IN A BETTER WORLD – 2010

பழிதீர்த்தலைப் பற்றிய ஏகப்பட்ட படங்கள் உலகம் முழுக்க வந்து கொண்டே இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கு சலிக்காத ஒரு genre உம் இது தான். கில் பில், தி ஸ்கின் ஐ லிவ் இன், ஓல்ட்பாய் போன்று பல்வேறு விதமாக மனித ஆதார உணர்வுகளுள் ஒன்றான பழிதீர்த்தலை விதவிதமாக கையாண்டிருக்கின்றனர். இது எல்லாமே அதன் மூர்க்கத்தை மையப்படுத்தியே இருக்கிறது. ஓல்ட்பாய் படத்தில் ஒரு வசனம் வருகிறது. நாயகனை பதினைந்து ஆண்டுகள் கடத்தி வைத்திருக்கிறான் வில்லன். அவனை நேருக்கு நேராக சந்திக்கிறான். கொலை செய்ய மனம் துடிக்கிறது. கைவசம் கத்தி வேறு. எதிரே நிற்கும் வில்லனோ இதயத்திற்கு பதிலாக பேஸ்மேக்கரை வைத்திருக்கிறான். அதை இயக்கக் கூடிய பொத்தானை கைவசம் வைத்துக் கொண்டு நானே என்னை கொன்றுவிடுவேன் என்று நாயகனையே பயமுறுத்துகிறான். அப்போது அவன் நாயகனிடம் சொல்லும் வார்த்தை தான் மிக முக்கியமானது. மனித மனம் பழிவாங்குவதற்காக காத்துக் கொண்டே இருக்கிறது. அப்படி பழிதீர்த்தபின் மிஞ்சிப் போவதெல்லாம் இனி வாழ்வதற்கு என்ன இருக்கிறது என்னும் குணம் மட்டுமே என்கிறான். யோசித்துப் பார்த்தால் சரியென்றே தோன்றலாம். சுஜாதா சொல்வது போல் it depends!

இந்த பழிதீர்த்தல் எதனால் ஏற்படுகிறது என்னும் கேள்வி ஆதாரமாக அமைகிறது. தன் இடத்தை இன்னொருவன் ஆக்ரமிக்கும் பொழுது, தன்னை அவமானப்படுத்தி அடுத்தவன் சந்தோஷம் கொள்ளும் பொழுது இப்படி கூறிக்கொண்டே செல்லலாம். இது எல்லாவற்றிலுமே நம்மை அவமானப்படுத்தும் தருணத்தில் அல்லது நாம் வீழ்ச்சி கொள்ளும் தருணத்தில் நம்மிடம் கெக்கலி இட்டுக்கொண்டே ஒருவன் வெற்றியடைந்து கொண்டிருக்கிறான். அது எப்படி சாத்தியப்படும் என்னும் கேள்வி நம்முன்வந்து நிற்கிறது. பள்ளியில் பல மாணவர்கள் முன் ஆசிரியர் நம்மை திட்டும் போது எவனொருவன் சிரிக்கிறானோ அவன் மீது நம் மனம் வஞ்சம் கொள்கிறது. அடுத்தமுறை அவனுக்காக நாம் சிரிக்கும் போது தான் பழி தீர்கிறது. பழிதீர்த்தல் வரலாற்றுப் பங்கை எல்லா ஊர்களிலும் பெற்றிருக்கிறது.

இந்த பழிதீர்த்தல் சின்ன சின்ன விஷயங்களில் உணர்வுகளின் சமனிலையற்றத்தன்மையில் பெருவெடிப்பு கொள்கிறது. எதிலும் சிந்தனை செய்யாமல் மனம் அதிலேயே கவனம் கொள்கிறது. நாம் இந்த ஒரு விஷயத்திற்காக எத்தனையோ விஷயங்களை இழந்திருக்கிறோம் என்பதை அறியும் தருணத்தில் வாழ்க்கை ஒன்றுமற்ற சூன்யமாகிவிடுகிறது. இந்த சூன்யத்தை மனத்தால் புரிந்து கொள்ளமுடிவதில்லை. கிரஹித்துக் கொள்ளமுடியவில்லை. சின்ன உணர்வுசார் நெருடலின் மூலமாக விதைக்கும் வஞ்சம் மற்றும் அது சார்ந்த காட்சி ரீதியான தர்க்கம் மற்றும் பின்னர் வரும் நெருடல் என்ற முழுமை மிக அழகாக படமாகியிருக்கிறது IN A BETTER WORLD திரைப்த்தில். இது டானிஷ் மொழி திரைப்படம். இதன் மூலப்பெயர் Hævnen. அதன் அர்த்தமே பழிதீர்த்தல் தான்.இரண்டு கதைகள் ஓரிடத்தில் ஒன்றிணைந்து பயணிக்கின்றன. ஒவ்வொருவாருக்குள்ளேயும் இருக்கும் பலவீனங்ள் சில உணர்வெழுச்சிகளால் பலமடைவதை நுண்ணியமாக பதிவாக்கியிருக்கிறார்.

எலியாஸின் கதை : ஆண்டன் ஒரு மருத்துவர். கேம்ப் போன்ற ஒன்றில் அனுதினமும் மருத்துவம் செய்து வருகிறார். அங்கு வரும் குழந்தைகள், இளவயது பெண்கள், நடுத்தர வயது பெண்கள் எல்லோருக்குமே வயிற்றுப்பகுதியில் கீறல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணமாக சொல்லப்படும் விஷயம் பிக் மேன் என்று ஒருவன் இருக்கிறான். அவன் எல்லா பெண்களையும் கற்பழித்து உடலை கிழித்து அனுப்பிவிடுவான் என்று. ஆண்டனின் மனதில் சஞ்சலத்தை கொடுத்தாலும் மருத்துவம் செய்வதில் மட்டுமே குறியாய் இருக்கிறான்.

அவனின் மகன் எலியாஸ். பள்ளியில் படிப்பவன். அவனின் பள்ளியில் இருக்கும் மாணவர்கள் எல்லோருமே அவனை கலாய்த்துக் கொண்டே இருக்கின்றனர். எப்போதுமே பலகீனமானவனாக இருக்கிறான். அவனுக்குள் இருக்கும் வருத்தம் தன் அம்மாவும் அப்பாவும் விவாகரத்து வாங்கிப் பிரியப்போகிறார்களே என்று.

கிறிஸ்டியனின் கதை :  கிறிஸ்டியனின் அம்மா புற்றுநோயாளியாக இருந்து இறந்துபோனவள். அம்மாவின் நினைவிலேயே அவன் மூர்க்கமானவனாக மாறுகிறான். அப்பாவைக் கண்டாலே அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் மனதில் இருக்கும் வெறுப்பிற்கான காரணம் அம்மாவிற்கு ஒன்றுமில்லை நல்ல உடல்நிலைக்கு திரும்பிவிடுவாள் என்று சொன்ன அப்பாவின் வார்த்தை பொய்யானதே என்பதுதான். அப்பாவின் மீதுள்ள வெறுப்பே அவனின் குணமாகிறது. அவன் எலியாஸுடன் நட்பாகிறான். எல்லோரிடமும் மூர்க்க குணத்தை காண்பிக்கிறான். எலியாஸிற்காக பிறருடன் சண்டையிடுகிறான்.

எலியாஸ் அவன் தம்பி மற்றும் அவனின் அப்பாவுடன் வெளியில் செல்லும் போது வேறு ஒரு குழந்தையின் அப்பா எலியாஸின் அப்பாவை சின்னதான ஒரு பிரச்சினையில் அறைந்துவிடுகிறான். எல்லா குழந்தைகளுக்கும் அவரவர்களின் அப்பாவே ஹீரோக்கள். தன் அப்பா அறை வாங்கியது மூவருக்கும் பிடிக்கவில்லை. அவனை எப்படியேனும் பழிவாங்கியாகவேண்டும் என்று எலியாஸைவிட கிறிஸ்டியன் திரிகிறான். அதன் விளைவுகள் என்ன ஆகின்றன என்பதாக கதை நீள்கிறது.

பழிதீர்த்தலுக்கான விஷயங்கள் சார்ந்த பாடமாக இப்படம் முழுக்க செல்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எலியாஸின் அப்பா சொல்லும் வார்த்தை. மீண்டுமொருமுறை தன்னை அறைந்தவனிடம் சண்டைக்கு சென்று அறைவாங்குகிறார். அப்போது எலியாஸிடம் குழந்தைகளின் முன்பு வன்முறையை கையாளக்கூடாது என்று கூட அவனுக்கு தெரியவில்லை. என்னை அறைந்தது மூலம் அவன் தோல்வியையே அடைகிறான் என்கிறார். அருகிலிருக்கும் கிறிஸ்டியனால் இதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

ஒருகன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்பது அறத்திற்கும் அடிப்பவனின் தோல்விக்கும் உகந்த வசனமாக இருக்கலாம். ஆனால் வலி என்பது இங்கே இல்லவே இல்லை என்பது கிறிஸ்டியனின் பாத்திரம் மூலம் மிக அழகாக கூறப்பட்டிருக்கிறது. எத்தனையோ குழந்தைகளையும் பெண்களையும் வன்கொடுமைக்கு ஆளாக்கும் அம்மனிதனையே தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே இவனை நான் என்ன செய்ய என்னும் கோவத்துடன் ஆண்டனின் நடிப்பு படம் முழுக்க ஈர்க்கிறது. அவனுள் கோவம் இருந்தாலும் இக்காரணம் அதை வருத்தமாக புரிதலாக மாற்றுகிறது.  எல்லா இடங்களிலும் வன்மங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சில இடங்களில் மட்டுமே கொந்தளிக்கிறோம். ஏன் எதனால் என்பதை ஆண்டனின் பாத்திரம் மூலம் கூறுகிறார்.

படத்தில் மிகக் குறைவான நேரத்தில் ஆண்டன் மற்றும் பிரியவிருக்கும் மனைவிக்கும் இடையேயான காதலை சில வசனங்கள் மூலம் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கிறிஸ்டியனாக நடித்திருக்கும் சிறுவனின் மூர்க்கமான நடிப்பு வசீகரமாக இருக்கிறது.

பழிதீர்த்தல் சார்ந்த பல காட்சிகளை நான் கூறாமலே இருக்கிறேன். அவை காட்சி ரூபத்தில் வன்மம் நிறைந்ததாய் இருக்கிறது. கதையளவில் மட்டுமே இப்படம் வன்மத்தை நிறையக் கொண்டிருக்கிறது. அஃதாவது காட்சியாக காட்டாமல் அதன் உணர்வை வசனத்தில் கொடுத்திருக்கிறார். கதையில் தெரியும் வன்மங்களை காட்சிகளில் எதிர்பார்க்க முடியாது. சிறுவர்களின் மனம் எல்லா எல்லைகளுக்கும் எளிதில் செல்லக்கூடியது என்பதை படம் மிக அழகாக காட்சியாக்கியிருக்கிது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக