எங்கே இருக்கிறாய் எனதருமை ஜூலிதா. . .

சாரு நிவேதிதாவின் கட்டுரை நூல்களை வாசித்து அதன் மூலமும் பிற எழுத்தாளர்களின் பரிந்துரைகளின் மூலமும் வாசிக்க வேண்டும் என்று எனக்குள் பட்டியலிட்டு வைத்திருக்கும் எழுத்தாளர்கள் அநேகம் பேர். ஒன்று மட்டுமே எனக்கு நிதர்சனமாய் தெரியும், அந்த எல்லோரையும் இந்த ஆயுள் முடிவதற்குள் நிச்சயம் வாசித்துவிட முடியாது. என்னிடம் இளங்கோ கிருஷ்ணன் ஒருமுறை சொன்னதுண்டு ருஷ்ய இலக்கியத்தை வாசிப்பதாக இருந்தால் முழுக்க வாசித்து முடித்து கடந்து பின் லத்தின் அமேரிக்காவினிற்குள் நுழை என. நல்லதொரு அறிவுரை தான். என்னால் அதை பின்பற்ற முடியாது. நான் வாசிப்பில் பிரித்து சம்மந்தமற்ற கதையாடல்களைக் கொண்ட நூல்களை தொடராய் வாசிக்க ஆசை கொள்பவன். என் மூளை குழம்பிய நிலையில் இருக்கும் வரை தான் இலக்கியம் என்னிடம் செல்லுபடியாகும், அது யார் எழுதியிருந்தாலும் சரி. இந்த இளங்கோ தான் யோசா சார்ந்த தேடலை என்னுள் சாருவினுக்கு அடுத்தபடியாக விதைத்தவர்.

மரியா வர்கஸ் யோசா பெரூ தேசத்து எழுத்தாளர். அவரின் நூல்களை எப்படியேனும் வாசித்துவிட வேண்டும் என்று இருந்தேன். ஆங்கில நூல்களின் விலைப்பட்டியல் என் பாக்கெட்டினுள் அடக்க முடியாததாய் செல்லும் பட்சத்தில் கனாவாக மட்டுமே அதை கண்டுகொண்டிருந்தேன். இந்த நிலையில் தான் இளங்கோ யோசா நாற்பது ரூபாய் எழுத்தாளர் என்றார். என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பெருங்களூரு சென்ற சமயத்தில் எம்.ஜி.ரோட்டில் நாற்பது ரூபாய்க்கு யோசாவின் நூல்களை சாலையோரம் விற்றுக் கொண்டிருந்தர்களாம்! என்னே ஒரு சுவாரஸ்யமான செய்தி. நான் பெங்களூரு சென்ற சமயம் புத்தாண்டை நெருங்கியிருந்த காலம். எம்.ஜி ரோட்டின் வழியேயும் அங்கிருக்கும் கடைகளுள்ளேயும் மௌனமாய் தேடிக் கொண்டேயிருந்தேன். நாற்பது ரூபாய் யோசாவை என்னால் கண்டு கொள்ளவே முடியவில்லை! அதன் பிறகு நற்றிணை நாவல் போட்டியில் வென்ற காசில் தான் இரண்டு யோசாவின் நாவல்களை வாங்கினேன்.

கல்லூரி ஆரம்பித்ததிலிருந்து வாசிப்பதற்கு எனக்கு நேரம் கிடைப்பதில்லை. வாசிக்காமல் அமைதியாக இருக்க என் மனம் பழக்கப்படவில்லை. எதையேனும் வாசித்துவிடு, கொஞ்சமாவது மனதை ஏதோ ஒரு வகையில் வருடும் பத்தியையாவது வாசித்துவிடு என்று கெஞ்சுகிறது. இப்போது ஆசுவாசமாய் இருப்பதெல்லாம் கல்குதிரை சிற்றிதழ் தான். ரமலான் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்து நாவல் ஒன்றை வாசிக்க ஆரம்பித்தேன். ஆற்றாமையை கடந்து காதலியை பார்க்கும் ஸ்பரிஸமே என்னுள் வாசிப்பு ஏற்படுத்திற்று. அப்படி யோஸா எனக்கு அறிமுகப்படுத்திய காதலி Aunt Julia!

***


Aunt Julia and the Scriptwriter மரியா வர்கேஸ் யோசாவின் ஐந்தாவது நாவல். யோசாவின் எல்லா நாவல்களுமே அளவில் பெரியவை. அளவில் பெரிதாக எழுதும் எல்லோரிடமும் எனக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். எப்படி கதைகள் இவர்களுக்கு தோன்றிக் கொண்டே இருக்கின்றன என்று. இதை யாரையும் மெனெக்கெட்டு குறிப்பிடும் விஷயமல்ல. இதே கேள்வி தான் இந்த ஒரு நாவலை வாசிக்கும் போதே யோசா சார்ந்து என்னுள் எழுகிறது. பத்தொன்பது நாவலை எழுதியிருக்கிறார் என்றால் அவருக்குள், உருவாகும் கதைகளின் எண்ணிக்கைகளை கணக்கிட முடிகிறதா ? இந்த ஒரு நாவலுக்கான கதை மட்டும் என்வசம் இருந்திருந்தால் இருபது நூறுபக்க குறுநாவல்கள் ஆக்கியிருப்பேன். இவ்வார்த்தை என் கர்வம் சார்ந்து இருப்பது போல தோன்றினாலும் இதன் பின்னே இருக்கும் கேள்வி யோசாவால் இத்தனை கதைகளை, பொதுவாக வாசகனை வெறுப்படையச் செய்யும் நான்லீனியர் எழுத்துமுறையை எப்படி வசீகரம் மிக்கதாக மாற்றமுடிந்தது என்பதே. அவரின் எல்லா நாவல்களையும் வாசித்தாக வேண்டும் என்று என்னுள்ளே எண்ணம் தோன்றியுள்ளது. ஆயுள் முடிவதற்குள் இதை என்னால் நிச்சயம் செய்ய முடியும் என்பதில் எனக்கு திடமான நம்பிகையும் இருக்கிறது.

வேறு ஒரு நாட்டின் இலக்கிய பிரதியை அணுகும் போது நமக்கு எப்போதுமே ஒரு அந்நியத்தன்மை இருந்து கொண்டேதான் இருக்கும். இந்த அந்நியத்தன்மை நாம் வாழும் சூழலால் உருவாக்கப்பட்டது. இதழ் முத்தத்தையே நாம் ஆபாசத்தின் ஆரம்பமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஸ்கர்ட் ஆபாசம், முட்டிக்கு கீழ் தெரிந்தால் காமம் என்ற நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் பிற நாட்டின் பழக்க வழக்கங்கள் நம்மை ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. நாம் பிற நாட்டு கலாச்சாரத்தின் முன்னே பார்வையாளராய் மட்டுமே இருக்கிறோம். அங்கே சென்று வாழ வேண்டும் என்னும் எண்ணம் அல்லது என்ன இப்படியெல்லாம் மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்னும் பரிதாபமே நம்மிடம் மிஞ்சுகிறது.

இந்த இரு வேறு நிலையில் ஏதோ ஒன்றை அடைவதற்கு வேறொரு நாட்டை நாம் அறிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. சுற்றுலா தளங்களுக்கு செல்வது மூலம் நம்மால் ஒருக்காலும் நட்டைப் பற்றி அறிந்து கொள்ள முடியாது. அறியும் விஷயங்கள் எல்லாம் படிப்பினை சார்ந்தே இருக்கும். அந்த இடத்தின் மக்களுடன் இணைந்து செல்லும் சிறிய நடை பயணம் கூட குறுகிய கலாச்சார வரலாற்றை நமக்கு சொல்லிக் கொடுக்கும். அதைத் தான் இலக்கியங்கள் செய்திருக்கின்றன. உலக இலக்கியங்கள் மக்கள் இந்த உலகத்துடன் எப்படியெல்லாம் காலத்திற்கேற்ப மாற்றம் கொண்டு மாறி இயைந்து வாழ்ந்தார்கள் என்பதை குறிப்பிடுகின்றன. அப்படி ஒரு இடத்தின் கலாச்சார வரலாற்றை தான் இந்த நாவலும் பேசுகிறது.

வாசிப்பில் பாதி கடந்த பின்னும் கூட சந்தேகமொன்று இருந்து கொண்டே வந்தது. இவ்வளவு எளிதாக என்னால் லத்தின் அமேரிக்க வாழ்க்கையையும் சராசரி இந்தியனது வாழ்க்கையையும் இணைக்க முடிகிறதே எப்படி என. யோசா உருவாக்கும் புதினம் முழுக்க சாதாரணத்துவம் வாய்ந்தவை. ஆனால் அதன் ஆழத்தில் இருக்கும் சின்னதான கரு முழுக்க முழுக்க transgressive தன்மை நிரம்பியது. இந்த நாவலில் வரும் காதல் நயம்மிகு வசனங்கள், அதற்காக செல்லும் பயணங்கள், போலீஸ், கள்ளத் தொடர்புகள், அதனால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள், அதைத் தவிர்த்து நிகழும் பிரச்சினைகள், சுற்றியிருக்கும் மாகாணங்களில் இருக்கும் சின்ன சின்ன சம்பவக்கதைகள் என நாவல் முழுக்க எளிதில் தொடரக்கூடிய சம்பவங்களாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் நாவலில் இருக்கும் பெரிய விஷயம் மையக்கதையான காதல் தான்.

நாயகன் டான் மரியா (நாவல் நான் என்னும் தன்னிலையிலேயே செல்கிறது) ஆண்ட் ஒல்கா வீட்டிற்கு செல்கிறான். அங்கு ஒல்காவின் தோழி ஜூலியா விடுமுறைக்காக வந்திருக்கிறாள். அவள் சமீபமாகவே விவாகரத்து வாங்கியவள். ஒருமாற்றத்திற்காக சொந்தக்காரர்களுடன் தங்கலாம் என்று வந்திருக்கிறாள். அவளின் வயது முப்பத்தி இரண்டு. நாயகனின் வயது பதினெட்டு. பானமேரிக்கானா என்னும் ரேடியோவில் செய்தி வாசிப்பாளனாக இருக்கிறான். இவனுக்கு ஜூலியாவின் மீது காதல் வருகிறது. இந்த காதல் எங்கெங்கு செல்கிறது என்பதை சிறிதும் நம்மை அசையவிடாமல் காதல் ரசம் சொட்டும் காட்சிகளுடனும் வசனங்களுடனும் இருக்க வைக்கிறார்.

நாவல் இருபது அத்தியாயங்கள். அதில் பதினோரு அத்தியாயங்கள் தான் இந்த காதல் கதை. மீத ஒன்பதும் சம்மந்தமில்லாத வெவ்வேறு கதைகள். இங்கு தான் யோசா எழுத்தில் இருக்கும் தந்திரங்களை மிக அழகாக கையாள்கிறார். நான்-லீனியர் எழுத்துமுறை எப்போது வேண்டுமென்றாலும் வாசகனின் ஈர்ப்பிலிருந்து சென்று விடலாம். அதை நிறுத்தி வாசகனுக்கு சுவாரஸ்யத்தை கொடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அதை எழுதும் எழுத்தாளனிடத்தில் இருக்கிறது. இந்நாவலில் சொல்லப்படும் ஒவ்வொரு கதையும் மிக விரிவான, முன் சொன்ன கதைக்கு சம்மந்தமில்லாத கதைகளை கொண்டிருப்பவை. எந்த ஒரு இடத்திலும் அவை ஒன்று சேர்வதில்லை. அதே சமயம் எந்த ஒரு கதையும் முடிவை கொண்டிருப்பதில்லை.

இந்நாவல் எவ்வளவு தூரம் லிமா என்னும் இடத்திலிருக்கும் இந்த காதல் ஜோடியின் பயணங்களையும் அங்கிருக்கும் வெவ்வேறு மக்களையும் பேசுகிறதோ அதே அளவு எழுத்தாளர்களைப் பற்றியும் பேசுகிறது. 1950இல் கதை நிகழ்கிறது. அப்போது ரேடியோ மட்டுமே அம்மக்களின் ஒரே பொழுது போக்கு. அதிலும் குறிப்பாக ஒலிபரப்பாகும் நாடகங்கள். இந்த நாடகங்களுக்காக மக்கள் தினம் தினம் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். மரியாவிற்கு இலக்கிய பரிச்சயம் உண்டாதலின் நூலிற்கும், ரேடியோவில் சொல்லப்படும் கதைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று ஆய்கிறான். மக்களிடம் பேசுகிறான். தொடர் நாடகங்களை விரும்பி விரும்பி பார்க்கும் சொந்தகாரர்களிடமும், தன்னுடன் வேலை செய்பவர்களிடமும் கேட்கிறான். எல்லாமே தர்க்கங்களாக நாவலில் வருகிறது.

இவனுடன் வேலை செய்யும் நண்பன் பெட்ரோ கமாச்சோ. அவன் பொலிவிய நாட்டை சேர்ந்த நாடகாசிரியன். ஆனால் வேறு யாரினது கதைகளையும் வாசிக்க மாட்டான். அவனின் எழுத்துவாழ்க்கையை முழுமையாக இந்நாவல் பேசுகிறது. கதைக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கும் ஒருவன் எப்படி அக்கதைக்குள் தொலைந்து போகிறான், பித்தனாகிறான், மக்களிடையே குழப்பத்தை விளைவித்துவிட்டு தான் யார் என்றே தெரியாமல் எப்படி எழுத்தாளன் மாறுகிறான் என்பதை உணர்ச்சிப் பூர்வமாக காட்டியிருக்கிறார். கமாச்சோவின் முடிவு கண்களில் கண்ணீரை வரவைத்தன. ரேடியோவில் பேசப்படும் விஷயங்கள் எப்படி கலையாகின்றன அதைக் கலைஞன் எப்படி நியாயபடுத்துகிறான் என்பதை இந்த பாத்திரம் மூலம் மிக அழகாக சொல்லுகிறார். பெட்ரோ கமாச்சோவிடம் கேட்கும் கேள்வியும் அவனின் பதிலையும் பாருங்கள், எல்லா கலைஞனையும் ஒரே இடத்தில் பேசும் விஷயம்,

“ ‘Have you had a great many love affairs, an extremely rich love life ?’

‘Yes extremely rich, but I have never loved a flesh-and-blood woman’ ”

பானமேரிக்கானா ரேடியோவில் அவன் தான் நாடகம் எழுதுகிறான். அந்த நாடகங்கள் தான் ஒன்பது அத்தியாயங்களாக நாவலில் வருகின்றன. அவற்றின் கோப்பு இதுநாள் வரை வாசித்ததில் க்ளாஸிக் ரீதியான நான் லீனியர் நாவல் என்றே தோன்றுகிறது. (காரணம் அதனுள் கதாபாத்திரங்களின் பெயர்களினூடாக சின்னதான சூட்சுமத்தை வைத்திருக்கிறார். வாசிக்கும் போது உணர்ந்து கொள்வீர்கள்) இன்று வாசிக்கும் போது இந்நாவலில் இருக்கும் fragmentation, பிரிந்து பிரிந்து இருத்தல் எவ்வளவு சுகத்தை அளிக்கிறதோ அதே சுகத்தை காலத்திற்கும் கொடுக்கும். காரணம் இவர் லிமா என்னும் பிராந்தியத்தின் மக்கள் வாழ்வை பிரித்து கொடுக்கிறார். கற்பழித்தவன் தன்னை நியாயவானாக்க கடவுளை அழைக்கிறான், வேறொரு கதையில் மனைவியையும் குழந்தைகளையும் ஒழுக்கம் சார்ந்தே வளர்க்கிறான் ஆண். அவன் திரும்பும் தருணத்தில் குடும்பம் நிர்வாணத்தை கொண்டாடுகிறது. தட்டிக் கேட்கும் அவனை அடித்து தரைக்கு தள்ளுகிறது குடும்பம். வேறொரு கதையில் போலீஸாரனை மிரட்டும் பேசாத ஆணின் அம்மணமும் அவனை காரணமின்றி கொலை செய்ய தயாராகும் போலீஸ் எனும் நிறுவனமும் என்று எல்லா வித உணர்வின் கீழ்மைக்கும் சென்று வருகிறார். லிமா இடத்தின் சக மனிதர்களுடனான பயணமாகவே இந்நாவல் எனக்கு அமைந்தது. ஜூலியாவின் காதலால் அதிகாரத்தில் இருக்கும் மேயர்களின் அதிகாரத் த்வனியையும் லஞ்சத்தையும் சொல்லியிருக்கும் விதமும் ஆச்சர்யமாகவே இருந்தது. 

ஜூலியாவின் காதலை சொல்லவில்லையெனில் இந்நாவல் எனக்கு கொடுத்த உணர்வை முழுமைக்கும் நிச்சயம் சொல்ல முடியாது. இதுவும் முழுமை இல்லை என்பது சொல்லப்படாத உண்மை. எல்லா மனிதர்களிடமும் பருவங்கள் தேங்கியே நிற்கின்றன. கடந்து போன பின்னும் கூட அதை வேறு யாரேனும் ஒருவர் மீட்டெடுத்தால் அவர்களின் மேல் அச்சம் கொள்கின்றனர். இந்த அச்சத்தின் பின்னே வசீகரம் நிறைந்த காதலும், மீண்டும் மனதால் அப்பருவத்தை வாழவிருக்கும் நொடிகளும் நிரம்பியே இருக்கின்றன. இந்த உணர்வை தான் ஜூலியாவின் பாத்திரம் நாவல் முழுக்க சொல்லிக் கொண்டே இருக்கிறது. நாவலில் ஜூலியா கொடுக்கும் எண்ணற்ற முத்தங்களும் நாயகனை அவள் அழைக்கும் மரீத்தொ வர்கீதாஸ் போன்ற பெயர்களும் கற்பனை பெண்ணின் குரலில் இன்னமும் என் காதில் கிசுகிசுப்பது போலவே இருக்கிறது. ஜூலியாவிற்காக மரியாவின் பதினெட்டு வயது செல்லும் இடங்கள் எல்லாம் காமத்தின் சுவை தெரியாது ஆனால் அறியும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் வழித்தடங்கள். இதன் சுவையை மிக அழகாக நாவல் கொடுக்கிறது. நாவலின் ஆரம்பகட்டத்திலேயே ஜூலியா சொல்லும் வார்த்தைகள் என்னை மெய்மறக்க செய்தன


“The worst thing about being a divorcee isn’t that all men they think they’re oblidged to proposition you, rather it’s a fact that because you’re a divorcee they think there’s no need to be romantic. They don’t flirt with you, they don’t whisper sweet nothings in your ear. They just come straight out with what it is they want from you, right off the bat, in the most vulgar way imaginable. That really puts me off. That’s why I rather go to the movies with you than go out dancing with a man”

ஆரம்பத்தில் அதிகாரத்தின் த்வனி தெரிந்தாலும் ஜூலியாவின் அதிகாரம் இளகும் தருணங்களில் அவள் ஒன்றுமற்றவளாகிப் போகிறாள். மரியாவிடம் தோற்றுப் போகிறாள். அந்த தோல்வியில் தான் ஜூலியாவை எனக்கு பிடிக்கிறது. அதிக பக்கம் வராதது போலவே தோன்றினாலும் என்னுள்ளே ஜூலியா தான் விரவிக் கிடக்கிறாள். புத்தகங்களின் வழியே பேசிய ஜூலியாவுக்காகவேனும் நான் லிமா செல்ல ஆசைப்படுகிறேன். . .

எங்கே இருக்கிறாய் எனதருமை ஜூலிதா. . . . .

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

NAGARJOON said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ACCA Qualifications and Courses | ACCA courses Chennai | Best ACCA training institutes

Post a comment

கருத்திடுக