இருப்பை நிரூபிக்க முனையும் மனிதர்கள்

இனி எனக்குள்ளேயே ஒரு முறையை கட்டாயம் கையாள வேண்டும் என்றிருக்கிறேன். நான்கு தமிழ் நாவலுக்கு ஒரு ஆங்கில நாவலையாவது வாசிக்க வேண்டும் என்று. அது மொழிபெயர்ப்பாக இருந்தாலும் சரி. அவ்விதிப்படியே நற்றிணை கொடுத்த பரிசுத் தொகையில் சில ஆங்கில நாவல்களை வாங்கியுள்ளேன். அதில் வாசித்த ஒரு நாவலைப் பற்றித் தான் எழுத இருக்கிறேன்.

2013 ஆம் ஆண்டு ஸ்விட்ஸர்லேண்டின் ஜான் மிச்செல்ஸ்கி விருதிற்காக இந்தியாவிலிருந்து இரண்டு நூல்கள் கலந்து கொண்டிருந்தன. அந்த விருது கவிதைகள் அல்லாது இருக்கும் இலக்கிய படைப்பாக்கங்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதில் ஷார்ட்லிஸ்டான நாவல்களில் இந்தியாவிலிருந்து சென்ற இரண்டு நூல்களும் இருந்தன. ஒன்று சாரு நிவேதிதா எழுதிய ஸீரோ டிகிரி. மற்றொன்று உதய் ப்ரகாஷ் எழுதிய THE WALLS OF DELHI.இதை நாவல் என்று நினைத்தே வாங்கினேன். பின் தான் தெரிந்தது மூன்று குறுநாவல்களின் சிறு தொகுப்பு. அதை நெடுங்கதை என்றும் கூட சொல்லலாம். இந்நூலின் பிண்ணினைப்பில் இம்மூன்றில் ஒன்றான மோகன் தாஸ் என்னும் கதைக்கு தான் அவர் சாகித்ய அகாதமி விருதும் பெற்றிருக்கிறார் என அறியப்பெற்றேன். அவரைப் பற்றியும் அவருக்கும் இதன் மொழிபெயர்ப்பாளரான ஜேஸன் க்ருன்பௌம் என்பவருக்குமான தொடர்பும் தெரிய வருகிறது. அந்த சந்திப்பு வாசிக்க சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இந்நாவலின் மூல மொழி ஹிந்தி.

THE WALLS OF DELHI

இது தான் இத்தொகுப்பின் முதல் கதை. மூன்றிலும் சிறிய கதை இது தான். முதல் கதையிலேயே எல்லோரையும் ஈர்க்கவும் செய்கிறார். தில்லியின் ஒரு ஃப்ளாட்டில் இருந்து கொண்டு அங்கு தெருவில் இருக்கும் கீழ்தட்டு மக்களை கவனிக்கிறார். பகலில் இருக்கும் தில்லியானது இரவில் அப்படியே மாற்றம் கொள்கிறது என்கிறார். விளிம்பு நிலை மக்களின் துயரங்களை இந்த உலகம் காலம் காலமாக கண்டு கொண்டிருக்கிறது. ஆனால் அந்த நிலை எல்லா இடங்களிலும் ஒன்றாக இருக்கிறது. எல்லாம் ஒன்றோடொன்று பிணைப்புடன் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறார். இது உலகமயமாக்கலின் ஓர் அங்கம். இந்த அங்கமாக சொல்வது யாதெனில் தொலைந்து போகும் மனிதர்களைப் பற்றி தான்.

தினம் காணும் மனிதர்கள் கண் பார்வையில் இருந்து மறைந்து போகிறார்கள். அவர்களை அந்த நகரம் விழுங்கிக் கொள்கிறது. அன்று வரை அவனுடன் பழகிய, கீழ்மட்டத்திலோ மேல்மட்டத்திலோ பழகியவர்கள் யாருமே அவனிருந்ததாக மட்டுமே சொல்கிறார்கள். எங்கு சென்றான் என்பவற்றை அவர்கள் கிஞ்சித்தும் கவலை கொள்வதில்லை. வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டால் அவர் வெளியில் சென்றிருக்கிறார் திரும்பி வருவார் என்கிறார்கள். எது நிறைவேறக் கூடும் என்னும் நம்பிக்கை. மறந்தும் மறைந்தும் போகும் மனிதர்களை காண்பவன் தான் கதையின் பூடக நாயகன் விநாயக் தத்தாத்ரேயா. அவன் தில்லியையே நம்புவதில்லை. காரணம் மறைந்தும் மக்களால் மறந்தும் போகும் மனிதர்களை அந்த தில்லி சுமந்து கொண்டே தான் இருக்கிறது. இது தில்லிக்கு மட்டுமானதுமல்ல. இந்த பூடக நாயகனுக்கே தன் மேல் நம்பிக்கை இல்லை என்பது தான் வேடிக்கை. அவன் சொல்லும் வார்த்தைகளை பாருங்கள்

“one day I’ll be the one to disappear from this little corner of the neighbourhood: it’s a fact. The poor, the sick, the street corner prophets, the lowly, the unexceptional – all gone! They’ve vanished from this new delhi of wealth and wizardy, never to return, not here, not anywhere else. Not even memories of them will remain”

அதே தெருவில் தொலைந்து போகும் ராம்விலாஸ் என்பவனின் கதையை சொல்லுவதே முதல் குறுநாவல். இந்த கதையை சொல்லும் போது முன்னால் அவர் செய்யும் தர்க்கங்களை மறக்கடிக்க செய்கிறார். இவர் எழுதும் கதைகள் மிக ஆழமாக செல்கின்றன. அவ்வளவு தூரம் சமூகத்தில் இருக்கும் அவலங்களை சாடுகிறார். இது எல்லாமே தனி மனிதனின் அவலங்கள் தான். தொலைந்து போனவன் வருத்தம் கொள்வதே இல்லை. பார்ப்பவன் தான் அவன் தொலைந்துவிட்டானே என்று வருத்தம் கொள்கிறான்!

MOHANDAS

இந்தக் கதை முழுக்க முழுக்க பின்நவீனத்துவ கதை. இதை படமாக எடுத்தால் சீட் நுனியில் அமர வைக்கும் த்ரில்லராக, அதே சமயம் தேசியவாத கதையாக அமையக் கூடும். அதற்கு திரைக்கதை அமைப்பில் நிறைய உழைக்க வேண்டும். அவ்வளவு புனைவு நுட்பங்களை இந்நாவலில் வைத்திருக்கிறார்.

கதை தனித்துவமாக நாவலில் தனியாக செல்கிறது. அதை நாட்டு அரசியலுடன் அவர் இணைக்கும் விதம் அற்புதம். அதே நேரம் ஹிந்தி இலக்கியத்தினுள் இருக்கும் கோட்பாட்டு அரசியலையும் உடைத்தெறிகிறார். அப்படி இருக்கும் போது கூட இக்கதையை தனியாகவே காட்ட நினைக்கிறார்.

மூலக் கதையின் சுருக்கம் யாதெனில் மோகன் தாஸ் அவன் வசிக்கும் மத்திய பிரதேச ஊரில் மெத்த(BA) படித்தவன். ஆனால் வேலையில்லை. ஒரு சுரங்கத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கிறான். தேர்வாகிறான். ஆனால் வேலை கிடைக்கவில்லை. போராடியும் கிடைக்காததால் கைவினை பொருட்கள் செய்து பிழைக்கிறான். அப்போது தான் அவனுக்கு தெரியவருகிறது அவன் தேர்வாகியிருக்கிறான். ஆனால் தொழிற்சாலைகளுக்குள் நிகழும் அரசியல் மூலம் அவன் பெயரிலேயே வேறொருவன் அங்கே வேலை செய்கிறான். அவன் வீட்டில் நிலவும் பஞ்சத்தை போக்க தான் தான் மோகன் தாஸ் என்பதை நிரூபிக்க வேண்டும். எப்படி அதை செய்கிறான் என்பதை மிக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.

இந்த இருத்தலுக்கான வேட்கை (வேறென்ன சொல்வது) அவனை மனதளவில் பாதிக்கிறது. எப்படி அவனை பாதிக்கிறது பாருங்கள். எல்லோரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களிடமெல்லாம் தான் யார் தான் யார் என்று கேட்கிறான். எல்லோரும் கேலி செய்கிறார்கள். அவன் கவலையே கொள்வதில்லை. மனதளவில் சொல்கிறான், தேசத்தையே சாடுகிறான். உயர்பதவியில் இருக்கும் எல்லோரும் யார் என்று அவர்களுக்கு தெரியுமா என்று கேள்வியை எழுப்புகிறான். சுயத்தை இழந்து ஒருவன் வாழ்கிறான். அதே தேசத்தில் சுயத்தை இழந்ததால் ஒருவன் தவிக்கிறான் என்னும் இரட்டை தன்மையை மிக சாதுர்யமாக கையாண்டிருக்கிறார். அவனைப் பற்றி சொல்லும் வார்த்தைகளை கவனியுங்கள்,

“the only difference was that he’d found out the secret, whereas rest of them were still in the dark”

புனைவு உத்திகலை கையாண்டிருக்கிறார் என்றேன். நாவல் முழுக்க தனி மனிதனின் சுயம் சார்ந்த தேடலில் செல்கிறது எனில் இடையிடையில் அக்காலத்திய அரசியலை பேசுகிறார். ஒவ்வொரு நாடும் அந்நாட்டின் ஒவ்வொரு மக்களை சார்ந்தும் இருக்கிறது எனில் ஏன் இந்த மனிதனின் கூக்குரலை யாரும் கேட்கவில்லை என்று கேள்விகளை எழுப்புகிறார். அதில் சினிமா இலக்கியம் என்று எல்லோரையும் சாடுகிறார். இந்தியாவின் கவிஞர் நெரூதா என்று பகடியும் செய்கிறார்.

அதே நேரம் நாயகனின் குடும்பத்தில் இருக்கும் எல்லா பெயர்களும் காந்தியின் குடும்ப பெயர்களும் அதே உறவுமுறைகளும் தான். அதை அவர் நியாயப் படுத்தும் விதம் க்ளாஸ். எப்படி என்று பாருங்கள்

“assume that the elephant is the truth. If a poet or a writer tries to hide the animal behind a meagre washcloth, he risks burning his bridges and sinking the boats that ferry him through the journey of life”

MANGOSIL

இது தான் இத்தொகுப்பின் மூன்றாவது கதை. முதல் இரண்டு கதைகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் குரூரங்களை இக்குறுநாவல் காட்டுகிறது. அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களுக்கு அடிபணிந்து மனைவியையே கூட்டி கொடுக்கும் அளவு செல்லும் ஒருவனின் மனைவியின் மனம் எப்படி இருக்கும், அவளின் வாழ்க்கை எத்திக்கெல்லாம் செல்லும் என்பதை விவரித்துள்ளார். ஆனால் இதுவே பிரதான கதையன்று. நரகத்திலிருந்து தப்பிப்பதெல்லாம் சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறார். அங்கிருந்து தப்பித்து அவளுக்கு சந்திரசேகர் என்பவனுடன் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. மூத்த குழந்தைக்கு தலை பெருத்துக் கொண்டே செல்கிறது. அச்சம் அவளுக்கு தலைக்கேறுகிறது. தலையுடன் இணைந்து மூளையும் பெருகுகிறது. வயதை மீறிய அறிவையும் அனுபவத்தையும் கேள்வி ஞானத்தையும் பெற்றுக் கொண்டே செல்கிறான். உடலால் சாதாரண நிலையில் இல்லாத அவன் மனத்தால் எப்படி அவனை உருவப்படுத்த நினைக்கிறான் என்பதை வலியுடன் மிக அழகாக எழுதியிருக்கிறார். மூன்றாவது குறுநாவல் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை வலியையே பேசுகிறது. ஓரிடத்தில் இந்நாவல் எதை பேசுகிறது என்பதை அதன் கதைசொல்லியே சொல்கிறார்,

“when violence permeates everything, and reality has become a nightmare, these creatures carry us into a dream”

இந்நாவலின் எழுத்துமுறை மற்ற இரண்டைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்கிறது. கதையில் ஒரு எழுத்தாளனும் வருவதால் எழுத்து சார்ந்த சாடல்கள், நாயகியின் அவலங்கள், நாயகனின் மென்மைகளும், குழந்தையின் வலிகளையும் மாறி மாறி நம்மை அரவத்தின் ஊர்தலைப் போல இழுத்து செல்கிறார்.

மூன்று நாவலுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அதனால் தான் என் கட்டுரைக்கும் இருத்தலை நிரூபிக்க முனையும் மனிதர்கள் என்று தலைப்பு வைத்தேன். இந்த தலைப்பையே கூட மூன்றாவது குறுநாவலின் முடிவு பகடி செய்கிறது. மூன்றுமே இந்தியாவில் அன்றாடம் சாப்பாட்டிற்கு அல்லலுறும் மனிதர்களின் இருத்தலை தர்க்கமாக்குகிறது. கடைசி நாவல் மட்டும் அக அளவில் இருக்கிறது. காரணம் அது குழந்தையின் உலகம். அந்த உலகத்தை சிருஷ்டித்திருக்கும் விதம் கூட குரூரமாய் இருப்பது நாவலின் தன்மையை அதிகமாக்குகிறது.

உதய் பிரகாஷின் எழுத்தில் இருக்கும் பகடித் தன்மை வசீகரம் நிரம்பியதாய் இருக்கிறது. அவர் பகடிக்கு ஒரு உதாரணம் தருகிறேன். வியாதிக்கு மருந்து தேடி சாமியார் போன்ற ஒருவரிடம் செல்கிறார். அவர் எல்லா வியாதிகளுக்குமான மருந்து அப்புத்தகத்தில் இருக்கிறது. ஆனால் அப்புத்தகம் இன்னமும் இயற்றப்படவில்லை என்று சாதாரணமாக சொல்லி சென்றுவிடுகிறார். இது ஒரு சான்று தானே ஒழிய நூல் முழுக்க இதை நன்கு உணர முடியும்.

தருண் தேஜ்பாலிற்கு பின் ஆங்கிலத்தில் நான் வாசிக்கும் இந்திய நாவல். என்னை ஏமாற்றவில்லை. மூன்று குறுநாவல்களுமே திருப்தியை கொடுக்கின்றன.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக