உணர்வுகளால் கட்டப்பட்ட மதில்கள்

இலக்கியமும் சினிமாவும் கலை ரசனை இருப்பவனிடத்தில் மறுதலிக்க முடியாத அங்கமாக இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு நாவலைப் போல சினிமா வருவதில்லையே என்று இலக்கிய உபாசகர்கள் நிறைய பேர் சொன்னதுண்டு. அது உண்மையாகவே இருந்தாலும் கூட நாவலில் எதையுமே நாம் வெளிப்படையாக தர வேண்டும் என்று அவசியமில்லை. புலன்கள் அறியக்கூடிய கதைகளை ஒரு நாவல் கொடுப்பதில்லை. மாறாக வாசிப்பு அவனுள் சென்று செய்யும் சேஷ்டைகளே கதைகளாக உருக்கொள்கின்றன. இந்த தன்மையை ஒரு இயக்குனர் வாசிக்கும் நாவலில் இனம் கண்டுகொண்டு அதை திரைப்படமாக்க முயன்றால் அது எப்படி சாத்தியப்படும் ? எல்லா நாவல்களுமே மறைபொருளாக பலவற்றை கொண்டே இயங்குகின்றன. இந்த மறைபொருட்களுக்கு காட்சி வடிவம் கொடுப்பது இயக்குனர்களுக்கு கைவந்த கலை தான். ஆனால் மறைபொருளாக வாசகனுக்கு வாசிப்பின்பத்தை கொடுத்த ஒரு விஷயத்தை காட்சியிலும் அப்படியே எப்படி காட்டுவது ? இங்கே தான் நாவல் சினிமா ஆவதன் அடிப்படை தடையை உணர்கிறேன்.

மேலும் இந்த இணையத்தில் நான் அதிகமாக சிலாகித்த விஷயம் தன்னிலையிலிருந்து கதையை கூறும் தன்மை. தன்னிலையிலிருந்து கதை கூறும் தருணத்தில் கதைகள் வாசகனுக்கு மிக அருகாமையில் செல்ல ஆரம்பிக்கின்றன. இந்த அருகாமை சில நேரங்களில் வாசகனாகவே கூட உணரப்படுகிறது. நான் என்று கதை சொல்லப்படும் போது இணக்கம் அதிகமாக இருந்தால் நானாகவே ஏன் இருந்திருக்கக் கூடாது என்று தன்னையே கற்பனை செய்து கொள்கிறான் வாசகன். சில நேரங்களில் எழுதும் எழுத்தாளனாகத் தான் இருக்க வேண்டும் எனும் முடிவிற்கும் வருகிறான். இந்த ஊசலாடலைநான்என்னும் வார்த்தை தான் அளிக்கிறது. இந்த உணர்வை எப்படி சினிமாவாக்குவது ?

இந்த சின்ன சின்ன கேள்விகள் எப்போதும் இருந்து கொண்டே தான் வருகிறது. இதற்கான பதிலைப்போன்றதொரு கட்டுரையை வாசிக்க நேர்ந்ததால் தான் இப்போது பகிர்கிறேன். எல்லா நாவல்களிலும் முன்னிணைப்புகள் பின்னிணைப்புகள் என சில பக்கங்கள் இருக்கும். இந்த இணைப்புகள் எக்காரணத்தைக் கொண்டும் நாவலின் இன்பத்தைத் தாண்டிய விஷயங்களை தரக் கூடாது. அதன் பிரதான வேலை நாவலில் இருக்கும் உணர்வை நுட்பமான சிலாகிப்புகளின் மூலம் மேன்மை படுத்தவேண்டும். அநேக நூல்களில் இந்த தன்மையை நாம் இழக்க நேரிடுகிறது. அப்படி இழக்காமல் மிக நேர்த்தியாக செய்யப்பட்ட நூல் தான் வைக்கம் முகம்மது பஷீரின்மதில்கள்”.


செய்யப்பட்ட நூலா ? ஆம். நாவல் மொத்தமாக பார்த்தால் நாற்பது பக்கங்கள் தான். அதனிடையேயும் ஓவியங்கள் இடம்பெறுகின்றன. இதன் முன்னினைப்பாக வரும் சுகுமாரனின் முன்னுரையே நாவலை வாசிக்க தூண்டிவிடுகிறது. நாவலில் இருக்கும் மறைபொருட்களை வெளிப்படையாக கூறாமல் அந்த மறைபொருளை கண்டுகொள்ளும் போது கிடைத்த அனுபவத்தை மட்டுமே கூறியிருக்கிறார்.

அதே போல் தான் இருக்கும் இரண்டு பின்னிணைப்புகளும். ஒன்று அடூர் கோபாலகிருஷ்ணனின்வாக்கும் நோக்கும்என்னும் கட்டுரை. இந்த கட்டுரை மதில்கள் நாவல் திரைப்படமாக மாறும் போது ஏற்பட்ட சிக்கல்களை தெளிவாக பேசுகிறது. நாவலில் இருக்கும் வெளிக்காட்ட முடியாத சின்ன சின்ன விஷயங்களை எப்படி சினிமாவில் காட்டுவது என்று ஏங்கும் கலை ரீதியான ஆதங்கமும் அந்த சின்ன விஷயங்களை இயக்குனராய் வியந்து பாராட்டும் கட்டுரையும் வாசிக்கவே கலானுபவத்தை கொடுக்கிறது.

அதே போல இந்த நாவல் பழவிள ரமேசன் எழுதியமதில்களின் பணிமனைஎன்னும் கட்டுரையின் மூலம் முழுமை பெறுவதாக உணர்கிறேன். மதில்கள் நாவல் உருவானதன் பிண்ணனியை அழகான சிறுகதையைப் போல கொடுத்திருக்கிறார். அவர் பஷீரின் அருகாமையிலேயே இருந்து அவரின் இந்த இயக்கத்தை கண்டிருக்கிறார். அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை அப்படியே கட்டுரையாக்கியிருக்கிறார். பஷீரின் எழுத்து முறை, அவர் மேல் இருந்த மரியாதை, அவரை அணுகிய விதம், இலக்கியத்திற்காக அவர் தனக்குள் ஆழ்ந்து இறங்கி கதைகளை தேடிய விதம் என்று வாசிக்கும் போதே பஷீர் இருந்த அதே ஹோட்டலில் அருகிலேயே அமர்ந்திருக்கும் உணர்வை தருகிறது.

இவையெல்லாவற்றையும் சொன்ன பின்னர் தான் நாவலுக்குள்ளேயே என்னால் வர முடிகிறது. உலகத்தையே சிறைச்சாலையாக மாற்றினால் உள்ளே இருக்கும் சிறைச்சாலைகளை என்னவென்று சொல்வது ? அந்த சின்ன சிறைச்சாலைக்கும் பெரிய சிறைச்சாலைக்கும் இடையே இருக்கும் நூதன தடுப்புச்சுவர் அல்லது மதில்கள் என்ன ? எத்தனை பேர் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் செல்ல சித்தமாக இருக்கிறார்கள் ? செல்லும் போது அவர்களின் மனம் எப்படி இருக்கும் ? செல்வதற்கு முன் அவர்கள் இருந்த சிறைச்சாலையின் வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருந்திருக்கும் என்று சகலத்தையும் நாற்பது பக்கங்களுக்குள் அடக்கியிருக்கிறார்.

நாவலில் நாயகன் பெயரே பஷீர் தான். சிறையில் இருக்கும் அவனுக்கு அங்கிருக்கும் மதில் ஒன்று தெரியப்படுகிறது. அறிந்திராத விருப்பம் கொள்ளும் சுகந்தம் ஒன்றும் அவனை சீண்டுகிறது. அந்த சுகந்தம் பெண்ணின் சுகந்தம். மதில்களுக்கு பின்னே இருப்பது பெண்களின் சிறைச்சாலை. அங்கிருந்து அவனுடன் பேசும் நாராயணீ என்னும் பெண். இருவருக்கும் இடையே ஏற்படும் காதல். பஷீரைத் தவிர உடன் வந்த நண்பர்களெல்லாம் வெளியே போக பஷீர் உள்ளேயே இருந்து காதல் வயப்படுகிறார். இந்த காதலின் நிலை என்னவாகிறது என்பதில் கதை முடிகிறது.

சிறைவாழ்க்கை சார்ந்து எத்தனையோ க்ளாஸிக்குகளை இந்த உலகம் கண்டிருக்கிறது. இந்த நாவல் அதில் தனித்துவம் வாய்ந்தே இருக்கும். அதற்கான பிரதான காரணம் மனித மனதில் இருக்கும் குற்றவுணர்வுகளை மேலெழுப்பி மனிதத்தை மாற்ற வேண்டிய சிறைச்சாலை பல கடினமான உத்திகளை கையாள்கின்றன. கிட்டதட்ட மனிதனுக்கான போர்க்காலங்கள். இந்த காலங்களை பகடியுடன் மட்டுமே கொடுத்திருக்கிறார் பஷீர். நாவலில் ஒரு இடத்திலும்(கடைசியைத் தவிர) பச்சாதாபத்தையோ உணர்வின் முரணையோ கொடுப்பதில்லை. மாறாக நகுலனின் எழுத்து போல பிரவாகமாக செல்லும் வார்த்தைகள். அதனுள்ளே சின்ன சின்னதாய் ஒளிந்து கொண்டிருக்கும் கதைகள் என்று நாவல் நீள்கிறது. அந்த சிறைச்சாலையின் இன்பமான அனுபவங்களை மட்டுமே பஷீர் சொல்லி செல்கிறார்.

கண்களுக்கு புலனாகும் மதில்களை வைத்து புலனாகாமல் உலகை சூழ்ந்து கொண்டிருக்கும் மதிலை கணக்கிடும் விஷயம் வாசிக்கும் போது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. மதில்களை கடப்பது எந்த ஒரு காலத்திலும் சுலபமாக இருக்கப் போவதில்லை என்பதை நூதனமாக சொல்கிறார்.

நாராயணீக்கும் பஷீருக்கும் இடையே இருக்கும் பேச்சுகளின் நிர்வாணம் வாசிப்பதற்கு ஆனந்தமாய் இருக்கிறது. இருவரும் வெள்ளந்தியான மனிதர்கள். ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. அப்படியெனில் அதிகபட்சமாக அறிந்தி கொள்ள தம்மால் செய்ய முடிந்தது வார்த்தையால் தன்னை நிர்வாணப்படுத்திக் கொள்வது. அப்போது தான் குறைந்தபட்சமேனும் தன்னை மதிலுக்கு பின்னே இருக்கும் மனிதனிடம் காட்டிக் கொள்ள முடியும். இந்த உணர்வை அந்த வசனங்கள் தந்து கொண்டே தான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக நான் இரவு சென்று அழுவேன் என்று நாராயணீ சொல்கிறாள். தொடர்ந்து அதையே சொல்கிறாள். ஒரு முறை பகலில் பஷீருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அழ வேண்டும் போலிருக்கிறது என்கிறாள். அதற்கு பஷீர் சொல்லும் வார்த்தை இரவு சென்று அழுதுகொள். அழுகையை மொழியாக்க இந்த ஒரு வசனம் போதுமே! நாராயணீயின் இருத்தலை மதில்களுக்கு பின்னேயே தன் மொழியால் வைத்திருக்கிறார் பஷீர்.

நாவலின் ஓவியங்களையும் சொல்லியே ஆக வேண்டும். சின்ன சின்னதாக இடம்பெற்றிருந்தாலும் கதையின் முக்கிய விஷயங்களை தெளிவாக அழகாக சொல்கின்றன. நாவலின் அட்டைப்படத்தையே நாவலை முடித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மதில்கள் என்னும் பெயர் இடம்பெற்றிருக்கும் இடத்தில் பெண்ணொருத்தி படுத்திருக்கிறாள். நிர்வாணமாகவும் இருக்கலாம், ஆடை அணிந்தும் இருக்கலாம். படத்திலோ அவள் ஒரு நிழல். கீழே ஒரு மனிதன். அவனின் முகம் தெளிவாக தெரிவதில்லை. Sketch ஆக மட்டுமே அந்த ஆணின் உருவம் இருக்கிறது.

இப்போது என் கேள்வி இதைவிட அம்சமானதொரு அட்டைப்படத்தை யோசிக்க முடிகிறதா ?

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக