அஃதோர் கானகத்தில்

எல்லோருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் காரணமில்லாத உணர்வுச்சிக்கல் ஏற்படுவதுண்டு. சில மனிதர்களைக் கண்டாலே அடிக்க வேண்டும் என்று தோன்றும். அவர்களிடம் பேசியிருக்கக் கூட மாட்டோம். ஆனாலும் ஒரு துவேஷம் அவர்களின் நடை உடை உணவு உட்கொள்ளும் பழக்கம் எல்லாவற்றின் மீதும் ஏற்படும். எனக்கு அநேக முறைகள் அப்படி ஏற்பட்டதுண்டு ஏற்படுவதுமுண்டு. கோபத்தை வெளிப்படுத்த எனக்கு பிடிக்காது. அதிகமாக கெட்ட வார்த்தைகளை பேசுவது என் வழக்கமாயினும் பேசுவதெல்லாம் நட்பு ரீதியாக இருக்குமே ஒழிய சினம் கொண்டு அல்ல(!). இருந்தும் கடந்த சில நாட்களாக காரணமில்லாத கோவத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறேன். Eccentric மனநிலையில் ஊசலாடிக் கொண்டே இருக்கிறேன். சரியாக நினைவிருக்கிறது. ஓன்றரை ஆண்டுகளுக்கு முன்பு “நாவலுக்கான 23 குறிப்புகள்” என்னும் சிறுகதையை எழுதினேன். அது என் பிறந்தநாளை ஒட்டிய சமயம். அப்போது என்னை அதிகமாக ஈர்த்த பாடல் வரி – “குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு அலைபாயுதே. . .” ஜேசுதாசின் குரலில் கேட்டுக் கொண்டே இருப்பேன். அப்போது என்வசம் இருந் அதே உணர்வு தான் இப்போதும் இருக்கிறது. இப்போதோ அந்த இசையை கூட கேட்க முடியா வண்ணம் பொறுமையிழந்து இருக்கிறேன். அந்த இசையை மட்டுமல்ல யாதொரு இசையையும் கேட்க முடியவில்லை. வாசிக்க மனமில்லை. எதையேனும் எழுதலாம் என நினைத்தால் ஓட்டம் அறுபட்டுவிடுகிறது. என்னிடமே பேசுகிறேன். என்னிடமே சினம் கொள்கிறேன். என்னிடமே மௌனம் காக்கிறேன். என்னிடமே அழுகிறேன். எதையேனும் எழுத வேண்டும் என்று மட்டும் மனம் தேடுகிறது. இடைபட்ட நேரத்தில் உதித்த வார்த்தைகளே பின்வருபவை. இது எப்படி இருந்தாலும் அது தான் இப்போதைய நான்!"அஃதோர் கானகத்தில். . .

பயத்தில் ஒரு காலும் சினத்தில் ஒரு பாதமும்
மண்மீது வேரூன்ற
துரத்தும் நிழல்களின் நனவிலி உருவைக்கண்டு
கற்பனை மாயரூவத்தை துணையென முன்னிறுத்தி
கண்ணறியா தூரத்தை கணக்கிட்டுக் கொண்டே
ஓடிக்கொண்டிருக்கின்றன என்னிரு கால்கள்.

அறியா பருவத்தில் அஞ்சிய மனித முகங்களையும்
சிறிய வயதில் சினங்கொண்ட மாந்தர்களையும்
கல்லெறிந்து பிரித்த வேற்றின உயிர்களையும்
என் மீதே நான் கொண்ட ஜீவகாருண்ய உணர்வையும்
உலகையே வெறுத்த வெற்றிட நேரத்தையும்
கண்ணால் அவளை காதலித்த அவ்விரு நொடிகளையும்
நினைவுகளாய் நாணெடுத்து உடலின் மேல் அம்பெய்ய
தனதாக்கிக் கொள்கின்றது ஒட்டைக் கொண்ட சிறுமூளை.

புணர்ச்சியின் போர்முடிவில்
இறந்த என்னின் எல்லா நினைவுகளையும்
கோர்க்கும் தருணத்தில்
கானகத்தால் நிறைந்த
என்னுலகை உற்றுநோக்க
நானல்லாத அவ்வுலகில்
எனைபோன்ற சாயைகள்
மறுமையென மாட்சிமை புரிய
என்னிடமே நான் ஆனேன்
மகத்தான சிறைக்கைதி.

தப்பித்தலின் குணம் பரவ
கானகத்தின் இடுக்குகளில்
கண்ணாடி மரங்களின் பின்னே
ஒளிந்து ஒளிந்து நடமாடி
காலத்தின் சிதைவுகளில் நினைவுகளை கசியச்செய்து
என்னுருவை நான் காண
எத்தனை நாள் தேய்வேனோவென்று
நிஜமான நிழல் துரத்த
பொய்யான பிம்பத்தை பின்தொடர்ந்து
காரணமறியா சினத்துடன் ஓடுகிறேன்

அஃதோர் கானகத்தில். . ."


பின் குறிப்பு : இந்தக் கவிதையை நானே மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். முடிவற்று வெறும் வார்த்தைகளாக என்னுள் நீட்சியை கொண்டிருக்கிறது. இன்செப்ஷன் படத்தில் டி கேப்ரியோவுடன் ஒரு பெண்(இரண்டாவது கதாநாயகி) காபி கடையில் அமர்ந்து செய்யவிருக்கும் வேலையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பாள். அப்போது எதிர்பாராத வண்ணம் நாயகன் அவளிடம் we are in a workshop என்பான். அஃதாவது நாம் கனவினுள் இருக்கிறோம் என. அப்படி உங்களிடம் சொன்னால் எப்படி இருக்கும் ? யூகிக்க முடிகிறதா ? அதே உணர்வை தான் கவிதை எனக்கு கொடுக்கிறது. Am I in dream ?

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக