எதிரி எதிரியே அல்ல

ஜெயமோகனின் முதற்கனல் நாவலில் இரண்டு வரிகளே இப்போது நினைவிற்கு வருகின்றன. ஒன்று சிகண்டியிடம் அக்னிவேசர் பேசும் வார்த்தைகள். வெல்ல வேண்டும் என மனதார வரிக்கும் மனிதன் எதிரியே அல்ல. மாறாக அவன் ஒரு தந்தையாகிறான். அந்த தந்தை மூலம் இவன் அறிவது உள்ளூர கனன்று கொண்டிருக்கும் கோபத்தை. கோபமே ஸ்திரமாக கொண்டிருக்கும் வாழ்க்கையை. வாழ்க்கையை அறிவதே எதிரியால் என்று சொல்லியிருப்பார். இன்னுமொன்று யாதெனில் பீஷ்மர் கேட்கும் ஒரு கேள்வி போரில் மடிந்தொழியும் மனிதர்களின் குடும்பங்களை கண்டு இரங்கும் போது சொல்லப்படும் வாசகம் ஷத்ரியன் எப்போது தான் கொன்ற வீரர்களின் லௌகீக வாழ்க்கையை நினைக்கிறானோ அப்போதே அவன் ரிஷியாகிறான் என. இந்த இரண்டையும் முன்வைத்து மகாபாரதத்திலிருந்தே புனையப்பட்ட ஒரு நாவலை வாசிக்க நேர்ந்தது. முதற்கனலின் முன்னுரையில் கூட இந்நாவலை ஜெயமோகன் மேற்கோள் காட்டியிருந்தார். அது பி.கே.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதி ஆ.மாதவனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “இனி நான் உறங்கட்டும்” என்னும் நாவல்.இந்த நாவலை பல அம்சங்களில் முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் படத்தைக் காணும் போது எனக்குள் பொறாமையே ஏற்பட்டது. சிறுவயதில் இராமாயணத்தை பொம்மை போட்ட நூல் ஒன்றில் வாசித்தேன். அம்மாவின் வாய்வழியாக மட்டுமே மகாபாரதத்தை கேட்டு வளர்ந்திருக்கிறேன். பின் வெகு குறைவான அளவிலேயே போர் சம்மந்தப்பட்ட நூல்களை வாசித்திருக்கிறேன். அதில் எதிலுமே போரில் இருக்கும் வேகத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. யுத்தம் எனும் போது அதிலிருக்கும் உக்கிரமும் சூழ்ச்சிகளும் ஏராளம். போர்முறைகள் ஏராளம். இதை சிலாகிக்காமல் கீழ்விழும் தருணங்களையே பதிவு செய்தவையாக உணர்கிறேன். லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் படத்தை சொன்னதன் காரணம் அதில் ஒரு வில்லாளி வருகிறான். அவன் மதம் கொண்ட வேழத்தையும் அதன் மேலிருக்கும் வீரர்களையும் வேகம் கொண்டு மிக லாவகமாக தாக்குவான். அவன் வசம் இருக்கும் ஆயுதம் வில்லும் அம்பறாத்தூணில் அம்புகளும். வில்லை மட்டும் பயன்படுத்தாமல் கைகள் கொண்டும் போரிடுவான். வில்லிற்கே ஒருவன் எனவும் வில்லெடுத்தவன் வில்லெடுத்தவனோடு தான் போர் புரியவேண்டுமெனவும் நம் யுத்த மரபில் இருக்கின்றன. அதையெல்லாம் கலாப்பூர்வமாக சிலாகிக்க வேண்டாமா ?

நம் இதிகாசங்களில் ஏகப்பட்ட விற்கள் இருந்தும் இந்த சுவாரஸ்யங்க்கள் எனக்கு கிடைக்காமல் இருந்தன. இந்நிலையில் இந்நாவல் சித்தரிக்கும் போர்க்களம் சுவாரஸ்யத்தையும் வில்லின் வேகத்தையும் தத்ரூபமாக கண்முன் வந்து நிறுத்தக் கூடியவை. ஒரு அம்பு எய்யப்படும் போது அது அம்பாக மட்டும் சென்று எதிரியை தாக்குவதில்லை. அதனூடே மனிதனின் சினமும் அதற்கான உணர்ச்சி ரீதியான காரணங்களும் போரின் புத்தி கூர்மையும் நிரம்பி இருக்கின்றன. இந்த எல்லா உணர்வுகளையும் இந்நூலின் போர்க்களத்தில் வாசகனால் உணர்ந்து கொள்ள முடியும்.

மகாபாரதம் எப்போது சொல்லப்பட்டாலும் அறம் அறப்பிழை என்னும் இரு கோட்டில் நின்றே சொல்லப்படுகின்றது. அறத்தின் பக்கம் பாண்டவர்களும் அழிக்கப்படவேண்டியவர்கள் பக்கம் கௌரவர்களுமே இருந்தனர். இந்த நாவல் பாரதம் பாண்டவர் – கௌரவர் என்னும் இரட்டையுடன் புனையப்பட்டதல்லாமல் மாறாக பாண்டவரளுக்குள்ளேயே நிகழும் இரட்டைத் தன்மைகள் என்பதை முன்வைக்கிறது. பாண்டவர்கள் பக்கம் பகவான் கிருஷ்ணர் இருந்தமையால் பாண்டவர்கள் வென்றார்கள் என்னும் நம்பிக்கையை இந்நாவல் முழுதுற உடைக்கிறது. கிருஷ்ணர் இங்கே போர்வீரராய் வருகிறார். அர்ஜுனனுக்கு அடுத்தபடி அவனுக்காக போர்புரிய தயாராய் நிற்கும் வில்வீரனாய் மட்டுமே வருகிறார்.

இந்த நாவலின் மையக்கதையே கர்ணனின் வரலாறு தான். கர்ணனே பாரதம் நிகழ்வதற்கு மூலக்காரணம் என்பதை அழகாக நம்பவைக்கிறார். கர்ணன் இருப்பதால் தான் குருக்ஷேத்திரப் போர் நிகழ்கிறது. அதே கர்ணன் மனது வைத்திருந்தால் இப்போர் நிகழாமல் தடுத்திருக்க முடியும் என்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் நாவல் பேசுகிறது. கர்ணன் காணும் துவேஷங்களும் அதன் எதிரொலிகளும் அதை வேறொருவருக்கு எப்படிப்பட்ட பார்வைகளை தருகின்றது என்பதையும் மறுக்கப்பட்ட வித்தையை வித்தையை வைத்தே பழிவாங்க துடிக்கும் வீரனின் உருவமாகவும் கர்ணன் சித்தரிக்கப்படுகிறான். பாண்டவர்கள் சூழ்ச்சியால் வெற்றிபெறுகிறார்களே ஒழிய வீரத்தால் அல்ல. இவை எத்தனையோ விஷயங்களை பூடகமாக பேசுகின்றன.

The emotional blackmail என்னும் யுக்தியே போரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. இந்த யுக்தி எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது அதற்கான எதிர்வினைகள் எப்படி அமைகின்றது என்னும் யாவற்றையையும் பன்முகப் பார்வைகளில் விளக்கப்படுகிறது. கதை சொல்லப்படும் விதத்தில் தான் கர்ணனின் வாழ்க்கை ஆச்சர்யத்திற்குள்ளாகிறது.

என் தமிழாசிரியை சொன்ன ஒரு பழமொழி கூட எனக்கு இப்போது நினைவில் வருகிறது. கர்ணன் குந்திக்கும் சூரியனுக்கும் பால்ய வயதிலேயே பிறந்தவன். திருமணமாகாதலால் அவனை நதியில் மிதக்கவிட்டு அவன் வாழ்க்கைப் போக்கு வீரனாக்குகிறது. துரியோதனின் நெருங்கியவனாகிறான். கௌரவர்களுள் ஒருவனாகிறான். பிறவியால் அவன் பாண்டவர்களுள் ஒருவன் எனும் போது தான் பழமொழி ஆரம்பிக்கிறது ஐவருடன் ஒன்றென மாறினால் ஆறிலும் சாவு நூறுடன் ஒருவராக வாழ நேர்ந்தால் நூறிலும் சாவு என. மகாபாரத்தத்தில் எல்லோராலும் அறியப்படுபவன் கர்ணன் தான். காரணம் அவன் பொதுச்சபையின் அவமானத்தால் அஸ்தினாபுரத்திற்கே அறியப்படுகிறான். துரியோதனனால் அங்கதேசத்து மன்னனாகிறான். அவன் வாழ்க்கையை, நடவடிக்கைகளை பாண்டவர்கள் பக்கமும் அறிந்து வைத்திருக்கிறார்கள், கௌரவர்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள், துரியோதனன் பிரத்யேகமாக அறிந்தி வைத்திருக்கிறான். எல்லா இழிவுகளையும் துரியோதனுக்காக தாங்கிக் கொள்கிறான். இந்த மனிதனின் வாழ்க்கையை ஒவ்வொருவரின் பார்வையில் ஆசிரியர் சொல்ல ஆரம்பிக்கிறார். ஒரே விஷயத்தை அன்றி ஒவ்வொருவர் மூலம் அவன் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகள் சொல்லப்படுகின்றன. திரௌபதி சொல்கிறாள், குந்தி நினைவுகளை இழுத்து மீட்டி சொல்கிறாள், பொதுப்படையாக கண்டவற்றை நினைக்கிறார்கள், சஞ்சயன் குருக்ஷேத்திரத்தில் நிகழ்ந்தவற்றை கூறுகிறான். திரௌபதியும் சஞ்சயனும் சொல்லும் பகுதிகள் தான் மனதிலிருந்து நீங்காத வண்ணம் அமைந்திருக்கிறது.

குருக்ஷேத்திரத்தில் பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த போரை கர்ணனை மையமாக வைத்து சஞ்சயன் சொல்கிறான். கர்ணனின் வாழ்க்கையே பிரதானமாக இருக்கும் நாவல் யுதிஷ்டிரன் திரௌபதி மற்றும் குந்தியாலேயே நகர்த்தப்படுகிறது.

பீஷ்மரின் வாழ்க்கையிலும் அவர் ஏழு குழந்தைகளின் இறப்பிற்கு பின் மகனாக பிறந்திருக்கிறார். அப்படியெனில் ஏழு பேர் விட்ட வழியே தன் பிறவி பூமியில் கிடைத்திருக்கிறது என்று தானே பொருள். அதேபோல் கர்ணன் இல்லையெனில் பாண்டவர்களே இல்லை என்பது தானே அர்த்தம். பாண்டவர்களில் மூத்தவன் கர்ணன் தானே. தன் மூத்தோனையே கொன்று நாட்டை ஆள வேண்டுமா என்னும் எண்ணம் யுதிஷ்டிரனை வதைக்கிறது.

திரௌபதியை துச்சாதனன் துயிலுரிக்கும் போது கர்ணன் சந்தோஷத்தின் களிப்பில் குதிக்கிறான். பாண்டவர்கள் அரை நிர்வாணமாக ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த துயிலுரிக்கும் காட்சிகளை நாவலில் காட்டியிருக்கும் விதம் உணர்வுகளை சீண்டிச் செல்லும் ஒரு மொழி என்று தான் சொல்ல வேண்டும். கையறுநிலையில் கர்ணனின் உருவம் திரௌபதிக்கு எப்படி இருக்கும் ? அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த யுதிஷ்டிரனும் அஸ்வத்தாமனால் குழந்தைகள் இறந்தபோதும் அமைதியா இருந்த யுதிஷ்டிரன் ஏன் சகோதர சோகத்தில் இப்போது திளைக்க வேண்டும் என்று எண்ணுகிறாள்.

குந்தி கடைசி வரைக்கும் தன் மகன் கர்ணன் என்பதை வெளியில் சொல்லவில்லை. அப்படி சொல்லாததன் பிண்ணனியில் இருக்கும் உளவியல் என்ன ? ஒருவேளை அந்த இடத்தில் அர்ஜுனன் இருந்திருந்தால் குந்தியின் மௌனம் அப்படியே இருந்திருக்குமா என்னும் கேள்வி நாவலை துளைத்து எடுக்கிறது.

இந்த மூவரின் உணர்வுகளையும் தர்க்க மட்டும் தத்துவ ரீதியாக அணுகி புதியதொரு உருவத்தை பாரதத்திற்கு கொடுக்கிறது இந்நாவல். அதை மட்டும் அலசாமல் இவர்கள் கொள்ளும் புரிதல்களும் அதே சம்பவத்தில் அங்கமாக இருக்கும் கர்ணன் கொள்ளும் உண்மையான உணர்வுகள் மட்டும் புரிதல்கள் ஆகிய இரண்டையும் வாசகனுக்கு தருகிறது. இந்த காரணத்தினாலேயே கர்ணன் எழுத்தில் முழு உருவம் கொள்கிறான்.

மேன்மையும் கீழ்மையும் எல்லா மனிதர்களிடமும் இருக்கிறது. இந்த நாவலில் வரும் எல்லா இதிகாச மாந்தர்களிடையேயும் இந்த இரு உணர்வுகளை சரிசமமாக அளித்திருப்பதே நாவலின் தனித்தன்மையாகும். இந்த தன்மை தோற்கும் இடம் தான் கர்ணனாக உணர்கிறேன். பீஷ்மர் மற்றும் பிற கதாபாத்திரங்கள் கைவசம் கொண்டிருக்கும் காரணங்களைக் காட்டிலும் வாழ்வியல் சார்ந்த காரணங்களை அவன் கொண்டிருக்கிறான். பிறப்பால் மட்டுமே நான் பாண்டவன் என்பதை தர்க்க ரீதியாக சொல்லுகிறான். குந்தி சூசகமாக பாண்டவர்களை கொல்லக் கூடாது என்று கேட்க நினைக்கிறாள். அர்ஜுனனின் கர்வத்தின் மேல் இருக்கும் கோபத்தால் அர்ஜுனனைத் தவிர யாரையும் கொல்ல மாட்டேன் என்கிறான். இதை போர் சம்மந்தப்பட்ட நீண்ட பக்கங்களில் மிக அழகாக செயலில் காண்பித்திருக்கிறார்கள். அதை குந்தியிடம் அவன் சொல்லும் விதமும் அழகியல் நிரபியதாய் இருக்கிறது. அவன் சொல்வது அர்ஜுனன் இறந்து போனால் என்னுடன் பாண்டவர்கள் இருப்பார்கள். நான் இறந்தால் அர்ஜுனனுடன் பண்டவர்கள் இருப்பார்கள் என்று.

கௌரவர்களின் பக்கத்தினின்று இந்நாவல் நகர்ந்திருப்பதும் நாவலின் சுவாரஸ்யத்தை இன்னமும் கூட்டுகின்றது. நாவலில் கதைசொல்லிகளை மிக அழகாக ஆசிரியர் மாற்றிக் கொண்டே செல்கிறார். ஒரு கதைசொல்லியிலிருந்து அடுத்த கதைசொல்லிக்கு அவர் செல்லும் விதம் தெரியாத விதமாகவே இருக்கின்றது. கௌரவர்களில் நூறு பேர் இருப்பினும் அவர்கள் கர்ணனை நம்பியே இருக்கின்றனர். கர்ணனின் வெறியும் வீரமும் தான் அவனை தனித்தன்மை மிக்கவனாக்குகிறது. தர்மமே கர்ணனை எடுத்துசொல்லும் விதமாக இருக்கும் பிம்பத்தை இந்நாவல் முழுதாக உடைக்கிறது.

எல்லா முடிவுகளையும் முன்னமே சொல்லி பின் அதை சுவாரஸ்யமாக விவரிக்கும் தன்மையில் இதிகாசத்தின் பகுதியை எளிமையாக சித்தரிக்கிறது இனி நான் உறங்கட்டும் என்னும் நாவல். அகச்சுமைகளை நீக்கினால் மட்டுமே நிம்மதியான உறக்கத்தை மேற்கொள்ள முடியும். அந்த அகச்சுமை நீங்கும் தருணத்தை ஏகாந்தமாக பேசிச் செல்கிறது கர்ணனின் வாழ்க்கை மூலமாக.

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

ssankaran said...

Can you give us the link for buying this book?

Kimupakkangal said...

http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

Post a comment

கருத்திடுக