற்றது என்றோ புறக்கணிக்கக்கூடியது என்றோ கூறமுடியாத வண்ணம் அரசியலாலும் பல்வேறு மனிதர்களின் நினைவுகளாலும் நிரம்பி இருக்கிறது.

நாவல் மூன்று வழிகளில் நகர்கிறது. முதலில் யுரானிதா. அர்டின் என்னும் ஊரில் படிக்க சென்ற அவள் மீண்டும் சான் டொமிங்கோவிற்கு வருகிறாள். வீட்டையும் ஊரையும் மறந்தே தீர வேண்டும் என்னும் வைராக்கியத்தில் சென்ற அவள் மீண்டும் அவ்வூரிற்கு வருகிறாள். மனதின் அலைபாயும் வேகத்தில் தந்தையை காண செல்கிறாள். படுத்த படுக்கையாக இருக்கிறார். முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு இருவருக்குமான சந்திப்பு நிகழ்கிறது. படிக்கும் காலத்தில் அவள் பணத்தை மட்டுமே அனுப்பிக்கொண்டிருந்தாள். அவளின் உணர்வுகளை வெகு எளிதில் லோசா விவரிக்கிறார். ட்ருஜில்லோ ஆட்சிக்கு வந்த பின் சான் டொமிங்கோ ஊரிற்கு சியுடாட் ட்ருஜில்லோ என்று பெயர் மாற்றம் செய்கிறான். இந்த பெயர் எல்லா நினைவுகளையும் மாற்றுகிறது. இந்த ஒரு பெயரை அவள் வெறுப்பதன் மூலம் அதற்கு முந்தையதாக இருக்கும் எல்லா நினைவுகளையும் அவளுக்குள்ளிருந்து கொணர்கிறாள் என்கிறார். அவளுக்கு தந்தையை சுத்தமாக பிடிக்கவில்லை. உலகில் வெறுக்கத்தக்க மனிதர் தந்தை தான் என்கிறாள். அங்கே வரும் அவளுடைய சொந்தக்காரர்களிடம் தன் அனுபவஙளை பேச ஆரம்பிக்கிறாள். அதன் மூலம் அப்பாவின் கதையும் ஏன் அப்பாவை அவள் வெறுக்கிறாள் என்னும் கதையும் மிக நீளமாக விரிகிறது. அவளுடைய அப்பா ட்ருஜில்லோவிடம் வேலைப்பார்த்தவர். அவரின் பார்வையில் மற்றும் யுரானிதாவின் பார்வையில் ட்ருஜில்லோவின் ஆட்சி நாவலில் விரிவடைகிறது.

அடுத்த அத்தியாயமாய் ட்ருஜில்லோவே வருகிறான். அவனின் செய்கைகளாக ஆட்சி விஷயங்களும் சில அரசியல் தீர்வுகளும் சொல்லப்படுகின்றன. அவன் அடுத்த நாடுகளுடன் கூட்டுறவு வைத்து அதன் மூலம் கொள்ளையடிக்கும் பணம் திருடுவதை விட மேல் என்பதை சூட்சுமமாக கூறுகிறான். இன்னமும் நிறைய தந்திரங்கள் பேசப்படுகின்றன. தன்னை எதிர்க்கும் ஆட்களிடம் திறன் இருப்பின் அவர்களை எப்படி தன்பக்கம் இழுப்பது எனபதாகவே அவனின் சிந்தனைகள் நாவல் முழுக்க பயணிக்கின்றன. அதே போல ட்ருஜில்லோவிற்கு பெண்கள் எனில் அதிகமாக பிடிக்கும். பருவமடைந்த பெண்களின் கற்பை சூரையாடுவதில் நாட்டம் கொண்டவன் அவன். அது மட்டுமின்றி தன்னிடம் வேலை பார்க்கும் எல்லோரின் மனைவிகளையும் எப்படியும் சுகித்துவிடும் குணம் படைத்தவன். அவனைப் போலவே குணம் மாறாமல் அவனுக்கு பிறந்தவன் ரம்ஃபிஸ். அவனும் அவனது நண்பர்களும் இணைந்து வயதுக்கு வந்த பெண்களை கற்பழித்து கொன்று போடுவது வழக்கம். சர்வாதிகாரம் என்பதால் அதை யாரும் தட்டி கேட்க முடியாது. இருந்தாலும் அப்போதைய இளம்பெண்களுக்கு ரம்ஃபிஸ்ஸே கனவு நாயகனாக திகழ்கிறான். இந்தக்கதையை முழுதும் யூரானிதாவின் மூலம் கூறி குறைந்தபட்ச கதையை அஃதாவது ட்ருஜில்லோவின் உணர்வை முக்கியப்படுத்தும் இடங்களில் கதைகளை அவனே கூறுவதாக எழுதியிருக்கிறார் லோசா.

மூன்றாவது தான் நாவலிலேயே வேகம் நிறைந்த கதைப்பகுதி. நான்கு கொலையாளிகளின் பிண்ணனியும் ட்ருஜில்லோவை கொலை செய்யும் படலமும். இவர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையை அஃதாவது கொலைக்கான காரணத்தை தனித்தனியாக கூறினாலும் கொலை செய்யும் தருணத்தில் தான் அவர்களின் வாழ்க்கை முழுமையடைவதாக படுகிறது. இந்தக்காட்சியை நினைத்துபபாருங்கள். நாட்டின் சர்வாதிகாரியை கொலை செய்தாயிற்று. இவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பது போலீஸிற்கும் தெரிந்துவிட்டது. ஊர் முழுக்க தேடுகின்றனர். கொலையாளிகளில் இருவர் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது ஒருவன் கேட்கும் கேள்வி நாம் ஏன் பீர் சாப்பிட்டுக்கொண்டே செய்த கொலையை கொண்டாடக்கூடாது என்பதாக இருக்கிறது. இருவேறு உணர்வு நிலையை ரத்தத்தையும் கொண்டாட்டத்தையும் ஒரே நிலையில் லோசா நிறுத்துகிறார். ட்ருஜில்லோவை கொலை செய்யும் இடமும் அங்கே நிகழும் கார் ச்சேசும் திரைப்படங்களில் காட்டப்படுவது போன்ற அதிவேக பக்கங்களாக கடந்து செல்கின்றன.

அதே போல கொலை நிகழ்ந்த பிறகு நிகழும் படுகொலைகள் அதற்கான வேட்டைகள் அரசியல் மாற்றங்கள் குழப்பங்கள்  பக்கங்களை கணக்கில் வைக்கவிடாமல் நகர்த்திக் கொண்டே செல்கிறது. கதைசொல்லும் இடங்களையும் பத்திக்கு பத்தி மாற்றிக் கொண்டே செல்கிறார். உதாரணத்திற்கு யுரானித்தா தன் சொந்தக்கார பெண்களிடம் கதை சொல்கிறாள் எனில் அவர்களுடன் பேசும் வசனங்கள் செல்லும் போது சட்டென கதை அவள் சொல்லும் வசனங்களுக்கு பின்னால் சென்று நாவலை தொடர்கின்றது. இரண்டிற்குமான இடைவெளியை நாவலிலிருந்து லோசா தூக்கிவிடுகிறார். அதுவே நாவலின் வேகத்திற்கு உகந்ததாகவும் அழகாகவும் இருக்கிறது.

நாவலின் கடைசி அத்தியாயத்தை மறக்க முடியா வண்ணம் அமைத்திருக்கிறார். கடைசி அத்தியாயத்தில் இருக்கும் வலியும் வேதனையும் நினைவுகளின் வழியே துரத்தும் துன்பங்களும் ஒரு கதாபாத்திரம் வழியாக கூறப்படினும் நாவலில் வரும் எல்லா பாத்திரங்களுமே அதே உணர்வுகளை சுமந்து கொண்டு பலகீனமான சபிக்கப்பட்ட வாழ்க்கையையே வாழ்கிறார்கள் என்பதை மிக அழகாக குறியீடாக கூறிச்செல்கிறார். தவறுகள் நம்மாலேயே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் நம்மையறிந்து, சில நேரங்களில் நம்மையறியாமல். அதனால் நிகழக்கூடிய பின்விளைவுகளோ நம்மையும் நம்மை சார்ந்தோரையும் பிரச்சினையில் ஆழ்த்திவிடுகிறது. ஒவ்வொரு நாட்டின் விடுதலையும் இப்படிப்பட்ட விஷயங்களாலேயே நிரம்பி இருக்கிறது. அதே போல ஒரு ஆண்டான் நம்மை விட்டு அகன்றவுடன் அவனின் ஆட்சியே நன்றானதாய் இருந்தது விடுதலை வாங்கி ஆட்சியை செய்யத்தெரியாமல் இருக்கிறார்கள் என்பது இருபத்தோராம் நூற்றாண்டிலும் சொல்லாடிக் கொண்டிருக்கிறது. ட்ருஜில்லோவின் ஆட்சிக்கு பின்பான காலங்களும் அப்படியே கழிந்திருக்கின்றன. எல்லா உணர்வுகளையும் வலிகளையும் உணர்ச்சிப்பூர்வ நாவலாக்கியிருக்கிறார் லோசா. ஆரம்பத்திலிருந்தே வேகமாக நூல் சென்று கொண்டிருந்தாலும் என்னை அதிகமாக ஈர்க்காமல் சில பக்கங்கள் கடந்தபின்னே தான் ஈர்க்கத்துவங்கியது. அதிலும் கடைசி அத்தியாயம் கொடுத்த சொல்லமுடியா வாசிப்பனுபவம் அதிலிருந்து மீளவிடாமல் என்னை தடுத்துக்கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னே என்னை பித்தனாக்கிய ஜூலிதாவைப் போலவே யுரானித்தாவும் என்னுள்ளே வார்த்தைகளால் கரைந்து கொண்டிருக்கிறாள். ஜூலிதாவை காதலிக்க முடிந்தது. யுரானித்தாவுக்கோ காதலே பிடிக்காது!!!!

பின் குறிப்பு : ஜூலிதாவை அறிய - http://www.kimupakkangal.com/2014/07/blog-post_26.html.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக