நகுலனின் குறுநாவல்கள்

நகுலனின் நாவல்களுக்கும் குறுநாவல்களுக்குமான வித்தியாசங்கள் அளவில் மட்டுமே இருக்கின்றன. நகுலனை வாசிக்க முனைவோருக்கு கிடைக்கும் இரு உபதேசங்கள் வாசித்தால் நினைவுப்பாதையை வாசியுங்கள் அல்லது அவரெல்லாம் புரியவே புரியாது என்பது தான். இரண்டுமே ஆபத்தானவை. நினைவுப்பாதை(வாசித்த வரை நாய்கள் நாவலுடன் சேர்த்து) அவரின் மாஸ்டர்பீஸ் என்பதில் எனக்கு எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவரின் எழுத்துகள் எதை சுற்றி அமைகின்றன என்பதை அறிய முனையாமல் புதிதாய் வரும் வாசகனுக்கு நினைவுப்பாதையை வாசிக்கச் சொல்வது அபத்தமே ஆகும். அப்படி அவனும் வாசிக்க நேர்ந்தால் அத்துடன் நகுலனின் சகாப்தம் தனக்கேயான வாசிப்புலகில் முடிந்து போவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

நகுலனை என்னால் முழுதுணர முடியவில்லை. எனக்கு புரிதலில் சவால் விடும் படைப்புகளையே அதிகம் விரும்புபவன். அந்த அடிப்படையில் எனக்கான மாஸ்டராய் நான் நகுலனையே காண்கிறேன். நகுலன் இயங்கும் விஷயங்களாக நான் சிலவற்றைக் புரிந்து கொண்டிருக்கிறேன். அவையும் பிற எழுத்தாளர்களைப் போல இரட்டைத் தன்மைகளை ஒத்து இருக்கிறது. இவரின் இரட்டைத் தன்மைகள் த்வைதம் – அத்வைதம், சேதனம் – அசேதனம், அஃறிணை – உயர்திணை போன்றனவாகும். இவற்றை வெறுமனே கதைகளில் சொல்லாமல் தன்னுடைய எழுத்து முறையிலும் கொண்டு வருகிறார்.

த்வைதம் எந்த ஒரு விஷயத்தை சொல்கின்றது எனில் ஆத்மாவும் பரமாத்மவும் வேறு வேறு என. உலகத்தின் கூறுகளாய் மனிதன் பிறந்திருக்கிறான், விலங்குகள் ஜனித்திருக்கின்றன, மனிதனின் மூலம் பல்வேறு உயிரற்ற பொருட்கள் உருவாகியிருக்கின்றன என்று சொல்லலாம். உலகம் மாறாமல் அப்படியே இருக்கிறது. இந்த மாறுதலுக்குட்படுத்தாத தன்மைக்கு புலனாகாத சக்தி ஒன்று இருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் அறிய முடியவில்லை. ஆக இது இரண்டும் வேறு வேறு என்கிறது த்வைதம். அத்வைதமோ இரண்டும் ஒன்று என்கிறது. கிட்டதட்ட நான் கடவுள் என்று சொல்லும் அஹம் பிரும்மாஸ்மி என்பதற்கு சமமானது. நகுலன் அத்வைதத்தையே முன்வைக்கிறார்.

சேதனம் – அசேதனம். இதை வெகு எளிதாக பொருள் கொண்டு விடலாம். நாம் சிறுவயதில் படித்த living and non living things. முழுதான அர்த்தம் இதற்கு அருகில் இருக்கிறது. உணர்ச்சிகளாலும் அறிவாலும் மட்டுமே இந்த இரண்டு நிலைகளை ஓருயிர் அடையமுடியுமாயின் அதுவே சேதனம் அல்லது அசேதனமாகும். இப்போது புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

இதைத் தவிர அஃறிணை மற்றும் உயர்திணை. மனிதர்களையும் விலங்குகளையும் இலக்கிய ரீதியாக இந்த வார்த்தைப்பிரயோகம் பிரித்து பொருள் தருகின்றது. நாம் உயர்திணை என்று சொல்லும் அளவு நம் வசம் இருக்கும் விஷயங்கள் மட்டுமே மனிதனுக்கு போதுமானதா ? அஃறிணை நோக்கிய சிறு பாசம் மனிதனின் மனதில் இருக்கிறதெனில் அஃறிணையும் முக்கியமானது தானே ? இதையும் தன் கருவில் இணைக்கிறார் நகுலன். இம்மூன்றையும் கருவில் மட்டுமில்லாமல் எழுதும் முறையில் கூட சேர்க்கிறார். எப்படி என என் சிற்றறிவில் எட்டியதை சொல்கிறேன்.காவ்யா சண்முகசுந்தரம் தொகுத்த நகுலன் கதைகள் என்னும் தொகுப்பில் ஐந்து குறுநாவல்கள் இருக்கின்றன. அவையாவன – யாத்திரை, ரோகிகள், நிழல்கள், சில அத்தியாயங்கள், அந்த மஞ்சள் நிறப் பூனைகுட்டி. காவ்யா பதிப்பத்திலேயே நகுலனின் எல்லா நாவல்களையும் தொகுப்பாக வெளியிட்டார்கள். இப்போது அவை அச்சில் இல்லை போலும். நான் ஒவ்வொரு முறையும் ஆர்டர் செய்து ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறேன். சரி குறுநாவல்களுக்குள் செல்வோம். இந்த ஐந்து குறுநாவல்களும் வெவ்வேறு விதமான களத்தை கையாள்வது போலத் தெரிந்தாலும் மனிதனின் முடிவு செய்ய இயலாத மனதின் இருத்தலையே முன்வைக்கின்றன.

இருத்தலுக்கு மனிதன் தன்வசம் கொண்டுள்ள ஆன்மா மட்டுமே போதாது. ஏதோ ஒன்று அவனுக்கு தேவைபட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நகுலன் சொல்லும் விதம் பாருங்கள்

“இங்கு வருவதற்கு இருவர் தேவை. . . போகும் பொழுது உன்னைத் தவிர யாரும் தேவையில்லை. . . அதுவரை யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. . .”

நகுலனின் எழுத்துகள் இந்த ஒருவரையும் புறக்கணித்து தனிமையில் நிற்கின்றன. தனிமையை ஸ்வீகாரம் செய்கின்றன. இந்த தனிமையில் அந்த கதாபாத்திரங்கள் தன்னையே முழு உலகமாய் சித்தரித்துக் கொள்கின்றன. இப்போது அத்வைதத்தை சேர்த்து புரிந்து கொள்ளுங்கள். எல்லா கதாபாத்திரங்களும் சமூக விழுமியங்களுடன் கலாச்சார அடிப்படையுடன் ஒன்றினாலும்(உருவாக்கப்பட்டாலும்) கடைசியில் தனிமையில் சென்று முடிகிறது. அந்த தனிமையில் அவன் தன்னுள் உருவாக்குவதே உலகம். அந்த உலகம் அவன் ஆன்மாவினுள்ளிருந்து வருவதால் அவன் அத்வைதி ஆகிறான்,

ஆக நகுலனின் எழுத்துகள் தத்துவார்த்தமானவை என்று சொல்லலாமா ? நிச்சயம் முடியாது. கலைத்துவமானவை என்று வேண்டுமென்றால் சொல்லலாம். அதற்கும் அவர் விளக்கம் கொடுக்கிறார்,

“தத்துவஞானி தன் அடிப்படை ஸ்தானத்திலிருந்து நகராமல் எல்லாவற்றையும் பாகுபாடு செய்கிறான் கலைஞன் ஸ்தானத்தை மாற்றி விதவிதமாக பாகுபாடு செய்கிறான்”

நகுலன் ஒருவேளை தத்துவஞானியாக இருப்பின் தத்துவங்களை மட்டுமே அவர் எழுதியிருக்க வேண்டும், அல்லது புனைவாக்கியிருக்க வேண்டும். இங்கு அது நிகழவில்லை. தன் தத்துவத்தை பிரஸ்தாபிக்க வேண்டிய கதைச்சூழலை சமூகத்தோடு ஒன்றியே உருவாக்குகிறார். உதாரணம் ரோகிகள் குறுநாவல். வயிற்றுவலியால் அவதிப்படும் நாயகன் மருத்துவமனைக்கு சென்று அங்கு நிகழும் சில சம்பவங்களை தொடுக்கிறார். பின் மரணம் சார்ந்த பயத்தைப் பற்றி எழுத ஆரம்பிக்கிறார். அந்த நாவலில் கூட இருத்தலை உலகமயமாக சொல்கிறார். எனக்கு ஒரு கலைஞரின் பெயர் தெரியவில்லை ஆஸ்கர் வைல்டாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன், சரியாகத் தெரியவில்லை. அறிந்தவர்கள் தவறெனில் மன்னியுங்கள். அவர் சிறையில் இருக்கும் தருணத்தில் தாம் உயிருடன் தான் இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது. உடனே கரமைதுனம் செய்து தன் இருத்தலை ஊர்ஜிதம் செய்து கொள்கிறாராம். நகுலன் இந்நாவலில் இருத்தலை வேறு விதமாக பார்க்கிறார். இருத்தலை எப்படி இவர் பகுப்பாய்கிறார் எனில்,

“மனிதன் ? மகத்தானவன் ?
சிந்திப்பவன் ?
உணர்ச்சிவசப்படுபவன் ?
காரியவாதி ?
ஆனால் அவனுக்கு இப்பொழுது ஒன்று தெரிந்தது
அவன் கேவலம்.
மலஜல விஸர்ஜனம் செய்யும் ஜந்து”

நாயகன் மூத்திரம் வராமல் தவிக்கிறான். மூத்திரமும் மலமும் வெளியில் வந்தால் தான் உயிருடன் இருக்கிறோம் என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடியும் என்று இருத்தல்பால் தவிப்பு கொள்கிறான்.

“சில அத்தியாயங்கள்” நாவலில் நகுலன் முன்வைக்கும் விஷயம் மனிதனால் ஏன் ஒரு நாற்காலியைப் போல அசேதனமாக இருக்க முடியவில்லை என்பது தான். அர்த்தமில்லை என்பதினுள்ளும் ஒரு அர்த்தம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த சூன்யத்தை புரிந்து கொண்டாலே அசேதனத்தின் மகோன்னதத்தை புரிதல் கொள்ள முடியும் என்கிறார். பிரும்மம் என்பது identity இல்லாத ஆன்மா. ஆன்மாவை எந்த ஒரு குறியீட்டாலும் குறியிடாமல் அதற்கான வெளியில் சஞ்சரிக்கவிடுவது. இந்த தன்மை தானே அசேதனத்திலும் இருக்கிறது ? அதற்கு குறியீடுகளை வைத்து நாம் தான் அழைத்துக் கொண்டிருக்கிறோம் நாற்காலி மேஜை என. ஒருபோதும் அவை அழைத்துக் கொள்வதில்லையே ? அதற்கு உலகம் சொல்லும் விஷயங்கள் எதுவுமே தேவையில்லை. மாறாக தனக்கான உலகத்தில் தானே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தான் அசேதனத்தையும் அத்வைதத்தையும் நகுலன் நாவல்களில் இணைத்துக் கொண்டே செல்கிறார்.

கொஞ்சம் இவரின் எழுத்துமுறையில் இந்த தத்துவார்த்த முறைகளை எப்படி கையாள்கிறார் என்று பார்ப்போம். இவரின் எழுத்துகளை நம்மால் நிச்சயம் பின்நவீனத்துவம் என்று சொல்ல முடியாது. பன்முக கதைசொல்லிகளால் கதைகளை சொன்னாலும் யாதொரு சமூக விஷயங்களையும் இவர் கட்டுடைப்பதில்லை. ஆனால் இவர் உருவாக்கும் தத்துவ கூம்புகளை நாவல்களில் இவரே உடைக்கிறார். இவர் அதற்கு சொல்லும் இரு காரணங்கள் “அந்த மஞ்சள் நிறப் பூனைகுட்டி” நாவலில் வருகின்றது.

“எழுத்து எழுத்தை அழித்தது”

“வார்த்தை மூலம் ; வார்த்தையை தாண்டி, வார்த்தைக்கு அப்பால் ;
நிதர்சனம்”

அனுபவமாக கண்ட விஷயங்களை எழுத்தின் கலையின் வடிவில் கொண்டு வரும் போது அது வேறொன்றாக இருக்கிறது என்கிறார். ஒன்று மற்றொன்றாக மாறுவதே எழுத்து செய்யும் அழித்தல் விஷயம் தான். இதை மீண்டும் இவர் அழிக்கிறார். ரோகிகள் நாவலில் நாவல் அநேக பக்கங்களுக்கு செல்கின்றன. அது முடிந்தவுடன் நகுலனாக நடுவில் வந்து அந்த நாவலைப் பற்றியே அபிப்ராயம் கேட்கிறார். அதற்கு நீண்டு முழங்கும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆக நாம் கொண்ட புரிதல்கள் அப்படியே மாற்றம் கொள்கின்றன. யாத்திரை நாவலில் அத்தியாயங்களின் கடைசியில் இன்ன இன்ன அத்தியாயத்தை நான் முடிப்பதில் சந்தோஷம் கொள்கிறேன் என்று அவர் சொல்லும் போதே நாவல் கொடுக்க வேண்டிய உணர்வுகள் முடிந்து ஒருவன் நாவலை எழுதி கொண்டிருக்கிறான் என்னும் உணர்வை கொடுக்கிறது.

இவரின் வார்த்தைப்பிரயோகங்களை சொல்ல வேண்டுமெனில் நாவலின் அமைப்பை கூறியே ஆக வேண்டும். நாவல் என்பதே பெரும் வெளி. அந்த வெளியில் எவ்வளவுக்கெவ்வளவு நம்மால் கருக்களை வசீகரமாக எழுத முடிகிறதோ அதே போல வெறுமையையும் வைக்க முடியும். இந்த வெறுமை வார்த்தைகளுக்கும் வார்த்தைகளுக்கும் இடையில் நிற்கின்றன. இரண்டு வார்த்தைகளை ஒன்று சேர மறுக்கின்றன. வார்த்தைகளில், ஒரே வரியில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி அர்த்தங்களை அறுத்துவிடுகிறார். அதன் தொடர்ச்சியை வாசகன் தான் உருவாக்க வேண்டியதாய் இருக்கிறது. அப்படியே உருவாக்காமல் இருந்தாலும் ஒவ்வொரு வரிகளும் பெரும் அர்த்தத்தை வாசகனிடம் மீதமாய் விட்டே செல்கிறது.

Meta Narration மற்றும் Non linear இல் உச்சத்தை தொட்ட எழுத்தாளராய் நகுலனையே பார்க்க முடிகிறது. தன்னை உள் நுழைத்து வாசகனை புனைவின் வெளியிலிருந்து தூக்கியெறியும் தன்மைகளும் அர்த்தங்களுக்கு இடையில் வைக்கும் மௌனங்களிலும் இவரில் இருக்கும் தீவிரத் தன்மையை இதுநாள் வரை வாசித்த வேறு யாரிடமும் உணர முடிந்ததில்லை. இது என் அரைகுறைப் புரிதலே ஆகும். நகுலன் எனக்கேயான மாஸ்டராக இருக்கிறார். அதனால் தானோ என்னவோ அவரே ரோகிகள் நாவலில் சொல்கிறார்

“நான் எழுதுவதெல்லாம் – இலக்கிய உலகில் முதல் ஸ்தானத்தில் இருக்கும் தலைவர்களுக்கு அல்ல (அவர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை ; அர்த்தமற்றதாக கூடப்படலாம்) என்னைப் போல், என்னை இனங்கண்டு என்னுடன் பழகும் ஒரு சில தனி மனிதர்களுக்குத்தான் – அவர்களுக்கும் எழுதுவதில் ஈடுபாடு உண்டு என்பது இன்னுமொரு காரணமாக இருக்கலாம்”

நகுலனை புறந்தள்ளும் மனிதர்களுக்குமான பதில் இதில் இருக்கிறது. காயப்படுத்தாமல் சொல்லிச் செல்கிறார். நகுலனை நாவல் முதலாய் வாசிக்க விரும்புபவர்களுக்கு என் சிபாரிசு வாக்குமூலம் மற்றும் நிழல்கள். இந்த இரு நாவல்களும் நற்றிணை பதிப்பகத்தில் தனிப் பிரதிகளாக இருக்கின்றன. அவையே அவருடைய நாவல் உலகில் நுழைவதற்கான எளிமையான வழி ஆகும். காவ்யா பதிப்பகத்தில் நகுலனின் படைப்புகள் (நாவல் குறுநாவல் சிறுகதை கவிதை) தொகுப்புகளாக கிடைக்கின்றன.

பின் குறிப்பு : நகுலனின் பிற நாவல்கள் சார்ந்து இத்தளத்தில் இருக்கும் கட்டுரைகளை வாசிக்க பின்வரும் நாவல் தலைப்புகளை க்ளிக்கவும். . . 
நிழல்கள்
நாய்கள்
நினைவுப்பாதை
வாக்குமூலம்

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக