கதைசொல்லிகளினூடே கதைசொல்லி

சமீபத்தில் தான் தமிழவன் நடத்தும் சிற்றேடு இதழில் என்னுடைய சிறுகதை வெளிவந்திருந்தது. அந்த கதை சார்ந்து தமிழவன் மட்டுமே என்னிடம் பேசியிருந்த தருணத்தில் தான் அழைப்பொன்று வந்தது. அவர் பெயர் க.முத்துகிருஷ்ணன். தமிழவனின் மாணவர் என்றே என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார். பேச்சினூடேயே என்னால் அவருக்கு இருந்த வாசிப்பு ஞானத்தை உணர முடிந்தது. இதில் முக்கிய குறிப்பு என் கதை சார்ந்து பேசியதால் புகழ்கிறேன் என்று எண்ண வேண்டாம். என் குணமும் அப்படிப்பட்டது அல்ல. அவர் ஆரம்ப காலகட்டத்தில் கவிதைகளை எழுதி பின் அரசு வேலைகளின் பளுவால் சில காலம் இலக்கியம் பக்கம் புலன் சாய்க்காமல் இப்போது எழுதி கொண்டிருக்கிறார் என்பதை அறிந்தேன். அவரின் நூல்கள் சிலவற்றை எனக்கு அனுப்பியிருந்தார். அங்கு எனக்கு கிடைத்ததோ முழுக்க முழுக்க ஏமாற்றமே.

இத்தளத்தின் வழக்கத்தின் படி எட்டிப்பார்த்தால் என்னை ஈர்க்காத எந்த ஒரு நூலையும் நான் எழுதியதில்லை. இலக்கிய வாசிப்பே குறுகிய வட்டத்தில் இருக்கும் போது அந்த வட்டத்திலிருந்து என் புரிதலில் இருக்கும் தவறுகளை கண்டறிய வாசிப்பனுபவங்களை பதிவுகளாக கட்டுரைகளாக உருமாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்த கட்டுரைகள் எல்லாம் படைப்பு சார்ந்த நிரந்தரமான, நடுநிலையான பார்வைகள் அல்ல. அப்படி எடுத்துக் கொண்டால் அது வாசகனின் பிழையே.


அவர் கொடுத்த நூல்களில் முதலாக நான் வாசித்தது “கதையல்லாத கதை” என்னும் நாவல்.  தமிழ் இலக்கியத்தின் கதைசொல்லி தளத்தை கவனித்தால் யதார்த்தவாத கதைகளின் ஆதிக்கத்தை நன்கு உணரலாம். நாம் எளிதில் பச்சாதாபப் படக்கூடியவர்கள். இந்த தன்மையை தான் பெரும்பாண்மையான இலக்கியங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையிலிருந்து சிறிய கூட்டம் வித விதமான முறைகளில் கதைகளை சொல்லப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் வெற்றியடைந்தார்களா என்பது சந்தேகத்தின் பார்ப்பட்டது தான். காரணம் வாசிப்பவனுக்கு கதை வேண்டுமே ஒழிய கதையை அடையக்கூடிய வழிகள் அல்ல. மாற்றுக் கதைசொல்லல் முறைகள் இதையே மேம்படுத்தி காட்டின. இதனுடன் தான் பின்நவீனத்துவம், மெடா ஃபிக்‌ஷன், நான்-லீனியர் என்று பெரும் பெரும் களங்கள் தமிழில் பெரும்பாண்மையாக உருவாக ஆரம்பித்தன.

மனித மனம் எப்போதுமே சிதறுண்டு கிடக்கிறது. காலையில் எழுந்து கொள்வது முதல் இரவு உறங்கும் வரை நாம் ஒருமுகமாக இருக்கும் தருணங்கள் சிறிதளவிலேயே இருக்கின்றன. இந்த நிலையில் பிரதியில் மட்டும் எப்படி நம்மால் நேர்க்கோடான கதையை சொல்ல முடியும் ? சமகாலம் முழுக்க அவசரங்களால் நிரம்பியிருக்கிறது. இந்த அவசரத்தில் உருவாகும் எழுத்துகளில் சிரத்தை என்பது அதிகமாக தேவைப்படுகிறது.(என் பலவீனத்தையும் சேர்த்தே இந்த வரியை சொல்லியிருக்கிறேன்!) அது இல்லாத பட்சத்தில் பிரதியில் வாசகன் முக்கியமாக எதிர்பார்க்கும் சுவாரஸ்யம் காணாமல் போய்விடும்.

அனுபவமும் மொழியும் தான் படைப்பை உருவாக்குகிறது. இரண்டில் ஒன்றை செழுமையாக பெற்றிருந்தாலும் அந்த ஒரு விஷயத்தை உலகளாவிய விஷயமாக மாற்றுவதில் தோற்றுப் போகிறார்கள். இந்த தோல்வியை மக்கள் எளிதில் புறந்தள்ளிவிடுவார்கள். அவர்களுக்குள்ளே இருக்கும் செழுமையும் மறக்கடிக்கப்பட்டுவிடும். இந்த மறக்கடித்தலின் லிஸ்டில் ஒருவராய் இருப்பவராகத் தான் க.முத்துகிருஷ்ணனைக் காண்கிறேன்.

கதையல்லாத கதை நாவலில் இருக்கும் கட்டமைப்பை கொண்டாடிய ஒரே காரணத்தால் தான் இப்பதிவை எழுதி கொண்டிருக்கிறேன். மெடா ஃபிக்‌ஷனின் பிரதான கோட்பாடு எழுதி கொண்டிருக்கும் எழுத்தாளன்(அ)கதைசொல்லி நாவலினுள் நுழைந்து வாசகனை வெளியேற்றுதல். அத்தருணங்கள் எல்லாம் வாசகனுக்கும் கதைசொல்லிக்கும் இடையே நிகழும் பனிப்போர். இந்த பனிப்போரை வாசகனுக்கும் நாவலின் கதாபாத்திரத்திற்கும் இடையே மாற்றியிருக்கிறார். இரண்டே கதாபாத்திரங்கள் தான் நாவல் முழுக்க பேசிக் கொண்டிருக்கிறது. நாவல் இரண்டு பாகங்களாக பிளவுண்டு முதல் பாகம் முழுக்க ஒரு கதாபாத்திரம் சொல்லும் கதைகளும், இரண்டாம் பாகம் முழுக்க மற்றொரு கதாபாத்திரம் சொல்லும் கதைகளும் என நீண்டு செல்கிறது. பிளவுண்டு கிடக்கும் பல்வேறு கதைகளை ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார். இந்த இரண்டு பாத்திரங்களும் எப்படி இருக்கின்றன எனில் ஒன்று இல்லாத நிலை. இறந்துபோய் இல்லாத இடத்திலிருந்து தோன்றும் metaphysical state. மற்றொன்று சாமான்ய மனிதன். இந்த இருவரிடையே நிகழும் உரையாடல்கள் தான் இந்த நாவல்.

இந்த நாவல் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த கட்டமைப்பை வெகு அழகாக கையாண்டிருக்கும் ஆசிரியர் அதனுள் பொருந்திச் செல்லும் விஷயங்களுள் கோட்டைவிட்டதன் சூட்சுமத்தை கிஞ்சித்தும் யோசிக்க முடியவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்தின் ஊடேயும் அவர் சொல்லும் விஷயங்கள் எல்லாம் நீதிக்கதைகளாக இருக்கின்றன. சில கதைகள் வாசிப்பில் அழகாக இருந்தாலும் எதுவுமே ஆழம் நோக்கி செல்லாமல் மேலோட்டமாகவே முடிந்துவிடுகிறது. நீதி போதனைகளாக பக்கங்கள் கடந்து சென்றுவிடுகின்றன. கடினமான கட்டமைப்பை மிக எளிதாகவும் அழகாகவும் கையாளத் தெரிந்த ஒருவர் ஏன் இந்த இலக்கிய துரோகத்தை இழைத்திருக்கிறார் என்பதே என்  பிரதான கேள்வியாக அமைந்தது. அதே போல நாவலில் இருக்கும் வசனங்கள். நாவல் முழுக்கவே வர்ணனைகளற்ற வசனங்கள் தான். இந்த வசனங்கள் ஆரம்பத்தில் பேச்சு வழக்கில் கொண்டு சென்று பின் புராணக் கதைகளைப் போல எழுத்து வழக்கில் தடம்மாறிச் சென்றது செயற்கைத் தனத்தையே அதிகப்படுத்திற்று. இவ்விஷயங்கள் எழுந்த அதே சமயத்தில் அனுபவத்தில் இருக்கும் செருக்கைப் போல புனைவுலகிலிருக்கும் பிரக்ஞை அவருள் உருவானால் நிச்சயம் இவரின் படைப்பு வாசகனை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து செல்லும் என்னும் நம்பிக்கையை அளித்தது. என்ன இதே விஷயம் அவருக்குள்ளும் தோன்றினால் நன்றாக இருக்கும்!!!

இக்குறும்பதிவுடன் இந்நாவல் சார்ந்து முடித்துக் கொள்கிறேன்.

பின் குறிப்பு : க.முத்துகிருஷ்ணன் என்று நல்லதொரு நண்பர் கிடைத்தார்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக