நகுலனின் சிறுகதைகள்நகுலனின் நாவல் உலகை சார்ந்து எனக்கு தெரிந்த விஷயங்களை சென்ற பதிவில்(http://www.kimupakkangal.com/2014/06/blog-post_21.html) பதி(கிர்)ந்திருந்தேன். எனக்கு இருக்கும் ஒரு ஆதங்கம் நகுலன் இலக்கிய உலகில் நாவல் மற்றும் கவிஞராகவே தெரிகிறார். ஏன் அவரின் சிறுகதைகளை யாருமே சிலாகிக்கவில்லை என்பது தான். அவரின் சிறுகதைகள் அதிக அளவில் இல்லை. மௌனியைப் போல மிகக் குறைவாகவே சிறுகதைகளை எழுதியிருக்கிறார். காவ்யா சண்முகசுந்தரம் தொகுத்த நகுலன் கதைகளில் முப்பத்தி இரண்டு நகுலனின் சிறுகதைகளையும் இரண்டு நகுலனின் மொழிபெயர்ப்புக் கதைகளையும் கொடுத்திருக்கிறார்.

இந்த முப்பத்தி இரண்டு சிறுகதைகளைக் காணும் போது நாவலில் கண்ட நகுலனை என்னால் துளிக்கூட உணர முடியவில்லை. நாவலில் நாம் காணும் நகுலனின் உலகம் சிதறுண்ட உலகமாக இருக்கிறது. புரிதலில் சவால் விடுகின்ற உலகமாகவும் தத்துவம் கலைத்துவமாக மாறும் தருணத்தில் சிதறும் மனதை அப்படியே எழுத்தில் கொடுக்கும் நகுலனையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். சிறுகதைகள் மிகச்சிறிய வெளி. அங்கே கதையாசிரியனுக்கு நாவலாசிரியனை விட பெரிய பொறுப்பு இருக்கிறது. நாவலில் ஏதேனும் ஒரு இடத்தில் சின்னதான தொய்வு ஏற்பட்டாலும் வேறு ஒரு இடத்தில் மீண்டும் நாவலாசிரியன் வாசகனை உள்ளிழுத்துக் கொள்கிறான். சிறுகதையாசிரியனுக்கு இந்த சாவதானமான இடம் இல்லை. இந்த இடத்தை நன்கு உணர்ந்தே நகுலன் ஒவ்வொரு சிறுகதையையும் செய்திருக்கிறார்.

ஒவ்வொரு சிறுகதைகளும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சிறுகதையை கட்டமைக்கும் உருவத்தின் வகையிலும் கூட தனித்தன்மைகளை கொடுத்தே செல்கிறார். மேலும் இதில் அவர் எடுத்துக் கொள்ளும் கருக்கள் ஆரம்பகட்ட நகுலனின் வாசகர்களுக்கு பெரிதும் உதவும். நாவல்களில் அவர் கையாளும் தனிமை மற்றும் பித்தனிலையின் உலகங்களை எளிதாக செவ்வியல் தன்மை மிக்கதாய் சிறுகதைகளில் உருவாக்குகிறார். அவர் சொல்லும் தர்க்கங்களும் தத்துவங்களும் சமகாலத்திற்கு பொருந்துமா என்பது தான் சந்தேகத்தின் பக்கம் சாய்கிறது.

ஆன்மீகம் என்பது சுயத்தை உணர்வது என்பது தான். அதை கடவுள் வழியாக நம் சமூகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. இதில் தான் நம்மை வைத்தே நம் சுயத்தை அறிந்து கொள்ள முடியும் என்று ஏக தத்துவஞானிகள் தமிழிலும் உலக அளவிலும் கூறியிருக்கிறார்கள். சமூகம் பல்வேறு சீர்கேடுகளாலும் தர்க்க பேதங்களாலும் அவதிப்படும் போது தனி மனித அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவது போல இருக்கிறது நகுலனின் சிறுகதை உலகம்.

சிறுகதைக்கு கதைக்கரு எவ்வளவுக்கெவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் வாய்ந்தது கதையை சொல்லும் விதம். அது தான் அந்த சொற்ப பக்கங்களுக்கு வாசகனை உயிர்த்து வாசிக்க வைக்கும். இந்த உருவாக்கும் திறனை மிக அழகாக கையாள்கிறார். இருபத்தி ஐந்திற்கு மேலான கதைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றன. நாவல்களில் சொல்லும் அத்வைதம், அசேதனம், அஃறிணை எல்லாவற்றையும் சிறுகதைகளிலும் சொல்கிறார்.

அழைப்பு என்னும் கதையில் ஒரு கடிதம். அதை வாசிக்கும் நாயகன். அவனுக்கு ஏற்படும் உணர்ச்சிகள். அதைத் தாண்டி எதுவுமே இல்லை. இருந்தாலும் அவர்கள் வார்த்தைகளினூடே எனக்கு இது எதுவும் தேவையில்லை சொல்லவும் தேவையில்லை என்று வழுகிச் செல்கிறார். அதே போல் என் பெயர் வைத்தியநாதன் என்னும் சிறுகதை. இருவருக்கு இடையே நிகழும் சம்பாஷணை. கதையிலோ ஒரு பக்க சம்பாஷணையை மட்டுமே கொடுக்கிறார். சம்பாஷணையைத் தவிர எதுவுமே இக்கதையில் இல்லை. ஆனால் இருபக்கத்தையும் முழுமை செய்யும் அளவு ஒரு பக்கத்தின் வசனங்களை ஆழமாக்குகிறார்.

போஸ்ட் மாஸ்டர் , குழந்தைகள் போன்ற கதைகளில் அவரின் எள்ளல் மிகு தன்மையை நம்மால் முழுதும் உணர முடிகிறது. ஒரு பெண்ணின் பேனாவை பாதுகாத்து அவளிடம் கொடுத்தேன் அவள் என்னிடம் thank god என்கிறாள் என்று ஆதங்கப்படும் இடங்கள் வசீகரமாய் இருக்கிறது.

நொடிக்கதைகள் என்று மூன்று கதைகள் வருகின்றது. அதில் தொக்கி நிற்க வைக்கும் நகுலனின் எழுத்துகளில் எளிமையை வைக்கும் விதத்தை நன்கு உணரலாம். ஒரு கதையை பாருங்கள்,

“ஆஸ்பத்திரி.
அறையில் அவன்,
ரண சிகிச்சை செய்து கிடத்தியிருந்தார்கள்.
நான்கு மணி நேரம் கழித்து அவன் தன்னருகில் யாரோ நிற்பதாக ஒரு போதம் தட்டி விழித்துப் பார்த்தான்.
யாரும் இல்லை. மறுபடியும் தூங்கி விட்டான்.
அவ்விருவரும் வெளியில் வந்தனர்.
முதல்வன் : ஏன் ?
மற்றவன் : இன்னும் சமயம் ஆகவில்லை”

குருடன், போஸ்ட் மாஸ்டர், நாவிதன் ஆகும் பிராமணன், ஒரு தெருவின் வரலாறு, எழுதப்படாத காதலின் தடம், பார்த்திராத காதலியின் மணம், நுழைந்திட முடியாத அடுத்தவர்களின் உலகம், பார்வையாளர்களாக இருக்க அமையும் அனுபவ தருணங்கள், ஆன்மீகத்திடம் மனிதன் தன்னை ஒப்படைக்கும் தருணம் என்று நுண்மையான வாழ்க்கை தருணங்களுக்கு பின் இருக்கும் ஆழமான அனுப சித்திரத்தை நகுலனின் சிறுகதைகள் முன்வைக்கின்றன.

சிறுகதைகள் எழுதபட்ட காலத்திலும் ஆச்சர்யம் செய்கிறார். நாவலில் கடைசியாக அவர் எழுதியது எனில் ஊகத்தில் வாக்குமூலம் என்று கூறலாம். அது 1992இல் வெளியாகியிருக்கிறது. நினைவுப்பாதையில் அவர் கொண்டிருந்த மிகப்பெரிய குழப்பமான மொழி அதில் இருக்காது. இதே தன்மையை என்னால் நினைவுப்பாதையை சுற்றிய காலகட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளிலும் காண முடிகிறது. அவருக்கு பாரநோயா என்னும் நோய் இருந்ததாகவும் அதனால் அவரின் எழுத்தில் இப்படியொரு குழப்பத் தன்மை இருந்தது எனவும் கேள்விப்பட்டிருந்தேன். இந்த சிறுகதை தொகுப்பை வாசிக்கும் போது முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட ஒரு எழுத்துமுறையை தான் நகுலன் கைக்கொண்டாரோ என்னும் ஐயம் ஏற்படுகிறது.

இந்திய தத்துவ மரபையும் தமிழ் மொழியையும் ரசிக்கும் நகுலனைத் தான் சிறுகதைகளில் காண முடிகிறது. பேசவே பேசாமல் புறந்தள்ளும் எந்த ஒரு குணாம்சத்தையும் அவரின் சிறுகதைகள் கொண்டிருக்கவில்லை. மாறாக எல்லாவித எழுத்தாளர்களைக் காட்டிலும் உணர்ச்சிப் பூர்வமான கலைப்படைப்பை அதில் கொடுத்திருக்கிறார் என்பதை வாசகனாக என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சிறுகதைகள் சார்ந்து மிகக்குறுகிய பதிவாக இது இருப்பினும் வாசிப்பு கொடுக்கும் அலாதியான உணர்வு நமக்குள்ளே புதிய நகுலன் உருவத்தை கொடுக்கிறது. அது நவீனனின் உருவமாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு எழுத்தாளரும் ஏதோ ஒரு விஷயத்தில் obsess ஆகிறார்கள். அதிலிருந்து படைப்புகளை கொடுக்கிறார்கள். நகுலனுக்கு நவீனனாகிய நகுலனே obsession!!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக