புனித நூல்

சீனா பொருளாதார மற்றும் அரசியல் அடிப்படையில் கம்யூனிஸ நாடு. உழைக்கும் வர்க்கமான எல்லோருக்கும் சமபங்காக விளைச்சல்கள் சென்று சேர வேண்டும் என்கிறது அக்கோட்பாடு. சீனாவின் மக்கள் மேற்கத்திய கலாச்சாரம் சார்ந்து ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதில் பிரதானமாக அவர்கள் கண்டு கொண்டது சுதந்திரம் சார்ந்தது. இது கலாச்சார புரட்சியாக வெடிக்க ஆரம்பித்திருந்தது. இதன் காலம் 1966இல் ஆரம்பிக்கிறது. அப்போது மாணவர்கள் எதிர்புரட்சியாளர்களாக இருந்திருக்கிறார்கள். எல்லா வீட்டில் இருக்கும் மேற்கத்திய நூல்களை எரிப்பது, சண்டையிடுவது என்று எதிர்புரட்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த புரட்சியில் இருந்த ஒருவரின் பெயர் லு ஜியாமின். மாவோ வின் கோட்பாடுகளை மனதால் புறக்கணித்து மேற்கத்திய கலாச்சார விஷயங்களை உள்வாங்க ஆரம்பித்திருந்தார். அதே நேரத்தில், அஃதாவது 1968இல் மாவோவின் ஆணைப்படி உள் மங்கோலியாவிற்கு சென்று மக்களுடன் இணைந்து மக்களை அறிய சென்றிருக்கிறார்.

அங்கிருந்து அவரின் நிலை மாற்றமடைந்திருக்கிறது. அவர் கண்டு வளர்ந்து வந்த சீன கலாச்சாரத்தின் சாரமே இல்லாமல் இருக்கும் ஒரு நிலப்பகுதியையும் அங்கிருக்கும் விஷயங்களையும் காண ஆரம்பித்தார். அங்கே ஓநாய்கள் பிரதானமாக இருந்திருக்கின்றன. இது மட்டுமில்லாமல் மங்கோலியாவின் வரலாற்றையும் ஓநாய்கள் சார்ந்து அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளையும் கண்டு வியந்தார். வியப்பின் காரணம் சீனர்கள் ஓநாய்களை வெறுப்பவர்கள். பதினோரு ஆண்டுகள் அங்கேயே வசித்தார். பார்வையாளனாய் அங்கிருந்து அவர்களின் புனிதங்களான ஓநாயை அவதானிக்க முனைந்தததோடு ஒரு ஓநாய்க்குட்டியை எடுத்து வளர்த்து அதன் வளர்ச்சியையும் அவதானித்திருக்கிறார்.

மீண்டும் சீனா திரும்பி படிப்பை தொடர்ந்திருக்கிறார். கலாச்சார புரட்சியின் அலைகள் ஓய்ந்தபாடில்லை. தியனென்மென் என்னும் சதுக்கத்தில் ஸூ என் லாய் என்னும் புரட்சியாலருக்கான அஞ்சலியை செலுத்தும் போது மாவோவின் கொள்கைகளை எதிர்த்தமையால் கலவரம் நிகழ்ந்திருக்கிறது. அதில் சிக்கிய லு ஜியாமினும் சிறைக்கு சென்றிருக்கிறார். உயிர்ப்பலி ஆகாமல் வெளியும் வந்திருக்கிறார். பின் நான்காண்டுகள் உள்மங்கோலியாவில் நடோடிகளின் நாகரீகத்துடன் இருந்த வாழ்க்கையையும் ஓநாய் சார்ந்த அறிவு மற்றும் அனுபவங்களையும் நாவலாக்கியிருக்கிறார். சீனாவில் தன் எழுத்து மாற்றத்தை கொடுக்கும் என்னும் எண்ணத்துடனேயே இந்நாவலை எழுதியிருக்கிறார். இருந்தாலும் அரசாங்கம் சார்ந்திருந்த பயத்தில்தன் பெயரை ஜியாங் ரோங் என்று வைத்துக் கொண்டு 2004 இல் வெளியிட்டார். அந்த நாவலின் பெயர் WOLF TOTEM. தமிழில் சி. மோகன் “ஓநாய் குலச்சின்னம்” எனும் தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். மாவோவின் நூலை அடுத்து இந்த நூலே சீனாவில் அதிகம் விற்பனையாகியிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.நான்காண்டுகளுக்கு பிறகு இந்நாவல் மேன் ஏஷியன் விருதை பெறும் போது தான் தன்னை உலகிற்கு வெளிக்கொண்டு வந்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பொதுவான கேள்வி ஏன் தன் அடையாளத்தை மறைத்தீர்கள் என்பதாகவே இருந்தது. அதற்கு அவர் கொடுத்த பதிலானது

“When the book came out three years ago, it was controversial. Critics called me a liberal, a traitor, a fascist. They said the book was anti-communist, that it should be banned by the propaganda department because it has evil political aims, that it stands for liberalism and capitalism. That is why I thought it was wise to hide my identity at the time. But now things have changed. We have economic freedom, social freedom, literary freedom, internet freedom, even press freedom has improved quickly. The conditions for freedom in China have improved”

இந்நாவல் எதிர்ப்பை வலுப்படுத்தும் அளவு கம்யூனிசத்தை பூடகமாக எதிர்த்துக் கொண்டே தான் செல்கிறது. வெளிப்படையாகவே இந்நாவல் இந்த விஷயத்தை பேசினாலும் ஓநாய்களின் கதைகள் பெரும்பான்மையான பக்கங்களை சுவாரஸ்யமாய் நிரப்புவதால் இதை அறிதல் கடினமாக இருக்கிறது. மேலும் நாம் சீனர்களின் வரலாற்றையோ மங்கோலியர்களின் வரலாற்றையோ வரலாற்று பாடங்கள் மூலமாகக் கூட அதிகம் அறிந்ததில்லை. இந்நிலையில் இந்த கோட்பாடு சார்ந்து பொருத்திப் பார்க்கும் தன்மை நம்மிடம் குறைந்தே தான் இருக்கும். இந்நாவல் சொல்லும் எல்லா விஷயங்களுமே நமக்கு புதுமையானது தான்.

இந்நாவலை நான் புனித நூல் என்று கூறுகிறேன் அதற்கான ஒரே காரணம் நாகரீகத்தை இந்நாவல் புனைவாக்கியிருக்கிறது. இதிகாசங்களை புனைவுகளாக்கி இருப்பதை நான் வாசித்திருக்கிறேன். அதே நாகரீகம் என்றால் என்னவென்றும் அதை அழித்தொழித்தல் எப்படி நிகழ்கிறது என்பதையும் இந்நாவல் திறனாய்கிறது. ஒவ்வொரு நாடும் தனக்கே உண்டான நாகரீகங்களையும் பண்பாட்டு கோட்பாடுகளையும் கொண்டிருக்கிறது. அது நாடோடிகளிடமிருந்து வந்தவையாக இருக்கலாம். சில நேரங்களில் பழங்குடி இனங்களிலிருந்து வந்தவையாக இருக்கலாம். இந்த இனக்கூட்டத்தின் அடையாளங்களை இன்று ஆய்வியலாளர்கள் தேடி செல்கிறார்கள். வேர்களை தேடி செல்கிறார்கள். அதற்கான காரணம் நாம் இப்போது கொண்டிருக்கும் மாற்றங்கள் வளமையானதா என்பதற்கான சிறு ஆராய்ச்சியே. மாற்றங்கள் எந்நேரமும் நன்மையாகவே இருக்கக்கூடும் என்று நம்மால் எதிர்பார்க்க முடியாது. எல்லா விதத்திலும் உலகிலுள்ள எல்லா நாடுகளும் பழமையிலிருந்து முற்றிலும் மாறுபட்டே இருக்கின்றன. பழமை என்று சொல்லக் கூடிய எல்லா விஷயங்களும் இருந்தமைக்கான சான்றுகள் உயிரற்ற பொருட்களின் மூலமாகவே இருக்கின்றன.

ஒவ்வொரு இன மக்களும் அல்லது நாடும் கடவுள்கள் சார்ந்து நம்பிக்கைகளை ஆழமாக கொண்டிருக்கின்றன. மதசார்பின்மையான நாடான நம் நாட்டில்கூட ஒவ்வொரு பிராந்தியத்திற்கேற்ப கடவுளின் நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் வேறு படுகின்றன. எல்லா கடவுள்களும் விலங்குகளை வாகனங்களாக வைத்திருக்கின்றனர். இந்த விலங்குகள் மக்களுக்கு எவ்விதத்தில் நன்மை செய்கின்றன ? கடவுள் சார்ந்து பயம் கொள்ள வேண்டுமா ? மிருகமும் மனிதனும் இணக்கம் காட்டுவதன் மூலம் கடவுளை காண முடியுமா ? இயற்கையும் மனிதனும் வேறு வேறா என்ற எல்லா கேள்விகளுக்கும் இந்நாவல் பதில் சொல்கிறது. முக்கியமாக ஓநாயை முன்னிலைபடுத்துகிறது.

ஒலான்புலாக் என்னும் மேய்ச்சல் நிலத்தில் பில்ஜி என்னும் பழமைகளையும் பண்பாடுகளையும் கடவுள் நம்பிக்கைகளையும் மறக்காத கடைபிடித்து வரும் கிழவன் இருக்கிறான். அவனிடம் பீஜிங்கிலிருந்து சில மாணவர்கள் உடனிருக்க வருகிறார்கள். அவர்களில் ஜென் சென் மற்றும் யாங் கீ என்பவர்கள் மட்டும் பில்ஜியுடனேயே இருந்து கொண்டு அவர்களின் பண்பாடுகளை உணர பார்க்கிறார்கள். அவர்கள் பண்பாட்டில் முக்கியமாக இருப்பது ஓநாய்கள். ஓநாய்களை அவர்கள் கடவுளாக மதிக்கும் டெஞ்ஞர் கடவுளின் பிரதிநிதிகள் எனவும் மேய்ச்சல் நிலத்தின் நன்மைகளை செய்யும் விலங்குகள் எனவும் நம்புகிறார்கள். ஓநாய்கள் மனிதர்களை விட கூர்மையான அறிவுடைய விலங்கினங்கள். அவர்கள் செய்யும் வேட்டைகளின் முறைகள், செய்யும் தந்திரங்கள், மனிதர்களின் சூழ்ச்சியிலிருந்து எளிதாக தப்பிக்கும் திறன்கள் என்று ஓநாய்கள் சார்ந்த எல்லாவற்றையும் பில்ஜியின் மூலம் நுண்மையாக கூறுகிறார். உல்ஜி என்றொரு கதாபாத்திரம் வருகிறது. ஓநாய்கள் சார்ந்து கற்பனைவாதமாக மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை உடைத்து கடவுள் படைத்திருக்கும் ஓநாய்களுக்கு கற்பனையான சக்திகள் தேவையில்லை இயற்கயாகவே ஓநாய்கள் பலமும் அறிவும் மேன்மையாக பெற்றவர்கள் என்பதனை கூறுகிறார். இந்த எல்லா விஷ்யங்களாலும் ஈர்க்கப்பட்டு ஒரு ஓநாய்குட்டியை ஜென் சென் வளர்க்க ஆரம்பிக்கிறான்.

இடையில் போர்க்குதிரைகளை ஓநாய்கள் வேட்டையாடுகின்றன. இதனால் கொந்தளிக்கும் ராணுவ அதிகாரிகள் ஆணைகளை பெற்று ஓநாய்களை வேட்டையாட துணிகிறார்கள். அவர்களின் தலைவனாக வருவது பாவோ. இவர்களின் வெறியும் ஒலான்புலாக் மக்களின் நம்பிக்கைகளும் எதிர் எதிராய் நிற்கின்றன. இது எங்கே சென்று முடிகின்றது என்பதே நாவலாக நீண்டு விரிகிறது. நாவலின் அளவு மிகப்பெரியதாய் இருப்பினும் மங்கோலியர்களைப்பற்றி எதுவுமே அறியாததாலும் ஓநாய்களை சினிமாக்களில் மட்டுமே கண்டிருப்பதாலும் இந்நாவல் அதி சுவாரஸ்யமாய் இருக்கிறது.

மாவோ மனிதர்களே முக்கியமானவர்கள் என்று சொல்லுகிறார். இந்நாவலில் ஜியாங் ரோங்கோ மனிதர்களையும் விலங்கினங்களையும் சிறிய உயிர் என்று கூறி புல்லினை பெரிய உயிர் என்கிறார். புல்லினால் ஓரிடத்திலிருந்து இன்னுமோர் இடத்திற்கு நகர முடியாது. இந்நிலையில் அவற்றை காப்பாற்ற வேண்டியது நம் கடமையாகிறது. இதை செய்வது ஓநாய்கள் என்று முன்வைக்கிறார். மேய்ச்சல் நிலத்தை மான்கள், எலிகள், மர்மோட்டுகள் போன்ற விலங்கினங்கள் மேய்ந்து கொழிக்கின்றன. மான்கள் பெருகிவிட்டால் மேய்ச்சல் நிலம் பாழாகிவிடும். அந்த மான்களை கட்டுபடுத்த ஓநாய்கள் கணிசமான அளவில் வேட்டையாடுகின்றன. அந்த மான்களில் சிலவற்றை உண்பதற்காக ஒலான்புலாக் மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். கால்நடைகளையும் குதிரைகளையும் அங்கே வளர்க்கிறார்கள். இது ஒரு சுழற்சி முறை. இந்த சுழற்சி முறையில் எந்த இடத்தில் ஆரம்பித்தாலும் அவை ஓநாயில் சென்றே முடியும். ஆக ஓநாய்களை அழித்தால் மேய்ச்சல் நிலம் முழுதுமாக அழிந்துவிடும். இதை பில்ஜி உணர்ந்து கோபமும் வருத்தமும் கொண்டே நாவல் முழுக்க பயணிக்கிறார்.

ஜென் சென் பீஜிங்கிலிருந்து வரும் போது மங்கோலியர்களைப் பற்றி, ஓநாய்களைப் பற்றி அறிய வேண்டும் என்று நிறைய படிக்கிறான். அவன் படிக்கும் விஷயங்களையெல்லாம் அங்கே பகிர்கிறான். பில்ஜி மற்றும் உல்ஜி ஆகியோர் ஓநாய்களுடனான நேரடி தொடர்புடையவர்கள். இந்த அனுபவமும் தேற்றமுமான வாழ்க்கை முறையை சரியாக பிரித்து நாவலில் காட்டுகிறார்.

இதை சீனர்கள் கம்யூனிஸத்திற்கு எதிரான நாவல் என்று சொல்வதற்கு பிரதான காரணம் இந்நாவலில் டெஞ்ஞருக்கு அடிபணிந்து சில விதிமுறைகள் வருகின்றன. அதை அவ்வூர் மக்கள் பின்பற்றியே வருகின்றனர். அது யாதெனில் உழைக்கும் மக்களுக்கு மட்டுமே அதற்கான வெகுமதி வரும். வேட்டையாடப்பட்ட விலங்குகளை பார்த்தவர்களுக்கே அந்த விலங்குகள் கொடுக்கப்படும். ஓநாய்களுடனான சண்டையில் போரிட்டவர்களுக்கே வெகுமதிகள் என்று ஒன்றும் பெறாதவர்கள் நிறைய பேர் மீதம் செல்கிறார்கள். இந்த மீதம் செல்லுபவர்களை கம்யூனிஸம் கொள்கை ஏற்றுக் கொள்வதில்லை. வரும் வரும்படி எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்பதை முன்வைக்கிறது.

ஓநாய்களிடையே இருக்கும் பாசமும், ஓநாய்குட்டிகளை தூக்கி செல்லும் போது பெண் ஓநாய்கள் எப்படியெல்லாம் வெறி கொண்டு பழிவாங்குகின்றன என்பதையும் உணர்ச்சி பூர்வ பதிவாக்கியிருக்கிறார். ஓநாய்கள் இருக்கும் இடம் போர்க்களம் என்றும் அதன் போர்முறைகளையே உலகம் முழுக்க பயின்று வருகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். ஜெங்கிஸ்கானின் போர்முறைகள் முழுக்க முழுக்க ஓநாய்கள் சார்ந்தது என்பதற்கான நிறைய ஆதாரங்கள் நாவலில் கொடுக்கப்படுகின்றன. மங்கோலியர்களுக்கான முறையான வரலாற்றுப்பதிவுகள் இல்லை என்று நாவல் சொல்கிறது. அவர்களின் வரலாற்றிற்கு முக்கியமாக இருப்பது the secret history of mongols என்னும் ஆசிரியர் தெரியாத நூலொன்று மட்டுமே.

ஒரு ஆக்ரமிப்பை நாடொன்று நிகழ்த்தும் போது பண்பாட்டை தொட்டே மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கின்றன. மேற்கத்திய கலாச்சாரமும் வாணிபமும் விவசாயமும் ஊடுருவி மேய்ச்சல் நிலத்தின் தன்மைகளையும் தொன்மைகளையும் எப்படி மாற்றுகின்றன என்பதை உருக்கும் வண்ணம் எழுதியிருக்கிறார். கிழட்டு ஓநாயாக தன்னை நினைத்துக் கொண்டே வாழும் பில்ஜியின் வாழ்க்கை தான் நாவலில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. நாகரீகத்தை காப்பாற்ற நினைக்கும் பிறப்பால் மங்கோலியனான பில்ஜியும் மனதால் மங்கோலியனான ஜென் சென்னும் அறீவியல் மற்றும் அரசியல் மாற்றங்கள் மற்றும் அதன் சூழ்ச்சியினால் என்ன நிலைக்கு ஆளாகிறார்கள் என்று இந்நாவல் பேசுகிறது. ஓநாய்குட்டியை வளர்க்கும் விதத்தை காட்டும் பக்கங்களுக்கு கூட அதித முனைப்புகளை நாம் கொடுக்க வேண்டும். அவை எப்படி அரசியலாகின்றன, அதன் கடினங்கள் யாவை, அதை வைத்து எப்படி காட்டு மிருகங்கள் வீட்டு மிருகங்கள் ஆகியிருக்கின்றன, அப்படி மாறும் போது தன் தன்மைகள் எப்படி இருந்திருக்கும் என்று விலங்குகளுக்கான பொதுத்தன்மை கேள்விகளை ஓநாய்குட்டியை வைத்து பேசியிருக்கிறார்.

மொழிபெயர்ப்பின் தன்மையை பற்றி எனக்கு சொல்லத் தெரியவில்லை. அதற்கான காரணம் இந்நாவலின் கதைக்கரு மற்றும் சொல்லும் விதம் எல்லாமே முற்றிலும் புதியன. வாசிக்கும் எல்லோரையும் ஒலான்புலாக்கின் மேய்ச்சல் நிலத்தையும் ஓநாய்களின் வீரம்மிகு கண்களையும் பார்க்க வைக்கின்றன. அந்த வகையில் இதன் மொழிபெயர்ப்பு வெற்றி என்றே எண்ணுகிறேன்.

நான் இவ்வளவு நேரம் சொல்லியிருக்கும் குறுகிய விஷயங்கள் மேலோட்டமாக நான் கண்டதே. ஓநாய்களின் திறன்கள் பற்றி பேசும் பகுதிகளும் மாற்றங்களை கண்டு மனம் வருந்தும் பகுதிகளும், ஒவ்வொரு விலங்கினங்களும் தங்களின் சுயத்தை எப்படியெல்லாம் இழக்கின்றன என்னும் பகுதிகளிலும், மனிதன் விலங்குகளின் மீது செய்யும் ஏகாதிபத்தியத்திலும் என் மனம் எதையோ கண்டு கொண்டே தான் இருக்கிறது. உணர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மனதால் என்னை புதிய நாகரீகத்தை உணர வைத்த காரணத்தினாலேயே இந்நாவலை நான் புனித நூல் என்று கருதுகிறேன். ஓநாய் குலச்சின்னம் எனக்கான புனித நூல். எத்தனை மரபுகளை அரசியல் அல்லது கோட்பாட்டு ரீதியில் உடைத்தெறிந்தாலும் ஏதோ ஒரு விஷயத்தை இந்த நாகரீகத்திற்கு முற்றிலும் மாறுபட்ட நிலவியலில் பிறந்த எனக்கு உணர்த்திக் கொண்டே தான் இருக்கிறது. அதை சொல்லத் தெரியவில்லை.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

hariharan said...

நல்ல விமர்சனம்...

Post a comment

கருத்திடுக